உம்மாவின் ஆதார் அட்டை விலாசத்தில்
உள்ள வீட்டிற்கு சுகாதார மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் சென்று கொரோனா தொற்று
பாதித்த வீடு எனும் ஸ்டிக்கர் ஒட்டி,கிருமி நாசினி தெளித்தால் காந்தாரிவிளை
தெருவில் ஒரு பரபரப்பு. அதன் பின் தான் ஜாகிர் அண்ணனும் இன்னும் சிலரும் போனில்
விசாரித்தனர்.
ஜாகிர் அண்ணனிடம் “உம்மா சும்ம
இருக்கா,ஒன்னுமில்ல டெஸ்ட் பண்ணுனா பாசிட்டிவ்ன்னு வந்துட்டு அதான் இங்க
கூட்டிட்டு வந்தேன் இன்னைக்கு காலத்த வார்டுக்குள்ளேயே உம்மா வாக்கிங் போனா”என்றேன்.
“லே தம்பி உம்மா மிந்தி ஒருக்க
காய்ச்சல்ன்னு ஆசுபத்திரிக்கு போனா பாத்துக்கோ,டாக்டரு அட்மிட் பண்ணிருவோம்னு
சொல்லி எழுதி குடுத்தாரு,இவா அங்க போனா அது கொரோனா வார்டுனு பாத்ததும்,கல்ப் பதறி
டாக்டர்ட,வாப்பா மரிச்சிபோச்சி நான் நாளைக்கி வந்து அட்மிட் ஆவேன்னு சொல்லிட்டு
ஓடி வந்தா இப்ப புடிச்சி போட்டுட்டானுவோ”என சொல்லி சிரித்தான்.
நாங்கள் கன்னியாகுமரி மாமா
எனச்சொல்லும் பீர் முகம்மது மாமா தினமும் காலை ,மாலை இரு வேளையும் போனில் விசாரித்தார்
“மருமொனே,உம்மாக்கு இப்ப எப்படி
இருக்கு,அங்க வந்து பாக்க முடியாதே,நான் துவா செய்யேன் எல்லாம் செரியாவும் அல்லாஹ் பெரியவன்” என்பார்.
அன்றிரவும் எனக்கு சரியான தூக்கமின்றி கழிந்தது அதிகாலை விழிக்கையில் லேசான
சளியும்,தொண்டை வலிப்பதுபோலவும் இருந்தது.இரவு காவலர் பணி மாறியபின் உம்மாவுக்கு சாயா வாங்கி கொடுத்துவிட்டு
குளத்திற்கு சென்று துணிகளை துவைத்து குளிக்கையில் தோன்றியது இன்று குளிப்பது தவறு
என.காய்ச்சலுக்கான அறிகுறிகளை உடல் எனக்கு சொல்ல தொடங்கியது.
வார்டுக்கு அருகிலேயே துணிகளை
காயபோடும் கயிறை இரு மரங்களுக்கிடையில் யாரோ கட்டியிருந்தார்கள்.துணிகளை காயப்போடும்
போது காவலர் கேட்டார் “குளிச்சாச்சி போல”என. வார்டில் இருந்த இரு பெண்கள் “டெய்லி
இங்க உள்ள சாம்பார சாப்பிட முடியல,எனக்கு ரெண்டு ஆப்பம்,என் புருசனுக்கு நாலு
இடியப்பம் வாங்கித்தர முடியுமா” எனக்கேட்டாள்.ஆரல்வாய்மொழி ரோஸ்மேரி. முதலில் ரோஸ்
மேரியின் அம்மா,அப்பாவுக்கு தொற்று
உடனிருந்து கவனித்து கொண்டதில்,ரோஸ்மேரிக்கும் தொற்று வந்து அனுமதிக்கபட்டார் வீட்டிற்கு போகலாம் என
மருத்துவர் எழுதிகொடுப்பதற்கு முதல் நாள் ரோஸ்மேரியின் கணவர் கொரோனா வார்டுக்கு
வந்து சேர்ந்தார்.
மருத்துவமனை வாயிலுக்கு வெளியே மஞ்சு
உணவகம் இருப்பதை பார்த்தேன்.அது ஒரு வீடு அங்கேயே சமைத்த சூடான ஆப்பமும்,கடலை
கறியும் சாப்பிட்டுவிட்டு பார்சல்களும் வாங்கிகொண்டேன்.
இளம் கர்பிணிகள் மூவர் அனுமதிக்க பட்டனர்.இரவில் கொஞ்சம் அபாயகரமான நிலையில் ஒரு பெண் வந்து
சேர்ந்தாள்.இருபத்தி மூன்றே வயதான அபர்ணா “தம்பி என் புருசன காணல்ல கொஞ்சம்
பாருங்க” என்றாள்.
அபர்ணாவின் வீட்டிற்கு வெளியே கொரோனா சோதனை
நடந்து கொண்டிருந்தது வெளியே சப்தம் கேட்டு எட்டிப்பார்த்த அபர்ணாவை சோதித்த போது
பாசிட்டிவ் இங்கே கூட்டி வந்துவிட்டார்கள். “நான் சும்ம இருந்தேன்.வெளிய எட்டி
பாத்தத்துக்கு இங்க கொண்டு வந்திட்டவா”என்றாள்.
