எனக்கு மருந்து வாங்கி தந்த நண்பர் ஸாம்
ப்ரின்ஸ் போனில் எனது உடல் நிலை குறித்து சொல்ல சொல்லியிருந்தார்.எனவே காலை,மாலை வேளைகளில்
அவரை அழைத்து சொல்லிகொண்டிருந்தேன்.தெர்மோமீட்டர் ஒன்று வாங்கி அவ்வப்போது உடல்
வெப்ப சோதனை செய்து பார்த்தேன்.ஒருமுறை 37.2 என வந்தது.
ஏழரை மணிக்கே
இரவுணவாக சரிபா மாமி கொடுத்தனுப்பிய இட்லியில் இரண்டை மட்டும்
சாப்பிட்டுவிட்டு பத்து மணி ஆகட்டும் என
வெளியில் காத்திருந்தேன்.உம்மாவுக்கு சுடுநீர் மற்றும் தேவையானவற்றை
செய்துவிட்டு தூங்க சென்றேன்.
இன்றும் சில நோயாளிகளை மருந்துகளை எழுதிகொடுத்து
வீட்டுக்கு செல்ல மருத்துவர் அனுமதித்தார்.உம்மாவிடம் “உங்களுக்கு என்னாவாவது
கஷ்டம் இருக்கா”
“லேசா சளி இருக்கு”
“ஒரு நாள் கூட இருந்து பாத்துட்டு
போங்க,நாளைக்கு காலத்த பாஸ்டிங்ல பிளட் டெஸ்ட் பண்ணி பாத்துட்டு வீட்டுக்கு உடேன்
உங்களை”என்றார் பெண் மருத்துவர்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த ஸ்ரீ ராம் இங்கே பத்து
நாட்களாக சிகிட்சை பெறுகிறான்.என்னிடம்
நான் நன்றாக இருக்கிறேன்.ஏன் என்னை வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை. எனக்கு
வீட்டிற்கு செல்ல வேண்டும் என தான்
சொல்வதை மருத்துவர் வரும்போது சொல்ல சொன்னான்.
அன்று வார்டுக்கு வந்த மலையாளி இளம் பெண்மருத்துவர் உடைந்த ஹிந்தியில்
பேசினார்.ஸ்ரீ ராம் டிஸ்சார்ஜ் கேட்கிறான் என டாக்டரிடம் சொன்னேன். அவர் என்னிடம்
“இவன்ற லங்க்ஸ்ல பிரஸ்ணம் உண்டு,அது கொண்டு இந்நல சி டி ஸ்கேன் எடுக்காம் பறஞ்சு”
என ஸ்ரீ ராமின் ஸ்கேன் படத்தை என்னிடம் காட்டி இவனை வீட்டிற்கு செல்ல அனுமதிக்க
முடியாது.இருபத்தி மூன்றே வயதான இவன் ஒருவேளை நிமோனியாவால் பாதிக்கபடும் வாய்ப்பு
உள்ளது எனவே இன்னும் சில நாட்கள் இங்கே இருந்து மருந்துக்கள் எடுத்துகொள்ள
வேண்டும் என்பதை அவனிடம் சொல்லி புரிய வைக்க சொன்னார்.
ஸ்ரீ ராம் கையிலிருந்து காசு
தீர்ந்துவிட்டது.இரண்டாயிரம் ரூபாய் இருந்ததில் நேற்று ஐநூறு ரூபாய் ஸ்கேன் எடுக்க
செலவாகியது என புலம்பிகொண்டிருந்தான்.மூன்று ஆண்டுகளாக இங்கே பணி செய்யும் ஸ்ரீ
ராம் சொந்த ஊருக்கு சென்று திரும்பியபின் செய்த சோதனையில் கொரோனா உறுதியாகியதால்
இங்கே அனுமதிக்கபட்டுள்ளான்.மிகக்குறைந்த கூலி கொடுத்து ஸ்ரீ ராமின் உழைப்பை உறுஞ்சிய அவன் முதலாளி அவன் உடல் நிலை
குறித்து போனில் கூட விசாரிக்கவில்லை.
இரவு சரியான தூக்கமின்றி கழிந்தது.தலைவலி கொஞ்சம் குறைந்து,முதுகு தண்டுவட வலி அதிகமாகி லேசான காய்ச்சல் இருந்தது.அதிகாலை மூன்று மணிக்கு மேல் தூங்கி ஐந்துக்கு விழித்தேன்.இன்று குளிக்க வேண்டாம் என முடிவு செய்தேன்.சுடுநீரில் பல் தேய்த்து கை, கால் கழுவி காலையிலேயே கட்டன் சாயாவில் அஞ்சால் அலுப்பு மருந்து போட்டு குடித்தபோது உடல் கொஞ்சம் தயாராகியது.
