Saturday, 15 October 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள் 12


ஈராக் போர்முனை அனுபவங்கள் 12
விடுமுறையில்  தாயகத்திற்கு பயணம்

   கூடாரம்  தீப்பிடித்த அன்றும் மறுநாளும் உடலிலும், மனதிலும் சக்தியே இல்லை. மனம் கவலையுற்றுருந்ததால்,  எதையும்செய்வதற்கு  உடல் ஒத்துழைக்கவில்லை. அடுத்த சில நாட்களில் அனைவரும் மனதளவில் கொஞ்சம் இயல்புநிலைக்கு வந்தோம். சிலர் நெடுநாட்கள் உற்சாகமின்றி இருந்தனர். அவர்கள் மீண்டு இயல்புநிலைக்கு வர ஒரு மாதமானது.

 தீ விபத்து ஏற்பட்டபோது கூடாரம் முழுமையாக அணைந்த பின் சென்று பார்த்தேன். மனம் அப்போதும் சான்றிதழ்கள் இருக்கும் எனநம்பிக் கொண்டிருந்தது. எனது தகர அலமாரியில்,  ஒரு இரும்புக் கருவி மட்டும் கறுப்பாக மாறி எஞ்சியிருந்தது. அதைஎடுத்துக்கொண்டேன். ராணுவ வீரன் ஒருவர் அன்பளிப்பாக தந்தது(அதை இப்போதும் வீட்டில் பத்திரமாக வைத்திருக்கிறேன் ).

 மறுநாள் முதல் உடுக்க ஆடை இல்லை. பொருத்தமே இல்லாத அளவில் ஒரு கால்சட்டையும், பனியனும் தந்தார்கள். கயிறால்அந்த கால்சட்டைக்கு  மேல் கட்டிய பிறகுதான் அது இடுப்பில் நின்றது . உள்ளாடைகள் சில (ஜட்டி தான்) வாங்கித் தந்தார்கள்.  எல்லாம் அமெரிக்கர்களின்  அளவு.  சிறிய உடல்வாகு கொண்டநம்மவர்களுக்கு பொருத்தமே இல்லாதது. தீ விபத்துக்குப்பின்  நண்பன்  கார்த்திக்கின் உடைமைகள் அவன் தங்கியிருந்த அந்தகட்டிடத்திற்குள் இருந்தது. செப்டம்பர் பதிமூன்று அன்று காலைதான் அதை எடுப்பதற்கு சென்றோம் அது பூட்டியிருந்ததால் பின்னர்எடுக்கலாம் என வந்து விட்டோம் அதனால் அவனது ஆவணங்களும் , உடைமைகளும் சாம்பலாவதிலிருந்து தப்பித்தது.

கூடாரம் அமைக்கும் குழு, வேறு முகாமுக்கு செல்லும் போது, மிக அதிக ஊதியம் கொடுப்பதாகச் சொல்லி கார்த்திக்கை அழைத்தது.நானும், லோகேஷும் இங்கு இருந்ததால், கார்த்திக் அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டான். தீ விபத்துக்கு பின் வேலைக்குவராதவர்கள் பலர் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் பலருக்கு கடவுச்சீட்டு இல்லை. பாக்தாத் இந்திய தூதரகத்தால்வழங்கப்பட்ட அவசரச் சான்றிதழுடன் இந்தியா சென்றனர். அவ்வாறு வழங்கப்படும் அவசரச் சான்றிதழ் ஒருமுறை மட்டுமே பயணம்செய்ய இயலும். இந்தியாவில் இறங்கியதும் விமானநிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளால் திரும்ப பெற்றுக்கொள்ளப்படும்.

சில நாட்களுக்கு பின் அனைவரையும் அழைத்து கூட்டம் ஒன்று நடத்தினர். நிர்வாகம் உடமைகளை இழந்த ஒவ்வொருவருக்கும்நூறு டாலர்கள் நஷ்ட ஈடு வழங்க இருப்பதாக சொன்னபோது, என்னுடன் ஸ்டோர்ஸில்  பணிபுரிந்த கர்நாடகாவின் ஜோக்கிம்கொதித்து எழுந்தான். “வேண்டாம் எங்களுக்கு, கம்பனிக்கு நான் தருகிறேன் நூறு டாலர்” என்றான். மனிதவளதுறையின் பெண்அதிகாரி  “உங்களில் ஒருவன் சிகரெட் பிடித்ததால் தான் கூடாரம் தீ பற்றியது” என குற்றம்சாட்டினாள். முடிவு ஏதும் எட்டபடாமலேயே கூட்டம் முடிந்தது .