அவளது கணவனுக்கு சோதனையில் நோய் தொற்று
இல்லை என வந்தது.பகல் முழுவதும் மனைவியை அருகிலிருந்து கவனித்து கொள்ளும் அவளது
கணவன் இரவில் பனியில் அமர்ந்து மொபைல் போனில் நேரம் கடத்தியபின் போண் பேட்டரி தீர்ந்து அங்கேயே கண்ண்யர்ந்ந்து விட்டான்.ஐந்து மாத கர்ப்பிணியான அபர்ணாவுக்கு
திருமணம் ஆகி ஆறு மாதம் ஆகிறது.
இன்று வெளியே அமர்ந்துகொண்டு
வார்டுக்குள் போவதை தவிர்த்தேன்.லேசான தலைவலியும், முதுகு தண்டுவட வலியும்
தொடங்கியது அமரவே முடியவில்லை.கட்டன் சாயாவில் ஒரு அஞ்சால் அலுப்பு மருந்து போட்டு
குடித்தேன்.பதினோரு மணிக்கு ரொம்பவே முடியவில்லை. நண்பரை ஸாம் பிரின்சை அழைத்தேன்.
“ஸார் மூணு நாள் ஆண்டி பயோடிக்,வாங்கி தாரேன்,வண்டி ஓட்ட முடியுமா,இங்க வாங்க”
என்றார்.
மருத்துவ தோழியை அழைத்து என் உடல்நிலை பற்றி சொன்னேன். “ஒன்னும் பயப்படாண்டாம்,இந்த மருந்துகள் போதும் முடியாமல் ஆனால் மட்டும்
சொல்லுங்க”என்றார்.
மாலையில் அமரவே முடியவில்லை நான் தொழுகையை நிறைவேற்றும் திண்ணையில் போய்
பாய் விரித்து படுத்து கொண்டேன்.ஒரு மணிநேரம் தூங்கிய பின் கட்டன் சாயாவில்
மீண்டும் ஒரு அலுப்பு மருந்து போட்டு குடித்தேன்.
உம்மா என்னிடம் “உன்ன கொஞ்ச நேரமா காணல்ல”
“வெளிய இருந்தேன்”என்றேன் .
“நான் வாசல்ல வந்து பாத்தேன் உன்ன
காணல்ல”
“சாயா குடிக்க போயிருப்பேன்”என்றேன் .
உம்மாவிடம் எனக்கு உடல் நலமில்லாமல்
இருப்பதை சொல்லவேயில்லை.
இன்றும் வெளியில் அமர்திருந்த நேரம்
துப்புரவு பணி செய்யும் சொர்ணாவிடம்
பேசிக்கொண்டிருந்தேன். எனது பணி, குடும்பம் பற்றி விசாரித்தாள் ‘தாயன்பு’ (https://nanjilhameed.blogspot.com/2016/08/blog-post_14.html)கதையை சொன்னேன். “ அதான் தள்ளக்க கிட்டஇருந்து விலவாம பாக்குது தம்பி”என அருகிலிருந்த
ரேவதியிடம் சொன்னபின் தன் கதையை சொன்னாள் சொர்ணா.
“அவரு கொத்தனாரு,மிந்தி
கேரளத்துக்கு சோலிக்கி பெய்ருவாரு,ஒரு மொவனும்,மொவளும் எனக்கு.அவரு வந்தாதான் கைல
பைசா கிடைக்கும்,நான் ஏதாவது வேலக்கி போவேன்,ஒரு பாக்கெட் சேமியா வாங்கி மூணு
நேரமும் கிண்டி குடுப்பேன்.அந்த புள்ளயளு ஒன்னும் சொல்லாம தின்னுட்டு
படுத்துகிடும் பாத்துகிடுங்க,மீனு வாங்க பைசா இருக்காது,தக்காளியும்,புளியும்
போட்டு ஒரு குளம்புபோல வெச்சி குடுப்பேன்”.
“புள்ளயளு இப்ப என்ன செய்யிது”
எனக்கேட்டேன்.
மொவன் இஞ்சினியரு படிச்சிட்டு,அந்த
காலேஜில இப்ப வேலக்கி போறான்,மொவ நேள்ஸ் படிச்சிருக்கா”
அருகிலிருந்த ரேவதி “அவுரு குடிக்காத்ததுனால
கொள்ளாம்,புள்ளயள நல்ல நிலமைக்கி கொண்டு வர முடிஞ்சது”என்றாள்.
“அப்ப மொவன் வேலக்கி போனா
சொர்ணாக்காக்கு ரெஸ்ட் கிடைக்கும் இல்லியா”
“மொவள ஒருத்தனுக்க கையில புடிச்சி
குடுத்துட்டேன்னா நிம்மதியாயிரும்”
நான் கவனித்ததில் தாயில்லா குழைந்தைகள்
கல்வியை கூட பூர்த்தி செய்வதில்லை.தந்தையில்லா பிள்ளைகள் படித்து,நல்ல நிலையை அடைகிறார்கள்.தாய்
களின் தியாகம்,உழைப்பு,அவமானங்கள் அதன் பின்னால் இருக்கிறது.அம்மாக்கள் எப்போதும்
உயர்வானவர்களே ......
மேலும்
No comments:
Post a Comment