Wednesday, 16 April 2025

7 கத்தாரில்

 என் எஸ் பிரண்டியர் நாட்குறிப்புகள் 2025

  


     கப்பல் காரன் டைரி இரண்டாயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதியாயிற்று இருந்தும் புது தகவல்கள் இருக்கின்றன  என வாசகர்கள் சொல்கிறார்கள்.  இந்த கப்பலில் வந்தபின் அன்றாட நாட்குறிப்புகள் இனியும் தேவையில்லை என எண்ணினேன். நண்பர் கணேஷ் இல்லை ஷாகுல்  தினசரி நாட்குறிப்புகள் போலல்லாமல் வாரம் ஒரு முறையாவது  தொகுத்து எழுதுமாறு வேண்டினார். 

   என் எஸ் பிரண்டியர் நாட்குறிப்புகளின் கடைசி பதிவு மார்ச் ஒன்றாம் தேதி எழுதியிருக்கிறேன். கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக ரமலான் நோன்பு பதிவுகள்,இதுல் பிதர் மற்றும் இதயம் போன்ற பதிவுகளை எழுதியிருக்கிறேன்.

  கப்பல் காரன் டைரி யாருக்காக என எழுதிய பதிவின் தொடர்ச்சிகளை இனி தொடர்ந்து எழுதுவேன். எழுதுவதை உடனுக்குடன் வலையேற்ற நண்பர் கணேஷ் உதவி செய்கிறார். அது எனக்கு பெரும் உற்சாகத்தையும்,தொடர்ந்து எழுதவும் தூண்டுகிறது.

   இரண்டரை மாதங்களுக்கு முந்தைய பதிவை எப்படி எழுதுகிறேன். சில குறிப்புகள் வைத்திருக்கிறேன். அதை பார்த்ததும் என்னால் எளிதாக அந்த நாளுக்குள்  சென்றுவிட முடிகிறது.

  ஒன்பது ஆண்டுகளுக்கு முன் எழுத துவங்கியபோது முதலில் எழுதிய தொடர் ஈராக் போர்முனை அனுபவங்கள். ஈராக்கிலிருந்து வந்து பதிமூன்று ஆண்டுகளுக்குப்பின் அந்த அனுபவங்களை எந்த குறிப்புக்களும் இன்றி எழுதினேன். என்னால் அந்த நாட்களில் சென்று விவரிக்க முடியும் என்பதை நானே அப்போதுதான் அறிந்தேன்.


 

 என் எஸ் பிரண்டியர் நாட் குறிப்புகளின் தொடர்ச்சி.... 

  இந்த பதிவை எழுதும் முன் லண்டனிலிருந்து நண்பர் கண்ணன் அழைத்திருந்தார். கடைசி பதிவில் சரக்கு கையாளும் முறையை கொஞ்சம் விரிவாக எழுதியிருந்தேன். பொது வாசகர்களுக்கு அது புரியாதே எனும் எண்ணமிருந்தது.

  நண்பர் கண்ணன்  “உலகமே ஜீரோ எமிஷன் பத்தி பேசுறாங்க,நீங்க முன்னூறு டன்களுக்கு மேல் (proppene C3) எல்பிஜி திரவத்தை அனாயசமாக காற்றில் கலக்கவிடுகிறீர்கள்.கப்பல் துறையில் உங்களுக்கு வேறு வழியே இல்லை”என்றார். அவர் ஆயில் அண்ட் காஸ் துறையில் பணி புரிவதாக சொன்னார். அந்த கட்டுரை தேவைதான் என்றும் குறிபிட்டார். கத்தார் எல் என் ஜி துறைமுகத்தில் பணிபுரியும் கணேச மூர்த்திக்கும் இன்னும் இந்த துறை சார்ந்து பணியில் இருப்பபவர்களுக்கும்  மிக தெளிவாக புரியும்படி உள்ள கட்டுரை தான் அது.


   இன்றும் எங்கள் கப்பலில் நடந்த பயிற்சிவகுப்பில் காற்று மாசு,மற்றும் கடல் மாசடைவதை குறைக்கும் பொருட்டு கப்பல்காரர்கள் செய்ய வேண்டியது. தினமும் எவ்வளவு ஏரி எண்ணெய் உபயோக்கிறோம் எனும் கணக்கை எங்கள் நிறுவனத்துக்கும் சம்பத்தப்பட்ட துறைக்கும் அனுப்புவதை விவாதித்தோம்.

 கப்பலில் இனி வரும் பார்ட்டிகளில் பேப்பர் தட்டுகள்,பிளாஸ்டிக் கரண்டிகள் உபயோகிப்பதில்லை என்று முடிவு செய்து கைதுடைக்கும் மென்தாள் உபயோகத்தையும் குறைக்கும்படிவேண்டினார் காப்டன். நான் இந்த கப்பலில் வந்து மூன்று மாதங்கள் ஆகிறது அதிகபட்சமாக பத்து டிஷு பேப்பர்கள் தான் உபயோக படுத்தியிருப்பேன். வெள்ளை துண்டுகள் வைத்திருக்கிறேன்  கை,வாய் துடைக்கவும் சாப்பிடும் தட்டு,குவளை,கரண்டிகளை அதைக்கொண்டே துடைத்துகொள்கிறேன்.


    கத்தாரின்  மைசஜீத் துறைமுகம் அருகில் நங்கூரம் பாய்ச்சி நின்ற எங்களை மார்ச் ஒன்றாம் தேதி அதிகாலை துறைமுகம் வருமாறு அழைத்தது மைசஜீத் போர்ட் கண்ட்ரோல். ஒன்பதரை மணிக்கு நங்கூரம் உருவப்பட்டு கப்பல் நகர தொடங்கியது. இயந்திர அப்போது முதல் விழித்துகொண்டது.பதினொன்றே முக்காலுக்கு பைலட் வந்தார். நல்ல தூக்கதிலிருந்த என்னை அதிகாலை இரண்டே முக்காலுக்கு அழைத்தார்கள். “ஷாகுல் கம் டு மேனிபோல்ட்” 

முகம் கழுவி பல்தேய்த்து மூன்று மணிக்கு சென்றேன்.கப்பலை முன்பும் பின்பும் எட்டு கயிறுகள் வீதம் பத்திரமாக கட்டி வைத்திருந்தார்கள்.பதினாறு பாகைக்கும் குறைவாக வெப்பம் இருந்தது. குல்லாய்,ஜாக்கெட் அணிந்து சென்றேன். அதிக குளிரில்லைதான். துறைமுக ஊழியர்கள் சரக்கு நிறைக்கும் குழாயை பொருத்தியபின்  அனைத்து சோதனை செய்யபட்டது. குழாய்கள் இணையும் இடத்தில் ஒழுகல் இருக்கிறதா எமர்ஜென்சி வால்வுவுகள் தானியங்கி முறையில்  முப்பது வினாடிகளுக்குள் மூடுகிறதா என்பன (ESD =Emergency shut down) ஆவணங்கள் பரிமாறப்பட்டு,பாதுகாப்பு விதிமுறைகள் விவாதித்தபின் கப்பலுக்கு சரக்கு நிறைக்கும் பணி துவங்கியது.

முதலில் மெதுவாக தொடங்கி மணிக்கு 1200 மெட்ரிக் டன் வேகத்தில் கப்பலுக்கு ப்ரோப்பேன் திரவம் சிராக வந்துகொண்டிருந்தது.சரக்கு தொட்டிகளின் முழு கொள்ளளவில் தொண்ணூறு சதம் மட்டுமே நிரப்புவது பாதுகாப்பானது. சரக்கு தொட்டி காலியாக இருப்பதால் திரவத்தை உள்ளே போட்டதும் அது ஆவியாகும். அதனால் சரக்கு தொட்டியின் அழுத்தம் வேகமாக அதிகரிக்கும். எனவே கம்ப்ரசர்களை இயக்கி அதில் உள்ள வாயுவை எடுத்து குளிர்வித்து திரவமாக மாற்றி மீண்டும் தொட்டிக்குள் அனுப்புவோம். மூன்று கம்ப்ரசர்களை இயக்கி சரக்கு தொட்டிகளின் இயக்கத்தை கட்டுக்குள் கொண்டுவந்தோம். 

 எல்லாம் சரியாக இருக்கிறது என உறுதியானதும்  ஐந்தரை மணிக்கு மேல் அறைக்கு சென்று குளித்து அதிகாலை தொழுகை முடித்து டெக்கில் வந்து காஸ் இஞ்சினியரை ஓய்வுக்கு போக சொன்னேன். இரவு பன்னிரெண்டு முதல் காலை ஆறு வரையும்,மதியம் பனிரெண்டு முதல் மாலை ஆறு வரை அவருக்கு பணி.

  எனக்கு காலை ஆறு முதல் பன்னிரண்டு,பின் மாலை ஆறு முதல் பன்னிரெண்டு வரை பணி என முறை வைத்து இருவரில் ஒருவர் எப்போதும் சரக்கு கட்டுப்பட்டு அறை,டெக் அல்லது காஸ் பிளாண்டில் இருக்கவேண்டும். ரேடியோவில் அழைத்தால் உடனடியாக அதை ஏற்கும்நிலையில். 

 சரக்கு தொட்டிகளின் அழுத்தத்தை கண்காணிப்பது தேவைபட்டால் இன்னுமொரு,கம்ப்ரசரை இயக்கவேண்டும். சீரான வேகத்தில் திரவம் வந்துகொண்டே இருக்கும். ஓடிகொண்டிருக்கும் கம்ப்ரசர்களின் வெப்ப, அழுத்த மானிகளை (parameters) கண்காணிப்பதோடு. அதை குறித்துகொள்ள வேண்டும் . கட்டுப்பாட்டு அறையில் உள்ள கணினி திரையில் தெரியும் ப்ரோப்பேன் திரவத்தின் வெப்பம் மற்றும் மோட்டார் ஓடும் ஆம்பியர் போன்றவற்றை ஒவ்வொரு நான்கு மணிநேரத்திற்கும் லாக் புக்கில் எழுத வேண்டும். டெக்கில் பணியில் இருப்பவர்கள் கப்பலை கட்டியிருக்கும் கயிறுகளை இறுக்கவும்,தளர்த்தவும் செல்லும்போது காங்வே  எனப்படும் கப்பலின் நுழைவு வாயிலில் சில நிமிடங்கள் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும். முக்கியமாக காஸ் பிளாண்டில் ஓடிக்கொண்டிருக்கும் இயந்திரங்களை கண்காணித்தல் தான் முக்கிய பணி. உடலுழைப்பு பெரிதும் இல்லையெனினும் ஆறு மணி நேரம் முறை வைத்து பணி செய்கையில் துறைமுகத்தில் இருக்கும் தினங்களில் சரியான தூக்கம் அமையாது.

  சரக்கு தொட்டிகளில் சரக்கு நிறைக்கும் வேகம்,அளவுக்கு தகுந்தவாறு பலாஸ்ட் தொட்டிகளில் இருக்கும் கடல் நீரை கணக்கிட்டு சரியான முறையில் வெளியேற்ற வேண்டும். (பலாஸ்ட் நீரை வெளியேற்றும் முறை பற்றி விரிவாக தனிக்கட்டுரையில்  எழுத வேண்டும் )டெர்மினலுடன் கப்பல் அதிகாரிகள் தொடர்பிலேயே இருப்பார்கள். ஒவ்வொரு மணிநேரமும் எவ்வவளவு சரக்கு கப்பலுக்கு வந்திருக்கிறது. எவ்வளவு டெர்மினல் தந்துள்ளார்கள் என்பதை கப்பலும்,டெர்மினலும் சரிபார்த்து ஆவணபடுத்தி கொள்வார்கள்.

  மூன்று டெக் அதிகாரிகள் நான்கு மணிநேர பணியும் எட்டுமணிநேர ஓய்வும் என முறை வைத்து இருபத்தி நான்கு மணிநேரமும் பணியில் இருப்பார்கள். டெக் பணியாளர்கள் இருவர் வீதம் நான்கு மணிநேரம் பணி எட்டு மணிநேர ஓய்வு எனும் சுழற்சியில்  இருப்பார்கள். துறைமுகத்தில் இருக்கும்போது கப்பலுக்கு வரும் உதிரி பாகங்கள்,உணவுபொருட்களை கப்பலுக்குள் கொண்டு வரும் பொருட்டு ஓவர் டைம் செய்வார்கள்.

