Wednesday, 16 July 2025

இருபது ஆண்டு நிறைவு 38 வெப்பம் மிகுந்த இஞ்சின் அறை

 



எனெர்ஜி ஒர்பஸ் பகுதி 2

   கார் கேரியர் வகை கப்பல்களில் கப்பலுக்கு வேண்டிய எரிஎண்ணெய் தொட்டிகள் கார்கோ ஹோல்டின் கீழ் பகுதிகளில் பலாஸ்ட் தொட்டிகளை ஒட்டி இருக்கும்.

 எல்பிஜி கப்பலின் சரக்கு தொட்டிகளின் அமைப்பு கப்பலின் பக்கவாட்டில் (போர்ட் அண்ட் ஸ்டார்போர்ட் சைட்) தண்ணீரை தேக்கும் பலாஸ்ட் தொட்டிகள் அதையொட்டி ஹோல்ட் ஸ்பேஸ் எனப்படும் (inert gas நிரப்பி வைக்கபட்டிருக்கும் ) தொட்டிகள்,நடுவில் எல்பிஜி திரவத்தை நிரப்பும் கார்கோ தொட்டிகள் இருக்கிறது. இந்த வடிவ அமைப்பினால் பங்கர் டாங்க்ஸ் எனப்படும் எரிஎண்ணெய் தொட்டிகள் இயந்திர அறையை சுற்றி இருக்கிறது. அது எப்போதும் ஐம்பது டிகிரி வெப்பநிலையில் பாதுகாக்கவேண்டியது இல்லையெனில் அது உறைந்து பின்னர் எப்போதும் உபயோகிக்காமல் ஆகிவிடும்.

   இயந்திர அறையின்  பீயுரி பயர் இயந்திரங்கள் இருக்கும் இடம் அதிக வெப்பமாக இருக்கும் பகுதியாகும். அது தனியறையாக பாதுகப்பப்படும்.இங்கே அந்த அமைப்பும் இல்லை. மிகச்சிறிய  இயந்திர அறை ஆகவே கடுமையான வெப்பம் எப்போதும்.

கப்பலின் சரக்கு நிறைக்கும் டெர்மினல்கள் பெரும்பாலும் அரபு வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா,கத்தார்,ஐக்கிய அமீரகம்,குவைத் கோடையில் அங்கு பொசுக்கிவிடும்  வெப்பம் ஐம்பத்திரண்டு டிகிரிவரை அதிகபட்சமாக.நான் கப்பலில் இணைந்த பதினைந்தாவது நாளில் உக்ரைன் நாட்டை சார்ந்த காப்டன் விடுமுறையில் செல்ல புதிதாக வந்த இந்திய இளம் காப்டன் லேசாக மரை கழண்டவர். ராஜா எப்படியோ அப்படி நாடு என்பது போல அவர் இருந்த மூன்று மாதங்களும் கப்பலின் சூழல் கடினமானதகாக இருந்தது. எல்பிஜி கப்பலில் இருக்கும் இந்தியர்களின் அரசியல் விளையாட்டு கணக்குகள் எனக்கு பிடிபடாமல் வந்த துன்பங்கள்.

   கார் கேரியர் வகை கப்பல்களில் இருக்கும்போது எல்பிஜி கப்பலின் உணவுவகைகளை மெச்சுவார்கள். இந்திய காப்டன் சிங்கப்பூரில் கிடைத்த வாய்ப்பில் உணவு பொருட்களை வாங்காமல் பதினைந்து நாட்களில் மீண்டும் திரும்பி வருகையில் வாங்கலாம் என தள்ளிபோட காப்டனின் கணக்கு தப்பாகி கப்பல் இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு திரும்பியது. இந்தோனேசியாவில் இந்திய காப்டன் ஊருக்கு செல்ல ரஷ்யாவை சார்ந்தவர் வந்தார்.