பின்னர் சில நாட்களுக்கு பிறகு அறுநூறு டாலர்கள் நஷ்ட ஈடும், ஒவ்வொருவருக்கும் ஒரு பயணப்பை வாங்க நாற்பது டாலரும்,கடவுச்சீட்டிற்கான கட்டணம் நூறு டாலரை  கம்பனியே ஏற்றுகொள்ளும் எனவும் தகவல் வந்தது.  பாக்தாத்திலிருந்து இந்திய தூதரகஅதிகாரிகள் நேரில் திக்ரித் வந்து விபத்து பகுதிகளை பார்வையிட்டனர். எங்களிடம் இருந்து புதிய கடவுச்சீட்டுக்கான விண்ணப்பத்தைபெற்றுக்கொண்டனர்.அன்று புகைப்படம் எடுப்பதற்காக ஒரு செப்பின் கோட்டை வாங்கி அணிந்திருந்தேன். அந்த உடையில் என்னை பார்த்துவிட்டு. “யுஆர் செப்” என்றார் டெர்ரி ஆண்டெர்சன். நான் “இல்லை” என்றேன். பின்பு என்னை அழைத்து “ஷாகுல், இன்று முதல் நீ உதவிசமையல்காரனாக பணிபுரிவாய்” என பதவி உயர்வு அளித்து, அடுமனைக்கு கூட்டிச் சென்று தலைமை சமையற்காரர் கோம்ஸிடம்விஷயத்தைச்சொல்லி பணி கொடுக்கச் சொன்னார். நான் மூன்று நாட்கள் அடுமனையில் பிரெஞ்சு பிரைஸ், பொட்டடோ வெட்ஜ்ஸ்என எண்ணையில் பொரித்தெடுக்கும் பணி செய்தேன். எல்லாம் உருளைக்கிழங்கின்  வடிவம் மாறியதால் வந்த பெயர்கள்தான் .

 நான்காம் நாள் காலை,  எனது மேலாளர் டெர்ரி ஆண்டர்சனிடம் சென்று “என்னால் அடுமனைக்குள் வேலை முடியவில்லை, நான்மீண்டும் ஸ்டோர்ஸிலேயே வேலை செய்கிறேன்” எனகேட்டேன். ஸ்டோர்ஸில் கொஞ்சம் கடின பணிதான்.  இருந்தாலும்எனக்கு  பனிரெண்டு மணிநேரம் பூட்டிய அடுமனைக்குள் , சமையல் பணியில் என் மனம் ஒன்றவில்லை. லோகேஷ் என்னைதிட்டினான்.  “பலர் உதவி சமையல்காரன் ஆக வேண்டுமென காத்திருக்கிறார்கள். சம்பளமும் ஐயாயிரம் அதிகம். கிடைத்தவாய்ப்பை நழுவ விடாதே” என்றான். மனம் திருப்தியில்லாத, மனம் ஒன்றாத எந்த  பணியையும் கோடி ரூபாய் தந்தாலும் செய்யமுடியாது என்று புரிந்துகொண்ட தருணம் அது . மகிழ்ச்சியாக வெளியேறினேன்.கடவுச்சீட்டு கையில் இருந்து  ஆறு மாதம் ஆனவர்கள் விடுமுறையில் ஊருக்கு சென்று வந்தனர். கார்த்திக்கும் மூன்று வாரவிடுமுறையில்  ஊருக்கு போய் வந்தான். மீண்டும் கொஞ்ச நாட்களில் மனமும் உடலும் இயல்பு நிலைக்கு வந்துவிட்டது. புதிதாகவந்த அனைவரிடமும் கடவுச்சீட்டை கழுத்தில் அணியும் சிறிய பை ஒன்றை வாங்கி அதில் வைத்துகொள்ள அறிவுறுத்தபட்டனர்.

விஜயகுமார் “கடவுச்சீட்டை கழுத்தில் தொங்கவிட்டு அலைவதில் கஷ்டமாக இருக்கிறது” என்றான். “இங்க பாரு,  நீ உயிரோடஇருந்து பாஸ்போட் இல்லைனா ரொம்ப கஷ்டம் .நீ முடிவு செய்” என தீ விபத்தில் அனைத்தையும் இழந்த ஒருவன் கோபத்துடன்சொன்னான்.