 கப்பலை ஆய்வுக்கு தயார் நிலையில் வைத்திருந்தோம் ஆய்வாளர் இரண்டாம் நாள் தான் வருவதாக தகவல் வந்தது. ஆய்வாளர் இரண்டாம் தேதி காலை பத்து மணிக்கு வந்தார்.முழுநாளும் பிரிட்ஜ்,இயந்திர அறை,டெக்,கார்கோ பிளாண்ட்,என முழுமையாக ஆய்வு செய்து ஆவணங்களையும் சரிபார்த்தார்.

  இரவு ஒன்பது மணிக்குதான் ஆய்வை நிறைவு செய்து படகில் இறங்கி சென்றார். ஆறு ரிமார்க்ஸ் தந்தார்.அவற்றை மூன்று மாதத்திற்குள் சரி செய்திருக்க வேண்டும்.

 

 எங்களிடம் நான்கு சரக்கு தொட்டிகள் (cargo tanks) இருப்பதாக சொன்னேன்    (C3)ப்ரோப்பேன்  திரவத்தை Tank 1-8771 ,tank 2 -12498,tank3-  11230,tank4- 14049  மெட்ரிக் டன்கள் வீதம் சரக்கு நிறைக்கும் பணி இரவு பத்து மணிக்கு முடிந்தது.

  பின்னர் டெர்மினலும்,கப்பலும் இணைந்து மொத்தம் எவ்வளவு திரவம் வந்துள்ளது என்பதை ஊறுதி செய்து இருதரப்பும் ஒத்துகண்ட பின் ஆவணங்களில் கையொப்பமிட்டு பரிமாறிகொண்ட பின்.சரக்கு ஏற்றும் பணி முழுமையடையும் .

 அதன் பின்னரே  கப்பலில் இணைக்கப்பட்டுள்ள டெர்மினல் குழாய்கள் விடுவிக்கபடும். பதினோரு மணிக்கு குழாய்கள்விடுக்கபட்டது. மொத்தம் நாற்பத்தி ஆறாயிரம் மெட்ரிக் டன் ப்ரோப்பேன் திரவம் இருந்தது கப்பலில்..

 டூல்ஸ்களை எனது வொர்க்ஷாப்பில் வைத்து விட்டால்.எனக்கு பணி முடிந்து விடும். பதினோரு நாற்பதுக்கு பைலட் வந்தார். நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு கப்பல் புறப்பட்டது. திங்கள்கிழமை முழு நாளும் எனக்கு ஓய்வாக இருந்தது. 

   கப்பலில் ஏற்றிய ப்ரோப்பேன் திரவத்தை தைவானின் மைலியோவ் (mailiao)துறைமுகத்தில் கொடுக்க சொல்லி உத்தரவு வந்தது. கப்பல் தைவானை நோக்கி பயணிக்க தொடங்கியது.

 நாஞ்சில் ஹமீது,

13 -4-2025.

sunitashahul@gmail.com

Sunday, 13 April 2025

ரமலானுக்கு பின்



புனித ரமலானில் ஒரு மாதம் நோன்பிருந்தபின்  உடல் ஆரோக்கியம் மேம்படுவதை உணர முடியும். நிலத்தை விட்டு தூரமாக கடலில் பயணிப்பதால் காற்று மாசு அறவே  இல்லை. இங்கிருக்கும் மனித முகங்கள் தவிர விரிந்த பெரும் கடல்பரப்பும் மேகங்கள் சூழ்ந்த வானமும். டி.வி, யூ டூப்  பார்ப்பதில்லை. எனவே வேறு காட்சிகளே இல்லை. அதனால் பிற எண்ணங்களும் இல்லை. மனதிற்கினிய நண்பர்களுடன் போனில் உரையாடலும்,வாசிப்பும் மட்டுமே.

நோன்பு காலத்தில் நிறுத்திவைத்திருந்த எளிய முறை உடற்பயிற்சி, ஆசனம், காயகல்ப பயிற்சிகளை இதுல் பிதர் பெருநாள் முடிந்த மறுநாளே துவங்கினேன்.

ரமலான் துவங்கும்முன் என்னுடன் இணைந்து பயிற்சிகளை செய்து கொண்டிருந்த ராஜேஷ் வரவில்லை. பயணப்பாதை மிக கடுமையாக இருந்தது. குளிர் வேறு.

 

ரமலானில் சூரியன் மறைந்தபின் எளிய உணவுகளையே உட்கொண்டேன். வாய்ப்பு கிடைத்த நாட்களில் நானே கஞ்சி வைத்து குடித்தேன். கஞ்சி குடித்த  நாட்களில் வயிறு இன்னும் சுகமாக இருந்தது. அதிகாலை நோன்பு வைக்க வெள்ளை சாதமும, பருப்பு குழம்பு, சாலடும். சில நாட்கள் மீன் கிடைக்கும். இருவேளை உணவு வயிற்றுக்கும் உடல் உள் உறுப்புகளுக்கும் ஓய்வை அளித்த நாட்கள்.


நோன்புக் கஞ்சி


பகலில் உண்ணாமல் இருத்தால் உடல் எடையற்று இலகுவாக இருந்ததை உணர்ந்தேன். சுனிதாவிடம் சொன்னேன். “நோம்பு முடிஞ்ச பொறவு மத்தியான சாப்பாட உட்டுரலாம்னு நினக்கேன், பாடி ரொம்ப லேசா இருக்கு”.

அவள் “டெக்ல நல்ல காத்தடிக்கும் போவ வேண்டிய டெசிநனேசன மட்டும் கண்ணால பாத்தாபோரும் காத்து போவ வேண்டிய இடத்துக்கு கொண்டு உட்டுரும்” என்றாள்.


கப்பலில் உண்ணும் நேரம் மிக நல்லது. காலை உணவு ஏழு முப்பதுக்கு. எட்டு மணிக்கு பணி துவங்கும். பத்து மணிக்குதேநீர் இடைவேளை பன்னிரெண்டு மணிக்கு மணிஅடித்து மதிய உணவு தருவார்கள். இரவுணவு மாலை ஆறு மணிக்கு. துறைமுகம் மற்றும் அவசர பணிகள் இல்லாத நாட்கள் தவிர இந்நேரம் தவறுவதே இல்லை.

  

காலை உணவாக பால் கலந்து சீரியல்ஸ் உடன் இரண்டு முட்டை, மதியம்(பச்சை காய்கறி) சாலட், பெரும்பாலும் மீன் அல்லது கோழியிறைச்சி  தவிர்த்து மட்டன், பீப் இருந்தால் மட்டும் கொஞ்சம் சாதமும் பருப்பு குழம்பும். இரவுணவாக ஒரு சப்பாத்தி அல்லது இரண்டு.

 

ஆறரை மணிக்கு இரவுணவு முடிந்தால் தேவைப்பட்டால் ஒரு சுலைமானி (கட்டன் சாயா). மறுநாள் காலை வரை எதுவும் உண்பதில்லை. மிட் நைட் மீல், நூடுல்ஸ் அறவே கிடையாது. “ஆறு மணிக்கே தின்னா ராத்திரி பசிக்காதா” என நண்பர்கள் கேட்பதுண்டு. ஞாயிறுகளில் மதியம் பிரியாணி போடுவார்கள். ஓய்வாக இருந்தால் காலை உணவு உண்பதில்லை. இரவிலும் தேவைப்பட்டால் மட்டுமே உண்பேன்.

 

 நோன்புக்கு பின் ஒன்று உறுதியாகியது. பழக்கத்தால்தான் மூவேளை உண்கிறோம். மணி பார்த்து சாப்பிடுவதுதான் பழக்கம். பசித்துதான் சாப்பிட வேண்டும். காலையில் உண்டபின் பத்து மணி தேநீர் இடைவேளையில் மெஸ் மென் போடும் சாயா குடிக்கவில்லை. மதியம் சாலட் மற்றும் பழம் மட்டும் சாப்பிட்டேன். உடல் சோர்வேயில்லை.  மாலை ஆறு மணிக்கு இரவுணவு.

 

உபவாசம் என்னும் உயர் மருந்து இயற்கை மருத்துவர் பாலாசுப்பிரமணியம் எழுதிய புத்தகம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வாசித்தேன். ஒவ்வொரு முறை நாம் உணவுண்ணும் போதும் அதை ஜீரணம் செய்ய அதிகப்படியான சக்தி உடலிலிருந்து செலவளிக்கப்படுகிறது. குறைவாக உண்பதும், இரவுணவை தவிர்ப்பதும் உபவாசம் என சொல்லியிருந்தார். நல்ல பிரியாணி அல்லது சத்யா உண்டபின் சோர்வும் தூக்கமும் வருவது அதனால் தான்.

 

நேற்று முன்தினம் மதியம் கொரியா கிம்ஞ்சி  வைத்திருந்தார்கள். அதனால் சிறு குவளையில் கொஞ்சம் சாதமும், பொரித்த இரு மீன் துண்டுகளும், மீன் குழம்பும் சாப்பிட்டேன்.

 

இன்று காலை ஊற வைத்த பாதாம் நான்கு, மூன்று பேரீட்சை, மூன்று முந்திரி, இரண்டு அவித்த முட்டை மட்டும். இயந்திர அறையில் லேத் மிஷினில் முழுநாளும் பணி. காலை பத்து மணிக்கு ஒரு கட்டன் காப்பி சீனி கலந்து குடித்தேன். பின் பசியே இல்லை. மதியம் சாலடும், பப்பாளி பழத்துண்டுகள் மட்டும் இரண்டு. மூன்று மணி தேனீர் இடைவேளையில் தண்ணீர் மட்டும் குடித்தேன். இரவுணவுக்கு இரு கோதுமை பரோட்டாவும், பீப் கறியும். இன்று இரவு சுலைமானியும் குடிக்கவில்லை.

 

ரமலானுக்கு பின் எடை ஒன்று அல்லது ஒன்றரை கிலோ தான் குறைந்திருக்கும். கடந்த முப்பது ஆண்டுகளாக அறுபதுக்கும் அறுபத்தி நான்கு கிலோவுக்கும் இடையில் இருக்கிறேன். எதற்கும் மாத்திரை உண்பதே இல்லை. 

இரு தினங்களுக்கு முன் சுனிதா “உச்சக்கி  என்ன சாப்ட்டியோ” எனக்கேட்டபோது,

“சால்ட் பழம்” என்றேன்.

“சோறு தீத்தியே கிடையாதோ? இனி தேவாங்குதான் திரியாரு இவுரு, பொறந்த ஆறு மாசத்திலே சோறு தின்னதாக்கும், இங்க வேற என்ன புட் உண்டு, சோறு தான் பெலம், உச்சக்கி கொஞ்சமா சோறு தின்ன வேண்டியது தானே” என்றாள்.

 

எனது சமையல்காரர் ராகுல் மிஸ்திரி மதியம் உண்பதில்லை. அவர் என்னிடம் கொஞ்ச நாள்ல பழகிவிடும் நேரம் பார்த்து நாம் உண்ண தேவையில்லை என்றார்.


மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.


 நாஞ்சில் ஹமீது,

09 april 2025 

 sunitashahul@gmailcom

Saturday, 12 April 2025

என் இதயம் - 3

என் என் ஜி அலையன்சில் பணியில் இணைவதற்காக மும்பை லண்டன் வழியாக ஜிப்ரேல்டர் வரை சென்று விடுதியில் காத்திருந்தோம். ஜிப்ரேல்டர் வழியாக நைஜீரியா செல்லும் கப்பலில் வேகத்தை குறைத்து ஓடும் கப்பலிலேயே எங்களை ஏற்றிவிடுவதாக திட்டம்.வேண்டிய உணவுப்பொருட்களையும் கப்பலில் அனுப்ப தயாராக இருந்தனர்.
மாலை ஆறு மணிக்கு நாங்கள் காத்திருந்தோம்.

கப்பலிலிருந்து நான் விடுவிக்கவேண்டிய தினேஷ் குறுஞ்செய்தி அனுப்பினார். கடும் காற்று காரணமாக ஜிப்ரேல்டர் துறைமுகம் மூடப்பட்டுள்ளது; கரையிலிருந்து படகு எதுவும் கடலுக்குள் வரஇயலாது; எனவே கப்பல் நைஜீரியாவை நோக்கிய பயணத்தை தொடர்கிறது என.

