Thursday, 24 July 2025

இருபது ஆண்டு நிறைவு 40 சிங்கப்பூர் கெப்பல் ஷிப் யார்டில்

 



சன்னி கிரீன் 2017




     காலை ஒன்பது மணிக்கு வீட்டருகிலுள்ள டவுண் ரயில்நிலையத்திலிருந்து ரயிலில் கொச்சிக்கு பயணிக்கையில் அருகிலிருந்த சக பயணி இங்கிலாந்து நாட்டை சார்ந்த தாம்சன். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றபின்  சுற்றுலா பயணியாக உலகை வருகிறார். கடந்த ஐந்து நாட்களாக கன்னியாகுமரியில் இருந்ததாக சொன்னார். ஒரு ஊரில் தங்கியிருந்து கால்நடையாக சுற்றிப்பார்த்தால்தான்   அவ்வூரையும் அங்குள்ள கலாசாரத்தையும் முழுமையாக அறியமுடியும் என உறுதியாக சொன்னார்.




 கன்னியாகுமரி விடுதியில் தங்கியிருந்த அவர் அதிகாலை ஐந்துமணிக்கு எழுந்து பதினைந்து கிலோமீட்டர் வரை நடந்தே ஊர் சுற்றியதாக சொன்னார்.கையில் ஆங்கில மொழிபெயர்ப்பு திருக்குறள் இருந்தது.ஆலப்புழையில் இறங்கி சென்றார்.அங்கும் ஐந்து நாட்கள் தங்கபோவதாக சொன்னார் அறுபது வயதை தாண்டிய தாம்சன்.

singapore airport



   எனக்கு கொச்சியிலிருந்து சிங்கை செல்லும் விமானம். நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு பத்து நிமிடங்கள் இருக்கையில் விமானம் மேலெழுந்து வானில் பறக்கத்தொடங்கியது அதுதான் கொச்சியிலிருந்து புறப்படும் கடைசி விமானம்.நள்ளிரவு விமான பயணத்தில் அவர்கள் தரும் உணவுக்காக காத்திருந்து உணவுண்டபின் இடுப்பு பட்டையை இறுக்கி சாய்ந்து அமர்ந்தால் இறங்க வேண்டிய இடம் வந்துவிடும்.இம்முறை உறுதியாக உணவு வேண்டாம் என சொல்லிவிட்டு கண்மூடி அமர்ந்த சிறிது நேரத்தில் நல்லுறக்கம்.



  ஐந்துமணிநேர பயணத்துக்குப்பின் அதிகாலை ஏழு மணிக்கு சிங்கப்பூரில் பத்திரமாக இறக்கினார் பைலட். விமான நிலைய வாயிலில் என் பெயர் எழுதிய காகிதத்துடன் நின்ற காரோட்டியை பிடித்துக்கொண்டேன். சன்னி கிரீன் கப்பல் சிங்கப்பூர் ட்ரை டாக்கில் நின்றுகொண்டிருந்தது.

கெப்பல் ஷிப் யார்ட் 


  இருபத்தைந்து வயதான கப்பல் ஏழுநாட்களுக்கு முன் ட்ரை டாக்கில் கட்டபட்டிருந்தது. இஞ்சின் பிட்டர்,மோட்டார்மேன்,எபி மூன்றாம் அதிகாரி என ஐந்துபேர் புதிதாக பணியில் சேர்ந்தோம். மும்பையிலிருந்த வந்த பணியாளர்கள் வேறு விமானத்தில் வந்ததால் மதியத்திற்கு மேல் வந்தனர்.

 ஊருக்கு செல்பவர்கள் மாலையில் புறப்பட்டு சென்றனர்.மோட்டார்மேன் கோவாவை சார்ந்த காசியானோ 2007 இல் என்னுடன் ஸ்டேயிட்ஸ் வென்சர் கப்பலில் இருந்தவர். சன்னி கிரீன்  முதல் முதலாக எங்கள் நிறுவனத்தில்  வந்த எல்பிஜி கப்பல் என்றார்கள். இருபத்தியைந்து ஆண்டுகள் ஆன பழைய கப்பல் ஆதலால் நிறைய பணிகள் நடந்துகொண்டிருந்தது. சிங்கை கெப்பல் ஷிப் ரிப்பேர் யார்டில் டெல்டா மாவட்டத்தை சார்ந்த நிறைய தமிழர்கள் இருந்ததனர். சன்னி கிரீனுக்கான ப்ராஜெக்ட் மேனேஜர் சென்னையை சார்ந்த இஞ்சினியர் ராஜா.

 கப்பலில் மோடார்மேனாக இருந்த சீனியர் ராம ராவ் ஆந்திராவின் சிர்க்காகுளத்தை சார்ந்தவர்.போசன் குருமூர்ர்தியை தெரியுமா எனக்கேட்டேன். அடுத்த தெருவில் வசிப்பதாக சொன்னார். சிங்கை ட்ரை டாக்கில் இருக்கையில் மாலை ஆறுமணி வரை வேலை. அதன் பின் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் வெளியில் சென்றேன். கெப்பல் ஷிப் யார்டின் வாயிலிலேயே பேருந்து நிறுத்தம்.