   பிலிப்பினோ பணியாளர்கள் அதிகமாக சாப்பிடும் மாட்டிறைச்சி,ஜூஸ் வகைகள் காலியாகிவிட்டது. அரிசியும்,மீனும் தேவையான அளவு இருந்தது.பெரும்பாலும் தினமும் சோள மாவு தடவி எண்ணையில் பொரித்த கேட் பிஷ் இருபது நாட்களுக்கு பரிமாறப்பட்டது. ஆஸ்திரேலியாவின் பயோந்தன் துறைமுகத்தில் ஆய்வுக்கு வந்த அம்சா (AMSA –AUSTRLITAN MARINE SAFETY AUTHORITY ) ஆய்வாளர் உணவு பொருட்கள் இருக்கும் குளிரூட்டி அறை காலியாக இருப்பதை கண்டு உணவு பொருட்களை நிறைக்காமல் கப்பல் துறைமுகத்திலிருந்து புறப்படுவதை தடுத்துவிட்டார். சமையல்காரர்,மோட்டார்மேன்,காடட் ,பத்தி சாபின் தலைமையில் சூப்பர் மார்கெட்டுக்கு சென்று காய்கறி மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்கி வர மூவாயிரம் டாலர் பணத்தை கொடுத்தனுப்பினார் காப்டன். கப்பலின் சரக்கு நிறைக்கும் பணி முடியும் முன் வந்து சேர்ந்தனர்.

  கப்பலில் ஏரி எண்ணை பயண நாட்களைவிட  பதினைந்து நாட்களுக்காவது அதிகமாக இருக்கவேண்டும். உணவு பொருட்கள் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு அதிகமாக இருக்க வேண்டியது அவசியம்.எதிர்பாராமல் கப்பலின் பயண நாட்கள் நீண்டுவிடலாம் அல்லது கரையணையாமல் நங்கூரம் பாய்ச்சி நிற்க நேரிடலாம். கப்பலில் பட்டினி இருக்க வேண்டிய கட்டாயம் வராது. அரிசியும்,பருப்பும்,மைனஸ் பதினெட்டு டிகிரியில் பாதுகாக்கப்பட்ட காய்கறிகளும் கொஞ்சமாவது இருக்கும்.




   பத்து ஆண்டுகளுக்கு மேல் கார் ஏற்றும் கப்பலில் பணியில் இருந்தும் சீனாவுக்கு வந்ததே இல்லை. இம்முறை சரக்கு இறக்க சீனாவின் குவான்சு துறைமுகம் வந்தபோது வெளியில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சீனாவை பற்றி பொதுவாக சொல்லபடுவது தரமற்ற பொருட்களுக்கு உதராணம் சைனா என. நேர்த்தியான,விரிவான சாலைகள்,பொது இடங்களின் சுத்தம் ஆகியவற்றில் ஐரோப்பாவுக்கு இணையாக இருக்கிறது சீனா. இன்னும் வளர்ந்துகொண்டே இருக்கிறது.

சீனாவில் பனை பொருட்கள்



  இயந்திர அறையில் எனக்கு வேலையில் கார் கேரியர் கப்பலை போலவே தான் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் எல்பிஜி கப்பலின் கடும் வெப்பத்தை என்னால் தாங்கவே இயலவில்லை  உரிய நேரத்தில் உணவுபொருட்களை வாங்க தவறியது மற்றும் ரஷ்ய காப்டன் உணவு வழங்குவதில் காட்டிய கஞ்சத்தனம் ஆகியவை திரும்பவும் கார் ஏற்றும் கப்பலுக்கே போய்விட வேண்டுமென முடிவு செய்தேன்.



  பத்தி சாப் ஆந்திராவின் மெண்டோசா ராஜு கொலஸ்ட்ராலுக்கு மாத்திரை சாப்பிட்டுகொண்டிருந்தார். என்னிடம் தியானமும்,உடற்பயிற்சியும் கற்றுகொள்ள விரும்பினார். இங்கே பத்துநாட்கள் அடிப்படை பயிற்சியை நடத்தி அவருக்கு  தீட்சை வழங்கி,உடற்பயிற்சியும் கற்றுகொடுத்தேன். பயிற்சி முடிந்தபின் அதிகாலை ஆறுமணிக்கு அவரது அறையில் விரிப்பை விரித்து காத்திருப்பார். ஊருக்கு செல்லும் வரை தினமும் ஒன்றாக பயிற்சிகளை செய்தோம்.