மூன்று தினங்கள் ஜிப்ரேல்டர் நகரை முழுமையாக சுற்றி பார்த்துவிட்டு லண்டன்–மும்பை வழியாக வீடு வந்து சேர்ந்தேன். மூன்று வாரங்களுக்குப்பின் தென்ஆப்ரிக்காவின் கேப் டவுனில் பின்னர் பணியில் இணைந்தேன். ஊருக்கு திரும்பி வந்ததில் அஜிதனின் திருமணத்தில் கலந்துகொள்ள முடிந்தது.
 
இம்முறை ஏழு மாதம் கப்பலில் பணி செய்தேன். என் இதயம் எனக்கு ஒன்றையும் சொல்லவில்லை. யோகபயிற்சிகள், ஆசனம், தியானம், ஐவேளை தொழுகையையும் மிக எளிதாக நிறைவேற்றினேன். அக்டோபர் ஒன்றாம் தேதி மலேசியாவில் இறங்கி வீட்டுக்கு வந்தேன். வீடு கட்டும் பணி கான்க்ரீட் முடிந்து இருந்தது. வீட்டை கட்டிப்பார் எனும் சொல்லுக்கு அர்த்தம் புரிந்த நாட்கள். மிகக்குறைவான தூக்கம். கால் மூட்டுக்களிலும், உடலிலும் மிக மெல்லிய வலி இருந்துகொண்டே இருந்தது. எனினும் நான்கு மணிநேரத்திற்கு தூக்கமில்லாத நாட்கள்.

நவம்பர் மாதம் வேறொரு நிறுவனம் அவசரமாக அழைத்தது. நவம்பர் பதினாறாம் தேதி கொச்சியில் மருத்துவ பரிசோதனைக்கு சென்றேன். இங்கே இசிஜி சோதனைக்கு முன் நானே சொல்லிவிட்டேன். “என் இசிஜி அப்நார்மலாக இருக்கும்” என.

கொஞ்சம் அதிமாகவே சோதனை செய்தார்கள். “குழப்பம் ஒந்தும் இல்லா” என்றவர் இசிஜி காகிதத்தை கையில் வைத்து உடனிருந்த நேழ்ஸ் சேச்சியிடம் கொடுத்து “ஒந்து நோக்கு” என்றார். “ஒரு பிர்ஷனுமும் இல்லா” என்றபோதும் டாக்டரிடம் காமித்து உறுதி செய்தபின் டிரட்மில்லில் ஓட விட்டு சோதனை செய்தார்கள். எல்லாம் நார்மல் நான் கப்பல் பணிக்கு ‘பிட்’ ஆக இருக்கிறேன் என சோதனை அறிக்கைகள் சொன்னது.

ஆனால் அந்த நிறுவனத்தில் பணியில் இணைய முடியாமல் போனது. வீடு பணி முடிந்து கிரகப்பிரேவசம் முடிந்த மூன்றாவது நாள் பாண்டியில் ஒரு வகுப்பு, மறுநாள் சென்னை பலாஜியில் மருத்துவ சோதனை. நாகர்கோவில்-பாண்டிக்கு குளிர்சாதன தூங்கும் வசதி கொண்ட பேருந்தில் சென்றதால் கொஞ்சம் தூங்கினேன். பாண்டியில் வகுப்பு முடிந்த அன்று மாலையே புறப்பட்டு சென்னையில் தாம்பரம் பார்வதிநகரில் வசிக்கும் நண்பர் அசோக் வீட்டில் இரவு தங்கிவிட்டு. காலையுணவாக சகோதரி சுஜாதா தந்த புட்டும் பயறும் உண்டுவிட்டு டி நகர் புறப்பட்டேன். அசோக் வீட்டில் நன்றாக தூங்கினேன்.

காலை எட்டு நாற்பதுக்கு பாலாஜி மெடிக்கல் சென்டரில் இறங்கியபோது எனக்கு முன்பே எட்டு பேர் காத்திருந்தனர் மருத்துவமனை திறப்பதற்காக. அன்று இரவே வீட்டுக்கு செல்ல ரயிலில் டிக்கட் முன்பதிவு செய்திருந்தேன். அடுத்த சில நாட்களில் எனது பயணம் இருப்பதாக என் நிறுவனம் சொல்லியிருந்தது. மதிய உணவிற்கு சகோதரி அமுதாவின் இல்லம் வருவதாக அழைத்து சொன்னேன்.

ஒன்பது மணிக்கு சோதனைகள் தொடங்கியது. எனது டிரட்மில் டெஸ்ட் மட்டும் நடக்கவில்லை. சோதனை முடித்த பெரும்பாலானோர் மருத்துவரை சந்திக்க காத்திருந்தோம். மணி பன்னிரெண்டை தாண்டியும் மருத்துவர் வரவில்லை. சகோதரி அமுதாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். நான் வர தாமதமாகும் நீங்கள் சாப்பிடுங்கள் என.

உங்கள் வேலை முடிந்து வாருங்கள் காத்திருக்கிறோம் என பதிலளித்தார். வழக்கமாக வரும் மருத்துவர் வராததால் பாலாஜியின் வேறு கிளையிலுள்ள மருத்துவர் சைதாபேட்டை டிராபிக்கில் சிக்கி டி நகர் வந்து சேர தாமதமாகி விட்டது.

நான்காவது ஆளாக மருத்துவரை சந்திக்க என்னை அழைத்தார்கள். பள்ளி மாணவியை போலிருந்த இளம்பெண் மருத்துவர் என்னிடம், “உங்க இசிஜி அப்நார்மல்” என்றதும் இம்முறை பதட்டமே இல்லை. கடந்த இரு ஆண்டுகளில் பாலாஜி சென்னை, தூத்துக்குடியில் செய்த மருத்துவ அறிக்கை, இதய நிபுணரை பார்த்த டெஸ்ட் ரிப்போட் அனைத்தையும் காண்பித்தேன். டிரட்மில் டெஸ்ட் செய்யுமாறு கோரினேன்.

காத்திருக்க சொன்னார். இசிஜி பேப்பர்களை கொண்டு வரச்சொல்லி பார்த்தார். யாருக்கோ போனில் பேசிவிட்டு, ஆறுமாதம் தாண்டி விட்டது நீங்கள் இதய மருத்துவரை பார்த்து என்றதும்...

ஒன்றரை மாதங்களுக்கு முன் கொச்சியில் செய்த மருத்துவ சோதனையில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை உங்கள் பாலாஜியில் செய்யும் சோதனை மட்டுமே இசிஜி பிரச்னையாக உள்ளது என்றேன்.

“அந்த ரிப்போட் இப்ப இருக்கா?”

மருத்துவரின் கையில் கொடுத்தேன். அதை போனில் புகைப்படம் எடுத்துவிட்டு மீதி சோதனைகளை முடித்து வெளியில் காத்திருக்க சொன்னார்.  பத்து நிமிடத்தில் டிரட்மில் சோதனைக்கு அழைத்தார்கள். பதினைந்து நிமிடம் ஓடினேன். என் இதயம் நன்றாக இருக்கிறது என கருவிகள் சொன்னது.

“ரிபோர்ட் ரெடிஆனதும் போன் பண்ணுவோம்,வந்து வாங்கிகுங்க” என்றார். மாம்பலத்திலிருந்து ரயிலில் எக்மோர் சென்று சகோதரி அமுதாவின் வீட்டிற்கு செல்லும்போது மணி இரண்டை தாண்டி விட்டது. மிக சரியாக அவர் வீட்டு வாயிலில் மணியை அழுத்தினேன். புன்னகையுடன் பாலாஜி சாரும், அமுதா அக்காவும் வரவேற்றார்கள். அமர்ந்ததும் ஒரு குவளை நீர் அருந்த தந்தார்கள் “ஷாகுல் எல்லாம் ரெடி அஞ்சி நிமிஷம் வட மட்டும் சூடா சுட்டுட்றேன், சாப்பிடலாம்” என்றார்.

தொழுகை நேரம் என்றேன் ஒரு அறையை தந்தார்கள். ஒளு செய்து வேட்டிக்கு மாறிக்கொண்டேன். என் வீட்டை போன்று உணரும்படி செய்தனர் பாலாஜியும்,அமுதா அக்காவும் தொழுகை முடிந்ததும். தலை வாழை இலையில் வெள்ளை சாதம், பருப்பு குழம்பு, சாம்பார், ரசம், தயிர், உருளைக்கிழங்கு பொரியல், வாழைக்காய் துவரன், அப்பளம், வடை எண்ணெய் சட்டியிலிருந்து நேராக இலைக்கு வந்தது. ஆவி பறக்க சாப்பிடும்போதே கேட்டேன் “அக்கா இன்னும் ஏதாவது இருந்தா சொல்லுங்க வயித்துல இடம் விடனுமுல்லா”

“ஷாகுல் பாயசம் உண்டு” மகிழ்ச்சியில் நன்றாக உணவுண்ட நாள் அது.வாழைப்பழம் தந்தார்கள். சாப்பிட முடியாது என்றதும் “பேக்ல வெச்சிகுங்க ராத்திரி ட்ரைன்ல போவும்போது சாப்பிடலாம்”. பதினாறாவது மாடியில் இருந்து தெரிந்த சென்னையை கொஞ்ச நேரம் பார்த்தேன்.

மாலை தொழுகையை முடித்துவிட்டு சென்னை புத்தக காட்சிக்கு செல்லும் திட்டம் இருந்ததால் டி நகர் சென்று எனது மருத்துவ அறிக்கையையும் வாங்கி கொள்ளலாம் என முடிவு செய்தோம். அமுதா அக்கா கூகிள்அக்கா சொல்லும் வழியை சொல்ல, சொல்ல பாலாஜி ஸார் காரோட்டினார். ஐந்து மணியை தாண்டி மிக தாமதமாக என் மருத்துவ அறிக்கையை தந்தார்கள் பாலாஜியில்.
 

சென்னை புத்தக கண்காட்சியில்



நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் புத்தக கண்காட்சிக்கு சென்றோம். இரவு எக்மோரிலிருந்து புறப்படும் அனந்தபுரியில் டிக்கட் முன்பதிவு செய்திருந்தேன். மிக சரியாகத்தான் ஒய் எம் சி ஏ புத்தக கண்காட்சியில் இருந்து புறப்பட்டோம். கார் நகரவே முடியாத அளவு டிராபிக். பாலாஜி நிதானமும்,பதட்டமுமாக காரோட்டினார். பத்து நிமிடங்கள் இருக்கும்போது குறுக்கு பாதையில் சென்றால் ரயிலை பிடித்து விடலாம் “ஷாகுல் பைய கைல ரெடியா வெச்சிகுங்க கார நிப்பட்டினதும் இறங்கி ஓடிருங்க” என்றார்.

நாங்கள் வந்த வழியில் மிக சரியாக சிக்னல் விழுந்தது. இருநூற்றி நாற்பது வினாடிகள் கழிந்து பச்சை விளக்கு எரிந்ததும் ஜேம்ஸ்பாண்ட் ஓட்டும் கார் போல கார் பறந்தது. எக்மோர் சென்று சேரும்போது ரயிலுக்கு ஒரு நிமிடம் இருந்தது. பைகளுடன் ஆறாவது பிளாட்பாரத்தில் நிற்கும் அனந்தபுரியை நோக்கி படிகளில் தாவியேறி, குதித்து இறங்கிகொண்டிருக்கும்போது ரயில் ஊளையிட்டது. விரைந்தோடி ரயிலை நெருங்கும்முன் ரயில் நகர தொடங்கியிருந்தது. ஏறிக்கொண்டேன்.

பத்து பெட்டிகள் தாண்டி எனது இருக்கையில் அமர்ந்தபின் அமுதா அக்காவிற்கு அழைத்தேன். என்னை அழைத்துசெல்ல காத்திருப்பதாக சொன்னார். நாளை காலை நாகர்கோவிலில் இருப்பேன் என்றேன்.

நாஞ்சில் ஹமீது,
08-april-2025 .
sunitashahul@gmail.com

Friday, 11 April 2025

என் இதயம் - 2

மருத்துவர் மாரிராஜிக்கு எனது இ சி ஜி யை அனுப்பி கொடுத்தேன். “ஷாகுல் ஜி கப்பலுக்கு போயிட்டு வாங்க, அப்புறமா நாமோ ஒரு டெஸ்ட் பண்ணி பாத்துகிடுவோம்” என்றார்.

