Sunday, 13 July 2025

பனாமாவில்

 


   பனாமாவில் நங்கூரம் பாய்ச்சி நின்றுகொண்டிருக்கிறோம். அட்லாண்டிக் கடலில் கிறிஸ்டோபலுக்கு ஒன்பதாம் தேதி இரவு அதாவது பத்தாம் தேதி அதிகாலை இரண்டு மணிக்கு வந்து நங்கூரம் பாய்ச்சி கப்பலை நிறுத்தினோம்.

   அமெரிக்காவின் ஹூஸ்டனில் சரக்குதொட்டிகளில் நாற்பத்தி ஆறாயிரத்தி நானூறு மெட்ரிக்டன் ப்ரோப்பேன் திரவத்தை நிரப்பியபின் ஐந்தாம் தேதி மாலையில் புறப்பட்டு இங்கு வந்து சேர்ந்தோம்.

  அட்லாண்டிக் கடலிலிருந்து பனாமா கால்வாயை கடந்து பசிபிக் கடலில் நுழைந்து ஆசியாவின் ஜப்பான் அல்லது சைனாவிற்கு செல்ல வேண்டிய பயணம் இன்னும் உறுதியாகவில்லை.

 பதிமூன்றாம் தேதி தான் கால்வாயை கடக்க எங்களது முறை. அதுவரை காத்திருப்பு இங்கே. தக்கால் முறையில் அதிக பணம் கட்டி முன்னரே செல்ல முடியும். கப்பலில் இருக்கும் கார்கோவிற்கு இன்னும் விலை படியாததால்,மெதுவாக கப்பலை கொண்டு செல்லும்பொருட்டு அவசரபடாமல் கால்வாயை கடக்க கிடைத்த தேதியில் கப்பலை கொண்டு செல்ல முடிவு செய்தது சரக்கு நிறுவனம்.

  இந்த கப்பலில் வந்தபின் ஏப்ரல் மாதம் இருபதாம் தேதி முதல் முறையாக பசுபிக் கடலிலிருந்து பனாமா கால்வைவாயை கடந்து அமெரிக்காவிற்கு  சென்றோம். மே மாதம் இரண்டாவது முறையாக அட்லான்டிக் கடலில் இருந்து பசுபிக் கடலில் நுழைந்து ஜப்பானை அடைந்தோம்.


அமெரிக்காவில் 


   மீண்டும் அமெரிக்கவின் ஹூஸ்டனில் சரக்கு நிறைக்கவேண்டிய இருந்ததால் ஜூன் இருபத்தியைந்தாம் தேதி மூன்றாவது முறையாக பனாமா கால்வாயை கடக்கும் வாய்ப்பு கிடைத்தது.

 மூன்று மாதத்திற்குள்  நான்காம் முறையாக  பனாமா கால்வாயை கடக்க போகிறோம். இன்னும் ஒரு மணிநேரத்தில் கப்பலில் நங்கூரம் உருவி கப்பல் நகர்த்தப்பட்டு கால்வாய்க்கு அருகில் செல்லும் நள்ளிரவு ஒரு மணிக்கு பைலட் வருவார். நான்கு மணிக்கு முதல் கேட்டில் நுழைந்து காலை எட்டுமணிக்கு கட்டுன் (Gatun Lake) ஏரியில் நுழைந்தபின் கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்படும். நார்த் பவுண்ட் என சொல்லப்படும் பசுபிக் கடலில் புறப்பட்ட கப்ல்களை வெளியே செல்ல அனுமதித்தபின் சவுத் பவுண்ட் கப்பல்கள் செல்ல அனுமதிக்கப்படும்.

Gatun Lake 


 பனாமா கால்வாயில் கப்பல் எப்படி கடக்கிறது என்பதை முழுமையாக விரிவான ஒரு பதவில் எழுதிவிட வேண்டும் என நினைத்துள்ளேன்.இந்த கட்டுரை இன்றைய நிகழ்வை பதிவு செய்வதற்காக எழுதவில்லை.கடந்த ஜூன் மாதம் இருபத்தியைந்தாம் தேதி அமெரிக்கா செல்வதற்காக பனாமாவை கடப்பதற்காக காத்திருந்த நாட்குறிப்பை சொல்ல வேண்டும் என நினைத்தேன்.

