Tuesday, 20 October 2026

ஈராக் போர்முனை அனுபவங்கள் . கா சிவா

 

ஈராக் போர்முனை அனுபவங்கள் : நாஞ்சில் ஹமீது

ஈராக் நாட்டின்மீது எனக்கு தனிப்பிரியம் உண்டு. என் தந்தை அவர் பணியாற்றிய இந்திய ரயில்வே துறை மூலமாக ஐந்தாண்டுகள் ஈராக்கில் பணியாற்றினார். அங்கு ரயில்பாதை அமைப்பதற்கு இந்திய ரயில்வே ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கக்கூடும்.  ஈராக்கில் பணியாற்றியபோது அவர் பெற்ற ஊதியத்தைக் கொண்டே எங்கள் ஊரான சிவலாங்குடியில் எங்களுக்கென ஒரு வீடு கட்டப்பட்டது. மேலும் அங்கிருந்து அவர் திரும்பியபோது சதாம் உசேன் படம் பதியப்பட்ட சிவப்பு டிசர்ட் ஒன்றை வாங்கி வந்தார். ஓராண்டு அதை போட்டுக்கொண்டு திரிந்தேன். அந்த வீடு தற்போது இல்லையாயினும் அப்போது ஈராக்கின் மேல் ஏற்பட்ட பிரியம் இன்றும் நீடிக்கிறது. 

   எனவே “ஈராக் போர்முனை அனுபவங்கள்” நூலை ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்கினேன். எவ்வித தயக்கமுமின்றி மடைதிறந்தது போன்று பேசக்கூடிய ஷாகுல் ஹமீதுடன் பழகியவன் என்பதால் வாசிப்பதெல்லாம் அவரே நேரில் சொல்வது போன்றே தோன்றியது. கிடைத்த நேரங்களில் வாசித்து இரண்டு நாளில் வாசித்து முடித்தேன். 

       ஆசிரியர் ஜெயமோகன், ஷௌகத். தி. ஜானகிராமன் – சிட்டி ஆகியோருடைய  பயண நூல்களை வாசித்திருக்கிறேன். அந்நூல்கள் திட்டமிட்டு பயணம் செய்த அனுபவங்களை அங்கே கண்டவற்றின் முந்தைய இன்றைய நிலைகளை விவரிப்பதாக இருக்கும். அவை அநேகமாக பயணம் நிகழ்ந்த உடனேயே எழுதப்பட்டவை. இந்நூல் பணி நிமித்தமாக சென்றவர் அந்த சூழலையும் அங்கு ஏற்பட்ட அனுபவங்களையும் பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பின் தன் நினைவிலிருந்து மீட்டு எழுதியது. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் நினைவில் நீடிப்பவற்றை மட்டுமே எழுதியிருக்கிறார் என எடுத்துக் கொள்கிறேன். இதுவே இந்நூலை சிறப்பு மிக்கதாக மாற்றுகிறது. 

    மும்பையில் வேலை தேடி அலைவதையும் உடன் இருந்த நண்பர்களையும் பற்றி முதல் இரு அத்தியாயங்களில் எழுதியுள்ளார். நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பற்றிய விவரனை இவரது இலகுவான மொழிக்கு உதாரணம். குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத்திற்கு உணவு தயாரித்து வழங்கும் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்கிறார்கள். உணவகப் பணிக்கான உதவியாளராக பணி புரிய முடிவு செய்து  நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு தேர்வும் பெற்று விடுகிறார். இவரோடு இவரது சில நண்பர்களும் தேர்வாகிறார்கள் என்பது இவருக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குவைத்தில் பணிக்கான தேவை குறைந்ததும் ஈராக்கிற்கு செல்ல சம்மதிப்பவர்களைத் தவிர பிறரை ஊர்களுக்கு அனுப்ப முடிவு செய்கிறார்கள். ஷாகுல் ஈராக் செல்ல முடிவெடுக்கிறார்.  ஈராக் செல்லும் பயணம் திகில் நிறைந்ததாக உள்ளது. அந்தத் திகிலினை வாசிப்பவர்களையும் உணர வைக்கும் வகையில் ஷாகுல் எழுதியுள்ளார்.

    இதுவரை காணாத நிலப்பரப்பு , நான் உணராத அந்த போர்ச்சூழல், இக்கட்டான சூழலில் வெளிப்படும் மனிதர்களின் குணங்கள் என   நூலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆச்சர்யப்படுத்தும்படி ஏதோவொரு விசயம்   இருக்கிறது.

   ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதை போலவே உள்ளது. பொருத்தமான தலைப்புகளிட்டு ஒரு விசயத்தைத் தொடங்கி படிப்படியாக விவரித்து ஒரு உச்ச தருணத்தோடு முடிப்பதால் அவ்வாறு தோன்றுகிறது. மேலும் ஒவ்வொரு அத்தியாயத்தின் கடைசிப் பத்தி அந்த அத்தியாயத்திற்கான திரண்ட கருத்து போல ஆசிரியரால் கூறப்படுகிறது. நூலின் சிறப்பம்சம் என இதையே கருதுகிறேன். அதுவொரு தத்துவம் போலவும் மூத்தவரின் அனுபவ மொழி போலவும் மிளிர்கிறது. பயணம் சென்றபோதே எழுதியிருந்தால் இது இடம் பெற்றிருக்காது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அதனை அசைபோட்டுப் பார்க்கும்போது இவருக்குள் திரண்டெழுந்த கருத்துகள் இவை. இவை நூலின் மதிப்பை அதிகரிக்கிறது.  