2023 மே மாதம் ஏழாம் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டு மும்பையில் இரு தினங்கள் தனிமைப்படுத்தல், அங்கிருந்து பனாமாவுக்கு பயணித்து அங்கே ஐந்து தினங்கள் விடுதியறையில் தனிமைப்படுத்தல். கோவிட் எச்சரிக்கைதான்.

கப்பலில் இருக்கும்போது சுனிதா ஒரு நாள் கேட்டாள் “என்ன சாப்ட்டியோ சாறே”. அன்று சனிக்கிழமை மாலை இரவுணவாக பீப் ஸ்டேக் உண்டிருந்ததை சொன்னேன். “பீப் எல்லாம் தின்னா ஒன்னும் பிரச்னையில்லையா”

“நான் நல்லாத்தான் இருக்கேன்” என்றேன்.

ஐந்தரை மாத பணிக்குப்பின் சூயஸ் கால்வாயில் இறங்கி பிரமிட் சுத்தி பார்த்துவிட்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி வீடு வந்து சேர்ந்தேன். அம்மாத இறுதியில் மருத்துவ தோழி மகேஸ்வரி இல்லம் வந்திருந்தார். அவருடைய ஜூனியர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்ள. டாக்டர் மகேஸ்வரி எனது இ சி ஜி யை பார்த்துவிட்டு “கை விரல்களை குவித்து மடக்கி இதயம் துடிப்பதை விளக்கினார்.

 “உங்களுக்கு ஒரே ஒரு பீட் கொஞ்சம் குறைவா அடிக்கிது. ரொம்ப ரெயர் கேஸ். ஒண்ணுமில்ல உங்க இதயத்துக்கு” எனச் சொன்னார். சுனிதா என் முகத்தை பார்த்தாள். ஒண்ணுமில்ல என் ஷாகுலுக்கு எனும் நிம்மதி முகத்தில் தெரிந்தது.

2024 ஜனவரி மாதம் அழைத்து பிப்ரவரி முதல் வாரத்தில் எல் என் ஜி அலையன்ஸ் கப்பலுக்கு பணியில் இணைய வேண்டி கோரியது என் நிறுவனம். மருத்துவ பரிசோதனைக்கு செய்து அறிக்கையை உடனே தர வேண்டினார் அலுவலக உதவியாளர். ஜனவரி இருபதாம் தேதி அதிகாலை வடசெரியிலிருந்து தூத்துக்குடிக்கு பேருந்தில் சென்றேன். காலையில் அவித்த கருப்பட்டியும், துருவிய தேங்காயும் மிகக் கொஞ்சமாக எட்டுமணி வாக்கில் ஓடும் பஸ்ஸிலேயே சாப்பிட்டேன். 

இங்கே அருகில் வசிக்கும் மூத்த சகோதரி ஒருவர் இலக்கிய வாசகியும் கூட. வீட்டிற்கு வாங்க என எப்போதும் அழைத்துக்கொண்டே இருப்பார். அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன் மாலையில் உங்கள் இல்லம் வரலாமா? வீட்டில் இருப்பீர்களா என. கண்டிப்பாக வாருங்கள் வீட்டில்தான் இருப்பேன் என முகவரியும் தந்தார்கள்.

ஒன்பது மணிக்கு பாலாஜி மெடிக்கல் சென்று சேர்ந்துவிட்டேன். அன்று சனிக்கிழமை ஆதலால் மதியம் வரைதான் மருத்துவமனை இருக்கும் சீக்கிரமே வரச்சொல்லியிருந்தார்கள்.

அனைத்து சோதனைகளும் முடித்து மருத்துவரை சந்திக்க காத்திருந்தேன். என் பின்னால் வந்தவர்கள் சோதனைகள் முடித்து திரும்பி செல்வதை கண்டு உதவியாளரிடம் கேட்டேன். காத்திருக்க சொன்னார்கள். இங்கும் கண்ணாடி அணிந்த இளம்பெண் மருத்துவர். “ஸார் உங்க இ சி ஜி அப்நார்மல்னு இருக்கு. நீங்க கார்டியாலஜிஸ்ட்ட பார்த்து ஒப்பினியன் வாங்கி வரணும்” என்றார்.

“மே மாசம் உங்க சென்னை பாலாஜில மெடிக்கல் பண்ணுனேன், அப்பவும் இதே மாதிரி வந்தது கார்டியாலஜிஸ்ட்ட பாத்தேன், டெஸ்ட்ல எல்லாம் நார்மல்” என்றேன்.

“அந்த ரிபோர்ட்ஸ் இருக்கா”

சிம்ஸ் மருத்துவமனை அறிக்கையை கொண்டு போயிருந்தேன். பையிலிருந்து அதை எடுத்து கொடுத்தேன். அவர்களது தலைமை மருத்துவர் பாலாஜிக்கு அதை அனுப்பிக்கொடுத்துவிட்டு பதிலுக்காக காத்திருக்க சொன்னார்.

ஒரு மணிநேரம் கழித்து என்னை அழைத்து “இந்த டெஸ்ட் செய்து ஆறு மாதம் தாண்டிவிட்டது, நீங்க கார்டியாலஜிஸ்ட்ட பாத்து பிட் சர்டிபிகட் வாங்கி வாருங்கள்” எனச்சொல்லி தூத்துக்குடி எ வி எம் மருத்துவமனைக்கு தொலைபேசியில் அழைத்து எனக்கு டோக்கன் போடச் சொன்னார். மணி மதியம் ஒன்றாகியிருந்தது.

 “அப்பாயிண்ட்மெண்ட் முடிந்து விட்டது, வேறு டாக்டர் இரண்டரை மணிக்கு மேல் வருவார்” என சொன்னதால் என்னை விரைந்து மருத்துவமனை போக சொன்னார்கள். மூன்று மணிக்கு முன் திரும்பி வரவும் அறிவுறுத்தினார் மருத்துவர் மீனா.

அங்கே ஜவுளிக்கடை நடத்தும் நண்பரை அழைத்து உதவி கேட்டேன். கடை ஊழியர் சுரேசை பைக்கில் அனுப்பி வைத்தார். எ வி எம் மருத்துவமனையின் வரேவேற்பறையில் பணம் கட்டியபின் மருத்துவரின் அறைக்குமுன் சென்று அங்கிருந்த உதவியாளர் பெண்ணிடம் விபரம் சொன்னேன்.

“உங்க முன்னால ரெண்டு டோக்கன் இருக்கு மூணாவதா நீங்க போலாம் டாக்டர் ரெண்டு மணிக்கு மேல வருவார்” என்றாள். சாப்பிட்டுவிட்டு வருகிறேன் என்றேன். இல்லை காத்திருங்கள் என சொல்லிவிட்டார். எனக்கு நல்ல பசி. மருந்தகம் சென்று பிளேட் வாங்கி கழிப்பறையில் மார்பின் முடிகளை சவரம் செய்ய சொன்னாள்.

மருத்துவரின் அறைமுன்பு காத்திருந்தேன். அங்கே செய்ய வேண்டிய சோதனைகளுக்கான பணம் குறைவாக இருந்ததால் சுனிதாவை அழைத்து சொன்னேன். “ஓ அதே பிரச்சனையா இப்பவும் , செரியா பாருங்க” என சொல்லிவிட்டு என் கணக்கில் பணத்தை அனுப்பினாள்.

மருத்துவரிடம் கடந்த முறை சோதனை செய்த அறிக்கைகளை காண்பித்தேன். கப்பலில் என்ன வேலை எவ்வளவு வருடங்களாக பணிபுரிகிறீர்கள் என கேட்டபின் முதலில் டிரட்மில் டெஸ்ட்டுக்கு அனுப்பினார். அதன்பின் “ஒரு எக்கோ எடுத்து பாத்துருவோம்” என்றார். அதற்கும் பணத்தை கட்டி ரசீதை கொடுத்தேன். எக்கோ டெஸ்டில் எனது இதயம் லப்டப் என துடிப்பதை கணினியில் பார்த்தேன்.

எல்லாம் நார்மல் என்றார் டாக்டர். “என்ன செய்யட்டும் டாக்டர் ஒவ்வொரு முறையும் இப்படி ஆகிறதே”

“ஒன்னும் செய்ய முடியாது, நீங்க வேலைக்கு போகும் முன் மெடிக்கல் டெஸ்ட் பண்ண உங்க கம்பனி சொல்லுது, இ சி ஜி அப்நார்மல் வருது, அதுனால நீங்க ஒவ்வொரு முறையும் இத செய்து ஆகணும்” என்றார்.

மெடிக்கல் சென்டர் என்னை அழைத்து “என்ன ஆச்சு? டாக்டர் போயிட்டாங்க. நீங்க கார்டியாலஜிஸ்ட்ட ரிப்போட்ட திங்ககிழம கொண்டு வாங்க” எனச் சொன்னாள்.

எனது சோதனை எல்லாம் முடிந்து பிட் சர்டிபிகேட் வாங்கும்போது மணி ஐந்தை தாண்டியிருந்தது. நண்பரின் ஜவுளி நிறுவனம் அருகில்தான் இருந்தது. நண்பர் நெடுநேரம் காத்திருந்துவிட்டு வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால் போய்விட்டார். நான் அவரது கடைக்கு சென்று எனது மருத்துவ அறிக்கையை திங்கள்கிழமை பாலாஜி மெடிக்கல் சென்டரில் கொடுக்க சொன்னேன்.

மருத்துவர் மீனா என் நிறுவனத்துக்கு அனுப்பிய மின்னஞ்சலை எனக்கும் பார்வர்ட் செய்திருந்தார். ஷாகுலின் இ சி ஜி அப்நார்மலாக இருப்பதால் கார்டியாலஜிஸ்ட்டிடம் அனுப்பியுள்ளோம். அங்கிருந்து பிட் சர்டிபிகேட் கிடைத்தபின்தான் அவரது மருத்துவ அறிக்கை தயாராகும் என எழுதியிருந்தது. அதற்கு உடனே கார்டியாலஜிஸ்ட்ட பிட் தந்துவிட்டார் என பதில் அனுப்பினேன்.

காலையில் வீட்டுக்கு வரச்சொன்ன சகோதரியை அழைத்து பேருந்து ஏறப்போகிறேன் என்றேன். ரெண்டுங்கெட்டான் நேரம். எனது பசிக்கு சாப்பிடும் உகந்த வேளை அல்ல அது. மாலை ஐந்து மணியை தாண்டியிருந்தது. இரண்டு கப் சுண்டலும் ஒரு சுக்கு காப்பியும் சாப்பிட்டபின் பேருந்தில் ஏறிக்கொண்டேன்.

சகோதரி சொன்ன இடத்துக்கு அருகில் இறங்கியதும் கல்லூரி படிக்கும் அவரது மகன் வந்து இல்லம் அழைத்து சென்றான். புதிதாய் கட்டிய பெரிய வீடு. முதல் முறையாக அவரது இல்லத்தில் பாதம் பதித்தேன். மகிழ்ச்சியுடன் வரவேற்று அமர சொல்லி குடிக்க தண்ணீர் தந்தார்கள். அங்கிருந்த வயதான இரு பெண்கள் தனது அம்மாவும், கணவரின் அம்மாவும் என அறிமுகப்படுத்தினார்.

“ஷாகுல் சாப்பிடுங்க தோசை ஊத்தி தாறேன்” என அன்பாய் கேட்டார். எனக்கும் நல்ல பசி. மக்ரிப் தொழுகைக்கான நேரம் கடந்திருந்தது. நான் தொழு வேண்டும் என்றேன். ஒளு செய்ய அறையை காண்பித்து சுத்தமான பாய் ஒன்றும் தந்தார்கள்.

தொழுகை முடித்து வந்தேன். வயதான பெண்கள் இருவரும் உள்ளறைக்கு போயிருந்தனர். சகோதரி சுண்டலும் சாயாவும் தந்தார். தோசை சாப்பிடும் முன் இது தேவையில்லையே என எண்ணினேன். எதுவும் சொல்லவில்லை. நீண்ட நேரமாக தோசை அவரது தோசை கல்லிலேயே ஒட்டி பிடித்துவிட்டது போல. பசியில் எதிர்பார்த்து காத்திருந்த நான் இனி தோசை கிடைக்காது எனும் எண்ணம் வந்ததும், “அக்கா நான் இறங்கட்டா” என கேட்டேன். சரி போயிட்டு வாங்க என்றார். பேருந்து நிலையம் வந்து ஆப்பமும் முட்டை கறியும் உண்டுவிட்டு நாகர்கோவில் செல்லும் பேருந்தில் ஏறினேன். மனதில் அவர்களது தோசை கல்லில் இருந்து ஏன் தோசை இளகவேயில்லை? எனும் எண்ணம் மட்டும் நாகர்கோவில் தொடர்ந்து வந்தது.