நண்பர் மணியுடன் மீன் தலைக்கறி



  இங்கே கிடைக்கும் பயண அட்டையை பேருந்து மற்றும் ரயிலுக்கும் பயன்படுத்திகொள்ளும் வசதி உள்ளது.பொது போக்குவரத்தை சிங்கப்பூர் ரொம்பவே ஊக்குவிக்கிறது. கார் வைத்திருக்கவேண்டுமெனில் குடியிருக்கும் அப்பார்ட்மெண்டின் பார்க்கின் வசதி கடிதம் கண்டிப்பாக வேண்டும். கார்களுக்கு இரண்டு வகையான ரோட் டாக்ஸ் இருக்கிறது இங்கே. குறைவான கட்டணம் செலுத்தி இரவில் மட்டும் ஓடும் வாகனங்களின்  நம்பர் பிளேட் சிவப்பு  வண்ணத்திலும்,பகலில் ஓடும் வாகனங்களுக்கு கருப்புநிற நம்பர் பிளேட்டும் உள்ளது.



https://www.drivelah.sg/blog/demystifying-coe-everything-you-need-to-know-about-owning-a-car-in-singapore-clgw79tcq827003tpbuo1mz8gb/#coe-prices

 

கடுமையான சாலையை வரியை விதித்து கார் வாங்காதே பொது போக்குவரத்தை உபயோகி என கட்டாயபடுத்துகிறது அரசு. சிங்கையில் வசதியான பொது போக்குவரத்து உள்ளது.

கிருஷ்ணமூர்த்தியுடன் 


   சிங்கையில் இருக்கையில் ஒவ்வொரு இரண்டாம் நாளும் வெளியில் சென்றேன். போக்குவரத்து அட்டை கையில் இருந்தது. பஸ்ஸில் ஏறி ரயிலில் ஏறி இறங்கி ஜூராங் கிழக்கில் இருக்கும் மணியின் இல்லம் சென்று உரையாடி அங்கேயே இரவுறங்கிவிட்டு அதிகாலை மணி தனது காரில் கெப்பல் ஷிப் யார்டில் இறக்கிவிட்டார்.

விஜயகுமாருடன் 

  ஈராக் போர்முனையில் உடன் பணியில் இருந்த விஜயகுமார் இங்கே ரெஸ்டாரண்ட் மேனேஜராக இருக்கிறான் என அறிந்து அவனையும் போய்பார்த்தேன்.எனது மணவாளகுறிச்சி கிராமத்தில் பாபூஜி பள்ளியில் உடன் பயின்ற கிருஷ்ணமூர்த்தியை ஒரு நாள் சென்று சந்தித்தேன்.

 நான் வந்தபின்  கப்பல் எட்டு நாட்கள் சிங்கை கெப்பல் ஷிப் யார்டில் நின்றது. மொத்தம் பதினைந்து நாட்களில் பணி முடிந்து கப்பல் புறப்பட்டது.பத்தி சாப் அசோக்கின் மனைவி மற்றும் இரண்டாம் இஞ்சினியர் அபிஷேக் பானர்ஜியின் மனைவி கப்பலில் இருந்தார்கள்.கெப்பல் ஷிப் யார்டை விட்டு கப்பல் புறப்படும்போது பயணிகளாக இருந்த இரு பெண்களும்வீட்டுக்கு சென்றனர்.

எல்பிஜி கப்பல் ட்ரை டாக்கில் பழுதுபார்


க்கும் பணிக்காக  வரும்போது அதன் சரக்கு தொட்டிகளில் இருக்கும் மிகக்குறைந்த எல்பிஜி திரவம் சூடாக்கபட்டு ஆவியாக மாற்றி வெளியேற்றப்படும். அதில்காற்று நிறைக்கப்பட்டு கப்பலில் நடக்கும் வெல்டிங் வேலைகளுக்கு உகந்தமுறையில் பாதுகாப்பாக வைத்திருப்போம்.

  கப்பல் ட்ரை டாக்கை விட்டபின் சரக்கு ஏற்றுவதற்கு வசதியாக சரக்கு தொட்டிகளை குளிர்விக்கவேண்டும். சரக்கு தொட்டிகளில் inert gas எனப்படும் கார்பன் மோனாக்சைடு செலுத்தப்பட்டு ஆக்சிஜன்முழுமையாக வெளியேறிய பின் எல்பிஜி வாயு செலுத்தபட்டு inert gas முழுமையாக வெளியேறியபின் எல்பிஜி வாயுவால் சரக்கு தொட்டிகள் குளிர்விக்கபட்டு.மிக குறைந்த அளவில் எல்பிஜி திரவம் நிறைக்கவேண்டும்.