எனக்கும், லோகேசுக்கும் மற்ற சிலருக்கும் ஜனவரி மாதம் பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரகத்தால் புதிய கடவுச்சீட்டு தரப்பட்டது.கடவுச்சீட்டு கிடைத்தவுடன் கையில் தூக்கிக் கொண்டு மகிழ்ச்சியில் எனக்கு பாஸ்போர்ட் கிடைத்துவிட்டது என கூவிஅடுமனைக்குள் ஓடி ஒரு வட்டமடித்தேன்.  விரைவில் விடுமுறையில் ஊர்  செல்லும் மகிழ்ச்சி தான். கடவுச்சீட்டு கிடைத்தபின்நாங்கள் விடுமுறைக்கு இந்தியா செல்லும் நாளும் தெரிவிக்கப்பட்டது.

 ஜனவரி  இருபத்திரெண்டாம் தேதி, திக்ரித்திலிருந்து பாக்தாத்தை நோக்கி புறப்பட்டோம். வேறு உடைகள் இல்லாததால் பணிக்குஅணியும் சீருடையில் ஒரு புதியதை அணிந்துகொண்டோம். நான் புதிதாக ஒரு பயணப்பை வாங்கியிருந்தேன். விஜயகுமார்,துறையூரில் அவனது விலாசத்தில் அனுப்பி வைப்பதற்காக, பனிரெண்டு பனியன்களும்  பணமும் தந்தான். வாரம் தோறும்நாற்பத்தைந்து டாலர்கள் கையில் தருவார்கள். போர் முனை என்பதால், இங்கு செலவே கிடையாது. மாதம் பதினைந்து டாலர்கள்தொலைபேசி அட்டைக்கு மட்டும் தேவை. மீதிப் பணத்தை கையில் வைப்பதும், பாதுகாப்பதும் கடினம். எனவே ஊருக்குசெல்பவர்களிடம் பணத்தை கொடுத்து அனுப்புவார்கள். பணத்தை அனுப்புகிறவர்களுக்கு அது வீட்டில் போய் கிடைக்கும் வரைநிம்மதியே இல்லாமல் அலைவார்கள். “கொண்டு போறவன் எடுத்து கிட்டா” என்று அல்லாடுவார்கள். அவன் திரும்பி வராமலே கூட போய்விடலாம். என்னை நம்பி சிலர் பணம் தந்தனர். வீட்டில் கொடுக்க, மொத்தம் இரண்டாயிரம் டாலர்கள் என் கழுத்தில்தொங்கிகொண்டிருந்தது .
     


புத்தாண்டு தினத்தன்று எங்களுக்கு கிடைத்த மிட்டாய்களும் ,கையில் கிடைத்த எதையெல்லாமோ பெட்டியில் போட்டுவைத்திருந்தேன். லோகேசுக்கு எதுவும் இல்லை. கம்பளியின் பிளாஸ்டிக் உறை ஒரு பை போல இருக்கும். அதில் அவனுடையமிட்டாய்களும், சில பொருட்களும் இருந்தன. மும்பையில் தான் அவன் ஒரு சிறு பை வாங்கி கொண்டான். அன்று மாலையேபாக்தாத்தில் ஒரு விடுதியில் போய் சேர்ந்தோம்.

ஐந்து மாதத்திற்குப்பின்  முகாமை விட்டு வெளியே வந்தோம். ஈராக்கின் சாலையை ஒட்டியிருந்த இடிபாடுகள் அகற்றப்படாமலேஇருந்தது.  நாங்கள் திக்ரித் வரும்போது இருந்த அதே காட்சிகள், ஈராக்கின் பெரும்பகுதி. இப்போது முழுமையாக அமெரிக்கர்களின்கட்டுப்பாட்டிற்குள் வந்திருந்தது.



14-10-2010,

ஷாகுல் ஹமீது 

Tuesday, 11 October 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள் 11

11. சதாமின் அரண்மனையில்

திக்ரித்,  சதாம் ஹுசைன் பிறந்த ஊர். இது ஈராக்கின் வடக்குப்பகுதி,  எல்லை தாண்டினால் துருக்கி.  ஐரோப்பாவைஒட்டியிருப்பதால்  பசுமையாக இருக்கும் இப்பகுதி. நான் தங்கியிருந்த இடத்தில் நிறைய ஆலிவ் மரங்களும் ,பேரீச்சம் மரங்களும்கைக்கு எட்டும் தூரத்தில் காய்த்து தொங்கிகொண்டிருக்கும்.