  ஜூன் மாதம் நான்காம் தேதி ஜப்பானிலிருந்து காலியான கப்பலை சரக்கு நிறைப்பதற்காக  அமெரிக்காவை நோக்கி புறப்பட்டு இருபத்தி மூன்றாம் தேதி நள்ளிரவு அதாவது இருபத்தி நான்காம் தேதி இரண்டுமணிக்கு நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினோம். ஒரு முழுநாள் மட்டும் காத்திருப்பு.

 காலை எட்டுமணிக்கு முதன்மை அதிகாரியை சந்தித்தேன். “பத்து மணிக்கு மேல் ஆக்சன் தொடங்கும்” என்றார்.

“அதுவரை பார்வேடில் நான்கு யூ கிளாம்ப் போடணும் அதை செய்கிறேன்” என்றேன்.

“டோன்ட் என்கேஜ் யுவர் செல்ப்,பி இன் வாக்கி டாக்கி”என்றார்.

 காஸ் டிப்பார்ட்மென்ட்க்கு டெக்கில் முதன்மை அதிகாரியுடன் மீட்டிங் முடிந்து இஞ்சினில் மீட்டிங் செல்லவேண்டும்.இஞ்சினுக்கு சென்றபோது கட்டுபாட்டு அறையில் யாரும் இல்லை மெயின் இன்ஜினின் பீயுல் வால்வை மாற்றும் பணியில் இரண்டாம் இஞ்சினியர்,இஞ்சின் பிட்டர் ராஜேஷ் சவுகான்,மோட்டாமேன் மற்றும் காஸ் இஞ்சினியர் இருந்தனர்.

 காஸ் இஞ்சினியர் சதா சிவ்விடம் “பீயுல் வால்வ் மாத்த தெரியுமா,இத படிச்சிக்கோ” என்றபோது

 “மூணு மணில இருந்து வேல செய்யாங்க இந்த பைப்ப மாட்ட முடியல” என்றான்.ஐந்து மணிநேரத்திற்கு மேலாக அதனுடன் போராடி களைத்திருந்தனர்.காலை பத்து மணிக்கு பனாமா ஆய்வாளர் ஒருவர் கப்பலுக்கு வருவார். அதற்கு முன் பராமரிப்பு பணிகளை முடித்து அந்த இடங்களை சுத்தபடுத்திவைக்க வேண்டும் என்ற நோக்கில் அதிகாலை மூன்று மணிக்கே வேலையை தொடங்கியிருந்தனர்.

  பதினான்கு ஆண்டுகள் இஞ்சின் பிட்டராக பணிபுரிந்ததால் அந்த அனுபவத்தில் நான் களத்தில் இறங்கினேன். என்னாலும் முடியவில்லை.

இரண்டாம் இஞ்சினியர் அனீசிடம் "பீயுல் வால்வ வெளிய எடுத்து திரட்ட (மரை) செக் பண்ணுவோம்” என்றேன்.

“அதையும் செய்து விட்டேன்” என்றார்.

 “பீயுல் வால்வை கழட்டி வொர்க்சாப்பில் வைத்து பாப்போம்,பைப் ஏன் போவல்லன்னு   செக் பண்ணுவோம்". இஞ்சின் ரூம் நாற்பது டிகிரிக்கு மேல் இருந்தது. வெப்பமும்,வியர்வையும்,சோர்வும் சேர்ந்து ஒரு எரிச்சலை உருவாக்கியிருந்த தருணம் அது.

   “சரி கழட்டு” என்றார் இரண்டாம் இஞ்சினியர்.பீயுல் வால்வை வெளியே எடுத்தேன்.மோட்டார்மேன் ஹை பிரஷர் குழாயை கொண்டு வந்தான். வொர்க்க்ஷாப்பின் மேஜையில் வைத்து பீயுல் வால்வில் குழாயை பொருத்தினேன் எளிதாக பொருந்தியது சவுகான் சொன்னார். “இப்டியே கொண்டு இஞ்சின்ல மாட்டுவோம்” என. அப்படியே செய்தோம். ஐந்து மணிநேரத்திற்கு மேல் போராடிய வேலை முடிந்தது. வழக்கமாக ஒரு மணி நேரத்தில் முடியவேண்டிய பணி அது.

