நள்ளிரவில் கோவிட் பாசிட்டிவ்
நோயாளிகள் இருவர் வந்தனர்.செவிலியர்
அப்போதும் அவர்களை சோதனை செய்து அட்மிட் செய்தனர்.இரவு காவலர் தூங்காமல் விழித்தே இருந்தார்.அவ்வப்போது
வார்டுக்குள் வந்து பார்த்துக்கொண்டும் இருந்தார்.நான் பலமுறை விழித்துக்கொண்டேன்
அப்போதெல்லாம் உம்மாவை அருகில் போய்
பார்த்து வந்தேன்.
அதிகாலை ஐந்துக்கு முன்பாக எழுந்துவிட்டேன் விடிந்தபின்
உம்மாவுக்கு கட்டன் சாயா வாங்கி கொடுத்தேன்.காலை ஆறரை மணிக்கே வார்டில் இருக்கும்
நோயாளிகளுக்கு மட்டும் இட்லி,சாம்பார் வழங்கப்பட்டது. “நேத்து உள்ள இட்லிய எறிஞ்சா
மண்ட உடஞ்சிரும்,இன்னிக்கு கொஞ்சம் பரவாயில்ல”என பெண் ஒருவர் சொல்வது காதில்
விழுந்தது.நான் பார்வதிபுரம் ஆற்றில் போய்
குளித்து ஆடை மாற்றிக்கொண்டேன்.
காலை மருத்துவர் வந்து ஒவ்வொரு நோயாளியாக பார்த்தார்.உம்மாவின்
சி டி ஸ்கேன்,ஜெயசேகரன் மருத்துவமனை டிஸ்சார்ஜ் சம்மரி ஆகியவற்றையும் பார்த்தபின் இங்கே நர்சுகள் சோதித்து எழுதிய ரத்த
அழுத்தம், காய்ச்சல்,ஆக்சிஜன் அளவின் குறிப்புகளையும் பார்த்தபின் “இப்போ ஏதாவது
கஷ்டம் இருக்கா”எனக்கேட்டறிந்தார்.
முந்தைய தினம் அட்மிட் ஆன ஒரு பெண் “டாக்டர்
நான் இன்னைக்கு வீட்டுக்கு போலாமா?” எனக்கேட்டாள்.
“நேத்து தானே வந்தது அதுக்குள்ள
வீட்டுக்கு போணுமா பிளட் டெஸ்ட் ரிப்போர்ட் வரணும்,இருந்து பாத்துட்டு போங்க” என
கடிந்து கொண்டார்.வேறு சில நோயாளிகளுக்கு வீட்டிற்கு செல்ல அனுமதியளித்தார்.
பதினோரு மணிக்கு பிரட்,கசாயம்,இரு
அவித்த முட்டைகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. நோயாளிகள் குறைந்த பட்சம் ஒரு
தட்டு,ஒரு மூடி போட்ட பாத்திரம்,இரு டம்ளர்கள் வைத்து கொள்வது நல்லது. மருத்துவமனை
வளாகத்தில் உள்ள கேண்டீன் அருகில் உள்ள கடையில்,தட்டு,டம்ளர்,நைட்டி,துண்டு,பிளாஸ்டிக்
வாளி போன்ற தேவையான அனைத்தும் கிடைப்பது என்னை ஆச்சரியபடுத்தியது.
நேற்று வார்டுக்குள்ளேயே தொழுகையை
நிறைவேற்றினேன்.இன்று திறக்கபடாத புதிய கட்டிடம் ஒன்றில் சுத்தமான வராண்டாவை
கண்டுபிடித்தேன் தொழுகைக்காக.ஆக்சிஜன் பிளாண்டின் அருகில் இருந்த தண்ணீர் குழாய்
ஒளு செய்ய வசதியாக இருந்தது.
மதியம் டார்வின் மனைவியை பணிக்கு அழைத்து
வரும்போது மதிய உணவை கொண்டு வந்தார்.எனது தந்தையின் சகோதரி சரிபா மாமி கொடுத்தனுப்பிய
வெள்ளை சாதம்,பொரித்த மீன்,வறுத்து அரைத்த மீன் குழம்பு,அவியல் என சுவையாக இருந்தது.உம்மாவும்,நானும்
சாப்பிட்டபின் உணவு மீதமிருந்தது.
உம்மா சொன்னாள் “அங்க பாரு இப்ப வந்த புள்ள அந்த
சாப்பாட சாப்பிட முடியாம வெச்சிட்டு இருக்கு,அவள்ட்ட இத குடு”
“மீன் குழம்பும் சோறும் இருக்கு
தின்னுதியளா”என கேட்டேன்.சிரித்துக்கொண்டே வாங்கி கொண்டாள்.