இங்கு  குளிர் காலத்தில் மைனஸ் இரண்டு டிகிரி வரையும், கோடையில் அதிகபட்ச வெப்பம் நாற்பத்தியாறு டிகிரிக்கும்சென்றுவிடும். இங்கு அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரையில் கடிகாரத்தை ஒரு மணிநேரம் பின்னாலும், கோடையில் மீண்டும் ஒருமணிநேரம் முன்னேயும் நகர்த்திவிடுவர். கோடையில் ஐந்துமணிக்கெல்லாம் சூரிய உதயமும், இரவில் ஒன்பது மணிக்குஅஸ்தமனமும் இருக்கும். மாலைநேர மகரிப் தொழுகை ஒன்பது மணிக்கு பிறகே. குளிர் காலத்தை குளிராடைகளை அணிந்துசமாளித்து விடலாம், கோடை தான் கடினம்.  அதிகாமாக தண்ணீர் குடிப்பதனால் பசியிருக்காது. அதனால் தேவையான உணவுசாப்பிடாமல் உடலில் போதிய சக்தியும்  இருக்காது.

குவைத்,ஈரான்,சவூதி அரேபியா,துருக்கி,சிரியா,ஜோர்டான் என ஈராக்கை சுற்றி ஆறு  நாடுகளும், உம்காசர்,பஸ்ரா போன்ற பெரிய துறைமுகங்களும் இன்னும் சில சிறு துறைமுகங்களும்  உள்ளத.இந்த நாட்டிற்கு இறைவன் கொடுத்த வரம் என்பேன். யூப்ரடிஸ் , டைகிரிஸ் என வற்றாத இரண்டுநதிகளும், எண்ணை வளமும் மிகுந்த நாடு ஈராக் .

 அது செப்டம்பர் மாதம் பதினொன்றாம் தேதி.  இரண்டாண்டுகளுக்கு முன் இதே தினத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரின் வானுயர்ந்த இரட்டைக்கோபுரம் தரைமட்டமான  காட்சிகளை  அமெரிக்கர்களுடன் நாங்களும் தொலைக்காட்சியில்பார்த்துக்கொண்டிருந்தோம். அனைவரது  முகத்திலும் சோகம் அப்பிக் கிடந்தது. இரவில் துயிலில்,  விமானங்கள் மோதி  இரட்டைகோபுரங்கள் சிதைந்த காட்சிகள் கண்களிலிருந்து அகல மறுத்தது.

இரு தினங்களுக்குப்பின் பதிமூன்றாம் தேதி காலையில், அடுமனைக்கு இரவுணவுக்கு தேவையான பொருட்களை கொடுத்துகொண்டிருந்தோம். எப்போதும் காலைவேளை எங்களுக்கு பரபரப்பாக இருக்கும். காலை ஒன்பதரை மணியளவில்  சப்தம் கேட்டுவெளியே வந்து பார்த்தோம்.  நாங்கள் தங்கும் கூடாரம் தீப்பற்றி எரியத் தொடங்கியிருந்தது. அனைவரும் அதை நோக்கியே ஓடினர் .

நான் வேகமாக அடுமனைக்குள் சென்று, அங்கிருந்த தீ அணைப்பானை எடுத்து வந்தேன். அதற்குள் தீ கொழுந்துவிட்டு எரியதொடங்கியிருந்தது. கடும் வெப்பம் அருகில் நெருங்கவே முடியவில்லை. என் கையில் இருந்த தீ அணைப்பனால் எதுவும் செய்யஇயலவில்லை. இரவு பணி முடித்தவர்கள் உள்ளே தூங்கிகொண்டிருந்தனர். என் நண்பன் கார்த்திக்கும் அதில் ஒருவன் .

 தீ எரியும் போது ஷேவிங் கீரீம் மற்றும் டப்பாவில் அடைத்த வாசனை திரவியங்கள் அச்சமூட்டும் பெரும்சப்தத்துடன் வெடித்தது.  முதல் கூடாரம்  முழுமைகயாக எரிந்து முடிந்து , அதையொட்டியிருந்த இரண்டாவது கூடாரமும்  தீ பற்றி எரியத் தொடங்கியது.  அருகிலேயே பார்த்துக்கொண்டு இருந்த எங்களால் எதுவும் செய்யமுடியாத நிலை. என் மனம் கூடாரத்தினுள்ளே தகரஅலமாரியில் இருக்கும் எனது சான்றிதழ்கள் எதுவும் ஆகக் கூடாது என தவித்துக்கொண்டிருந்தது.

