Monday, 23 November 2026

கப்பல் காரன் டைரி (சன்னி ஜாய் நாட்குறிப்புகள்) என்னுரை

   


 சனிக்கிழமையன்று மதுரை புத்தக  காட்சியில் வெளியான கப்பல் காரன் டைரி சன்னிஜாய் நாட்குறிப்புகள் நான் எழுதியமுன்னுரை

      கப்பல்  பணி யில் இணைவதற்காக 2020ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மும்பையில் உள்ள வாட்டர் ஸ்டோன்ஸ் எனும் விடுதியறையில் தனிமைபடுத்தலில் இருந்தேன். உலகம் முழுவதும் கொரோனாவின் பிடியில் இருந்தது. ஏழாவது நாள் நண்பர் சென்னை அசோக்க்கு போன் செய்தேன். “எப்படி நேரம் போகிறது என்ன செய்கிறீர்கள்”எனக்கேட்டார்.

    ஒன்றும் செய்வதில்லை அதிகாலை விழிப்பேன், தொழுகை, அரை மணிநேரம் நடை பயிற்சி, குளியலுக்குபின் காலை உணவு,நண்பர்களுடன் போனில் பேசுதல்,வாட்ஸ்அப் பார்த்தல். டீ பார்ப்பதில்லை,பகல் தூக்கமும் இல்லை என்றேன்.

  கொஞ்சம் கடிந்து கொண்டார் அசோக். “ஷாகுல் இங்க பாருங்க உங்களால எழுத முடியும், ஏழு நாளுக்கு ஏழு கட்டுரை வந்துருக்கணுமே, போன் பேசுனேன், வாட்ஸ்அப் பார்த்தேனு சொல்லத நான் ஒத்துக்கமாட்டேன். இப்டி நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க. என்னால எழுத முடியாது,வராது” என்றார்.

   அன்றும்,மறுநாளும் விடுதியில் இருந்த நாட்களிலும்,கப்பலுக்கு புறப்பட்டபின் விமானநிலையத்திலும், விமான பயணத்திலும் அனுபவ கட்டுரைகளை எழுதிக்கொண்டே இருந்தேன்.

கப்பல் காரன் டைரியின் சில கட்டுரைகளை படித்த நண்பர்கள் சிலர் இது நாங்கள் அறியாத உலகம்,இதுவரை யாரும் தமிழில் எழுதியதில்லை, கப்பல் வாழ்க்கையை பற்றி அறிந்துகொள்ள நீங்கள் எழுதவேண்டும், உங்களது எழுத்தின் மொழி அமைந்துவிட்டது என்றார்கள்.

   2020ஆம் ஆண்டு அக்டோபர் பத்தாம் தேதி சிங்கப்பூரிலிருந்து சன்னி ஜாய் கப்பலில் இணைந்தேன். அன்றே ஒரு அறிவிப்பை வெளியிட்டேன் இன்று முதல் கப்பல் காரன் நாட்குறிப்புகள் தொடர்ந்து வரும் என.

  கப்பலின் இணைய வேகம் காரணமாக வலைப்பூவில் பதிவேற்ற இயலாது. அன்றாடம் மடிக்கணினியில் எழுதி வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கு பகிர்ந்தேன். அதில் பதினோராவது நாளின் நாட்குறிப்பு ‘கப்பாவுக்கு கொரோனாவா’ எனும் பதிவிற்குப்பின் இது மிக முக்கியமானது வாட்ஸ்அப்பில் அழிந்துபோய்விடும் இதை ஆவணபடுத்தவேண்டும் என சொன்னதோடு நில்லாமல் நண்பர் லா ஓ ஸி, கணேஷ் பெரியசாமி இணைந்து கப்பல்காரன் எனும் வலைப்பூவை தொடங்கினார்கள்.

  நான் தினமும் ஐநூறு முதல் எழுநூறு வார்த்தைகளுக்குள் எழுதி படங்களுடன் வாட்ஸ்அப்பில் அனுப்புவேன். அவர்கள் அதை வலையேற்றுவார்கள். கப்பலில் இருந்தபோது எந்த பதிவையும் நான் பார்த்ததே இல்லை. இணைய வேகம் குறைவாக இருந்ததால் திறக்கவே முடியாது. சில பதிவுகளுக்குப்பின் லாஓஸி தனது கல்லூரி மேற்படிப்பிற்கு செல்ல கணேஷ் சொந்த ஆர்வத்தால் விடாமல் அந்த பணியை செய்தார். அவரது சுய விருப்பத்தால் மட்டுமே. மொத்தம் நூற்றி ஐம்பது பதிவுகள் ஆயிரம் பக்கங்கள் வரை ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் செய்தார். எனவே கப்பல் காரன் டைரி, சன்னி ஜாய் நாட்குறிப்புகளின் இணை ஆசிரியர் கணேஷ் பெரியசாமி என்பேன் அவர் இல்லாமல் இது சாத்தியமாகியிருக்காது..

