Sunday 8 October 2023

கடல் பறவைகள்.

         


       கப்பல் பயணத்தில் கடல் பறவைகளை தவிர்க்கவே முடியாது.கப்பல் காரன் டைரியை வாசித்த பறவை ஆர்வலர்கள் சொன்ன அரிய தகவல்களை கேட்டபின்,பறவைகளை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இப்போதுதான் வந்துள்ளது.நிச்சயம் அதுபற்றிய அடிப்படை விசயங்கள் கொஞ்சம் தெரிந்து ஒரு நல்ல புகைப்பட கருவியும் வாங்கிவிட்டால் காணக்கிடைக்காத அரிய சில பறவைகளின் படங்கள் பல என்னால் எடுத்து விட முடியும்.

     கப்பல் கடலில் சென்றுகொண்டிருக்கும்போது பறைவைகள் சில கப்பலுக்கு வந்துவிடும்(நானும் வாறன் உங்க கூட என்பது போல). அப்போதுதான் எங்களுக்கு தெரியும் மிக அருகில் தீவு அல்லது ஏதோவொரு நாடு இருக்கிறது என. சிட்டுக்குருவி,நாரை,seagull,புறா என என்னவெல்லாமோ வரும்.இவற்றை தவிர


இங்கு வரும் வேறு பறவைகளின் பெயரே தெரியவில்லை. அது கொஞ்சம் அறிவின் குறைபாடுதான்.அவற்றை பற்றி கொஞ்சம் தெரிந்தால் மட்டுமே கூர்ந்து பார்க்கவும்,ரசிக்கவும் இயலும்.

     முன்பு பணிபுரிந்த காரேற்றும்(car carrier) கப்பல்கள் அதிகமான துறைமுகங்களுக்கு செல்வதால் எப்போதும் பறவைகளுடன் இருப்பது போல இருக்கும்.சில நாட்கள் இயந்திர அறையில் காற்று வரும் குழாய்க்கு அருகில் மென் இறக்கைகள் கிடக்கும். ஒரு முறை இலங்கையின் ஜெயக்கொடி கொஞ்சம் வருத்தத்துடன் சொன்னார் “நேத்து மாலைல சிட்டு குருவி ஒன்னு பறந்துகிட்டு கிடந்தத பாத்தன்”என.  இயந்திர அறைக்கு சுத்த காற்றை அனுப்பும் ராட்சத (blower)மின்விசிறிகள் டெக்கில் இருக்கும். அதிக விசையுடன் காற்றை உள்ளிழுக்கும் போது சிறு குருவிகள் தப்ப இயலாது.

 துறைமுகத்தில் அவ்வப்போது நீண்ட கழுத்தும்,அரை அங்குல கூர் அலகும்,இரண்டடி நீளத்திற்கு விரியும் இறக்கைகள் கொண்ட பறவைகள் கார் டெக்கின் உள்ளே வந்தபின் வெளிய செல்ல தெரியாமல் சுற்றி,சுற்றி வரும்.2007 இல் லுபான் (மலேசியா) தீவில் நிற்கையில் வந்த பறவையை வெளியே அனுப்ப முயன்று தோற்று முதன்மை அதிகாரி மலேசியாவின் உஸ்மான் என்னை அழைத்தார். நானும்,ரஞ்சிஸ் ராதாகிருஷ்ணனும் சேர்ந்து ஒரு கதவை திறந்துவைத்து ,கைகளை விரித்து கதவை நோக்கி துரத்தினோம் அது தனது கனத்த உடலை தூக்கி கார் டெக் முழுவதும் பறந்துகொண்டே இருந்தது. பறவையின்பின் ஓடித்தளர்ந்த நாங்கள் மூவரும் சோர்ந்து அமர்ந்தோம். உஸ்மான் சொன்னார் “கீப் ஓபன் தி டோர்,லெட் ஸீ” என சொல்லி விட்டு அறைகளுக்கு சென்றோம்.