காலை ஆறு மணிக்கே ரத்தப்பரிசோதனை செய்ய வந்த செவிலியர் உம்மாவின் கைகளில் ஊசியால் குத்தி ரத்தம் உறிஞ்சி எடுத்துச்சென்றனர்.காலை பத்துமணிக்கு மருத்துவர் வந்தபோது நான்கு கர்ப்பிணி பெண்கள்,ஒன்பது மாத குழந்தை ஒன்று உட்பட ஒன்பது பேர் வீட்டுக்கு செல்ல எழுதி கொடுத்தார்.அதில் ஒரு கர்ப்பிணி பெண் மூன்று தினங்களுக்கு முன் ஆபத்தான நிலையில் தூக்கி வந்திருந்தார்கள்.அவர்கள் அனைவரும் சிரித்த முகத்துடன் டிஸ்சார்ஜ் ஷீட் வருவதற்காக காத்திருந்தனர்.மதியம் இரண்டு மணிக்குத்தான் நீங்கள் செல்ல முடியும் தகவல் சொன்னார்கள்.
மதியம் ஒருமணிக்கு பணிக்கு வந்த டார்வினின் மனைவியிடம் “உம்மாவுக்கு இன்னைக்கு டிஸ்சார்ஜ் சொல்லியாச்சா?” எனக்கேட்டேன்.உம்மாவின் ரிப்போட் சார்ட்டை பார்த்துவிட்டு
“பிளட் டெஸ்ட் ரிப்போர்ட் வரணும் அதுக்க பொறவுதான் உடுவாங்க அண்ணே”என்றாள்.
நான்கு மணிக்கு செவிலி என்னை அழைத்து “உம்மா இன்னைக்கு போலாம் மருந்து எழுதி தாரேன் அத பார்மசியில் வாங்கீட்டு வாங்க,அஞ்சு நாளக்கி இத தின்னணும் நாலு நாளு வீட்டுல கோரைன்டைன்ல இருக்கணும்” என்றாள்.
மருந்துகளை வாங்கி விட்டு மருத்துவமனை வாயிலுக்கு வெளியே சென்று ஆட்டோ பிடித்து வந்தேன்.உம்மாவை தம்பியின் வீட்டுக்கு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைத்தேன்.கன்னியாகுமரி மாமா அழைத்தார் “உம்மா வீட்டுக்கு போயாச்சி”என்றேன். “அல்லாஹ் மிகப்பெரியவன்” என இறைவனுக்கு நன்றி கூறினார்.மருத்துவ மனையிலிருந்து வீட்டிற்கு செல்வது பெரும் நிம்மதியை தந்தது.
மருத்துவ கல்லூரிக்கு வெளியே நடக்கும் சில வியாபாரங்களில் ஒன்று சவப்பெட்டி விற்பனை கடை அது என்னை நின்று கவனிக்க செய்தது.
சுனிதாவை போனில் அழைத்து “ரூம்ல இருந்து உங்களுக்கு வேண்டியத எடுத்துகிடுங்கோ எனக்கு அஞ்சு நாள் கோரன்டைன்”என்றேன்.வீட்டிற்கு சென்று அறையை பூட்டிகொண்டேன் தேவைப்படும்போது உணவு,கட்டன் சாயா,சுடுநீர் ஆகியவற்றை கதவைதிறந்து சுனிதா தந்தாள். மகன்களை கதவருகில் வர விடவேயில்லை.
இரண்டாம் நாள் என்னால் நிற்கவோ,அமரவோ இயலவில்லை நாள் முழுவதும் படுத்தே இருந்தேன்.மூன்றாம்நாள் மாலையில் நலமடைந்து விட்டேன்.மறுநாள் காலை சுடுநீரில் குளித்து நலமாக இருந்தேன்.காலை உணவை தந்தபின் சுனிதா “எனக்கு நல்லா களியல்ல,படுக்க போறேன் நீங்கோ சமச்சிருங்கோ” என்றாள்.நான் அறையை விட்டு வெளியே வந்தேன்.
இளையவன் சல்மானிடம் “பிரிட்ஜில என்ன வெஜிடபிள் இருக்குன்னு பாரு ஒரு சாம்பாரும்,சோறும் வெப்போம்” என்றபோது அவன் சாம்பார் பிரியன் ஆதலால் உற்சாகமாகி விட்டான்.