  ஜப்பானிலிருந்து சவுதி அரேபியாவின் யான்பு துறைமுகம் செல்லும் வழி சோமாலிய கொள்ளையர்கள் உலவும் பாதை கப்பலை கடத்தி செல்லும் வாய்ப்புகள் மிக அதிகம். எனவே அந்த பாதையில் பயணிக்கையில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இலங்கையிலிருந்து கப்பலுக்கு வந்ததனர். கல்ப் ஆப் எடன் பகுதி ஹை ரிஸ்க் ஏரியா என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதில் பயணிக்கும் மூன்று நாட்களும் இரவும் பகலும் முறைவைத்து துப்பாகிகளுடன் வீர்ர்கள் காவல் காத்து பத்திரமாக கப்பலை யான்பு துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர்.

நான் பணியில் இணையும்போது முதன்மை அதிகாரியாக இருந்த பஞ்சாபின் சவுத்ரி விடுமுறைக்கு சென்றுவிட்டு காப்டனாக பதவி உயர்வு பெற்று இலங்கையிலிருந்து கப்பலுக்கு வந்திருந்தார். யான்பூவில் ரஷ்யகாப்டன் ஊருக்கு செல்ல அவர் கப்பலின் தலவைராக பொறுப்பேற்பார்.யான்பூவில் ரஷ்ய காப்டனை அழைத்து செல்லும் படகு வருவதில் குழப்பம் ஏற்பட்டு படகு வரமாலே போய்விட்டது.ரஷ்ய காப்டன் ஊருக்கு செல்ல முடியவில்லை பெட்டியுடன் நீண்ட நேரம் டெக்கில் காத்திருந்தபின் திரும்பி கப்பலுக்கு வந்தார். புதிதாய் காப்டனாக பொறுப்பேற்றவர் கப்பலின் தலைவனாக வழிநடத்த ரஷ்ய காப்டன் பயணியாக அமர்ந்திருந்தார். கப்பல் தனது அடுத்த பயணத்தை தொடங்கியிருந்தது.  எனக்கு ஐந்தரை மாதம் ஆகியிருந்தது. சமையல்காரர் ஊருக்கு செல்ல வேண்டும் என்னுடன் இணைந்து விடுமுறை கடிதம் கொட்டுப்பாயா எனக்கேட்டார்.

   “இலங்கையின் காலேயில் பாதுகாப்பு வீரர்கள் இறங்கவேண்டியுளது அதனுடன் ரஷ்ய காப்டனும் செல்வார். இப்போது கடிதம் குடுத்தால் நாமும் இறங்கிவிடலாம் எனச்சொன்னார்.

   எங்களது விடுமுறை உறுதியாகி ஜப்பானை நோக்கி சென்றுகொண்டிருந்த கப்பல் இலங்கைக்கு அருகில் செல்லும்போது கப்பலின் வேகத்தை குறைத்து காவலர்கள் இறங்கும்போது நானும்,சமையல்காரரும் இறங்கினோம்காலே கொழும்பு

இலங்கையின் காலேவில் இறங்கி ஒருநாள் கொழும்புவில் தங்கிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். வாழ்வில் முதல்முறையாக கடினமில்லாத விமான பயணம். இது குறித்து விரிவாக எழுதியிருக்கிறேன்.சதாமின் அரண்மனையில்

  இந்த கப்பலில் இருக்கும்போது என பிளாக்கில் பதிவுகள் எழுதி வலையேற்ற தொடங்கினேன். சதாமின் அரண்மனையில் என எழுதிய பதிவை கண்ட மூத்த சகோதரி முனைவர் லோகமாதேவி ஈராக் அனுபவங்களை முழுமையாக எழுதசொன்னார்.



எனது   வலைப்பூவில் பதினாறு அத்தியாயங்கள்  எழுதியபின் ஈரோடு வக்கீல் கிருஷ்ணன் அவர்களுக்கு அனுப்பினேன். அக்டோபர் மாதம் ஆசான ஜெயமோகனின் தளத்தை திறந்தபோது என் படம் அதிலிருப்பதை கண்டன்.

நாஞ்சில் ஹமீது,

16july2025.






     சீனாவில் எடுத்த புகைப்படங்கள் 


No comments:

Post a Comment