  அறைக்கு வந்து வாக்கி டாக்கியை ஆன் செய்து காத்திருந்தேன். முதன்மை இஞ்சினியரும்,ஜூனியர் இஞ்சினியர் துர்வேசும் ஊருக்கு செல்ல வேண்டும் அவர்களுக்கான மாற்று பணியாளர்கள் இங்கே வருவார்கள். பத்து மணிக்கு படகு ஒன்று அணைவது கேட்டு டெக்கில் சென்றேன். படகிலிருந்து முதன்மை இஞ்சினியர் கையசைத்தார். சன்னிஜாய் நாட்குறிப்புகளில் வில்பர்ட் எனும் பெயரில் வரும் இரண்டாம் இஞ்சினியர் அங்கேயே பதவி உயர்வு பெற்று முதன்மை இஞ்சினியர் ஆனார். ஐந்து ஆண்டுகளுக்குப்பின் அவரை சந்திக்கிறேன்.



  கப்பலுடன் அருகணைந்த அந்த படகில் உணவு பொருட்களும்,கொஞ்சம் உதிரி பாகங்களும் இருந்தது. அமெரிக்கா செல்லும் முன் கப்பலை ஆய்வு செய்ய பனாமா கப்பல்துறை அதிகாரி ஒருவர் முதலில் ஏணியில் ஏறிவந்தார். அப்போதே முதன்மை அதிகாரி என்னை அலெர்ட் செய்தார் “ஷாகுல் பி ரெடி” என.

 கப்பலின் அனைத்து தீயணைப்பான்களும் வருடாந்திர சோதனைக்கு தேதி நெருங்கியிருந்த்தால் அதை சோதனை செய்யவும்,எங்களது கம்பிரசர் ஒன்றின் பேரிங் உடைந்ததை சரி செய்து பொருத்தியிருந்தோம் அதன் அதிர்வு மற்றும் அலைன்மென்ட் சோதனை செய்ய டெக்னீசியன்கள்,கப்பலில் சேரும் கழிவுகளை கொண்டு செல்ல வேண்டிய கார்பேஜ் குழு என மொத்தம் பதிமூன்று பேர் கப்பலுக்குள் வந்தனர்.

   முதன்மை இஞ்சினியர் ஏணி வழியாக ஏறிவந்து கைகுலுக்கி நலம் விசாரித்தபின் “ஷாகுல் இன்னும் எவ்ளோ நாள் இருக்கு,இங்க பங்கர் இருக்கா,போசன் எங்க ஒரு கயறு கீழ போட்டு எங்க லக்கேஜ தூக்கு” என்றார்.

 “வெல்கம் ஆன் போர்ட்,வீட்ல எல்லாரும் நலம் தானே,நான் செப்டம்பர்ல போலாம்னு இருக்கேன்,லூப் ஆயில் பங்கர் இருபதாயிரம் லிட்டர் மட்டும் இங்க,அமெரிக்கா போன பொறவு தான் பங்கர்” என சொல்லிவிட்டு

“ஸார் பனாமா இன்ஸ்பெக்டர் ஆன் போர்ட் நவ் நான் போறேன்” என விடைபெற்றேன்.

  பனாமா ஆய்வாளர் கப்பலை சுற்றிவரும்முன் நான் காஸ் டிப்பார்ட்மென்ட் பொறுப்பில் இருக்கும் மோட்டார் அறையில் எல்லாம் சரியாக இருப்பதை பார்த்துவிட்டு,கம்பிரசர் அறைக்குள் சென்றேன். கம்பிரசருக்குள் சுற்றிவரும் கிளைக்காலை (glycol) குளிர்விக்கும் குளிர்விப்பானில் உள்ள கடல் நீரின் அழுத்தத்தை காட்டும் ஒரு குழாயின் இணைப்பு என் கண்முன்னே உடைந்து கடல் நீர் அதிக விசையுடன் பீய்ச்சி அடிக்க தொடங்கியது.

  கம்பிரசரில் உள்ள மின்சார ஸ்விட்ச்கள் இருக்கும் (electric panel board) பெட்டியில் தண்ணீர் படாமல் இருக்க வலதுகையால் அமுக்கினேன். அதன் வால்வை இடது கையால் மூடினேன். ஸீ வாட்டர் பம்ப் ஓடிக்கொண்டிருந்ததால் தண்ணீர் வருவது நிற்கவில்லை.கம்பிரசர் அறை தண்ணீரால் நிறைந்து கொண்டிருந்தது. காஸ் இன்ஜினியர் சதாசிவ்வை ரேடியோவில் உடனே கம்பிரசர் அறைக்கு வருமாறு அழைத்தேன்.