சுனிதாவின் சொற்கள் நினைவில் வந்தது “யாரு கூப்ட்டாலும் உடனே அங்க ஆஜர் ஆயிரணும்”.

நாஞ்சில் ஹமீது,

31-March-2025.

Thursday, 10 April 2025

என் இதயம் - 1

கப்பல்காரர்களுக்கு பணியில் இணையும்முன் மருத்துவ பரிசோதனை கட்டாயம். இரத்தம், சிறுநீர் சோதனைக்கு எடுப்பார்கள். எக்ஸ் ரே, இ சி ஜி, கண்பார்வை மட்டுமில்லாது நிறக்குருடு (colour blindness), காது கேட்கும் திறன், சிறுநீரகத்தில் கல் இருப்பதை அறியும் அல்ட்ரா சோனிக் சோதனை ஆகியவையும் உண்டு. 


நாற்பதை தாண்டியபின் டிரட்மில் (treadmill) டெஸ்ட் கட்டாயம். நான்கு ஸ்டேஜ் கொண்ட டிரட்மில்லில் ஓடவிட்டு சோதனை செய்வார்கள். இதயம் எப்படி இருக்கிறது என்பதை அறிய. 


2023ம் ஆண்டு பணியில் இணையும்முன் மருத்துவ பரிசோதனைக்கு என் நிறுவனம் சொன்னபோது சென்னை செல்லும் வேலை இருந்ததால், அங்கே செய்துகொள்கிறேன் என்றேன்.

ஏப்ரல் மாத இறுதியில் அட்டப்பாடி மலை பிரேதசத்தில் ஒரு சிறுகதை பயிற்சி பட்டறை வகுப்பு ஒன்றை ஸீரோ டிகிரி பப்ளிகேஷன் நடத்தியது. அதில் கலந்துகொண்டு சேலம் வரை காரில் வந்து அங்கிருந்து பேருந்தில் சென்னைக்கு சென்றேன்.

நண்பர் அசோக் வீட்டில் குளியலும், காலை உணவும் உண்டபின் டி நகர் பாலாஜி மெடிக்கல் சென்டருக்கு சென்றேன். அனைத்து பரிசோதனைகளும் முடிந்தபின் மருத்துவரை சந்தித்தபோது எனது இ சி ஜி அப்நார்மல் ஆக இருப்பதால் ஒரு இதய மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெற்று அங்கேயே டிரட்மில் சோதனையும் செய்து அவர்கள் மருந்து ஏதாவது பரிந்துரைத்தால் மருத்துவரின் கையொப்பமிட்ட கடிதத்துடன் முத்திரையும் பதித்து வாங்கி வாருங்கள் அதன் பின்புதான் உங்கள் மருத்துவ சான்றிதழ் கிடைக்கும் என்றார் இளவயது பெண் மருத்துவர்.

சுனிதாவை அழைக்கவேயில்லை. என்ன ஆயிற்று என் இதயத்திற்கு என கொஞ்சம் அமைதியை இழந்தேன். அன்று மே ஒன்றாம் தேதி. பொது விடுமுறை நாள். விஷ்ணுபுரம் வட்டத்தை சார்ந்த நண்பர் மருத்துவர் மாரிராஜை அழைத்தேன். “ஷாகுல் இப்ப எங்க இருக்கீங்க” என கேட்டவர், ஐந்து நிமிடத்தில் வடபழனி சிம்ஸ் மருத்துவமனையின் மூத்த இதய நிபுணர் Dr.ஜி என் பிரசாத் அவர்களிடம் நேரம் வாங்கி தந்தார்.

டி நகரிலிருந்து ஆட்டோவில் சிம்ஸ் மருத்துவமனை போய் சேர்ந்தேன். பாலாஜி மெடிக்கல் தந்த கடிதத்தை கொடுத்தேன். சாப்பிடீர்களா என கேட்டவர், டிரட்மில் சோதனை செய்ய சாப்பிட்டு இரண்டு மணிநேரத்துக்கு பின் உரிய துணையுடன் வரவும் என சொன்னார். நண்பர் கே பி வினோத்தை அழைத்தேன். விஷயம் எதும் சொல்லாமல் வடபழனி வர இயலுமா எனக்கேட்டேன்.

கேபி வினோத் - 4 சீசன்ஸ் இயக்குநர்


அலுவலக மீட்டிங்கில் இருந்தார். தோழி கவிதாவை அழைத்தேன். அவர் அழைப்பை எடுக்கவில்லை. மருத்துவமனை ஊழியரிடம் பேசினேன். மருத்துவரிடம் பேசிவிட்டு சாப்பிட்டுவிட்டு வந்து இங்கே பதிவு செய்துவிட்டு காத்திருங்கள் என்றார்.

காத்திருந்த நேரம் கடினமானது. கப்பலுக்கு செல்லும்போது, ஒரு ஸ்ட்ரிப் பராசிட்டாமால், ஜண்டு பாம், காயத்திருமேனி தைலம், அஞ்சால் அலுப்பு மருந்து போன்றவை கொண்டு செல்வேன். அரிதாக மாத்திரை முழுங்கியிருக்கிறேன்.

கடந்த எட்டு ஆண்டுகளாக பாராசிட்டமால் மற்றும் ஜண்டு பாம் கொண்டு வருவதில்லை. நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். கோவிட் காலத்துக்குபின் ஆண்டி பயாடிக் மற்றும் கபசுரகுடிநீர் பொடியை சுமந்து கொண்டிருக்கிறேன். அதுவும் பிறருக்கு உதவும் பொருட்டுதான். திடீரென இதயத்திற்கு என்ன ஆயிருக்கும் என தோன்றும்போதே, ஒண்ணுமில்ல நீ நல்லா இருக்கா எனும் மறு எண்ணம்.

வடபழனியின் சிம்ஸ் மருத்துவமனை மிகப்பெரியதாக இருந்தது. இதய நோயாளிகள் நிறையபேர் பரிசோதனைக்காக காத்திருந்ததை கண்டேன். இரண்டு மணிநேரத்திற்கு பின் ஊழியர் ஒருவர் தனியறையில் மார்பின் மயிர்களை சவரம் செய்து களைந்தார்.

அங்கேயே மார்பு, மார்புக்கு கீழே, முதுகு என பன்னிரெண்டு இடங்களில் பசை கலந்த பட்டன் ஒன்றை ஒட்டியபின் அதனுடன் இணைந்த வயர் டிரட்மில் மற்றும் கணினியுடன் இணைக்கப்பட்டபின் சோதனை தொடங்கியது.

முதலில் வேக நடை. கொஞ்சம் கொஞ்சமாக வேகம் அதிகரிக்கும். நான்காவது ஸ்டேஜில் மலைமேல் ஏறுவதுபோல் கடினமானது. எப்போதும் நடைபயிற்சி, மருந்துவாழ்மலையில் ஏறுதல் என நான் இருப்பதால், இந்த சோதனை எனக்கு எளிதாக இருந்தது. இதயத்தில் ஒரு பிரச்னையும் இல்லை என்றால் மட்டுமே நான் பணிக்கு செல்ல முடியும். என் இதயத்திற்கு ஒன்றும் இல்லைதான். ஆனாலும் என்ன ஆயிற்று எனும் சிறு பதட்டம் ஆழ் உள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

டிரட்மில் சோதனை செய்த பெண்ணிடம் கேட்டேன் “இந்த வயர நெஞ்சில பொருத்தத்துலே, பயந்துருவாங்களே”

“ஆமா ஸார் அப்டி இந்த டெஸ்ட் பண்ணாம போறவங்க நிறையப்பேர் உண்டு” என்றாள்.

சோதனை முடிந்து மருத்துவரை சந்திக்க காத்திருந்தேன். “ஷாகுல் ஹமீது” என்று காதில் சப்தமாக கேட்டது. “ஸார், நீங்களா” என கேட்டுவிட்டு மருத்துவரின் அறைக்குள் போக சொன்னாள்.

டிரட்மில் சோதனையில் வந்த இ சி ஜி நகல் இளம் மருத்துவர் ஒருவர் கையில் இருந்தது. மூத்த மருத்துவர் பிரசாத் அவரிடம் “ஸீ திஸ் இ சி ஜி” எனச்சொல்ல அவர் அந்த கிராப் காகிதங்களால் புரட்டிக்கொண்டே இருந்தார். அதன் ஒரு பக்கத்தை சுட்டி காட்டி மூத்தவர் இளையவரிடம் மருத்துவ மொழியில் விளக்கம் கொடுத்தார்.

நான் மூத்தவரிடம் “டாக்டர் எதாவது பிரச்சனையா” எனக்கேட்டேன். “நத்திங், உங்க டாக்டர் அதைச்சொல்லுவாங்க” என்றார். எனக்கு மருந்துகள் ஏதும் தரவில்லை.

கப்பலில் பணிபுரிய தகுதியுடன் இருக்கிறார் என்ற சான்றிதழ் அவரது கையொப்பமிட்டு, முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து டி நகர் சென்று பாலாஜி மெடிக்கல் சென்டரில் அறிக்கையை கொடுத்தேன்.

மருத்துவர் “ஆல் ரைட் ரிப்போர்ட் வாங்கிகிடுங்க” என்றார்.

“ஹார்ட் டாக்டர் உங்களிடம் கேட்க சொன்னார் என்ன பிரச்னை என” கேட்டேன்.

“ஒண்ணுமில்ல” என சொல்லி சிறிய பற்கள் தெரிய சிரித்தாள். பதிலுக்கு நானும் சிரித்தேன்.

நான் கப்பல் கொண்டு செல்வதற்காக மருத்துவ அறிக்கையை என் கையில் தந்தார்கள். அதை மின்னஞ்சலில் என கப்பல் நிறுவனத்துக்கும் அனுப்புவார்கள். 






சகோதரி புவனாவின் கணவர் பாலா மதிய உணவுக்கு என்னை அழைத்திருந்தார். நாள் முழுவதும் மருத்தவமனையில் கழிந்தது. காலையிலேயே நண்பர் அசோக்கிடம் சொல்லிவிட்டு வந்திருந்தேன் இரவுணவுக்கு அனைவரும் ஒன்றாய் வெளியே செல்லலாம் என.

மாலையில் மிக தாமதமாக பாலாவை அழைத்தேன். கிண்டி ரயில் நிலையம் வந்தார். “வீட்டுக்கு வருகிறேன், ஆனால் பார்த்துவிட்டு உடனே தாம்பரம் செல்ல வேண்டும்” என்றேன்.

“நீங்க வறீங்கன்னு புவனா ரொம்ப எதிர்பார்த்து இருக்கா, வந்துட்டு உடனே போனா அவ ஏமாந்து போய்விடுவாள்” என்றார். அசோக்கை அழைத்து “டின்னர் நாளைக்கி வெச்சிகிடலாம்” என்றேன்.

சுனிதாவை அழைத்து விபரம் சொன்னேன். “எப்பவும் சின்ன புள்ள கிடையாது, மெடிக்கல் போறதுக்கு மின்ன நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு போணும், எங்கயாவது போயிட்டு எவனுக்க கூடயாவது தொங்கிட்டு ராத்திரி எல்லாம் உறங்காம போனா, கொஞ்சமாவது தன்ன பேணிக்கிடாண்டாமா” எனச் சீறினாள்.

மேலும் ...

நாஞ்சில் ஹமீது,

30 -03-2025.

Friday, 4 April 2025

இந்த வாரம் இரு வெள்ளிக்கிழமைகள்

 



இன்று எங்களுக்கு ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி வியாழக்கிழமை, நாளை நான்காம் தேதி வெள்ளிக்கிழமை நாளை மறுநாளும் நான்காம் தேதியாகவே இருக்கும். இவ்வாரம் இரு வெள்ளிக்கிழமைகள்.