   அப்போது தினமும் பதிவுகளை எங்கள் சுக்கிரி வாசிப்பு குழுமத்தில் நண்பர்கள் வாசித்து கருத்துகளை சொல்லிக்கொண்டே இருந்தார்கள். என்னால் எழுத முடியாத, கட்டுரை வராத நாட்களில் “ஷாகுல் கட்டுரை எங்கே, தமாத படுத்தாதீர்கள்” என கேட்க தொடங்கினார்கள். அதன் வாசகர்களே அதை இறுதிவரை என்னை எழுதவும் வைத்தார்கள். என்னால் அதிலிருந்து விலக இயலவில்லை என்பதே உண்மை. கப்பல் காரன் டைரி எழுதிய பின் தான் எனக்கே தெரிந்தது கப்பல் வாழ்க்கையை பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது என. கப்பல் காரனின் குடும்ப உறுப்பினர்கள்கூட பெரிதாக அறிந்திருக்கவில்லை. பெரும்பாலோர் கப்பல் காரன் தினமும் கடலிலிருந்து தூண்டில் போட்டு மீன் பிடித்து உண்பான், மாலையில் அமர்ந்து முட்ட குடிப்பார்கள், நாள் முழுதும் எந்த வேலையும் இல்லை. எல்லா துறைமுகத்திலும் ஒரு புது மனைவி அவர்களுக்கு. நன்றாகஉலகை சுற்றுவார்கள் (இது மட்டும் உண்மை) நிறைய பணம் அவர்களிடம் என இல்லாத ஒரு பொது புரிதலே மக்களிடம் உள்ளது.

   ஏழு மாத பணி ஒப்பந்தத்தில் சென்ற நான் கோவிட் காரணமாக ஊருக்கு வர முடியாமல் பதினோரு மாதம் பணியிலிருந்தேன். நிலத்தில் பாதம் பதிக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை அந்த நாட்களில். சன்னிஜாய் கப்பலின் பதினோரு மாத அனுபவம்தான் இந்நூல். ஒவ்வொரு நாளும் அதிகாலை விழித்தது முதல் தூங்குவது வரை நாட்குறிப்புகளாக பதிவு செய்தேன். இப்போது நூலுக்காக கொஞ்சம் சுருக்கியிருக்கிறேன்.

   ஒவ்வொரு நாளும் எட்டு முதல் பத்து மணி நேர கடும் உடலுழைப்புக்குப்பின் இரவில் அமர்ந்து எழுதவே முடியவில்லை. இரவு எட்டு மணிக்கே உடல் களைப்பினால் தூக்கம் அழுத்தும். இரவு எட்டு மணிக்கே தூங்கி அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து ஏழுமணிவரை எழுதுவது என எனக்கான எழுதும் நேரத்தை கண்டுகொண்டதும் அப்போதுதான்.

 அசாதாரண காலநிலை, கடும் வெப்பம், காற்று, பனிப்புயல், தீ விபத்து, கடத்தல் காரர்களின் தாக்குதல் என நிறையவே அனுபவங்கள். நிச்சயமாக கப்பல் சார்ந்த படிப்பில் இணைய விரும்பும் மாணவர்களுக்கு இது வழிகாட்டியாக இருக்கும். மற்றவர்களுக்கு அவர்கள் அறியாத கப்பல் உலகை முழுமையாக அறிய உதவும்.

  முதன்மையாக சென்னை நண்பர் அசோக், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் தன் உழைப்பை தந்த நண்பர் கப்பல் காரன் டைரியின் இணை ஆசிரியர் கணேஷ் பெரியசாமிக்கும் நன்றி. சுக்கிரி நண்பர்கள் அனைவருக்கும், தினமும் போனில் ஷாகுல் இன்று என்ன எழுதினீர்கள் எனக்கேட்கும் மூத்தவர் பழனி ஜோதிக்கும், தோழி செல்வராணிக்கும் நன்றி. 

