பாஸ்போர்ட்
கடவுச்சீட்டு தான் பாஸ்போர்ட்டின் தமிழ் சொல் என இலங்கை கடவுசீட்டில் தமிழில் எழுதியிருந்தபோது தான் தெரிந்தது.
ஐ டி ஐ படித்து முடித்தபின் சையதலி அண்ணன்தான் சொன்னார் “தம்பி பாஸ்போட் எடுத்து வெய் ஏதாவது வாய்ப்பு கடச்சா அப்ராட் போயிரலாம்”என.அப்படியே ட்ரைவிங்கும் கற்றுகொள்ள சொன்னார். அது 1996ஆம் ஆண்டு நாகர்கோவில் வேப்பமூடு ஜங்சனில் உள்ள வேப்பமரத்திற்கு எதிரில் சொக்கலிங்கம் இரும்பு கடையை ஒட்டிய படிக்கட்டுகளில் ஏறி சென்று ஐயப்பா டிராவல்சில் பாஸ்போர்ட் விண்ணபித்தோம்.
சையதலி அண்ணன் அவருடைய நண்பர்கள் சிலருக்கு அங்கு பாஸ்போர்ட் விண்ணபித்திருந்ததால் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் நபரை தெரிந்திருந்தது.அவரே என்னுடைய விரங்களை கேட்டு பத்தாம் வகுப்பு சான்றிதழை வைத்து எனக்கும் பாஸ்போர்ட் படிவம் பூர்த்தி செய்து அனுப்பினார். ஐநூறு ரூபாய் கொடுத்துவிட்டு மீதி ஐம்பதை பாஸ்போர்ட் வாங்கும்போது தர சொன்னாள் அங்குள்ள பெண்மணி.
மூன்று மாதங்களுக்குப்பின் அங்கு போய் எனது பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டேன். அது பத்து ஆண்டுகளுக்கு பின் காலாவதியாகும் என அச்சிடப்பட்டிருந்தது. மண்டல அலுவலகம்,திருச்சிராப்பள்ளி அதை எனக்கு தந்தது.
அதே ஆண்டு திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில்(BHEL) ஓராண்டுகாலம் பயிற்சியில் சேர்ந்தபோது நண்பர்கள் பலரும் திருச்சி மரக்கடை பாஸ்போர்ட் அலுவலகம் சென்று மூநூற்றிஐம்பது ரூபாய் செலுத்தி விண்ணபித்து வந்தனர்.
பாஸ்போர்ட் கிடைத்து ஏழு ஆண்டுகளுக்குப்பின் 2003 ஆம் ஆண்டுதான் முதல் முறையாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.முதல் பயணம் குவைத் நாட்டிற்கு.அங்கிருந்து ஈராக் சென்றேன்.திக்ரித் சாதமின் அரண்மனையில் நான் தங்கியிருந்த குடியிருப்பு தீப்பிடித்தபோது எனது உடைமைகள்,சான்றிதழ்களுடன் பாஸ்போர்ட்டும் தீயில் கருகி காணாமல் போனது.
பாக்தாத் தூதரகம் நேரில் வந்து படிவங்களை பூர்த்திசெய்து மூன்று மாதங்களுக்குப்பின் புதிய பாஸ்போர்ட் தந்தனர். அது ஓராண்டுக்கு மட்டுமே என அச்சிடபட்டிருந்தது.
ஊருக்கு வந்தபின் அந்த பாஸ்போட்டை புதுபிக்க திருச்சி சென்றேன்.அது 2005 ஆண்டு படிவம் பூர்த்தி செய்து தருகிறேன் என ஒருவர் என்னை அணுகினார்.ஐம்பது ரூபாய் கட்டணம் என்றார்.
“பதினைந்து ரூபாய் தருகிறேன்” என்றேன்.
“கட்டாது” என்றார்.
“நானும் படிச்சிருக்கேன் நானே எழுதிக்கிடேன்”என்றேன்.
விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தபின் பாக்தாத் அலுவலகத்திலிருந்து ஒப்புதல் வரவில்லை என தாமதமாகியது.நாகேர்கோவிலில் இருந்து திருச்சி அலுவலகத்தை தொடர்புகொள்வது சிரமமாக இருந்தது.பாக்தாத்தில் எனது நிறுவன அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் செய்து பாக்தாத் அலுவலகத்தை தொடர்பு கொண்டு என் பாஸ்போர்ட் புதுப்பித்தலில் உள்ள சிக்கலை சொல்லி விரைந்து ஒப்புதல் கடிதத்தை திருச்சிக்கு அனுப்ப கோரினேன்.