முன்பு காணாமல்போன செவ்வாய்க்கிழமை என சன்னிஜாய் நாட்குறிப்பில் எழுதியிருந்தேன். அப்போது அமெரிக்காவிலிருந்து பனாமா கால்வாய் தாண்டி ஆசியாவுக்கு போய்க்கொண்டிருந்தோம்.

மார்ச் மாதம் சைனாவின் இரு துறைமுகங்களில் சரக்கை இறக்கியபின் ஒரு நாள் பயணித்து கொரியாவின் இன்சொனுக்கு அருகில் நங்கூரம் பாய்ச்சி நின்று கப்பலுக்கு எண்ணெய் நிரப்பினோம். எண்ணெய் தரவேண்டிய கப்பல் எங்கள் கப்பலில் ஒரு செல்ல முத்தம் தந்ததால், முழுநாளும் அங்கு நின்று எங்கள் கப்பலை சோதனைசெய்து கப்பல் பயணிக்க தயாராக இருக்கிறது என உறுதியானபின் இருபத்தி ஐந்தாம் தேதி மதியம் கப்பல் புறப்பட்டது பனாமாவை நோக்கி.

இருபத்தி மூன்று நாட்கள் வட பசிபிக் கடலில் பயணித்தால்தான் பனாமாவை அடையமுடியும். கப்பல் ஜப்பானை தாண்டியபின் எங்கள் பயணப்பாதையில் புயல் ஒன்று மையம் கொள்வதால் ஏழு மீட்டர் அலையும் கடுமையான கடல் கொந்தளிப்பும் இருக்கும் என எச்சரிக்கை வந்தது.

காப்டனும் நேவிகேசன் அதிகாரிகளும் கப்பலின் பயணப்பாதையில் சிறு மாற்றம் செய்தபோது கப்பல் சென்று சேர்வதில் இன்னும் இரண்டு நாள் தாமதமானது. அதாவது இருபத்தி ஐந்து நாள் நடுக்கடலில் இடைநில்லா பயணம். பன்னிரெண்டு நாட்களுக்குப்பின் ஹவாய் தீவு கொஞ்சம் தூரத்தில் தெரியும். உத்தேசமாக எட்டாயிரம் மைல்களுக்கு மேல்.

சைனாவில் இருக்கையில் கப்பலின் கடிகாரம் GMT+8 ஆக இருந்தது. தைவானிலிருந்து, ஆஸ்திரேலியாவிற்கும் அங்கிருந்து சைனாவுக்கும் என பயணித்த ஒரு மாதத்திற்கு மேல் கடிகார மாற்றமில்லாமல் இருந்தது. கொரியாவிற்கு வரும்போது ஒருமணிநேரம் முன்னகர்ந்து GMT+9 ஆக மாறியது.

பசிபிக் கடலில் பயணிக்க தொடங்கியபின் இரு தினங்களுக்கு ஒருமுறை கப்பலின் கடிகாரம் ஒரு மணிநேரம் வீதம் முன்னகர்த்தி கொண்டே செல்ல வேண்டும். பனாமாவின் கடிகாரம் GMT-5 ஆகும்.

சைனாவுக்குப்பின் இதுவரை கடிகாரத்தை நான்கு மணிநேரம் முன்னகர்த்தி இப்போது GMT+12 ஆக இருக்கிறது. நாளை இரவு அதாவது ஏப்ரல் நான்காம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு மணிநேரம் முன்னகர்த்தி ஒரு நாள் பின்னால் நகர்த்தபடும்போது கப்பலின் கடிகாரம் GMT-11 ஆகிவிடும்.

அதாவது இந்த பயணத்தில் நூற்றி எண்பது டிகிரியில் சர்வதேச தேதி கோடு இருக்கிறது. அதை தாண்டும்போது மீண்டும் ஒரு நாள் அதிகமாகி விடுகிறது. இந்த வாரத்தில் இரு வெள்ளிக்கிழமைகள். முப்பது நாட்கள் கொண்ட ஏப்ரல் மாதம் எங்களுக்கு மட்டும் முப்பத்தியொரு நாட்களாக இருக்கும்.

எல்லா மாதமும் முப்பது நாட்களுக்கு கணக்கிட்டுத்தான் சம்பளம் தருகிறார்கள். எனவே அதிலும் பலனில்லை. பழைய முறைப்படி வார சம்பளம் வழங்குவதாக இருந்தால் இந்த வாரத்தில் ஒருநாள் சம்பளம் அதிகமாக கிடைக்கும்.

சரியாக கணக்கிட்டால் நாங்கள் சைனாவிலிருந்து பனாமா செல்வது வரை பதினோரு மணிநேரத்தை முன்னகர்த்தி ஒரு நாளை பின்னகர்த்துகிறோம். பதிமூன்று மணிநேரம் மட்டுமே இந்த பயணத்தில் கிடைக்கிறது. கடிகாரம் முன்னோக்கி நகர்த்தும் நாட்களில் ஒரு நாளில் எங்களுக்கு இருபத்தி மூன்று மணிநேரம் மட்டுமே கிடைக்கிறது.

அவ்வாறு இருபத்தி நான்கு மணிநேரம் கொண்ட ஒரு நாளை பின்னோக்கி நகர்த்தி பதிமூன்று மணிநேரத்தை அதிகமாக பெற்றாலும் கணக்கில் ஒரு நாள் அதிகமாக வந்ததாக ஆகிவிடுகிறது. இப்படி கப்பல்காரனுக்கு மட்டுமே கிடைக்கும் அதிசய சுவாரசியங்கள் நிறைய. 

 






அதிலும் அதிசயம் ஏப்ரலில் நான்காம் தேதி கப்பலின் முதன்மை அதிகாரி ஆசிஸ் சௌத்ரிக்கு பிறந்த நாள். நான்காம் தேதியை பின்னோக்கி நகர்த்தி இன்னுமொரு நாள் நான்காம் தேதியாக ஆக்குவதால் இரு வெள்ளிக்கிழமைகள் மட்டுமல்ல இரு பிறந்தநாள் கூட. 



 

உமேஷின் பிறந்த நாள்


மூன்றாம் தேதியான இன்று மோட்டார் மேன் உமேசுக்கு பிறந்தநாள். கேக் வெட்டி கொண்டாடினோம். அவர் சிறு பார்ட்டி கொடுத்தார். முதன்மை அதிகாரி அதிக சம்பளம் வாங்குபவர். டெக் டிப்பாட்மெண்டின் ஹச் ஒ டி. இரு நாள் பார்ட்டியும் (இன்றுதான் நானூறு டாலர்கள் சம்பளம் அதிகரித்த செய்தி வந்தது) ஒரு நாள் விடுமுறையும் கோரினோம்.

அரை நாள் விடுமுறையும் பார்டியும் தருவதாக சொன்னார். இரண்டாவது பிறந்தநாளில் பீர் மட்டும் தருகிறேன் என போசனிடம் சொல்ல அவரும் குஷியாய் தேங்க்யூ ஸார் என்றார். 



 


அவ்வாறு எங்களுக்கு இவ்வாரம் இரு வெள்ளிக்கிழமைகள்.

நாஞ்சில் ஹமீது,

04-04-2025.

Thursday, 3 April 2025

கப்பல்காரனின் நோன்பு பெருநாள் (இதுல் – பித்ர்)






கப்பலில் இருக்கும்போது எனது முக்கிய பண்டிகைகளான ரம்ஜான், பக்ரீத் எப்படி கடந்து சென்றது என்பதே தெரியாது. அன்றும் வழக்கமான பணி நாளாகவே இருக்கும். நான் மட்டுமே இஸ்லாமியனாக இருந்த கப்பல்களில் பண்டிகை தினத்தில் உம்மாவுக்கும், சுனிதாவுக்கும், சகோதரர்களுக்கும் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்வதோடு முடிந்துவிடும்.   

2005 ஆம் ஆண்டு பணியில் இணைந்த முதல் கப்பலில் நோன்பு பெருநாள் அன்று கப்பல் ஈராக்கின் உம்காசர் துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்தது. முதன்மை இஞ்சினியர் பாகிஸ்தானை சார்ந்தவர், எகிப்து நாட்டைச் சேர்ந்த இரண்டாம் இஞ்சினியர், தான்சானியா பணியாளர்கள் என பெரும்பாலானவர்கள் முஸ்லீம்களாக இருந்தோம். முதன்மை இன்ஜினியர் ஆடு ஒன்றை கொண்டு வரச்சொல்லி  கப்பலுக்கு அருகிலேயே அறுத்து  சமைத்தனர்.   

அதே ஆண்டு பக்ரீத் பண்டிகையின் போது அதே நிறுவனத்தின் வேறு கப்பலுக்கு பணி மாற்றம் செய்யபட்டிருந்தேன். பக்ரீத் அன்று கப்பல் துபாயின் போர்ட் ரசீதில் நின்றுகொண்டிருந்தது. காலையில் காப்டன் டாக்ஸி சொல்லியிருந்தார். அவர் பாகிஸ்தானை சார்ந்தவர். அவரும் நானும் தேரா துபாய் பள்ளிவாசலில் தொழுகையை நிறைவேற்றினோம். அங்கிருந்து அஜ்மான் சென்று நண்பர் ஹபீபுடன் நாள் முழுவதும் இருந்துவிட்டு இரவில் கப்பலுக்கு வந்தேன். 

2019ம் ஆண்டு ரமலானில் கப்பல் ஸ்பெயின் நாட்டின் தாராகுணாவில் சரக்கு இறக்கிக்கொண்டிருந்தது. பெருநாள் அன்று இஸ்லாமியர்களாகிய நாங்கள் மூவர் அதிகாலையில் புறப்பட்டு பள்ளிவாசல் சென்று தொழுகையை நிறைவேற்றிவிட்டு கடைக்கு சென்று புத்தம்புதிய தக்காளி, இஞ்சி, புதினா போன்ற காய்களை வாங்கி வந்தோம். ரத்னகிரியை சார்த்த பத்திசாப் பிரியாணி சமைத்தார்.  

2022ம் ஆண்டு சிங்கப்பூர் எனர்ஜி எனும் எல்என்ஜி கப்பலில் காப்டன் மற்றும் அதிகாரிகள் மலேசிய முஸ்லீம்கள், இயந்திர அறையில் முதன்மை இஞ்சினியர் மற்றும் துணை இன்ஜினியர்கள். மெக்கா சென்று வந்த ஹாஜிகளும் கூட. நானும், மலேசிய காஸ் பிட்டர் இந்தோனேசிய ஓ எஸ் உட்பட பதிமூன்று பேர் இருந்தோம். ஈத் பெருநாள் மற்றும் பக்ரீத் தினத்தில் மலேசிய காப்டன் சைனி இமாமாக நின்று பெருநாள் கொத்பாவும், தொழுகையும் நிறைவேற்றினார். கப்பலில் முதன்முறையாக தொழுகை கிடைத்தது.   

இந்த வருட ஈத் பண்டிகை நினைவில் நிற்கக்கூடிய ஒரு நாளாக இருந்தது. மார்ச் மாதம் ஆறாம் தேதி கப்பல் ஆஸ்திரேலியாவின் டாம்பியர் துறைமுகத்துக்கு வந்தபோது பணியாளர் மாற்றம் இருந்தது. காப்டன் பிலிப் மெண்டோசா அருண் தனது துணைவி துருப்லனி ராஜேஷ்பாய் சாவித்யா(DHRUPALINI RAJESBHAI CHAVDIYA)வுடன் பணியில் இணைந்தார்.   


மார்ச் பதினான்காம் தேதி நடந்த ஹோலி பண்டிகைக்கு காப்டனின் மனைவி எங்கள் உணவுக் கூடத்தை மிக அழகாக அலங்கரித்திருந்தார். 