  

   கொரியா ஜப்பானுக்கு இடையில் பயணிக்கையில் கால்களில் வளையம் பொருத்திய புறாக்கள் வந்தமர்ந்துவிடும். சில நாட்கள்,உண்டு,உறங்கி தானாவே சென்றுவிடும். மாடப்புறாக்கள் நடப்பதும்,இரையை கொத்துவதும், க்கும்,க்கும் என மெல்லிய ஒலியை,இணைக்கு வாயில் இரைகொடுப்பதும் என இருக்கும்.



  2010  கொரியாவில் ஏறிய பந்தய புறாக்கள் செல்லவே இல்லை. கடும் மழையும்,காற்றும் வந்தபோது அவையனைத்தும் நெருங்கி வட்டமாக உடல்களை அணைத்து நின்றுகொண்டது.இரண்டாம் இஞ்சினியர் சமீர் “ஸீ மேன் கோர்ஸ் படிச்ச புறா இதெல்லாம்” என்றார். கப்பல் மூழ்கி நாங்கள் கடலில் நெடுநேரம் உதவிக்கு காத்திருக்கையில் உடல் வெப்பத்தை இழக்காமல் இருக்க கைகளை கோர்த்துக்கொண்டு மிதக்கும் பயிற்சி எங்களுக்குண்டு.

 பணியாளர்கள் புறாக்களுக்கு அரிசியும்,தானியங்களும் போட்டனர். காப்டன் அறிவிப்பு பலகையில் எழுதினார் “டோன்ட் பீட் பிஜியன்ஸ்” என.அவை இங்கேயே தங்கிவிட்டதால்.ஜப்பானில் கரையணைந்த போதும் அவை செல்லவில்லை. காப்டன் அவற்றில் இரண்டை பிடித்து ஜெட்டியில் சென்று பறத்திவிட சொன்னார் போசனிடம்.ஒன்றை பார்த்து மற்றவையும் பறந்துவிடும் என.

 மிஸீ-ஷிமா துறைமுகப்பில் இரண்டாயிரம் கார்களை ஏற்றிவிட்டு புறபட்ட ஒரு மணிநேரத்தில் கப்பல் மலைகுன்றில் மோதி அங்கேயே சிக்கி கொண்டது.சிறிது நேரத்தில் தண்ணீர் மட்டம் உயர்ந்ததால் கப்பல் மிதந்து கடலுக்குள் வந்தது. கப்பலின் முன்பகுதி ஓட்டை விழுந்து தண்ணீர் கப்பலுக்குள் வந்ததால் தொடந்து பயணிக்க முடியாமல் மறுநாள் மாலை ஏற்றிய சரக்குகளை இறக்க மிஸீ-ஷிமாவுக்கு திரும்பி வந்தபோது போசன் பறக்க விட்ட புறாக்களில் இரண்டு ஜெட்டியில் இறந்துகிடந்தது.



   பறவைகள் கப்பலின் முன்னாள் பைலட் போல பறந்துகொண்டே இருக்கும்.பனாமா கால்வாய்தாண்டி பசுபிக் கடலில் நுழைந்துவிட்டால் பறவை கூட்டம் ஒன்று கப்பலுடன் வரத்தொடங்கும் தொடர்ந்து இருபதுநாட்களுக்கும் மேல் உடன் வரும் பின் எப்போது எங்கு செல்கிறது  என்பதே தெரியாது.பசுபிக் கடலில் நுழைந்துவிட்டால் சுற்றிலும் கடல்தான் நிலமே இருக்காது.பன்னிரண்டு நாட்களுக்குப்பின் நடுக்கடலில் ஹவாய் தீவு வரும் அப்போதும் நாங்கள் இருநூற்றியைம்பது மைல் தொலைவில் தான் செல்வோம்.உடன் பயணிக்கும் பறவைகளுக்கு அதன் எல்லை எது,அதை தெரிந்தபின் எப்படி மாயகிறது என்பது கேள்வியாக இருந்தது.

