கப்பல் காரனின் தொலைப்பேசி 3
கப்பல் காரனின் தொலைப்பேசி இரு பதிவுகளில் வாட்ஸ் அப் கால் வேலை செய்யாமல் இருந்ததை சொல்லியிருந்தேன். பதினைந்து நாட்களுக்கும் மேலாக யாருடனும் பேசவேயில்லை.
கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்கள் தாக்கும் பகுதியில் பயணித்ததால் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வீரர்கள் மூவர் கப்பலுக்கு வந்திருந்தனர் மூவரும் இலங்கையை சார்ந்தவர்கள்.
ஆபத்தான பகுதியை தாண்டியபின் சூயஸ் கால்வாய் அருகில் நங்கூரம் பாய்ச்சி நிற்கையில் அவர்கள் இறங்குவதாக இருந்தது.எனது அறையை ஒட்டிய அறையில் வசிக்கும் இலங்கை பணியாளருடன் வீரர்கள் பேசிக்கொண்டிருக்கும் சப்தம் கேட்டு எட்டிப்பார்த்தேன். வா உட்கார் என பேசிக்கொண்டிருந்தபோது எனது போன் வேலை செய்யாதது பற்றிய பேச்சு வந்தது.
அந்த வீரர் எனது போனை வாங்கி பார்த்தார். முதலில் வாட்ஸ் அப்பை அப்டேட்செய்தார் அதன் பின் இலங்கை பணியாளரின் எண்ணை என் மொபைலில் பதிந்து வாட்ஸ் அப் காலில் அழைத்தேன் வேலை செய்தது. சுனிதாவிற்கு அழைத்தேன் அழைப்பு தொடர்புகிடைக்கவில்லை முன்பு போல. அதன் பின் ஜி வாட்ஸ்அப் எனும் ஒன்றை அவரது சகவீரரிடம் பெற்று எனது மொபைலுக்கு ஷேர் இட்டில் மாற்றினார்.
“நவ் வில் வொர்க்” என்றார். எனது மொபைலில் இப்போது இரண்டு வாட்ஸ் அப்கள் இருந்தது.ஒரே எண்ணில் ஐந்து வாட்ஸ் அப்கள் வரை வைத்து கொள்ளலாம் என்றார். ஜி வாட்ஸ் அப்பில் யாரவது குறுஞ்செய்தி அனுப்பி டெலிட் செய்தால் அதையும் நம்மால் பார்க்க முடியும் என்பதை அவரே ஒரு குறுஞ்செய்தி அனுப்பி அதை அளித்தார். எனது வாட்ஸ் அப்பில் அவர் அளித்த குறுஞ்செய்தி இருந்தது. ஆளு சாமர்த்திய சாலியா இருக்கானே என நினைத்தேன்.
புதிய ஜி வாட்ஸ் அப்பில் இருந்தும் என்னால் அழைக்க முடியவில்லை.போன் சாப்ட்வேர் அப் டேட் செய்ய சொன்னார். அப்போதும் என்னிடம் நூற்றி அறுபது mb டேட்டா இருந்ததால் அதையும் செய்தேன்.ஆனால் எனது போனில் வாட்ஸ் அப் கால் மட்டும் வேலை செய்யவில்லை.போன் பிரச்னை இல்லை வேறு எதோ பிராப்ளம் என யோசித்தார்.
நோ ரூட் vpn ஆப் ஆனில் இருக்கிறதா என இலங்கை பணியாளர் கேட்டார்.பாதுகாப்பு வீரர் அதை செக் பண்ணிவிட்டு No Root Firewall ஆப் ஐ ஆன் செய்தார். மீண்டும் வாட்ஸ் அப் அழைத்து பார்த்தேன் இலங்கை பணியாளருடன் வேலை செய்தது.
சுனிதாவை அழைத்தேன் பேச முடிந்தது. “எப்டி” எனக்கேட்டாள். ஆர்ம்ட் கார்ட் செரி செய்து தந்தார்”என்றேன்.
“என்னமெல்லாமொ செய்தான் இப்ப வேலை செய்யுது”
“அவன் ஆளு சொங்கின்னாலும் ஞானமுள்ளவனாக்கும்,இல்லியா” எனச்சொன்னாள்.
“இப்ப எனக்க மொபைல்ல ரெண்டு வாட்ஸ் அப்பாக்கும் இருக்கு”என உரக்க சொன்னேன்.
“மேய்க்கிது எரும,அதுல ஒரு பெரும,சீக்கிரம் போன மாத்துங்க என்னா,உங்க போனுக்கு வயசாயாச்சி” எனச்சிரித்தாள்.
“இனி அமெரிக்கா போனாதான் வாங்க முடியும்” என் போனை துண்டித்தேன்.பின்னர் தான் புரிந்தது. சீனா மற்றும் அரபு நாடுகளில் வாட்ஸ் அப் வேலை செய்யாது. வி.பி.என் (VPN) எனும் ஆப் பதிவிறக்கம் செய்து வைத்து அதன் உதவியால் தான் அழைக்க முடியும். கப்பலில் செயற்கை கோள் இணைப்பு கப்பல் நில்லாமல் ஓடிக்கொண்டேயிருக்கும்,வளைகுடா பகுதியில் வரும்போது அப்பகுதி நெட்வொர்க்கில் இணைந்து எனது வாட்ஸ் அப் அதற்குள் வந்து விட்டது என நினைக்கிறேன்.
ஒரு மாதத்திற்கு பின் அமெரிக்கா வந்தபின் கப்பலில் உள்ளூர் இணையம் பொருத்தபட்டிருந்தது அப்போது விபின் ஆப் இல்லாமலே எனது மின்னஞ்சல்,வாட்ஸ்அப் தெளிவாக வேலை செய்தது.
ஹூஸ்டன் நகரில் வெளியே சென்று பெஸ்ட் பை மின்சாதன விற்பனை மையத்தில் One Plus Nord N30 5G என்ற போன் ஒன்றை வரிகள் உட்பட 292 டாலருக்கு வாங்கினேன். உள்ளூர் இணையம் இருக்கும்போதே பழைய போனிலிருந்து அனைத்தையும் புதிய போனுக்கு மாற்றிக்கொண்டேன்.
கப்பல் புறப்பட்டபின் புதிய போனிலும் விபின் ஆப் இல்லாமல் கப்பல் நெட்வொர்க்கிலிருந்து வாட்ஸ் அப் கால் வேலை செய்யவில்லை.இப்போது தெளிவாக புரிந்தது. எனது பழைய vivo போனில் எந்த பிரச்னையும் இல்லை என.
சுனிதாவிடம் சொன்னேன். “இது மட்டும் மொதல்லே தெரிஞ்சிருந்தா இப்ப போனே வாங்கிருக்க மாட்டேன்” என.
அவள் “இப்டி எல்லாம் ஆனா தான் நீங்கோ போனு வாங்குவியோ,வயசாசில்லா போனுக்கு” என.
ஆம் 2017 ஜனவரி மாதம் பத்தாயிரம் ரூபாயில் vivo போன் வாங்கியிருந்தேன். சைனா தயாரிப்பான அது நல்ல போன். கப்பல் காரன் நாட்குறிப்பில் உள்ள அனைத்து படங்களும் அதில் எடுத்ததுதான்.பத்திரமாக அதை வைத்து கொள்ளவேண்டும்.
நாஞ்சில் ஹமீது.
sunitashahul@gmail.com
29 september 2023.
No comments:
Post a Comment