   உதாரணமாக  அமெரிக்க இரானுவ வீரர்களிடம் “ஒன் டாலர் ப்ளீஸ்” எனக் கேட்கும் தமிழர்களைப் பற்றிய “திரைகடலோடித் திரவியம் தேடிய தமிழர்களில் சிலர்…” என்ற அத்தியாத்தின்  கடைசிப் பத்தி 

//உள்ளூரில் இருப்பதைப் போலத்தான் அயல்மண்ணிலும் இருக்கும் தமிழர்கள். பொறுப்பானவர்களும், பொறுப்பற்றவர்களுமான கலவை. ஆனால் ஒருவனுக்கு பொறுப்பில்லாமல் தான் செய்யும் மோசமான செயல் மொத்த குழுவிற்கும் அவமதிப்பைத் தரும் என்ற எண்ணமே இல்லாமலிருப்பதைத்தான் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பீகாரியை ‘பான்பராக் வாயன்’ என்று நக்கல் செய்து மகிழும் நம்மை அந்த முகாமில் என்ன சொல்லியிருப்பார்கள்? ஒரு டாலர் பிச்சைக்காரன் என்றுதானே. தனிமனிதனின் சுய ஒழுக்கமே சமூக ஒழுக்கமாக மாறுகிறது என்பதை உணர்ந்துகொள்ள முடிந்த நிகழ்வுகள் இவையெல்லாம்//

சதாம் கைது செய்யப்பட்டதைக் கூறும் அத்தியாயம் //வீரம் என்பது காப்பதற்குப் பயன்பட்டால்தான் மதிப்பு. பிறரை அழிக்கப் பயன்பட்டால் வீரம் பொருளிழந்து போகிறது. சதாமின் இறுதி வீரமும் அவர் பிற இனமக்களுக்குச் செய்த அழிவால் பொருளிழந்து போனது// என முடிகிறது. எத்தனை உள்ளார்ந்த கருத்து.  எப்போதும் புன்னகையுடன் வெள்ளந்தியாக பேசிக்கொண்டிருக்கும் ஷாகுல் இவ்வாறெல்லாம் கருதுகிறாரே என ஆச்சர்யம் தோன்றியது.

   பலவித பண்பாடுகளில் வளர்ந்தவர்கள் ஒன்றுகூடி வாழ்வது சற்று சிரமம்தான். ஆனால் போர் போன்ற ஒரு நெருக்கடி நிலையில் உயிர் வாழ்ந்தால் போதும் என்ற நிலையில் அத்தனை பண்பாடுகளுக்கும் அடிப்படையான மனதநேயம் அனைவரையும் ஒன்றிணைக்கும். இணைந்து போராடுவதற்கான மனவுறுதியையும் நம்பிக்கையையும் அளிக்கும் என்பதை பல அத்தியாயங்களில் விவரித்துள்ளார். 

      அவளாகவே வந்து பழகி, பின் ஏனென்று தெரிவிக்காமல் பிரிந்து சென்ற  பாயல் என்ற தோழியும், ஊரில் மனைவி இருப்பதால் வேறு பெண்ணுடன் நடனமாடுவதையும் தவிர்த்த ஒடிஸ் என்ற நண்பனும் மறக்கவியலாத மனிதர்களாகிவிட்டார்கள். ஒடிஸை சான்றாண்மை கொண்டவன் என ஷாகுல் விவரிப்பதன் காரணத்தை நூலைப் படித்து அறிந்து கொள்ள வேண்டும் எனக் கோருகிறேன்.  

     சேர்ந்து உண்பதைப் பற்றியும் அடுத்தவர்களுக்கு உணவளிப்பதைப் பற்றியும் அடுத்தவேளை உணவு நிச்சயம் இல்லாத நிலையில் உண்பதே கடைசி உணவாக இருக்கக்கூடும் எனக் கருதி உண்பதைப் பற்றியும் உள்ள அத்தியாயங்கள் மனதை நெகிழ வைக்கின்றன.

   ஈராக்கில் பணிபுரிந்த அத்தனை நாட்களுமே இவர்கள் பணி புரிந்த இடத்தின்மேல் குண்டு விழுமோ என்ற பயத்துடனேயே இருந்துள்ளார்கள். மனம் அந்தப் பயத்திற்கு ஆட்பட்டிருந்த நிலையிலும் சுற்றி நடந்தவற்றை இந்த அளவு கூர்ந்து நோக்கியுள்ளாரே என வியப்பு ஏற்படுகிறது. அல்லது அந்த பயத்தினால்தான் இந்தளவு கூருணர்வுடன் இருந்துள்ளார் என்றும் தோன்றுகிறது. 

  இந்தக் கூருணர்வை தக்க வைத்துக் கொண்டு பயண அனுபவங்களோடு புனைவுகளையும் நாஞ்சில் ஹமீது எழுத வேண்டும் வாழ்த்துகிறேன்.

யாவரும் பதிப்பகம், இணையத்தில் வாங்க

கா. சிவா
கரவுப்பழி, அமிழ்தலும் மிதத்தலும் முதலிய நூல்களின் ஆசிரியர்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

 

 

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

No comments:

Post a Comment