  உங்கள் முதல் நூல் வாழ்க்கை அனுபவம், தொழில்நுட்பம் சார்ந்து கப்பல் காரன் டைரி மிக முக்கியமான ஆவணம் அதை கண்டிப்பாக நூலாக்க வேண்டும் என சொல்லிக்கொண்டே இருந்தவர் நண்பர் சுப்பிரமணி. கல்லூரிகளில் இது பாடாமாக அமைய தகுதியுள்ளதும் என்றார் அவரையும் நினைவு கூர்கிறேன். இத்துறை சார்ந்து பணிபுரியும் பன்னீர்செல்வம் இதன் முக்கியத்துவம் பற்றி ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். ரமேசும் கருத்துகளை சொல்லிக்கொண்டே இருந்தார்.



 சிங்கையில் கப்பல் டிசைனிங்கில் பணிபுரியும் விஜிப்ரியா இந்த கட்டுரைகளை வாசித்தபின் தனது பணியில் பொறுப்பு கூடியுள்ளது என்றார். அதன் பின் ஏற்பட்ட ஆர்வத்தால் தனது மேலதிகாரியிடம் பேசி அனுமதி பெற்று காகிதத்திலும், கணினியிலும் வடிவமைத்த கப்பலை நேரில் ஒரு முறை பார்த்தபோது கப்பல் காரன் டைரி காட்சியானதை மகிழ்ச்சியுடன் சொன்னார்.

  சாகசமே வாழ்க்கையான கப்பல் காரன் என விரிவாக எழுதிய வாசகி மதுபாலாவுக்கு நன்றி.

 அனைத்து கட்டுரைகளையும் வாசித்து கருத்துகளை எழுதிய மூத்த சகோதரி டெய்சி, அட்லாண்டா சிஜோ மற்றும் கப்பல் காரன் வாசகர்கள் எனது தம்பி ஷேக், கிறிஸ்டி, சேலம் பிரகாஷ், சத்தியராஜ், எழுதுங்கண்ணா என சொல்லும் இளையவள் எழுத்தாளர் ரம்யா, தாவரவியல் பேராசிரியை எழுத்தாளர் லோகமாதேவி, சிட்னி கார்த்திக், பனை மனிதன் காட்சன் சாமுவேல், எழுத்தாளர் சுசில், பதிப்பாளர் ஜீவ கரிகாலன் அவர்களுக்கும் நன்றி.

வலைப்பூவில் எழுத ஆரம்பித்த நாட்களில் உங்கள் கட்டுரைகள் நூலாகும் தகுதி கொண்டவை என்று ஊக்கமளித்த மூத்தவர் ஆஸ்டின் சௌந்தர். எழுத்தாளர் ஜெயமோகனை எனக்கு அறிமுகப்படுத்திய தம்பி பிரபு, நண்பர் டாலஸ் செந்தில் ஆகியோரும் நினைவில் எழுகிறார்கள்.

   இந்நூலுக்கு முன்னுரை எழுதி தந்த தம்பி இலக்கியர் விமர்சகர் விக்னேஷ் ஹரிஹரனுக்கு நன்றி.

 என்னால் எழுத முடியும் என என்னை எனக்கு காட்டிதந்த ஆசிரியர் ஜெயமோகன், மூத்த எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், எம் கோபால கிருஷ்ணன், எழுத்தாளர் யுவன் சந்திரசேகர், எழுத்தாளர் மீரான் மைதீன், எழுத்தாளர் ராஜ கோபால் (ஜாஜா) ஆகியோருக்கும் நன்றியை சொல்லிகொள்கிறேன்.

 துணைவி சுனிதா,மகன்கள் ஸாலிம்,சல்மானுக்கு என் அன்பு.

    இதை நூலாக வெளியிடும் யாவரும் பதிப்பகத்திற்கும்,மெய்ப்பு பார்த்து பிழை திருத்தம் செய்த வேதநாயகம் அவர்களுக்கும் புத்தகத்தை வடிவமைத்த ஜீ.முருகன் அவர்களுக்கும் நன்றி.

At sea ,

15 may 2026.

நாஞ்சில் ஹமீது.

நூல்கள் வாங்க கீழே உள்ள லிங்க்கை சொடுக்கவும்.

சன்னி ஜாய் நாட்குறிப்புகள் நூல் வாங்க

ஈராக் போர்முனை அனுபங்கள் நூல் வாங்க

No comments:

Post a Comment