அதன் பின் போலீஸ் கிளியரன்ஸ் வரும் வரை காத்திருந்து சில மாதங்களுக்குப்பின் இறுதியாக எனது முதல் பாஸ்போர்ட்டின் காலாவதி 2006 ஆம் ஆண்டு என்பதால் மீண்டும் ஓராண்டுக்கு மட்டுமே கிடைத்தது.
திருமணம் முடிந்து கப்பலுக்கு வேலை தேடும்போது பாஸ்போர்ட் ஓராண்டுக்குமேல் இருத்தல் அவசியம் என்பதால்.தட்கல் முறையில் மீண்டும் திருச்சி சென்று பாஸ்போர்ட் வின்னபித்தேன்.போலீஸ் கிளியரன்ஸ் இல்லை தட்கல் கிடைக்காது என்றார் அதிகாரி ஒருவர்.மண்டல பாஸ்போர்ட் அதிகாரியை பார்க்கவேண்டும் என எழுதி கொடுத்தேன்.சற்று நேரத்தில் அவரை சந்திக்க அனுமதி கிடைத்தது.அவர் என் ஆவணங்கள் பார்த்துவிட்டு போலீஸ் கிளியரன்ஸ் இருக்கிறது. உனது மனைவியின் பெயரை சேர்க்கவேண்டுமெனில் திருமண சான்றிதழ் வேண்டும் என்றார்.
அன்றிரவே திருச்சியிலிருந்து நாகர்கோவில் வந்து சுனிதாவின் ஜமாத்தில் அவளது வாப்பா வாங்கி வைத்திருந்த திருமண சான்றிதழை பெற்றுக்கொண்டு மீண்டும் இரவு பயணித்து திருச்சி சென்று ஒரே நாளில் பாஸ்போர்ட் பெற்று வந்தேன்.மே முப்பதாம் தேதி 2005 இல்.
2010ஆம் ஆண்டு சுனிதாவுக்கும்,மகன்களுக்கும் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன்.அப்போது மண்டல அலுவலகம் மதுரையிலும் துவங்கியிருந்தது.சுனிதாவின் உயர்கல்வி தகுதியை பார்த்துவிட்டு மதுரை அலுவலகத்திற்கு நேரில் வந்து எங்கும் பணியில் இல்லையென எழுதி தர சொன்னார்கள்.அதற்காக மதுரை போய் வந்தோம். சுனிதாவின் உப்பா ஒருவர் திருச்சியில் வசிக்கிறார். அவர் சொன்னார் “மக்ளே நான் இந்த ஊருக்கு வந்து முப்பது வருசத்துல ஊருல இருந்து எவ்ளோ வேரு இந்த பாஸ்போர்ட் ஆபீசுக்கு வந்து போயிருக்காவோ,இனி யாரும் இங்க வரண்டாம்”.பாஸ்போர்ட் அலுவலகம் வரும்போது சந்திக்க வரும் உறவினர்களை இனி காண முடியாது எனும் ஏக்கம் பேச்சில் தெரிந்தது.
2014 ஆம் மீண்டும் எனது பாஸ்போர்ட் இணையத்தில் விண்ணப்பித்து விட்டு நேர் காணலுக்கு மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலக கிளையான வண்ணாரபேட்டை,திருநெல்வேலியில் இருக்கும் டாடாவின் அலுவலகம் சென்றேன். அப்போது எனது வாப்பாவும் வந்திருந்தார்.அங்கிருந்த பாஸ்போர்ட் அதிகாரி வாப்பாவிடம் கனிவாக
“எதுக்கு பாஸ்போர்ட் வேணும்”
“மரிக்குக்கு மின்ன ஒருக்க மெக்கா போணும்”
“பெரியவருக்கு எந்த ஊரு”
“மணவாளகுறிச்சி,கன்னியாமரி மாவாட்டம்”
“நல்ல ஊரா” எனக்கேட்டார்.
“ஆங் நல்ல ஊரு ஸார்”என வாப்பா சொல்லி பேச்சை தொடருமுன் நான் இடை மறித்தேன்.
அந்த அதிகாரி கையால் சைகை செய்து பேசாமல் இரு என்றார்.
ஆரம்ப கல்வியை கூட பூர்த்தி செய்யாத வாப்பவிடம் சான்றிதழ் ஏதும் இல்லாததால் படிக்காதவர் என விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தது.