 

    கடந்த மே மாதம் பனாமா கால்வாய் தாண்டிய மறுநாள் டெக்கில் வந்த ஸீகுல் பறவைகூட்டம் ஒன்று ஜப்பானுக்கு இரு தினங்களுக்கு முன் காணாமல்போனது. ஆனால் அவை அமர்ந்திருக்கும் கப்பலின் முன் பகுதி முழுவதும் வெண்ணிறமாக மாறிப்போனது.போசனும்,காப்டனும் திட்டி கொண்டே இருந்தனர். அவை சென்ற மறுநாள் முதல் துறைமுகம் செல்வதற்குள் அவற்றை சுத்தபடுத்துவது டெக் குழுவினருக்கு மிகக்கடினமான பணி.

 கடந்த மாதம் குடியிருப்பு பகுதிக்கு அருகில் சாம்பல் நிற பறவை ஒன்று கண்ணிமைகளை மூடி அமர்ந்திருந்தது.மிக அருகில் சென்று பார்த்தேன் கைகாளால் தூக்கி விட முடியும்தான். அதன் கூரான நீண்ட அலகுகளை கண்டு பயந்து விலகி நின்றிருந்தேன்.காற்றில் லேசாக அசைந்துகொண்டே இருந்ததால் நோயுற்றிருக்கிறது என புரிந்தது. (இங்கே சுனிதா இருந்திருந்தால் அதை பிடித்து ஒரு கூடையில் அடைத்து மூன்று தினங்கள் உணவும்,நீரும்,மருந்தும் கொடுத்து தேத்தி சல்மானிடம் “கொண்டு பறத்திவுடு சல்லு” என சொல்லியிருப்பாள்).


பார்வர்ட் மாஸ்ட் 


 

  இம்முறையும் பனாமா தாண்டிய மறுநாளே நாங்கள் எதிர்பார்த்த பறவை கூட்டம் வந்து பார்வர்ட் மாஸ்ட் எனப்படும் தூணில் அமர்ந்துகொண்டது. இரு குழுக்கள் சாம்பலும்,பிரவுனும் கலந்தவை மற்றொன்று வயிறு,கழுத்தில் பாதி வெண்மையும், தலை,இறக்கையில் புள்ளிகள் கலந்த மண் நிறம்.அவை பறக்கும்போது பெரும்பாலும் சிறகை அசைப்பதே இல்லை விமானம் போல இரு ரெக்கைகளையும் விரித்து அசையாமல் கப்பல் செல்லும் வேகத்துக்கு(16 knots) இணையாக பறக்கும்.தலை மட்டும் வலமிடமென அசையும்.கடலுக்குள் இருக்கும் மீனை கண்டுகொண்டால் க்குவாக்,க்குவாக் என ஓசை எழுப்பி ஷணத்தில் சிறகை ஒடுக்கி செங்குத்தாக கடலுக்குள் விழுந்து காணாமல் போகும்.சப்தம் கேட்டதும் கூட்டத்திலுள்ள பிற பறவைகளும் இலக்கை நோக்கி வந்து விழுந்து கடல் நீர் மேல் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு மேலெழும். நீருக்குள் விழுந்த பறவையை காணாமல் மனம் பதைத்து நிற்கையில் அலகும்,தலையும் மேலே எழுப்பி சிலுப்பிக்கொண்டு பறக்க தொடங்கும்.

  காலை கூட்டத்தில் “போசன் உங்க பிரண்ட்ஸ் வந்தாச்சே”என்றேன். “எல்லாம் இனி தூறி அளிக்கும் ஒண்ணும் செய்ய முடியாது”என்றார். முதன்மை அதிகாரி “ஒன்னு சிக் ஆயிட்டு” என்றபோது,ஓ எஸ் இர்பான் “ரெண்டண்ணம் சிக் ஒன்னு மின்ன செத்து கிடக்கு,ஷாகுல் பாய்,அத அடக்கம் பண்ணு” என்றான். கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது அனைவருக்கும்.