சதாசிவ் பார்த்துவிட்டு என்ன செய்ய எனக்கேட்டார். “ஸ்டாப் தி பம்ப்” என்றேன். “ஹொவ் யு ரெக்டிபை திஸ்” என கேட்டான். எனக்கு பதட்டமே இல்லை என்ன செய்ய வேண்டும் என மிக தெளிவாக தெரிந்திருந்தது.

   கப்பலில் ஆய்வாளர்,டெக்னீசியன்கள்,உணவு பொருட்கள்,உதிரி பாகங்கள்,பயர் பைட்டிங் எக்கூப்மென்ட் சர்விஸ் இஞ்சினியர்கள் என காப்டன் முதல் மெஸ்மேன் வரை முழு கப்பலும் உச்சகட்ட வேலையில் இருந்தனர். லூப் ஆயில் பங்கர் வருவது தாமதமானதால் அந்த டென்ஷன் தற்ப்போதைக்கு இல்லை.

  முதன்மை அதிகாரி கம்பிரசர் அறைக்கு வந்தார். “ஷாகுல் டெக்நீசியன்கள் சீப் இஞ்சிநியருடன் மீட்டிங் முடிந்து இன்னும் ஐந்து நிமிடத்தில் இங்கே வறாரங்க,நீ தனியா இத சரி பண்ணீருவியா,காஸ் இஞ்சினியர் டெக்னீசியன் கூட இருக்கணும்” என்றார்.

  கடந்த இருமாதங்களுக்கு முன் அந்த கூலரின் கனெக்க்ஷன் ஒன்றை மாற்றியிருந்தேன். கடல்நீர் ஓடும்  குழாய் ஆதலால் அதில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருத்தியிருந்தார்கள். எனக்கு அதற்கான உதிரி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கிடைக்காததால் இரும்பு கனெக்க்ஷனை மாட்டியிருந்தேன். இரண்டு மாதங்கள் தாக்கு பிடிக்கவில்லை. அதன் பிளாஞ்சை கழட்டி இயந்திர அறைக்கு போய் நெடு நேரம் தேடியபின் பித்தளை கனெக்க்ஷன் ஒன்று கிடைத்தது அதை பொருத்தினேன்.பிளாஞ்சை சரிசெய்தேன். ஊருக்கு செல்லவிருக்கும் முதன்மை இஞ்சினியருடன்,காலையில் அவரை விடுவிக்க வந்த வில்பெர்ட் மீட்டிங்கில் இருந்தனர். “ஷாகுல் கனெக்க்ஷன் கிடைச்சதா” எனக்கேட்டார்.

   கம்பிரசர் அறையில் டெக்னீசியன்கள்  பணியை துவக்கியிருந்தனர். ஜப்பானிலிருந்து புறப்பட்ட பின் உடைந்த பேரிங்கை நாங்கள் சரி செய்து பொருத்திய கம்பிரசரின் அலைன்மெண்டை  லேசர் செலுத்தி சோதனை செய்ய மூன்று பேர் குழு வந்திருந்தது. லேசர் செலுத்தி மிக துல்லியமாக அளவிடும் முறையை நான் இப்போதுதான் நேரில் பார்க்கிறேன்.

 வயதான சீனியர் ஒருவர்,அவருக்கு உதவியாக ஒருவர்,எங்களிடம் ஆங்கிலம் பேச ஒருவர். பன்னிரண்டு மணிக்கு கம்பிரசரை லேசாக தூக்கி அதன் அடியில் சிம்ஸ் (மெல்லிய தகடுகள்) வைக்க வேண்டும் என்றனர் டெக்னீசியன் குழு. அது சாத்தியமேயில்லை காப்டன் இரு முதன்மை இன்ஜினியர்கள்,முதன்மை அதிகாரிகள் வந்து கலந்தாலோசித்து கம்பிரசரை தூக்குவது என முடிவு செய்தனர்.

 அதன் மொத்த எடை ஆறு டன்கள் மூன்று டன் எடையுள்ள மூன்று செயின் பிளாக் அதற்கான சிலிங்கள் அனைத்தும் தயார்செய்ய வேண்டியிருந்தது.வில்பர்ட் “நீங்க முதல்ல சாப்பிடுங்க,பெரிய வேல எனர்ஜி வேண்டும்”என்றார்.