ஒரு பெண் இருக்கும் இடம் பிரகாசமாக இருப்பதையும் ஒவ்வொரு இடத்திலும் பெண்களின் முக்கியத்துவத்தையும் உணர செய்தது. “நீங்க வந்ததும் கப்பல் வெளிச்சமாகிவிட்டது” என்றேன்.   இந்த கப்பலில் நாங்கள் மூவர் இஸ்லாமியர்கள். நானும் இர்ஷாதும்  ஐவேளை தொழுகையை கடைபிடிப்பவர்கள். போசனுக்கு சில உடல்நல சிக்கல் இருந்ததால் நோன்பு வைக்க இயலவில்லை. நோன்பு இருபத்தியைந்தை நெருங்கும்போதே காப்டனின் மனைவி “ஷாகுல் ஜி எப்ப ஈத்” எனக்கேட்டார். “இருபத்தி ஒன்பதாவது நாள் மாலையில் தான் சொல்ல முடியும்”. பிரிட்ஜில் ஒரு நாள் சென்றபோது கையில் இருந்த காகிதத்தை காட்டி “இது என்னனு சொல்லுங்க” எனக்கேட்டதும் மூன்றாம் அதிகாரி ஸ்ரீ “ஜன்னல்” என்றதை கேட்டு நானும் “ஜன்னல்” என்றதும் “உங்களுக்கெல்லாம் சென்ஸ்சே இல்ல” என சொல்லிவிட்டு காப்டனை பார்த்து “பிலிப் இது என்ன சொல்லு” “காப்டன் சாப் சொல்லிராதீங்க, ராத்திரி தூங்க ரூமுக்கு தான் போணும் நீங்க” என சொன்னதை கேட்டு சிரித்துவிட்டு மௌனமாக இருந்தார். தினமும் காலை பணி விவாத கூட்டத்தில் காடட் ஸ்பந்தன் (SAHA PODDER SPANDAN) அட்டையில் வெட்டிய எதையாவது மேஜையில் வைத்திருப்பான். முதன்மை அதிகாரி இது என்ன என்று கேட்டால் “மேடம் தந்தாங்க வெள்ளை பெயின்ட் அடிக்கனுமாம்”. முதன்மை அதிகாரி போசனிடம் அதை கொடுப்பார். காப்டனின் மனைவி செய்தே ஆக வேண்டும்.   

மற்றொரு நாள் நான் பிரிட்ஜில் சென்றபோது “ஷாகுல் ஜி இங்க ஏன் வரீங்க” “தாயி இங்க வர தடை இருக்கா” “இல்ல இல்ல ஆனா நான் செய்றத எல்லாம் பாக்க கூடாது, உங்களுக்கு தான் சர்பிரைஸ் தர வெச்சிருக்கேன்” எனச்சொன்னார் துருவி. “பெருநாளுக்கு என்ன டிஸ் செய்வீங்க” என கேட்கவும், பெருமையாக எங்களூர் இஸ்லாமிய உணவுகளை எடுத்து விட்டேன் “கலத்தப்பம், ஓட்டப்பம், பாலாடை, சுருளப்பம், கிண்ணத்தப்பம், செம்பலுவா” என.   

ரமலானுக்கு மூன்று தினங்கள் முன்பு காலையில் கடும் மழை பெய்தது. டெக் பணியாளர் யாரும் பணிசெய்ய இயலாது. குடியிருப்புக்குள் வேலை செய்ய சொன்னார் முதன்மை அதிகாரி. உணவுக்கூடத்தை சோப்பு கலந்த சுடுநீரில் கழுவி மெழுகு பூசும் பணியில் காப்டனின் மனைவியும் இணைந்து கொண்டு சுத்தப்படுத்தினார். அடுமனைக்கு சென்ற என்னை பார்த்து “உங்களுக்கு வேண்டியதான் கிளீன் பண்ணேன்” என சொல்லி சிரித்தார். “தாயி ஒறும இருக்கும் எப்பவும்” என்றேன்.   சமையல்காரர் ராகுல் மிஸ்திரி “நீ ஏதாவது ஸ்பெஷல் புட் செய்ய போறியா” எனக்கேட்டார். “ஏன்” எனக்கேட்டபோது, “மேடம் சொன்னாங்க நீ உங்க ஊர் ஸ்பெசல் அயிட்டம் செய்ய போவதாக”. “எனக்கு தின்ன தான் தெரியும்” என்றேன். 

சுனிதாவிடம் பாலாடை, கிண்ணத்தப்பம் எப்படி செய்வது என கேட்டு ஒரு நாள் இரவு ஊற வைத்த அரிசியை, அதே அளவு தேங்காய் பால் சேர்த்து அரைத்து ஒரு முட்டையும் அதனுடன் கலக்கி நான்-ஸ்டிக் தவாவில் சுட்டேன். பத்து பாலாடை வந்தது. பண்டிகை தினத்தன்று பாலாடை, கிண்ணத்தப்பம் செய்ய நானும் தயாரானேன். 

ரமலானுக்கு மூன்று தினங்கள் இருக்கும்போது காப்டன் ஈத் பார்ட்டி ஞாயிற்றுகிழமை வைக்கலாமா எனக்கேட்டார். ஞாயிறு மாலையில் நோன்பு இருபத்திஒன்பது அன்று மாலை பிறை தென்பட்டால் தான் திங்கள்கிழமை பண்டிகையே முடிவாகும். ஞாயிறு சாத்தியமேயில்லை என்றேன். சமையல்காரர் மற்றும் மனைவியுடன் விவாதித்தபின் காப்டன் என்னிடம் “அப்ப திங்கள்கிழமை நீ நோன்பிருப்பியா, பார்ட்டி வைக்கும் நாள் பகலில் நீங்க சாப்பிடுவீங்க தானே” “காப்டன் சாப் பெருநாள் என்னைக்கின்னு  ஞாயிறு இரவு தான் முடிவாகும்” எனச்சொன்னேன். 



 சனிக்கிழமை இரவு ஏழு மணிக்கே உணவுக்கூடத்தில் அலங்காரத்தை தொடங்கினார் காப்டனின் மனைவி. மூன்றாம் அதிகாரி ராகுலை உதவிக்கு வைத்து கொண்டு சுவரில் ஒட்டும் அட்டைகளை வெட்டி முன்னரே செய்து வைத்திருத்த பேப்பர் பூக்களையும் ஓட்டினார். இரவு பதினொரு மணிக்கு காப்டன் “துரு மை பாய்ஸ் வான்ட்ஸ் டு ஸ்லீப், ஸ்டாப் டுடே அண்ட் கண்டினுவ் த்டுமாரோ” என விரட்டி விட்டார். காப்டனிடம் “பிலிப் இத கொஞ்சம் வெட்டி கொடு” என துருவி கொடுத்ததை காப்டன் வெட்டிய போது “இதைக்கூட ஒழுங்கா வெட்ட முடியல கெடுத்துட்டியே” என கடிந்தபின் அவரே மீண்டும் வெட்டினார். காப்டனிடம் சொன்னேன் “என் வீட்டிலும் சுனிதா இப்படித்தான் சொல்கிறாள் ஒண்ணும் ஒழுங்கா செய்ய தெரியாது கப்பல்ல எப்டிதான் வெச்சிருக்கானுவளோ”? 

ஞாயிறு மாலையிலும் அலங்காரம் நடந்தது. நான் முடிந்துவிட்டது என எண்ணியிருதேன. அன்று திங்கள்கிழமை பெருநாள் முடிவானதை சொன்னோம். 



இரவு பத்துமணிக்கு மேல் என் அறைக்கதவில் ஈத் முபாரக் வாழ்த்தை ஒட்டி ஒரு பரிசுப்பையும் இருந்தது பெரும் சர்பிரைஸ் தான். பெருநாளன்று அதிகாலை பஜர் தொழுகைக்குப்பின் காலை ஏழரை மணிக்கு இரண்டு ரக்காத் நபில் தொழுதுவிட்டு பணிக்கு சென்றேன். மதியம் பன்னிரண்டு மணிவரை வேலை. காலையிலேயே சமையற்காரர் சேமியா பாயாசம் செய்திருந்தார். அதிகாலை ஆறுமணிக்கு கிண்ணத்தப்பம், பாலாடை செய்ய அரிசியை சுடுநீரில் ஊற வைத்தேன். மதிய உணவுக்குப்பின் அரிசியை மிக்சியில் ஆட்டி கிண்ணத்தப்பம் வேக வைத்தேன். கப்பல் ரோல்லிங்கில் ஆடிக்கொண்டே இருந்ததால் பாத்திரமும், உள்ளே இருந்த திரவமும் வலமிடமாக ஆடத்தொடங்கியது.   

ஒரு மணிக்கே காப்டனின் மனைவி உதவியாளர் ராகுலுடன் வந்துவிட்டார். கடைசி கட்ட அலங்காரம் துவங்கியது. அலங்கார பொருட்கள் பெரும்பாலும் பேப்பரில் வெட்டி ஒட்டியவை, கொஞ்சமாக மரத்திலும் பிஸ்தா செல்லிலும் செய்திருந்தார். பத்து நாட்களுக்கு மேலாக இந்த அலங்காரத்துக்காக அவரது உழைப்பு எங்களால் இயலாதது.



வீட்டிலும் அனைத்து பண்டிகை நாட்களிலும் அலங்காரம் செய்வதாகவும், மிக ஆர்வமும் விருப்பமும் இருப்பதாக சொன்னார். அவர் வாழும் புனேவில் துருவி டெக்கரேசன் பிரைவேட் லிமிடட் ஒன்று துவங்குமாறு சொன்னேன். கடந்த மூன்று ஆண்டுகளாக அதை தானும் யோசிப்பதாக சொன்னார். அவர் ஐந்தரை மணிக்கு மேல் அலங்காரம் முடித்து ஆடை மாற்றி மேக்கப் போட்டு பார்ட்டிக்கு வந்தார். 


நான் அடுமனையில் சமையல்காரருக்கு சிறப்பு உணவுகள் செய்ய உதவிகள் செய்தேன். சிக்கன் சீக் கபாப், துண்டே (மட்டன்) கபாப், காலி மீரி, மலாய் டிக்கா, சிக்கன் பஹடி டிக்கா, சிக்கன் சுக்கா, சிக்கன் தந்தூரி, சிக்கன் டிக்கா, பிரான் மசாலா, பிஷ் கட்லெட், பன்னீர் டிக்கா, கார்ன் சீஸ் பால், பஞ்சாபி  சமோசா, கார்ன் சாட், காரா பாரா கபாப், ரேஸ்மி கபாப், ஆலூ சாட், பிளாக் சன்னா இவற்றுடன் சர்பத் கலந்து வைத்திருந்தார். 

எனது கிண்ணத்தப்பம் அடிப்பாகம் சரியாக வேகவில்லை. பாலாடை தவாவிலிருந்து இளகவே இல்லை விடாப்பிடியாக ஒட்டி பிடித்தது. என்ன தவறு என புரியவேயில்லை. பாலாடையுடன் ஒரு மணிநேரத்துக்கு மேல் போராடியபின் ஏழு மட்டுமே வந்தது. ராகுல் மிஸ்திரி “லேட் ஆயிட்டு போய் டிரஸ் மாத்திட்டு பார்ட்டிக்கு வா, ஒரு ஸ்வீட் செய்திருக்கா போதும்” என்றார். மீதி மாவை மனதை கடினப்படுத்தி கொண்டு குப்பையில் கொட்டினேன்.
வழக்கமாக பண்டிகை நாட்களில் கப்பலில் இருக்கும்போது என்னிடம் இருக்கும் உடையில் நல்லதை உடுத்துவேன். இம்முறை சுனிதா "ரெண்டு பெருநா ரெண்டு டிரஸ் புதுசா வாங்கிட்டு போங்க" என்றாள். இன்று ஜட்டி, பனியன் முதல் அனைத்தும் புத்தாடை அணிந்திருந்தேன்.  


காப்டன் அனைவரிடமும் வெண்ணிற ஆடை அணிந்து வரச் சொன்னதோடு, மாதம் முழுவதும் நோன்பிருந்தவர்களை நாம் கண்ணியப்படுத்தவேண்டும் “சோ டுடே நோ பீர் அண்ட் வைன்” என்றார். கப்பலில் நடக்கும் பார்ட்டிகளில் பீரும் வைனும் உண்டு. இந்த ரமலான் பண்டிகை நாளில் துளி கூட மது பரிமாறப்படவில்லை. ராகுல் மிஸ்திரி “வித்அவுட் ஆல்ககால் கூட பார்ட்டி வைக்க முடியும்” என வியந்தார். வாழ்த்துகளை பரிமாறி குழு புகைப்படம் எடுத்துகொண்டோம். 



இன்று காப்டன் மனைவி செய்திருந்த அலங்காரமும் அதிலிருந்த விளக்குகளும், அந்த மேஜையில் உணவு பொருட்களை அடுக்கிய விதமும் கொண்டாட்டத்தின் உச்சம். 