 இரு தினங்களுக்குப்பின் எனக்கும் பார்வர்ட் மாஸ்ட் அருகில் பணி. போசன் தலைமையில் டெக் குழுவினரும் அங்கேயே வேலை செய்துகொண்டிருந்தனர். வெண்மையும், சாம்பல் நிறமுமாக இருகுழுக்கள் வந்திருந்தது.பார்வர்ட் மாஸ்ட்,கப்பலின் முன் பகுதியில் உள்ள சங்கிலி,கம்பிகளில் அமர்ந்துகொண்டன. ஒரு கூட்டம் எப்போதும் பறந்துகொண்டே இரையை பிடித்து உண்ணும் வயிறு நிரம்பியதும் வந்தமர்ந்துகொள்ளும். பின்னர் அமர்திருந்தவை பறக்க தொடங்கும்.

   அவை பறப்பதில் ஒரு ஒழுங்கிருக்கிறது. 2008 இல் ஈகுவாடர் நாட்டின் துறைமுகப்பில் நிற்கும்போது அருகிலேயே மீன்பிடி கப்பல்களும்,ஜெட்டியும். தடுப்பணை கல்மீது வரிசையாக பறவைகள் அமர்ந்திருக்கும் லட்சகணக்கில் அவை எப்படி சமிக்ஞையை கடத்துகிறதோ? பார்த்துக்கொண்டிருக்கையில் தீடிரென ஒன்று மேலெழும்பும் பின்தொடர்ந்து மிகச்சரியாக ஒன்றன் பின் ஒன்றாக சீரான  இடைவெளியில் பறக்க தொடங்கி மேலெழும்பி,கீழிறங்கி என அலையலையாக வித்தைகாரனை போல அலைவரிசை மாறாமல் ஒரு சுற்று சுற்றிவிட்டு மீண்டும் கற்களின் மீது வந்தமரும்.



 மீன்பிடி கப்பலிலும்,நீரிலும் மீன் பிடித்து உண்ணும் ஒரு கூட்டம் வேறு.எனக்கு ஆச்சரியம் அந்த ஒழுங்கமைவுதான்.நான் தற்போது குடியிருக்கும் அடுக்குமாடி கட்டிடத்தின் மொட்டை மாடியில் அதிகாலை உதயம்  பார்க்கச்செல்லும் போதும் கவனிப்பேன்.ஒரு கூட்டம் பறவைகள் இடமிருந்து வலம்,பின் மேல்நோக்கி,சாய்த்து கீழிறங்கி அதிகாலை உடற்பயிற்சிக்காக இசைக்கு தகுந்தவாறு நடனமாடுவதை போலவே இருக்கும்.

   இங்கே  டெக்கில் முன் சென்று கவனித்தேன் சில பறவைகள் ஓய்வில் அல்லது துயிலில் இருந்தது.தலையை நூற்றி எண்பது டிகிரியில் திருப்பி இறக்கைக்கு நடுவில் தலையுடன் புகுத்திகொண்டு நாம் கம்பளிக்குள் புகுந்து கொள்வது போல் ஆழ் மோனத்தில் இருந்தது. விழித்திருந்த ஒரு ஜோடி என்னை திரும்பி பார்த்தது நேருக்கு நேர் கண்களை சந்தித்தபோது என்னிடம் என்ன வேண்டும் உனக்கு என கேட்பது போலவே இருந்தது. இன்னும் ஒரு சிற்றடி எடுத்து வைத்தால் அவை பயத்தில் பறந்து ஓடலாம் நின்று பார்த்துக்கொண்டே இருந்தேன். வாத்துகளை போல கால்கள்.நடப்பதை கண்டபோது மிகப்பெரிய பின்புறம் கொண்ட பனாமா நாட்டு பெண்டிரைபோல சிரமப்பட்டது.அவை பறப்பதில் கில்லாடிகள் ஆகாயத்தில் காற்றை வசப்படுத்தி கொண்டவை.இரைபிடித்து வாயில் மென்று கொண்டுவரும் பறவை அந்தரத்தில் தன்னை நிறுத்தி (அப்போது மட்டும் சிறகசைக்கும்) அலகு திறக்கும் இணைக்கு மேலிருந்து ஊட்டும் காட்சியில் அவற்றின் காதல் தெரிந்தது.