நான் அவ்வப்போது உம்மாவை வார்டில்
சென்று பார்த்து கவனித்து கொண்டு
வார்டுக்கு வெளியே மரத்தடி நிழலில் அமர்ந்து அனைத்தயும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.
கொரோனா வார்டுக்கு வெளியே |
இங்கே பணி துப்புரவு பணியில் இருப்பவர்கள் பெரும்பாலும் பெண்கள்.கொரோனாவோடு
இரண்டாண்டு அனுபவம் அவர்களுக்கு நோய்பற்றிய எந்த அச்சமும் இப்போது அவர்களுக்கு
இல்லை.இங்கே கொரோனா வார்டு மற்றும் நோயாளிகள் உபயோகிக்கும் கழிப்பறையை சுத்தம்
செய்வது,வெளியே புல் வெட்டுவது,நோயாளிகளுக்கு உணவு,கசாயம் வழங்குவது எல்லாம்
அவர்கள்.
மதிய உணவுக்கு அனைவரும் ஒன்று கூடி சாப்பிட்டபின்
சிறிது நேரம் ஓய்வு. பெண்கள் மட்டுமே இருக்கும்போது அவர்களின் சுதந்திரம் உரையாடல்களில்
வெளிப்படுகிறது.
“ராத்திரி வீட்டுக்கு போனா புள்ளையளுக்கு
சாப்பிட செய்து குடுத்திட்டு,பத்து மணிக்கு நல்லா உறங்கலாம்”என்றாள் ஒரு பெண்.
“ஒன்னு தோசை வேணும்னு கேக்குவு,ஒன்னொரு
புள்ளக்கி சப்பாத்தி வேணும் அத எல்லாம் செய்து குடுத்துட்டு படுக்க நேரம் ஆயிரும்”
அப்போது இடை மறித்து ஐம்பது வயதை
தாண்டிய அம்மையார் “ஆமா பத்து மணிக்கு மேல உறங்க உடானுவோ” என்றாள்.அந்த இடமே பெண்களின்
சிரிப்போசையால் அதிர்ந்தது.
நான் சிரிப்பை அடக்கி கொண்டதை கவனித்த
பெண் ஒருத்தி அந்த அம்மையாரிடம் “வாய மூடிட்டு போ”என்றாள்.
இரண்டு மணி பணிக்கு வந்த காவலர் ரமேஷ்
மரத்தடியில் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
அவரிடம் பெண்ணொருத்தி “எறும்பா உளுது
தள்ளி இருக்கபிடாதா”என்றாள்.
அம்மையார் “லே ரமேசு இறுக்கமா ஜட்டி
போட்டிருக்கியா,இல்லேன்னா வசக்கேடா கடிச்சிரும் பாத்துக்கோ”என்றாள்.
ரமேஷ் பதிலேதும் சொல்லவில்லை.
எழுபத்தி ஐந்து வயதான ஆறுமுகம் பாட்டி என்னிடம் “மக்கா என்னய வீட்டுக்கு
போவ சொல்லியாச்சி,ஒரு ஆட்டோ புடிச்சு தருவியா வடசேரிக்கு போவணும்”என்றார்.
“பாட்டி வந்து எத்ர நாளாச்சி”எனக்கேட்டேன்.
“முந்தா நாள் வந்தேன் நேத்தே போவ
சொல்லியாச்சி,ஊரடங்கு இல்லா அதான் நேத்து போவல”
மருந்து சீட்டை வாங்கி ஐந்து
நாட்களுக்கான மருந்தை வாங்கியபின் கேண்டீன் அருகிலுள்ள டீக்கடையில் சொன்னபோது
ஆட்டோ கொரோனா வார்டுக்கே வந்துவிட்டது.ஆறுமுகம் பாட்டி ஆட்டு குட்டியை போல துள்ளி
குதித்து உள்ளே ஏறியபின் டாடா காட்டிவிட்டு, “அம்மைய பாத்துக்க லே மக்கா” என கூறி சென்றாள்.
உம்மா |
நான்கு சுண்டல்,பால்,கஷாயம் வழங்கப்பட்டது. அன்று பகலிலும்,இரவிலும்
கோவிட் நோயாளிகள் வந்து கொண்டே இருந்தனர்.ரொம்பவே முடியாமல் வந்த ஒருவரை முதற்கட்ட
சோதனைகளை செய்துவிட்டு வேறு கோவிட் வார்டுக்கு அனுப்பிவைத்தனர் செவிலியர்.இன்று
வந்தவர்களில் இருவர் இளம் கர்ப்பிணி பெண்கள்.
மேலும்
No comments:
Post a Comment