   இரண்டு மணிக்கு மேல் கம்பிரசரை தூக்கும் முயற்சி கைவிடப்பட்டது. முதன்மை இஞ்சினியர் “நாங்கள் மோட்டார் சைடில் தான் பேரிங் மாற்றினோம்,கம்பிரசரை தொடவேயில்லை எனவே மோட்டார் சைடில் இருக்கும் சிம்சை எடுத்துவிட்டால் அலைன்மென்ட் சரியாகிவிடும்” என ஆலோசனை சொன்னார்.

  டெக்னீசியன் குழு அவர்களது நிறுவனத்துடன் போனில் பேசியபின்   முடிவெடுப்பாதாக கூறினர். வில்பர்ட் முதன்மை இஞ்சினியரிடம் வெசல் மேனேஜரிடம் பேச சொன்னார். “குலாலம்பூர்ல இப்ப நாலரை மணி,ஒரு ஆறு மணிக்கு போல கூப்பிடுவோம் என்றார்.

 பனாமாவில் நான்கரை மணியாக இருந்தது. லேசர் அலைன் மென்ட் நிறுவனம் மோட்டார் சைடில் கழட்ட சொல்லவே டெக்னீஷியன்குழு அதை செய்ய தொடங்கினர். அவர்களால் கழட்ட முடியாத போல்ட்டுகளை கழட்ட என் உதவியை கோரினர்.



  லேசரின் அலைமென்ட் செய்ய நீண்ட நேரம் ஆனது. ஏழுமணிக்கு இரவுணவுக்கு சென்று வந்தோம்.கப்பல் நள்ளிரவு  இரண்டு மணிக்கு மேல் கால்வாயை கடக்க புறப்பட வேண்டும். ஆங்கர் பார்ட்டி குழுவில் இருந்த முதன்மைஅதிகாரி,காடட் எங்களுடன் கம்பிரசர் அறையிலிருந்தவர்கள் ஐந்து மணிக்கே சென்றுவிட்டனர். இரவு எட்டுமணிக்கு லூப் ஆயில் தரும் பங்கர் பார்ஜ் கப்பலுடன் அணைந்தது. போசனும்,ஓ,எஸ் மிதுனும் பங்கர் பார்ஜை கட்டிவிட்டு ஓய்வுக்கு சென்றனர்.அலைன்மென்ட் மிக நுணுக்கமாக செய்ய வேண்டியிருந்ததால் இரவு நீண்டுகொண்டே சென்றது. முதன்மை இஞ்சினியர் கப்பலை விட்டு இறங்கும்வரை இயந்திரங்கள் அனைத்திற்கும் அவர்தான் பொறுப்பு. புதிதாய் வந்திருத்த முதன்மை இஞ்சினியர் வில்பர்ட் ஓய்வுக்கு சென்றிருந்தார்.



  லூப் ஆயில் டாக்குமென்ட் பணிகளுக்கிடைய வந்த முதன்மை இஞ்சினியர் அலைன்மென்ட் பணி முடிந்ததும் அழைக்கசொன்னார். இரவு பதினோரு மணிக்குமேல் ப்ரிட்ஜிலிருந்து மூன்றாம் அதிகாரி ஏஞ்சல் அழைத்து பணி எப்போது முடியும் டெக்னீசியன்கள் செல்ல படகை யார் அழைப்பது என கேட்டார்.

  

3rd officer Angel 

வேலை முடியும் நேரத்தை இப்போதைக்கு சொல்ல முடியாது,டெக்னீஷியன்கள்  செல்லும் படகை அவர்களது நிறுவன முகவர் மூலம் வரவழைக்கவிருப்பதை சொன்னேன். படகு கரையிலிருந்து புறப்படும்முன் கண்டிப்பாக சொல்ல சொன்னார்.

   காலையில் தீயணைப்பான்களை சோதனை செய்தவர். டெக்கிலுள்ள தீயணைப்பானை இயக்கும் கார்பன்டை ஆக்சைடு திரவ பாட்டில் ஒன்று காலியாக இருப்பதை கண்டுபிடித்தார். சரியாக இருந்த அனைத்து தீயணைப்பான்களுக்கும் அன்றைய தேதியிட்டு சான்றிதழ் வழங்கியபின் காலியான பாட்டிலை கரைக்கு எடுத்துசென்றார். டெக்னீஷியன்கள் வீட்டிற்கு செல்லும் படகு கரையிலிருந்து புறப்படும்போது அதில் கப்பலுக்கு வரவேண்டிய கார்பன்டை ஆக்சைடு நிறைத்த பாட்டில் வந்துசேர வேண்டும். இல்லையெனில் கப்பல் அதிகாலை புறப்படுவதில் சிக்கலாகும்.