   ஒரு குழு பறந்துகொண்டிருந்தது.டேக் ஆப் மிக அற்புதம்.சிறகை விரித்து,வால்இறக்கையையும் விரித்து மேலெழும்,காற்றில் உயரே செல்லும்போதே கால்கள் இரண்டையும் உடலுடன் ஒட்டி நேராக பின்னோக்கி சுருக்கிகொள்ளும் பார்வை கீழேயும்,வலமிடமாகவும் பார்க்க தலை திரும்பிக்கொண்டேயிருக்கும் விமானம் பறப்பது போல் தான்.

 கப்பலின் வலமிருந்து,இடம்வருகையில் இறகை அசைப்பதேயில்லை வினாடியில் சொயங்க் என சரிந்து காற்றில் மிதக்கும் அப்போது வாலின் இறகுகள் மட்டும் கை விரல்களை விரிப்பது போல விரியும் வினாடிகளில் மறுபக்கம் போயிருக்கும் எந்த முயற்சியுமின்றி.டெக் முழுவதும் தடிமனான புவுடர் பூசிய பெண் முகம் போல வெண்மையாக மாறியிருந்தது.லேசான நாற்றமும்.அவை பறந்துகொண்டிருக்கையிலேயே ‘புளிச்’என தூறிவிட்டு செல்லும்.முதன்மை அதிகாரி வந்தார் “பக் ஆல் திஸ் பர்ட்ஸ் மை டெக் பி கம் வெரி டர்ட்டி”என சொல்லிகொண்டிருக்கும் போது முகத்தின் இடப்புற கன்னத்தில் ‘சளக்’என  வெண்மையாக விழுந்தது மேலே பறந்து கொண்டிருந்த பறவையின் தீட்டம்.

  மீண்டும் “பக் திஸ் பர்ட்ஸ்”என்றார். ஒண்ணும் செய்ய முடியாது என சொல்லி பையிலிருந்து துணியை எடுத்து அவரது முகத்தை துடைத்து விட்டேன்.கடலில் பறக்கும் மீன்கள் உண்டு. தண்ணீருக்கு மேல் ஒரு அங்குல உயரத்தில் மிக வேகமாக சிறகைத்து சில மீட்டர்கள் பறந்து மீண்டும் கடலுக்குள் போகும்.வரிசையாக இது போல் பறக்கும் ப்ளையிங் பிஷ் நிறையவே காணலாம்.இந்த பறவைகள் பெரும்பாலும் அவற்றை பிடிக்க முயற்சி செய்யும் சில நேரம் மட்டுமே வெற்றி பெறும்.

வாந்தி வரவைக்கும் நாற்றமடிக்கும் பறவை பீயின் மத்தியில் வேலை செய்வது கடினம்தான்.மீன் பிடித்து உண்டு கூடில்லாமல் இரவு,பகல் கடும் காற்று,மழையில்,காற்றை வசப்படுத்தி தன்னியல்பாக ஆகாயத்தில் எல்லையில்லாமல் நாடு விட்டு நாடு செல்லும் அதை எண்ணி பொறாமையாகத்தான் இருந்தது.

  இன்னுமொரு பறவை இறந்தபோதும் இர்பான் சொன்னான் “ஒன் மோர் டெட் பாடி”என அதை தூக்கி தண்ணீரில் போட ஏன் அஞ்சுகிறார்கள் என தெரியவில்லை. நிலத்தில் காணக்கிடைக்கதை மிகப்பெரிய சைசில் உள்ள பறவையை கையில் தூக்கியபோது காற்றுபோல எடையில்லாமல் இருந்தது. ஆசிரியர் ஜெயமோகனின் நிழல் காகம் கதை நினைவுக்கு வந்ததால் எனக்கும் பயம் தொற்றிகொண்டது மேல பார்த்தேன் என்னை பறவைகள் கவனித்தது போல் எனக்கு தெரியவில்லை. 

