கேரளாவின் காசர்கோடு உடுமாவை சார்ந்த பிராசாந்த் ஜூன் மாதம் பதினான்காம் தேதி கப்பலில் இருக்கும்போது இறந்துவிட்டார். கப்பல் நிறுவனம் பிசாந்தின் மனைவிக்கு கணவர் இறந்த தகவலை போனில் சொல்லியது.
ஜப்பானிலிருந்து அமெரிக்காவை நோக்கி பயணித்து கொண்டிருந்த Tyback Explorer எனும் எல்பிஜி கப்பலில் மோட்டார்மேன் பிரசாந்த பணியில் இணைந்து இரு மாதங்கள் ஆகியிருந்தது. பசுபிக்கடலில் இருபது நாட்களுக்கும் மேல் பயணித்து பனாமா கால்வாயை கடந்து அமெரிக்கா செல்லும் ஒருமாத பயணத்தை துவங்கி ஆறு நாட்களே ஆகியிருந்தது.
காலையில் பிராசாந்த பணிக்கு வரவில்லை அறைக்கு போனில் அழைத்தபோது பதிலில்லாததால் சக மோட்டார்மேனை இரண்டாம் இஞ்சினியர் அறைக்கு சென்று பார்த்துவரசொல்ல அறைக்கதவு உட்பக்கமாக பூட்டியிருந்தது. முதன்மை இஞ்சினியருக்கு தகவல் சொல்லி அவர் தனது மாஸ்டர் கீயால் அறைகதவை திறந்தபோது நாற்காலியில் அமர்ந்த நிலையில் இறந்துபோயிருந்தார். காப்டனுக்கு தகவல் சொல்லி அவர் இறந்ததை உறுதிசெய்து கப்பல் நிறுவனத்துக்கும்,கப்பல் முதலாளிக்கும் தகவல்கள் அனுப்பபட்டது. கப்பலின் பயணபாதையை லேசாக திருப்பி அமெரிக்காவிற்கு சொந்தமான ஹவாய் தீவிற்கு கப்பல் சென்றது. கப்பலின் உணவுபொருட்கள் வைக்கும் அறையில் பிரசாந்தின் உடலை வைத்து பாதுகாக்கப்பட்டது. இது மே மாதம் பதினான்காம் தேதி.
மே மாதம் பதினாறாம் தேதி ஹவாய் தீவின் ஹோனலுலுவில் கப்பலை நிறுத்தி உடலை அங்குள்ள அதிகாரிகளிடம் ஒப்படைத்தார் காப்டன்.
பிரசாந்த் என்னுடன் 2013 ஆண்டு ஹார்மொனி ஏஸ் கப்பலில் மோட்டார்மேனாக இருந்தார். அவரது தந்தை கிருஷ்ணன் கப்பலில் போசனாக இருந்து பணி ஓய்வுபெற்றவர்.அப்பாவும்,மகனும் லிபர்ட்டி எனும் கப்பலில் ஒரு முறை பணி செய்ததாக சொன்னார்.
பிக்சிஸ் லீடர் கப்பலில் என்னுடன் சமையல்காரராக இருந்த ராஜன் போசன் கிருஷ்ணனின் தம்பி. 2019 நான் பணியிலிருந்த யூயோ கப்பலிலும் பிரசாந்த் என்னுடன் இருந்தார். முப்பத்தி ஒன்பது வயதான பிராசந்த்,உடற்பயிற்சி செய்வதோடு,உணவில் நல்ல கவனமாக இருப்பார்.தேவையில்லாத எதையும் சாப்பிடமாட்டார்.
ஹோனலுலு மருத்துவர் அளித்த உடல் கூறாய்வு அறிகையின்படி (mild attack first time)ஹார்ட் அட்டாக். அறையில் தனிமையில் இருந்தபோது ஏற்பட்டதால் முதல் அட்டாக்கிலேயே உயிரிழந்துள்ளார். அருகில் யாராவது இருந்திருந்தால் பிழைத்திருபாரோ யாரறிவார்? எல்லாம் பிரபஞ்ச விதிப்படி.
கப்பலில் ஹார்ட் அட்டாக் ஆகி முதலுதவிக்குப்பின் ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உயிர்பிழைத்தவர்கள் உண்டு.அப்படி ஒரு சீப் இஞ்சினியருடன் நானும்,பிராசந்தும் வேலை பார்த்துள்ளோம்.ஆம்புலன்ஸ் ஹெலிக்காப்டர் அதிக பட்சமாக இருநூறு மைல்கள் வரையே வந்து செல்லும். பசுபிக் கடலில் அந்த வாய்ப்பும் இல்லை.
பிரசாந்தின் சித்தப்பா ராஜன் என்னுடன் தொடர்பில் இருந்ததால் அவரிடம் விபரங்களை கேட்டுக்கொண்டே இருந்தேன். நீண்ட ஆவணபரிமாற்றங்கள் இந்திய அமெரிக்க தூதரங்கள் வழியாக கப்பல் நிறுவனம் இரு நாடுகளின் முகவர்கள் மூலமாக செய்துகொண்டிருந்தது.அதன் பின் இறுதியாக ஹோனலுலு மருத்துவமனையில் பாதுகப்பட்டிருந்த பிரசாந்தின் உடல் தனது இறுதி பயணத்தை தொடங்கியதாக ராஜன் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.
Message from rajan
நாற்பத்தியைந்து நாட்களுக்குப்பின் கடந்த திங்களன்று அவரது உடல் (30-june 2025)குடும்பத்தினரிடம் ஒப்படைக்கபட்டது. இறுதி சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்தார்கள்.பிரசாந்த் இறந்த செய்தியை கோவாவை சார்ந்த நண்பன் நந்தகுமார் தான் முதலில் எனக்கு சொன்னார். ஹார்மொனி ஏஸில் பிரசாந்துடன் அவரும் மோட்டார்மேனாக இருந்தவர்.
பிராசந்துக்கு மனைவியும் இரு மகள்களும் இருக்கிறார்கள்.
பிராசந்தின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்தனையும்.அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன்.
நாஞ்சில் ஹமீது.
06 july 2025.
No comments:
Post a Comment