  காலதாமதம் ஏற்பட்டால் கால்வாயை கடக்கும் எங்கள் கப்பலின் வரிசை பின்தள்ளப்பட்டு அதற்காக காப்டன் சரக்கு நிறுவனத்துக்கும்,கப்பல் முதலாளிக்கும்,எங்கள் நிறுவன மேலதிகாரிகளுக்கும் விளக்கமளிக்க வேண்டியிருக்கும்.

அலைன்மென்ட் பணி பன்னிரெண்டரை மணிக்கு முடிந்தது.முதன்மை இஞ்சினியரை அழைத்தோம். மோட்டார் அறையிலும் சோதனை செய்து பார்த்தோம். கம்பிரசரை இயக்கி ஓட விட்டு அதிர்வை அளக்கும் கருவியால் உறுதிசெய்தார்கள். வயதான சீனியர் டெக்னீசியன் என்னை கப்பல் வேலையை விட்டுவிட்டு அவருடன் பணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.


  நள்ளிரவு ஒரு மணிக்கு கம்பிரசரை அரை மணிநேரம் ஓட விட்டு வெப்பம்,அதிர்வு,சப்தம் ஆகியவை கண்காணிக்கபட்டது. அதில் திருப்தியடைந்த முதன்மை இஞ்சினியர் அலைமென்ட் நிறுவனத்துக்கான ஆவணங்களில் கையொப்பமிட்டு கொடுத்தார்.காஸ் இஞ்சினியர் கம்பிரசர் அறையில் இருப்பதாக சொல்லி என்னை ஓய்வுக்கு செல்ல சொன்னார்.காலை பஜர் மட்டும் தொழுதிருந்தேன் பத்து மணிக்குப்பின் அறைக்கே செல்லவில்லை  தொடர்ச்சியாக பதினேழு மணிநேரம் வேலை.முதன்மை இன்ஜினியருக்கும்,காஸ் இன்ஜினியருக்கும் பதினெட்டு மணிநேரத்துக்கும் அதிகமாயிருக்கும்.

   அறைக்கு வந்து குளித்து தொழுதுவிட்டு பிரிட்ஜில் அழைத்தேன். இரண்டாம் அதிகாரி ராஜ்தீப்பிடம் தூங்க இரண்டரை மணிக்கு மேலாகிவிடும் காலை பனாமா கால்வாயை கடக்கும்போது ஸ்டேஷனுக்கு என்னை அழைக்கவேண்டாம் என முதன்மை அதிகாரியிடம் சொல்ல சொன்னேன்.

  படுத்ததும் நல்லுறக்கம். காலை எட்டரைக்கு கண்விழித்து சிறுநீர் கழித்துவிட்டு மீண்டும் சிறிதுநேரம் படுத்திருந்தேன். கப்பல் கால்வாய் கேட்டுககளை தாண்டி கடுன் ஏரியில் சென்றுகொண்டிருந்தது. பத்து மணிக்கு மூன்றாம் அதிகாரி அழைத்து பார்வேர்டில் பணியில் இருக்கும் ஓஎஸ் மிதுனை விடுவிக்க சொன்னார்.

 மிதுன் அதிகாலை நான்கு மணிக்கு வந்திருந்ததை சொன்னார். மூன்றரை மணிக்கு கப்பல் கால்வாயை கடந்து அட்லாண்டிக் கடலை தொட்டது. ஊருக்கு செல்ல வேண்டிய முதன்மை இஞ்சினியரும்,ஜூனியரும் படகில் இறங்க தயாராகியிருந்தனர்.

 சீப் இஞ்சினியர் எட்டுமாதங்களும்,ஜூனியர் ஏழு மாதங்களும் நிறைவு செய்திருந்தனர்.வில்பர்ட் கப்பலின் புதிய சீப் இஞ்சினியர் பொறுப்புக்கு வந்திருந்தார். வில்பர்ட்டுடன் ஐந்தாவது முறையாக பணி செய்கிறேன்.