   கப்பல் கெப்பல் ட்ரை டாக்கிலிருந்து வெளியேறி கிழக்காக திரும்பிய இந்தோனேசியாவின் நிபா கடலில் இருப்பதகாக வரைபடம் காட்டியது.அங்கேயே நங்கூரமிட்டு முன்னூற்றியைம்பது டன் ப்ரோப்பேன் திரவம் நிறைக்க முப்பத்தியாறு மணிநேரம் ஆகியது.அந்த பணிக்காக மூத்த காப்டன் புனித் சைனி வந்திருந்தார்.கப்பல் சரக்கு நிறைப்பதற்காக சவூதிஅரேபியாவின் ரஸ்தநூறா துறைமுகம் நோக்கி பயணிக்க தொடங்கியது.


  ட்ரை டாக்கில் இருந்த முதன்மை இஞ்சினியர் மணீஷ் ஊருக்கு செல்ல அவருக்கு பதிலாக இலங்கையை சார்ந்த முதன்மை இஞ்சினியர் வந்திருந்தார். மிக பழைய கப்பல் ஆதலால் டெக்கில் ரிப்பேர் டீம் பிட்டராக வினோத் குப்தா மற்றும் இரு டிரயினிங் ஓஎஸ் என மொத்தம் இருபத்தி ஏழுபேர் இருந்தோம். கப்பல் புறப்பட்ட ஏழாம் நாள் அதிகாலை அறையிலிருந்து வெளியேவந்தபோது சூரியன் மேற்கில் உதித்திருந்தை கண்டு மண்டை குழம்பி ப்ரிட்ஜில் சென்றேன்.

  கப்பலின் பயண பாதை மாறி ஆப்ரிக்கா செல்லும் உத்தரவு வந்ததால் இரவிலேயே கப்பலை திருப்பியதாக சொன்னார் மூன்றாம் அதிகாரி ரோலாண்டோ. கப்பல் மேற்கு ஆப்ரிக்காவின் கானா அருகிலுள்ள டோகோ கடற்கரையிலிருந்து ஏழு மைல் தொலைவில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது. மிக அருகிலேயே கடல் கொள்ளையர்கள் கப்பலுக்குள் புகுந்து எங்களின் உடைமைகள் மற்றும் கப்பலின் பொருட்களை திருடிசெல்லும் வாய்ப்பு மிக அதிகமுள்ள பகுதி அது. டோகோவின் கடல் எல்லைக்குள் அதாவது கரையிலிருந்து பன்னிரெண்டு மைல் தொலைவில் நிறுத்தப்படும் கப்பல்களுக்கு டோகோ கடற்ப்படை பாதுகாப்பு வழங்கும் எனும் உறுதியிருந்ததால் அங்கே சில கப்பல்கள் நிருத்தபட்டிருந்தது.


  அங்கு நிலவும் மித சீதோஷ்ண பருவநிலை காரணமாக எல்பிஜி கப்பல்கள் அங்கு நிறுத்திவைக்கப்பட்டு வர்த்தகம் நடக்க அந்நாடு அனுமதி வழங்குகிறது.அதனால் அந்நாட்டுக்கு கிடைக்கும் வருமானம் தான் மிக முக்கிய காரணம்.டோகோ கடற்ப்படை கப்பல்களுடன் திமிங்கலங்களும் ஓய்வின்றி இருபத்தி நான்கு மணிநேரமும் ரோந்து சுற்றிகொண்டிருந்ததால். நாங்கள் கப்பலில் நிம்மதியாக இருந்தோம்.

 நாஞ்சில் ஹமீது,

24 july 2025.

sunitashahul@gmail.com

பின் குறிப்பு.  இரண்டாம் இன்ஜினியரின் இடுப்பு பகுதியில் சதை உடைவு ஏற்பட்டு அமரவோ,நடக்கவோ இயலாமல் கடும் வலியுடன் அவதிபடுகிறார் சனிக்கிழமை மாலை முதல். எனக்கு எழுத கிடைக்கும் நேரத்தில் அவருக்கு சில உதவிகள் செய்யவேண்டியிருப்பதால். கடந்த ஞாயிறுக்குப்பின் என்னால் எழுதவே முடியவில்லை நேரமின்மை. இரண்டாம் இஞ்சினியர் நலமடையை இன்னும் சில நாட்கள் ஆகும். கப்பலில் உடல் முடியாமல் போனால் அறையில் அமருவது மிக கடினம். அதிலும் அமரவோ,நிற்கவோ முடியாமல் ஆனால் நிலைமை இன்னும் கஷ்டம். அடுத்த மாதம் ஐந்தாம் தேதி துறைமுகம் சென்றபின்தான் அவரை மருத்துவ மனைக்கு அனுப்பி முறையான சிகிச்சை அளிக்க முடியும். அதுவரை மருத்துவரின் ஆலோசனைப்படி கப்பலில் உள்ள மருந்துகளை கொடுத்து அவர் மனம் தளராமல் பார்த்துகொள்ளும் கடமையில் உள்ளோம்.

  இருபது ஆண்டு நிறைவு தொடர் சிறு தொய்வு ஏற்பட காரணம்.

No comments:

Post a Comment