அறைக்குள் மின் விசிறியை போடாமல் படுத்திருந்த சுனிதா “இன்னக்கி மெனு நெத்திலி கருவாடு அவியல், நெத்தலிய எடுத்து வெந்நீல ஊற போட்டு மண்ணு போற வர நல்லா களுவணும்,வாளக்கா பிரிட்ஜில இருக்கு”என உத்தரவிட்டாள்.வீட்டில் எப்போதும் வீட்டுக்காரி நினைப்பது தான் நடக்கும்.
மூன்று கப் அரிசியை வடித்து எடுத்தேன்.தேங்காய் துருவி,மஞ்சள் பொடி,வத்தல் மிளகாய்,சின்ன வெங்காயம்,ஜீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து,மண் சட்டியில் கடுகு,கறிவேப்பிலை தாளித்து வாழைக்காய் சேர்த்து நெத்திலி அவியல் தயார் செய்தபின் ரசமும் வைத்து மகன்கள் இருவருக்கும் சாப்பாடு கொடுத்து நானும் சாப்பிட்டேன்.
நான்கு மணிக்கு மேல் எழுந்த சுனிதா சாப்பிடும்போது “எல்லாம் நல்லா இருக்கு,தேங்யூ” என்றாள்.தினமும் சமைப்பவளுக்கு தானே தெரியும் உணவின் உண்மை சுவை.
“பரவாயில்ல தேறிட்டேன்” என எனக்குள்ளிருந்தவன் சொன்னான் .
முற்றும்
அன்புள்ள ஷாகுல்
ReplyDeleteஉங்களுடைய உம்மா பதிவுகள் படித்தேன். முதல்முறை டாக்டர்க்கே டிமிக்கிக் கொடுத்துவிட்டு வந்தவங்களை ரெண்டாம்முறை கதறக்கதற கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்து அவங்களை குணமாக்கி நீங்க நோயாளியான கதை. ஒரு இடத்தில் இருக்கும்போது அங்க உள்ள எல்லாத்தையும் அவதானிச்சு எல்லாரோடும் நட்பாக மாறி சாப்ட்ட சாப்பாடு முதற்கொண்டு எழுதி இருந்தீங்க. சவப்பெட்டின்னு சாதாரணமாய் சொல்லிட்டீங்க. அது எவ்ளோ பெரிய பிசினஸ் தெரியுமா? எங்கள் கல்லறைத் தோட்டத்தில் சவப்பெட்டி விற்கிறவர்தான் ஊரிலேயே பெரும் பணக்காரர். இப்ப உம்மா எப்படி இருக்காங்க? முதல்நாள் மீன்கறியும் கடைசிப் பதிவில் நெத்திலி அவியலும். ஆஹா படிக்கும்போதே வாய் ஊறியது. புது மீன்களுக்கு, நல்ல கருவாட்டுக்கு வழியில்லாத இந்த ஊரில் நாங்க இருக்கும்போது நீங்க எழுதி இருக்கிற ரெசிபி எங்களுக்கு என்னமாத்தான் வருது. நாங்களும் நெத்திலி கருவாடு வாங்கி அவியல் வைப்போம். ஆனா சுனிதா ஏத்துக்கொண்ட ருசி வரணும்னா கடையில்போய் வாழைக்காய் என்று கேட்காமல் வாளக்காய் என்று கேட்டு வாங்கணும்.
வாழ்த்துகளுடன் டெய்ஸி.
அம்மாவிற்கு குணமாகி விட்டது தெரிந்த சேதி ஆனாலும் படிக்கும் போது பதட்டமாக இருந்தது.
ReplyDeleteதனிப்பட்ட மருத்துவமனை அனுபவமாக ஆரம்பித்தாலும் நாம் இருக்கும் சமூகம் கொண்ட பார்வைகளை தொட்டு செல்கிறது.
துப்புரவு பணியில் உள்ள பெண்கள் கோவிட்டோடு பழகி அச்சம் விலகிய வரிகள் நோய்களை எதிர்கொள்ளும் நம்பிக்கையை கொடுக்கிறது.
வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு என்ற பிம்பம் ஶ்ரீ ராமல் தளர்த்த படுகிறது.
காசு தீர்ந்த அவனின் கதை அகத்தில் உறைந்து போன Briyani கதையை வெப்பமடைய செய்கிறது.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் நாம் மொழி, நிறம் வேறுபாட்டால் என்னவோ வேற்று கிரக வாசிகள் என்ற எண்ணம் வைத்துள்ளோம்.
ஶ்ரீராம் நலமாக பணியில் மீண்டும் இணைந்து இருப்பான் என்ற நம்பிக்கையுடன்.
அதியமான்.
ஸ்ரீ ராம் மீண்டும் ஊருக்கு போவதாக சொன்ன நினைவு.
ReplyDeleteஉம்மா இப்போது நலமாக உள்ளார்.
ஷாகுல் ஹமீது