  இரவில் வழக்கம்போல் பத்து மணிக்கு தான் தூங்க சென்றேன் ஆனால் அதிகாலை நான்கு மணிக்கு எழவில்லை ஐந்தரை மணிக்குமேல் தானாக விழிப்புவரும் வரை தூங்கியிருந்தேன்.

  காலை கூட்டத்தில் முதன்மை அதிகாரி முழுநாள் ஓய்வு என்றார். இயந்திர அறை மீட்டிங் சென்றேன். இஞ்சின் ரூமில் ஓய்வு இல்லை. டெக்கில் விடுமுறை என சொல்லிவிட்டு நான் அறைக்கு வந்துவிட்டேன்.

  முழுநாள் ஓய்வுக்குப்பின் உடல் அடுத்த நாள் பணிக்காக உற்சாகமடைந்திருந்தது.

  மேற்கண்ட நிகழ்வு பனாமாவில் ஜூன் இருபத்தி நான்காம் தேதி நடந்தது.

நாஞ்சில் ஹமீது,

13 – july-2025.

2 comments:

  1. எவ்ளோ வேலைகள். கடும் உடல் உழைப்பைக்கோருபவை. ஒவ்வொரு துறைமுகத்திலும் இந்த செக்கிங் அதிகாரிகள், பணியாளர்கள் எப்போதுமே இருப்பாங்களா? ஒவ்வொரு கப்பல் துறையணையும்போதும் அந்தக்கப்பலில் ஏதாவது பெரிய அளவில் ரிப்பேரிங் வேலைகள் கப்பல் பணியாளர்களால் நடுவில் செய்யப்பட்டிருந்தால் அதை வந்து பரிசோதித்து சான்றிதழ் தரவேண்டியிருப்பதால் கேட்கிறேன். ஆனால் ஒரு சின்ன விரிசலும் பெரிய தவறைக்கொண்டுவந்துவிடும். அதனால் எல்லாம் துல்லியமாய் மிகச்சரியாய் இருக்கவேண்டியது அவசியம்தான். நீங்க இதுவரை பார்த்த துறைமுகங்களில் எந்தத் துறைமுகத்தில் ரொம்பக் கெடுபிடியாய் இல்லாமல் கொஞ்சம் மேம்போக்காய் இருப்பாங்க? மூன்று மாதத்திற்குள் நான்காம் முறையாய் பனாமா கடக்கிறீங்க. டோல்கேட் தாண்டிபோறமாதிரி அவ்ளோ எளிமையாயிடுச்சு உங்களுக்கு.🤣🤣

    டெய்சி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் டெய்சி
      சில வேலைகள்
      செய்து முடித்தால் சர்வேயர் வந்து பார்த்து சான்றிதழ் பெறுவது கட்டாயம்.

      உதாரணமாக கொரியாவில் எங்கள் கப்பலுக்கு எண்ணெய் தர வந்த பங்கர் பார்ஜ் தந்த ஒரு செல்ல முத்தம் கப்பலின் பக்கவாட்டு பிளேட் உட்பக்கமாக சப்பி போயிருந்ததை
      ஒரு பதிவில் சொல்லியிருந்தேன்.
      அன்று பங்கர் முடிந்து கப்பல் நகராமல் கப்பலின் இடிபட்ட பிளேட்
      கீறல் அல்லது ஓட்டை விழுந்ததா என அதனுடன் இணைந்திருந்த தொட்டியை திறந்து சோதனை செய்தோம்.
      பக்கவாட்டு பிளேட் கொஞ்சம் வளைந்து போனது கீறலோ,ஓட்டையோ இல்லாததால் ஒரு நாள் தாமதத்திற்கு பின் கப்பலை நகர்த்தினோம்.
      அதை சர்வேயர் வந்து ஆய்வு செய்து பின்னர் சான்றிதழ் அளித்தார்.
      அவ்வாறு இல்லையெனில்
      வேறு ஏதாவது காரணத்தால் விபத்து ஏற்பட்டு காப்பீடு கோரும்போது
      இது தெரியவந்தால் காப்பீடு தொகை கிடைக்காமல் போக வாய்ப்புண்டு.

      துறைமுகங்களில் வரும் அதிகாரிகளை பொறுத்தது அது.
      கெடுபிடி குறைவு என எங்கும் இல்லை இப்போது.

      இதுவரை பனாமா கால்வாயை 20 முறை கடந்த விட்டேன்

      நாஞ்சில் ஹமீது.

      Delete