மெக்ஸிகோவின் கோஸ்டா அசுல் துறைமுகப்பில் ஏற்றிய சரக்கை கொரியாவின் இன்சொனுக்கு கொடுக்கசொல்லி தகவல் வந்தது. மெக்ஸ்சிகோ – கொரியா இடையே ஒன்பது மணிநேர வித்தியாசம்.
மொத்தம் பதிமூன்று நாள் பயணத்தில் ஒரு நாள் காணாமல் போகும்(அதாவது பன்னிரெண்டு நாட்கள்). பன்னிரெண்டு தினங்களில் ஒன்பது நாட்கள் கப்பலின் கடிகாரம் பின்னோக்கி நகர்ந்தது.
கடிகாரம் பின்னோக்கி சென்ற நாட்களில் ஒரு நாளைக்கு இருபத்தியைந்து மணிநேரம். இரவில் ஒரு மணிநேரம் அதிகமாக கிடைத்தது. மாலை ஆறு மணிக்கே தூக்கம் அழுத்தும் பின்னர் அதிகாலை இரண்டு அல்லது மூன்று மணிக்கு விழிப்பு உறுதி.
அதை தவிர்ப்பதற்காக இரவு எட்டுமணிக்கு நான், பத்தி சாப், சந்தோஷ், முதன்மை அதிகாரி தினேஷ் ஆகியோர் மனமகிழ் மன்றத்தில் தினமும் படம் (திர்சியம் 3, பிளாஸ்ட், கறுப்பு, பால்டி, லோகா,நாராயணியூடே மூணு ஆம்மக்கள்,பரிமளம் அன்ட் கோ படங்களாக) பார்த்தோம்.
பத்து மணிக்கு மேல் அறைக்கு வந்து பதினோரு மணிக்குமேல் தூங்க செல்லும்போது மணி பத்தாக இருக்கும். அதிகாலை ஐந்துமணிவரை நல்லுறக்கம். உடல் கடிகாரம் அதிக சிரமப்படவில்லை இம்முறை. ஒரே மாதத்தில் இரு முறை இரவு பகலாகவும்,பகல் இரவாகவும் மாறியது. கடிகாரம் முன்னே செல்லும்போது குழம்பிய உடல் கடிகாரம் பின்னோக்கிய நகர்த்தலில் கொஞ்சம் சமாளித்துக்கொண்டது.
வாட்ச் கீப்பெர்ஸ் இப்போதும் கொஞ்சம் கடினம்தான்.
July 15 ஆம் நாளை இல்லாமலாக்கி செவ்வாய்க்கிழமையிலிருந்து வியாழனுக்கு தாவியதில் புதன்கிழமை இல்லாமல் ஆகியது. மெக்ஸிகோவிற்கு செல்லும்போது பயணத்தில் வெப்பம் சிலநாட்கள் ஒன்பது டிகிரிக்கு சென்றது. டெக்கில் ஜாக்கெட் அணிந்து பணிசெய்தோம். அறையின் வெப்பம் பதினைந்து டிகிரி வரை சென்றது.
அதை மனதில் வைத்து அதே போன்று வெப்பம் குறைந்தால் சமாளிக்க இரண்டாம் கம்பளி போர்வையை எடுத்துவைத்திருந்தேன். ஆனால் அறையில் வெப்பம் பதினெட்டு டிகிரிக்கு கீழ் குறையவேயில்லை.அதனால் இரண்டாவது கம்பளி போர்வை தேவைப்படவேயில்லை.
கொரியாவின் இன்சொன் அருகில் நண்பர் மதுரைவீரன் சதீஷ் வசிக்கிறார். இரு ஆண்டுகளுக்கு முன் நான் பணிபுரிந்த கப்பலான எல்என்ஜி அலையன்ஸ் இன்சொன் துறைமுகம் வந்தபோது சதீஷ் கப்பலுக்கு வந்து இரவு என்னுடன் தங்கி சென்றார். கப்பலை சுற்றிபார்த்துவிட்டு பெரும் வியப்படைந்தார். இப்போதும் காப்டனிடம் கேட்டேன் என் சகோதரர் கப்பலுக்கு வரவிரும்புகிறார் என.
காப்டன் சதீசின் ஆவணங்களை கேட்டார். இரு தினங்களுக்கு பிறகு காப்டன் “உனது உடன்பிறந்த சகோதரனா சதீஷ்” எனக்கேட்டார். நான் “இல்லை உறவில் சகோதரன்” என்றேன். ரத்த உறவு அல்லாதவர்களுக்கு டெர்மினல் அனுமதிக்காது என மின்னஞ்சல் வந்துள்ளதாக சொன்னார்.
முதன்மை அதிகாரி தினேஷ் “ஏன் அண்ணே அப்டி சொன்னீங்க” எனக்கேட்டார். “டாக்குமெண்ட் ஏதாவது கேட்டா என்ன செய்ய” என்றபோது. வளர்ப்பு தாயின் மகன் என சொல்ல வேண்டியதுதான் என்றார். என்னால் பொய் சொல்வது சிரமம், எனவே அந்த யோசனையும் அப்போது வரவில்லை.
நண்பர் கப்பலுக்கு வரும் வாய்ப்பு தவறிப்போனது. இம்முறை கப்பலிலிருந்து விடுமுறைக்கு ஊருக்கு செல்ல இறங்கியவர்கள் இன்சொனில் இரு இரவுகள் தங்கிவிட்டு சென்றனர். மீண்டும் கொரியா வந்தால் அல்லது கொரியாவில் இறங்கினால் சதீசை பார்க்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
நாஞ்சில் ஹமீது,
20 july 2026.
sunitashahul@gmail.com
கடந்த மாதம் எழுதிய பதிவு. இப்போதுதான் வலையேற்றுகிறேன்.



No comments:
Post a Comment