 இரண்டாம் கூடாரத்தில் தான் எங்கள் முகாமின் அலுவலகம் செயல்பட்டு வந்தது. கணிணி மற்றும் முக்கிய பொருட்கள்அங்கிருந்தது.  தீ எரிந்து கொண்டிருக்கும்போதே இங்கிலாந்தை சேர்ந்த டெர்ரி ஆண்டர்சன்,  எனது ப்ராஜெக்ட் மானேஜர்  கணினிமற்றும் பொருட்களை வெளியே கொண்டுவர கூடாரத்திற்குள் சென்று விட்டார். நல்ல வேளையையாக ஆஸ்திரேலியாவின் டாமியன் அவரை தடுத்து வெளியேற்றினார்.இராண்டாவது கூடாரமும் முழுவதுமாக எரிந்து முடிந்தது. கூடாரம் அமைக்க பயன்படுத்தும் துணி சில ரசாயனங்களால் சலவைசெய்யப்பட்டது, தரைப்பகுதி எடைகுறைந்த இலகுவான மரப்பலகையால் ஆனது. ஆகையால் தீ பற்றியதும் வேகமாக பரவி அனைத்தையும் முழுமையாக சாம்பலாக்கி விட்டது .


 கண்முன்னே,  என்னுடைய அனைத்து பள்ளி, ஐடிஐ, தொழில் பழகுநர் சான்றிதழ்கள், முன்பு வேலைபார்த்த நிறுவனங்களின்அனுபவ கடிதங்கள், இன்னும் சில நினைவுபொருட்கள், அக்காவின் திருமணத்தின்போது மச்சான் பரிசளித்த மோதிரம், கடவுச்சீட்டு,கப்பல் வேலைக்கான சி டி சி மற்றும் அதற்குத் தேவையான சான்றிதழ்கள் அனைத்தும் சில நிமிடங்களில்  சாம்பலாகிவிட்டது. சற்று முன்பு வரை நிறைய உடமைகளுடன் இருந்த நான், உடுத்திருந்த துணியும், கால்சட்டை பையில் இருந்த கைக்கடிகாராமும்தவிர வேறொன்றும் இல்லாமலாகிவிட்டேன் .

என்னைப் போல் அறுபது பேரின் கடவுச்சீட்டுகளும், உடமைகளும்   தீக்கிரையாகிவிட்டது. இருந்தாலும் என்னைப்போல் யாருக்கும்பெருத்த இழப்பு இல்லை. அனைத்து சான்றிதழ்களும் காலி. கூடாரம் இருந்த இடம் வெட்டவெளியாக கரியும் சாம்பலுமாக,புகைந்துகொண்டிருந்தது. முழுமையாக தீ அணைந்தபின் கூடாரத்தினுள் சென்று எனது படுக்கையை அடையாளம் கண்டுஅதனருகிலிருந்த தகர அலமாரியில் அப்போதும் ஏதாவது மிஞ்சியிருக்கிறதா என தேடினேன்.

இரும்புக்கட்டில்களும், தகர அலமாரியும் எலும்புக்கூடாக காட்சியளித்தது. அதன் முன்பு தரையில் அமர்ந்து இரண்டு மணிநேரம்அழுதிருப்பேன். அதுபோல் என் வாழ்வில்  எப்போதுமே நான் அழுததில்லை. பலரும் என்னை சமாதனாபடுத்தினர். ஒரு ராணுவ வீரன்நான் அழுவதை பார்த்து , டாலர்களை கையில் தந்தான். பணம் எனக்கு வேண்டாம் என்றேன். அதை நான் சம்பாதிக்க முடியும். என்கவலையெல்லாம் நான் இழந்த சான்றிதழ்கள் மட்டுமே. பலரும் அலமாரியில் இருந்த குவைத்திய தினார் மற்றும் அமெரிக்க டாலர்எரிந்ததற்குத்தான் கவலைப்பட்டனர்.

நண்பன் கார்த்திக் மற்றும் இரவு பணி முடிந்து உள்ளே தூங்கிகொண்டிருந்தவர்கள் கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு வெளியேவந்து விட்டதால் யாருக்கும் சிறு காயம் கூட இல்லை. அதுதான் ஆறுதல். கார்த்திக்கு கையில் கிடைத்தது முக சவரம் செய்யும்பொருட்கள் அடங்கிய ஒரு பை. முருகன் மட்டும் அதிர்டசாலி.  தீ பிடிப்பதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன் தற்செயலாக கூடாத்தினுள் சென்றவன் தன்னுடைய அனைத்து உடமைகளையும் வெளியே கொண்டுவந்து விட்டான்.