பறப்பது,அமர்ந்திருப்பது என எண்ணி பார்த்தேன் எழுபது முதல் எண்பது பறவைகள் இருந்தது.அமெரிக்காவிலிருந்து ஆசியாவை நோக்கிய பயணத்தில் இருபத்தியைந்து நாட்கள் தொடர்ந்து வந்தவை முப்பதாக குறைந்தது. நேற்று முன்தினம் பெய்த பெருமழைக்ப்குபின் மேலும் காணாமல் போய்விட்டது.நேற்று காலை எட்டு மணிக்கு ஒரு பறவை கூட இல்லை.காலை பதினோரு மணிக்கு ஏழு பறவைகள் பறந்து கொண்டிருந்தது.

 டெக்கில் அவை பிடித்து உண்ணாமல் போட்ட மீன்கள் நிறைவே கிடந்தது.பிறகு உண்ண வேண்டி வைத்துகொள்ளும் ஆனால் அவை உண்பதே இல்லை.டெக்கில் கிடந்த மீன்களுக்கு கண் இல்லை.கண்ணை மட்டும் கொத்தி தின்னிருக்கும் போல.

   போசன் சில தினங்களுக்கு முன்பே பயர் பம்மை இயக்கி கடல் நீரை பீய்ச்சி அடிக்க தொடங்கியிருந்தார். மெது,மெதுவாக பறவை தீட்டம் இளகி வெண்ணிறம் மாறி டெக்கின் சாம்பல் நிறம் பொலிந்து வர ஏழு நாட்கள்வரை ஆகியது.பறவைகள் பதினைந்து நாட்களுக்குப்பின் மிட் ஷிப் மாஸ்டில் (கப்பலின் நடுப்பகுதி)அமர்ந்து பீய்ச்சி அடிக்கதொடங்கியது. “அதுக்கு சுத்தமான இடம் வேணும் போல” என கேடட் அஞ்சுமன் சொன்னான்.

  சன்னி ஜாய் கப்பலில் இருந்தபோது தான் போசன் ரமேஷ் சொன்னார். “அது வேற கப்பல்ல ஏறி திரும்பி போவும்,அதுக்கு எல்லாம் தெரியும்,மனுசன மாதிரி கிடையாது.கண்டம் விட்டு கண்டம் போய் முட்ட போட்டு குஞ்சி பொரிச்சி சிறகு முளைத்ததும் கூட்டை உடச்சி,பறக்க படிச்சி குடுக்க அறிவுள்ள ஜீவனாக்கும் அது” என சொன்னது நினைவுக்கு வந்தபோது  எனக்கு ஐடியா மணியும் நினைவில் வந்து சென்றார்.

    காலை விழித்தபோது இருபது நாட்களுக்கும் மேலாக எங்களுடன்  பயணித்து எஞ்சிய  ஏழுபறவைகளையும் காணவில்லை. இன்று அதிகாலை பிரிட்ஜில் சென்றபோது ரஹீம் உல்லா “பாய் சப் கெயா ஏக் பி நஹி” என்றார். நேற்றுவரை கப்பலை அசிங்கபடுத்துகிறது என திட்டிகொண்டே இருந்த பலரும் இன்று அவற்றை தேடினர். அவை பறப்பதும்,நீருக்குள் மூழ்கி எழுவதும்,நீரின் மேலேயே அமர்ந்துகொள்வதும் ஒரு தற்காலிக தொடர்பை கப்பல் காரர்களுடன் ஏற்படுத்திஇருக்கலாம்.கப்பலை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டால்,எங்கே கப்பலை விட்டு விடுமோ என மனம் பதைபதைத்து நின்றிருக்கிறேன் நானும் ஆனால் அவை சிறகசைத்து பறந்து வந்து கப்பலை தொட்டுவிடும் தூரத்தில் தான் விலகி செல்கிறது.

மனதில் தோன்றியது அவை வேறு கப்பல் ஏறி திரும்பி பனாமாவுக்கே போயிருமா என நினைக்கும்போது அதிசயமாகத்தான் இருந்தது எனக்கு.

நாஞ்சில் ஹமீது,

01 october 2023.

sunitashahul@gmail.com

இந்த கட்டுரை புகைப்பட கலைஞர் மாயாவுக்கு சமர்பிக்கிறேன் .



No comments:

Post a Comment