வாப்பா அதிகாரியிடம் மணவாளக்குறிச்சியில் “இல்மநைட்,மோனோசைட்,கார்டனட்,தோரியம்,ரூட்டேயில் எல்லாம் கிடைக்கும்”என்றபோது நான் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தேன் .
அதிகாரி சிரித்துக்கொண்டே வாப்பாவிடம் கேட்டார் “இதெல்லாம் எப்டி பெரியவருக்கு தெரியும்”
“அங்க இருக்க மணல் கம்பெனிலே இருவத்தி மூணு வருஷம் வேல பாத்து ரிட்டையர்ட்”என்றார்.
“புள்ளைகள் எத்தர உங்களுக்கு”
“அஞ்சி மக்கள் எனக்கு மூணு வேரு இஞ்சினியர்,இவன் கப்பல்ல வேல பாக்கான்,பொட்ட புள்ளையயும் கெட்டி குடுத்தாச்சி” என்றார் வாப்பா .
அந்த அதிகாரி அசைந்து அமர்ந்துவிட்டு கண்ணாடியை கழற்றி மேஜையில் வைத்து விட்டு கரம் கூப்பி வணங்கிவிட்டு.என்னிடம் “பத்திரமா கூட்டிட்டு போ,அடுத்தது ‘சி’ கவுண்டர்ல கூப்பிடுவாங்க” என்றார்.ஒரு மாதத்திற்குள் பாஸ்போர்ட் வந்துவிட்டது.
கொரோனா நோய் காலத்தில்.2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கப்பல் பணியில் இணைவதற்கு பிலிப்பைன்ஸ் விசா விண்ணபிக்க வேண்டி எனது பாஸ்போர்ட்டை தில்லி முகவருக்கு அனுப்பினேன்.
சில தினங்களுக்குப்பின் மும்பையிலிருந்து எனது அலுவலக அதிகாரி அனிதா தாக்கூர் என்னை அழைத்து “உனது பாஸ்போர்ட் டாமேஜ் ஆக இருக்கிறது விசா கிடைப்பது கடினம்” என்றார்.
தில்லி முகவரை அழைத்து கேட்டேன். விசாவுக்கு அனுப்பியுள்ளேன் சில தினங்களில் தெரியும் என்றார்.
அதே வாரத்தில் சுனிதாவுக்கும்,மகன்களுக்கும் பாஸ்போர்ட் வேண்டி இணையத்தில் நண்பரின் மகன் கோசல் ராமின் உதவியுடன் விண்ணப்பித்தேன்.இம்முறை நாகர்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அவர்களுக்கு நேர்காணல் நடந்து பத்து நாட்களுக்குள் பாஸ்போர்ட் வந்தது .
நான் கப்பல் செல்லும்போது எனது பாஸ்போர்ட்டில் எந்த கிழிசலும் இல்லை. (2021)கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ஊரு வந்தபின் எனது பாஸ்போர்ட்டை பார்த்தேன்.அதன் தையல் கால்பங்கு உதிர்ந்து இருந்தது.
நவம்பர் மாதம் இரண்டாம் தேதி இரவு அமர்ந்து இணையத்தில் பாஸ்போர்ட் விண்ணபித்துக் கொண்டிருந்தேன். சுனிதா கேட்டாள் “உங்களுக்கு பாஸ்போர்ட் அப்ளே பண்ண தெரியுமா,எப்பவும் மினி சேச்சிட்ட தானே குடுப்பியோ”.
“உனக்கும் புள்ளையளுக்கும் நான் தானே அப்ளே பண்ணினேன்” என்றேன் .
“அது கோசல் ராம் கூட இருந்தான் அப்ப,இருநூத்தும்பது ரூவா லாவத்துக்கு,பெரிய நட்டம் வந்திரபிடாது பாத்துகிடுங்கோ”என்றாள்.நாகர்கோவிலில் நவம்பர் இருபத்தியைந்தாம் தேதிக்குப்பின் தான் நேர்காணலுக்கு தேதி இருந்தது.அதனால் நான் நவம்பர் ஒன்பதாம் திருநெல்வேலியில் நேர்காணலுக்கு விண்ணபித்தேன்.
நான் இணையத்தில் விண்ணபித்து பின்னர் பணமும் கட்டினேன்.நேர்காணலுக்கான நேரமும்,தேதியும் உறுதிசெய்யப்பட்ட தகவல் எனக்கு வரவில்லை. அறுபது பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் ஆதலால் 2500 ருபாய் கட்டணம். மின்னஞ்சல்,எஸ் எம் எஸ் எதுவும் வரவில்லை.எதோ தவறாகிவிட்டது.