 பின்பு அங்குள்ள பள்ளிவாசலின் முன் புறத்தில் அமர்ந்திருந்தேன். அங்கு தொழுகை நடத்தும், என்னையறிந்த ஒரு மூத்த ராணுவஅதிகாரி “ஷாகுல், ஆர் யூ ஒகே” என கேட்டார் .”நோ” என்றேன் . “எல்லாம் சரியாகிவிடும். அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்”என்றார். அப்போது எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எனும் கீதையின் வரிகளை என்னால் ஏற்றுகொள்ள இயலாத நிலை அது.

ஆனால் நான் பிரார்த்தனை செய்தேன். நிலநடுக்கம்,பெருவெள்ளம்,பெரும் தீயில் குடிசைகள் சாம்பலாகி ,புயல்,சுனாமி போன்றஇயற்கை சீற்றத்தினால் சில நிமிடங்களில் அனைத்தையும் இழந்து, அனாதைகளாக மனிதன் நடுதெருவுக்கு வந்து விடுகிறான். அந்தநிலைமை இந்த உலகில் எந்த உயிருக்கும் வரகூடாது என்றே பிரார்த்தனை செய்தேன்.

அடுத்த அரைமணிநேரத்தில் மேற்பார்வையாளர் ஒறேன்ஸ் வந்தார். தலைமை சமையற்காரர் பணிக்கு சென்றுவிட்டார். மதியஉணவு கொடுக்கவில்லை. இரவு உணவு கொடுத்தே ஆக வேண்டும் என அழைத்தார். நிறையப்பேர் நாங்கள் இனி பணிக்குவரமாட்டோம் என்றார்கள். மானேஜர் டெர்ரி ஆண்டெர்சன் வந்து அனைவரிடமும் பேசி பணிக்கு வரும்படி கெஞ்சினார். சிலர்பிடிவாதமாக வரமுடியாது என்றனர் .

நானும் மற்ற சிலரும் அடுமனைக்குள் வேலைக்கு சென்றோம். அன்று மட்டும் மையோனஸ் தடவிய ஹாட் டாக்கும், எண்ணையில்பொரித்த பிரெஞ்ச் பிரைஸ் என குறைவான உணவை சீக்கிரமாகவே தயாரித்து கொடுத்துவிட்டோம். அருகிலிருந்த முகாமிலிருந்துவந்திருந்த நியூசிலாந்து அதிகாரி, இரவு தூங்குவதற்கு தற்காலிக கூடாரம் அமைக்கும் பணியை துவக்கியிருந்தார். நானும்அவர்களுடன் இணைந்துகொண்டேன் . மாலையில் குளித்தபின், எனக்கு கிடைத்தது ஒரு போர்வை.  அதை இரண்டாக கிழித்துநானும் லோகேசும் உடுத்திக் கொண்டோம். அப்போதே ராணுவ வீரர்கள் பலரும் தங்களிடமிருந்த உடைகளை கொண்டுவந்துஉதவினர். வெற்றுடலாய் இருந்த எனக்கும் ஒரு மேலாடை கிடைத்தது.


அன்றிரவு,  நாங்கள் நூறுபேர் படுப்பதற்கான கட்டில்களை ராணுவ கமாண்டோ தந்து உதவினார். அது ராணுவ வீரர்களுக்கானது.அதை சிறிதாக மடக்கி எங்கும் எளிதில் எடுத்துசெல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டது . இரவில் இந்திய தாய் தந்தைக்குமகளான அமெரிக்க ராணுவ வீராங்கனை  மராத்தியை தாய்மொழியாக பேசும் ஆர்த்தி கதம் எங்களை தேடிவந்து ஆறுதல்சொன்னாள். எனக்கும் , கார்த்திக்கிற்கும் நல்ல தோழி அவள். அன்றிரவு,  இரவு பணியாளர்களிலும் சிலர் பணிக்குச் செல்லவில்லை. உடலும், மனமும் களைத்துப் போயிருந்தது.  அனைவரும்தற்காலிக கூடாரத்தில் கிடைத்த உடைகளுடன் துயில சென்றோம். கண்களை மூடினால்,  கூடாரம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது காட்சியானது .
ஷாகுல் ஹமீது
11-10-2016.