இரு ஆண்டுகளுக்கு முன் என் இளையமகன் சல்மானுடன் வெள்ளிமலையில் நடந்த பறவை பார்த்தல் வகுப்பில் கலந்துகொண்டேன். “அம்பது வயசாவுது பறவ பாக்க போறாராம்” எனும் குரல் கேட்கத்தான் செய்தது. அதை கேட்காமலே சென்றேன்.
கப்பலில் பல ஆண்டுகளாக பறவைகளை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். கப்பலில் அவ்வப்போது பறவைகள் வந்துவிடும், அதில் புறாக்கள் மற்றும் கொக்குகள் மட்டுமே மிக நன்றாக தெரிந்தவை. மற்றவை எல்லாம் ஸீ குல், குருவிகள் தான்.
ஆசான் ஜெயமோகனுக்கு ஒரு கடிதம் எழுதி நானே கோரிக்கை வைத்தேன் பறவை பார்த்தல் வகுப்பு ஒருங்கிணைத்தால் என்னை போன்ற குறை அறிவுடையவர்கள் அதை தெரிந்துகொள்ள முடியுமே என.
அதை அவர் பாத்தாரோ என்னவோ தெரியாது ஆனால் வெள்ளிமலையில் நடந்த இரண்டாவது பறவை பார்த்தல் வகுப்பில் நான் கலந்துகொண்டேன். நண்பர்களான விஜய பாரதியும், ஈஸ்வர மூர்த்தியும் ஆசிரியர்களாக வகுப்புகளை நடத்தினர்.
கடலில் கப்பலில் பறைவைகள் எப்படி வருகிறது. கரையில் கப்பலை கட்டிவைத்திருக்கும் போது சொந்த வீடு போல பறவைகள் வந்து பாடி, பறந்து மகிழ்ச்சியாக இருக்கும். பார்க்கும் நமக்கும் அந்த மகிழ்ச்சியை கடத்திவிடும் அதியசம் நிகழும்.
தீவுகளை ஒட்டிய பயணத்தில் வரும் சிறு குருவிகள் வழி தெரியாமல், நீண்ட தூரம் பறக்கும் சக்தியாக சில தினங்கள் கப்பலிலேயே சுற்றி,சுற்றி வரும். பெரும்பாலும் இறந்துவிடும். பெரிய பறவைகள் நான் ஸீகுல் என நினைத்து கொண்டிருந்தவை பசுபிக் கடலில் பயணிக்கையில் இருபது நாட்கள் வரை கப்பலுடன் தொடர்ந்து வரும். கூட்டமாக வரும் அவை, வெப்பம் மாறுபடும்போது அல்லது (எழுபது பறவைகள் வரை) கரையை எட்டும் முன் அவை காணாமல் போய்விடும்.
பறவை பார்த்தல் வகுப்புக்குபின் பார்வையே மாறியது. புறா, மைனா, கொக்கு, காகம், ஆந்தை போக என் வீட்டருகே மிக சாதாரணமாக, வால்காக்கை, red vented bulbul ,oriental magppie robin,asian green bee eater common lora,white browed wagtail,brown headed barbet , rose ringed parakeet, common tailor bird,sun bird, pale billed flowerpecker,drango போன்ற நாற்பது வகை பறவைகளை பார்க்க முடிந்தது.
நண்பர் வாங்கி தந்த பைனாக்குலர் வழியாக வீட்டின் மாடியில் நின்று பறவையை பார்க்கும்போது சுனிதா “இங்க பாருங்கோ அங்க நிக்கவளுக்கு நீங்கோ பறவைக்க மூலத்த பாக்கது தெரியாது. இத வேற எங்கயாவது வெச்சிகிடுங்கோ” என எச்சரித்தாள்.
என் வீட்டருகில் பறக்கை குளம் இருக்கிறது. அங்கே ஏராளமான பறவைகளை காண முடியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கபட்ட பறவை பார்த்தல் கோபுரம் ஒன்றும் இப்போது தான் என் கண்ணில் பட்டது.
கப்பலிலும் ஒரு நையாண்டி உண்டு “பர்சனல் பைனாக்குலர் லேடிஸ பாக்கதுக்குதானே” என. நான் அவர்களுக்கு பதிலேதும் சொல்வதே இல்லை.
![]() |
| பிரவுன் பூபி |
கப்பலுக்கு வந்தபின் கப்பலை தொடர்ந்து பல நாட்களாக உடன் வருபவை masked booby, brown booby எனவும் அடையாளம் கண்டேன். தலைக்கு மேலே அவை பறப்பதும் மீனை கண்டால் கடலில் மூழ்கி அலகில் கவ்வி மேலே வருவதும் பகல் முழுவதும் பறப்பதும் மீன் வேட்டையுமாகவே இருக்கும். மூன்று தினங்களுக்குப்பின் வயிறு நிரம்பி டெக்கில் அமர்ந்து ஆழ் மோனத்தில் ஓய்வில் இருக்கும். அது நல்லுறக்கம் அப்போது அருகில் சென்றால் அவை நம்மை உணர்வதே இல்லை. பூபிகள் பறந்து சென்றபின் உண்ணாமல் விட்ட மீன்களால்,பாதி உண்ட மீதி என டெக் மீன்களால் நிறைந்து இருக்கும்.