சுனிதா சொன்னவை நினைவிற்கு வந்தது. “கொஞ்ச லாவாத்துக்கு வேண்டி பெரிய நட்டம் வந்துரபிடாது” என.எனது வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கபட்டிருந்தது.
மீண்டும் நெடுநேரம் தேடினேன். கட்டிய பணம் சென்று சேராமல் இடையில் எதோ ஆகியிருந்தது.அதையும் எப்படி சரி செய்ய வேண்டுமென அந்த தளத்திலேயே சொல்லியிருந்தார்கள்.
பின்னர் ஒன்பதாம் தேதி காலை 9.30 மணிக்கு எனக்கு நேர்காணலுக்கான உறுதி செய்யப்பட்ட குறுஞ்செய்தி வந்தது.
ஒன்பதாம் தேதி காலை ஏழரை மணிக்கு வடசேரியில் இருந்து குளிரூட்டப்பட்ட பேருந்தில்(எண்பது ரூபாய் கட்டணம்) ஏறி அமர்ந்தேன். பக்கத்து இருக்கையில் எனது ஊரை சார்ந்த முபாராக் வந்து அமர்ந்தார் .
திருநெல்வேலியை அடையும்முன் மூத்த எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு செய்தி அனுப்பி சந்திக்க முடியுமா எனக்கேட்டேன். பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து பழைய காலத்தில் நடக்கும் தூரம் தான்.ஆட்டோவில் ஐந்து நிமிடத்திற்குள் வந்துவிட முடியும் என்று விலாசமும்,நடந்து செல்லும் அடையாளங்களும் அனுப்பினார்.
பேருந்து நிலையம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டிருந்ததால் பாளை பஸ் நிலையத்திற்கு வெளியில் இறங்கி பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நடந்து சென்றேன்.23 வது டோக்கேன் பெற்றுகொண்டு காத்திருந்தேன்.ஆவணங்கள் சரிபார்ப்பு,புகைப்படம் எடுத்தல்,மேலதிகாரியின் நேர்காணல் முடிந்து பழைய பாஸ்போர்ட் கான்சல் என முத்திரை பதிக்கபட்டு கையில் தந்தார்.நன்றி கூறி வெளியே வந்தேன். எல்லாம் நாற்பது நிமிடங்களில் முடிந்து வெளியே வரும்போது குறுஞ்செய்தி வந்தது file no.MD 2073……5921 is granted என.
வண்ணதாசன் ஐயா அவர்களை இல்லம் சென்று சந்தித்துவிட்டு நாகர்கோவில் வந்து சுனிதாவின் வீட்டிற்கு சென்றேன்.சுனிதாவின் உடன்பிறப்புகளுக்கு மதிய விருந்து அங்கே.சுனிதாவும்,மகன்களும் காலையில் அங்கு சென்றிருந்தனர்.
மாலை ஆறுமணிக்கு மீண்டும் குறுஞ்செய்தி MD2073….5921 Pssport NO.Z6308285 dispatched on 09/11/2021 and can be tracked using speed post tracking no. PP382238282 INPassportSP என.
எனக்கு ஒரு நிமிடம் ஆச்சரியம் தாங்க முடியவில்லை.பாஸ்போர்ட் விண்ணபித்து விட்டு இன்னும் நான் வீடு போய் சேரவில்லை அதற்குள் அது விரைவு தாபலில் அனுப்பிய விபரம் எனக்கு வந்துவிட்டது. காலையில் பாஸ்போர்ட் கான்சல் என முத்திரை பதித்து தந்தார்கள் அன்று மாலையே எனக்கு புதிய பாஸ்போர்ட் தரப்பட்டுவிட்டது.
மறுநாள் காலை பத்துமணிக்கு வடசேரி காவல் நிலையத்திலிருந்து காவலர் நேசையன் அழைத்தார். “பாஸ்போர்ட் அப்ளே பண்ணுனியளா,என்குயரி வந்துருக்கு,மத்தியானம் ரெண்டு மணிக்கு ஸ்டேசனுக்கு வாருங்க,வரும்போ ஒரு போட்டோ,ஆதார் கார்ட் கொண்டுட்டு வரணும்”என்றார்.
மதியம் பன்னிரண்டு மணிக்கு தபால்காரர் வீட்டுக்கு வந்து எனது பாஸ்போர்ட்டை தந்தார்.
இதைவிட வேகமாக பாஸ்போர்ட் தரவே முடியாது.
ஷாகுல் ஹமீது ,
02 october 2022
No comments:
Post a Comment