![]() |
| பிரவுன் பூபி ஆழ்ந்த உறக்கம் |
நிலத்தில் பறவைகளை இவ்வளவு அருகில் பார்ப்பது கடினம். காலையில் தலைக்கு மேலே மிக அருகில் பறக்கையில் திரும்பி பார்த்து “ஷாகுலே குட் மார்ன்னிங்” என சொல்வதும் நிகழும். சிறகசைக்காமல் கப்பலின் வேகத்துக்கு இணையாக (17 knot) பறக்கும், நொடியில் சிறகை சுருக்கி நீரில் மூழ்கிவிடும். அதை காணாமல் மனம் பதைபதைக்கும் போது வாயில் மீனுடன் அல்லது வெற்று அலகுடன் மேலெழுந்து வரும்.
பூபிகள் எப்போதும் கப்பலில் உடன் பயணிக்கும் மாலுமிகள் போலவே ஆகிவிட்டன. கடந்த வாரம் டெக்கில் எனது ஸ்டோர் அறையை திறந்தபோது மைனாவை விட கொஞ்சம் பெரிய கருஞ்சாம்பல் பறவை ஒன்று உள்ளே இருந்ததை கண்டேன். முந்தைய மதியத்திற்கு மேல் அந்த கதவை அடைத்திருந்தேன். இருபது மணிநேரத்திற்கு மேல் உள்ளே இருந்தது. என்ன நினைத்திருக்கும், எப்படி பயந்திருக்கும் என்றெல்லாம் எனக்கு தோன்றியது.
கதவை திறந்ததும் வெளியே பறந்து சென்றது. அன்றும், அதன் பின்பும் டெக்கிலுள்ள அந்த கதவை அடைக்கும்முன் உள்ளே யாராவது இருக்கிறார்களா என சோதித்து உறுதி செய்கிறேன். பறவை பார்தலினால் வந்த அன்பு தான் அது.
சில தினங்களுக்கு முன் oriental greenfinch பறவைகள் இரண்டை டெக்கில் பார்த்தேன். பாடி, பறந்து கொண்டிருந்தது. கப்பலுக்கு அருகில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் டெக்கில் வந்துவிடும். நேற்று மாலை எங்கள் பயர் ட்ரில்ல்ஸ் நடந்தபோது பதினைந்துக்கும் மேலான பறவைகள் இருந்ததன. எங்களுக்கு மிக அருகில் பயமின்றி பறந்தும், நடந்தும் சென்றது. டெக்கில் அவை உடலசைக்காமல் வேகமாக நடப்பது, கீச்சு குரலில் ஒலி எழுப்புவது என எல்லாமே இனிமை. அதை பார்த்துக்கொண்டே இருத்தல் அக மகிழ்வு மட்டுமல்ல உள்ளம் குவிந்து எண்ணங்களில்லாமல் ஒரு தியான நிலை. அது ஒரு பேரனுபவம்.
நேற்றே சமையல்காரர் சரத்திடம் சொன்னேன் பறவைகளுக்கு சாப்பாடு வேண்டுமென. அரிசி வேண்டாம் அதைவிட சிறிதாக எதாவது தானியம் வேண்டுமென கேட்டேன். இன்று காலை கொஞ்சம் அவல் தந்தார். நீரில் நனைத்து வைக்க சொன்னார். நான் அப்படியே கொண்டு சென்று ஒரு பேப்பர் தட்டில் கொஞ்சம் கொட்டி வைத்தேன். மூரிங் விஞ்ச் அருகே பறவை ஒன்று நிற்பதை கண்டேன் அருகிலேயே குறைந்த இடைவெளியுள்ள இரும்பு பட்டைகளுக்குள் தலை மாட்டி ஒன்று இறந்து போயிருந்தது. கையில் எடுத்து கடலில் போட்டேன். அதன் தலையை காணவில்லை.
ஒரு மணிநேரம் கழித்து போய் பார்த்தேன் அவலை பறைவைகள் தின்ன சுவடே இல்லை.தட்டு நிறைந்தே இருந்தது. மெஸ் மேன் ஸ்டீபன் அவை பின்னர் சாப்பிடும் என்றார்.
நாஞ்சில் ஹமீது,
30 aug 2026.
Sunitas
hahul@gmail.com










No comments:
Post a Comment