காப்டன் எனது கிண்ணத்தப்பம் சுவையாக இருப்பதாக சொன்னார். முதன்மை அதிகாரி நீ செய்வதாக சொன்ன அப்பம் எங்கே எனக்கேட்டார். 




பார்ட்டி முடிந்து ஒரு ஹார்ஸ் ரேஸ் எனும் கேம் விளையாடி அனைவரும் பிரிந்தோம்.   “கப்பல் பணியில் இணைந்து இந்த மே மாதம் இருபது ஆண்டுகளை நிறைவு செய்ய போகிறேன், இந்த ரமலான் என்றும் நினைவில் இருக்கும்படி செய்து விட்டீர்கள்” என்றேன். “நீங்க ஹாப்பியா” எனக் கேட்டார். 

 நாஞ்சில் ஹமீது, 
02 April 2025.

Thursday, 27 March 2025

ரமலான் இருபத்தி ஏழாம் இரவு

ரமலான் துவங்கி இருபத்தி ஆறு நாட்கள் முடிந்து இருபத்தி ஏழாவது நாள் துவங்கியது. இருபத்தி ஏழாம் இரவுதான் லைலத்துல் கத்ர் இரவு என பெரும்பான்மையானவர்களால் நம்பப்படுவதால் இன்றிரவு முழுவதும் விழித்திருந்து, தொழுகையும் திக்ரும் என அதிகப்படியான வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு இறைவனிடம் மன்னிப்பும் நன்றியும் சொல்லும் இரவு. இந்நாளிரவு ஆயிரம் இரவுகளுக்கு சமம். செய்யும் ஒவ்வொரு நன்மையான காரியங்களுக்கும் ஆயிரம் மடங்கில் நன்மைகளை அல்லாஹ் வழங்குகிறான். இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் ரமலான் நம்மை விலக போகிறது. இனி ஓராண்டு காத்திருக்கவேண்டும் புனித ரமலானை எதிர்பாத்து. பெரும்பாலான பள்ளிவாசல்களில் மக்கள் இன்றே ஒரு விழா மனநிலைக்கு வந்து விடுகிறார்கள். சிலர் புத்தாடை அணிந்து இரவு தொழுகைக்கு வருவார்கள். ரமலானில் கடைசி பத்து நாட்கள் இப்திகஃப் இருப்பது சிறப்பு.
பள்ளிகளில் இப்போது இப்திகஃப் இருப்பது வெகுவாக குறைந்து வருகிறது. இரு ஆண்டுகளுக்குமுன்  நான் வடசேரி பள்ளிவாசலில் இப்திகஃப் இருந்தேன். அதிகாலை சகர் உணவு அங்கேயே தருவார்கள். மாலையில் நோன்பு முடிந்து கஞ்சியும் கிடைக்கும். இரவு இஷா தொழுகைக்குப்பின் சிறப்பு தொழுகையான தராவீஹ் தொழுகை முடிந்து பயான். இரவு பதினோரு மணிக்கு தூங்கினால் அதிகாலை இரண்டு மணிக்கு முன்பே எழுந்து தயாராகி தகஜத் தொழுகை மூன்று மணிவரை. சகர் உணவுண்டு அதிகாலை பஜர் தொழுகைக்குப்பின் ஆறு மணிக்குமேல் பள்ளிவாசலிலேயே தூக்கம். பத்து மணிக்கு முன்பே எழுந்து குளித்து ஆடைகளை துவைத்து இரண்டு ரக்காத் லுகா தொழுதபின் குரான் ஓதுதலும், திக்ர் செய்தலும் மட்டுமே. யாரிடமும் பேசவோ, கண்களை சந்திக்கவோ கூடாது. ஆறு நாட்களில் மனம் ஒடுங்கி ஒருநிலைபட்டு  அமைதியை அடைந்திருந்தேன். இருபத்தி ஏழாம் இரவு மக்ரிப் தொழுகைக்குப்பின் மல்லிகை பூவால் உள் பள்ளிவாசலை அலங்கரிக்க தொடங்கினார்கள். அந்த வாசனை நுரையீரலை நிறைத்து(நெஞ்சடைத்து) ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இரவு ஒன்பது மணிக்குமேல் என்றுமில்லாத பெரும் திரள் பள்ளிவாசலை நிறைத்தது. ஒரே இரவில் ஆயிரம் இரவின் நன்மையை அடைந்துவிடும் ஆசைதான். ஒரு விழா மனநிலை அனைவருக்கும்.  நான் அமைதியை இழந்தேன். அதிகாலை பஜர் தொழுகைக்குப்பின்  கூட்டம் கலைந்து பள்ளி வெறிச்சோடியது. என் அமைதி கலைந்த அந்த இரவின் சிறப்பு தொழுகையில் மனம் ஒன்றவேயில்லை. அந்த ஆண்டு இப்திகஃப் முடிந்த நாளில் எண்ணினேன். வரும் ஆண்டுகளில் ரமலானில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இப்திகஃப் இருக்கவேண்டும். ஆனால் இருபத்தி ஏழாம் இரவில் மட்டும்  வீட்டிற்கு சென்று தனிமையில் பிரார்த்தனை செய்துவிட்டு மறுநாள் பள்ளிவாசல் வந்தால் இப்திகஃப்பில் பெற்ற அமைதியை தக்க வைத்து கொள்ள முடியும் என. இந்த புனிதமான நாளில் இறைவனை இறைஞ்சி வணங்குபவர்களின் பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்றுகொள்ளட்டும். 27 march 2025, நாஞ்சில் ஹமீது.

Wednesday, 26 March 2025

கப்பல்காரனின் நோன்பு நாட்கள்

இவ்வாண்டின் புனித ரமலான் மாதம் (மார்ச் ஒன்றாம் தேதி) துவங்கியது. ரமலானில்  நோன்பிருப்பது இஸ்லாமியர்களின் கடமை. இம்முறை கப்பலில் நாங்கள் மூவர் இஸ்லாமியர்கள். கேரளாவை சார்ந்த போசனுக்கு நோன்பு வைக்குமளவுக்கு உடல் நலமில்லை. உத்திரபிரதேசத்தை சார்ந்த இர்ஷாத் கண்டிப்பாக நோன்பு இருப்பேன் என்றார். மாறிக்கொண்டிருக்கும் கடிகாரம், தட்பவெப்ப நிலை காரணமாக கப்பல்காரர்கள் நோன்பு வைப்பது  பெரும் சிரமம். இயந்திர அறை பணியாளர்களாக இருந்தால் நிச்சயமாக முடியாது. இயந்திர அறையின் வெப்பம் ஐம்பது பாகை அல்லது அதற்கு மேலும் உயர்ந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.


ரமலான் முதல் நோன்பு துவங்கிய நாளில் ஓய்வாக இருந்தேன் ஞாயிறாக இருந்ததால். கப்பல் தைவானிலிருந்து வடமேற்கு ஆஸ்திரேலியாவின் டாம்பியர் துறைமுகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. பூமத்தியரேகையை ஒட்டிய பாதை கடும் வெப்பமான நாட்கள். முதல் நாள் எதுவுமே தெரியவில்லை. அதிகாலை நான்கு நாற்பதுக்கு நோன்பு துவங்கி மாலை ஆறு நாற்பதுக்கு சூரியன் மறைந்தபின் நோன்பு திறந்தோம். இர்ஷாத் அவரது அறையில் சர்பத், தர்பூசணி பழம் வைத்திருந்தார். சமையல்காரர் ராகுல் நோன்பு காலத்தில் தேவையான எது வேண்டுமானாலும் வாங்கி கொள்ளுங்கள் என்றார். அவரே ஒரு டப்பா நிறைய பேரீத்தம் பழங்களும், கொஞ்சம் பதாம் கொட்டைகளும் தந்தார்.

 

நான் அதிகாலை சகர் உணவுக்கு கொஞ்சம் வெள்ளை சாதம் வடித்து, பருப்பு குழம்பும் சமைத்தேன். லெட்டூஸ், காரட், வெள்ளிரிக்காய் கலந்த சாலடும். இரண்டாம் நாள் டெக்கில் பணி கடுமையான சூரியனின் வெப்பத்திலிருந்து தப்பிக்கவே இயலாத இடத்தில் வேலை. ஆஸ்திரேலியாவில் சரக்கு நிறைக்கும் குழாயில் உரிய ரிடியுசரை பொருத்துவது. மொத்தம் நான்கு ரிடியூசர்கள்.

 நானும் காஸ் இஞ்சினியர் சதாசிவ்வும் எட்டரைக்கே பணியைத் தொடங்கினோம். பத்து மணி தேநீர் இடைவேளை அரை மணிநேரம் அறைக்கு வந்து ஓய்வாக இருந்தேன். சூரியனிடம் சொன்னேன் “நோன்பு வைத்திருக்கிறேன் பிரேக் முடிந்து திரும்பிவரும்போது மேகத்தை புடிச்சி இடையில் உட்டு கொஞ்சம் சூட்ட குறை” என. பத்தரை மணிக்கு திரும்பி வருகையில் இன்னும் உக்கிரமாக இருந்தது சூரியன் தலைக்குமேல். “ஷாகுல் ஜி தண்ணி கூட குடிக்க கூடாதா உங்க நோன்புக்கு” எனக்கேட்டார் சதாசிவ்.

  

ஆறு, ஏழாவது நோன்பு நாட்களில் ஆஸ்திரேலியாவில் சரக்கு நிறைத்தோம். அந்நாட்களில் எனக்கு 6ஆன் 6 ஆப் என பன்னிரெண்டு மணி நேரத்துக்கு  மேல் பணி. சதாசிவ்விடம் மாலை ஏழு மணி வரை பணியில் இருக்க வேண்டினேன். ஆறு நாற்பதுக்கு நோன்பு திறந்து மக்ரிப் தொழுதுவிட்டு டெக்கில் சென்று அவரை விடுவித்தேன். எட்டு மணிக்கு மெஸ் ரூமில் அன்றைய டின்னருக்கான உணவை சாப்பிடுவேன். நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு பணி முடிந்து இரவுறங்க ஒரு மணியை தாண்டிவிடும். அதிகாலை மூன்றரைக்கு அழைப்பான் வைத்து எழுந்து சகர் உணவு உண்ண செல்வேன். 


இர்ஷாத் “சப்பாத்தி வேண்டாமா”? எனக் கேட்டார்.


“வேண்டாம், சோறு போதும்”


“வீட்ல என்ன சாப்புடுவீங்க”


“சோறுதான்”


“சப்பாத்தி செய்ய மாட்டீங்களா”?


“எப்பாவாதது செய்வோம்” என்றபோது சிரித்தார்.

 

அதிகாலை தொழுகைக்குப்பின் திக்ர் முடிந்து ஐந்தரைக்கு நேராக கட்டுப்பாட்டு  அறைக்கு சென்று சதாசிவ்வை ஓய்வுக்கு போகச் சொன்னேன். மதியம் பன்னிரெண்டு மணிவரை பணி. ஆஸ்திரேலியாவில் இருக்கும்போது வெப்பம் நாற்பத்தியிரண்டு பாகை வரை சென்றது. அறையில் மின்விசிறி சுழலவிடாமல் அமர இயலவில்லை.


நாள் முழுவதும் நோன்பிருந்து  முடியும் வேளையை எதிர்பார்த்து இருந்தபோது

வானில் மேகங்கள் நிறைந்து கதிரவன் காணாமல் போகும்போது சிரமம்.  “இன்னைக்கு ஆறு இருபத்தி மூணு இன்னும் சூரியன் மறையல்ல, கீழ வந்த பொறவும் மேகம் மறச்சிட்டு, ஐஞ்சி நிமிஷம் கழிச்சி நோன்பு திறப்போம், நாமோ பயணத்துல இருக்கோம் உண்ணிஸ் பீஸ் சலேகா அல்லாஹ் நம்மளை மன்னிப்பான்” என சொல்லிவிட்டு இர்ஷாத் என் முகத்தை பார்ப்பார். “நல்ல இருட்டியாச்சி சூரியன் மறஞ்சிருக்கும் நோன்பு திறப்போம்” என சொல்வேன். “இன்னும் ரெண்டு நிமிஷம்” என்பார்.


முகில் நிறைந்த வானில் சூரியன் மறைந்ததை தெரியாமல் தவித்தபோது

எளிதில் ஜீரணமாகும் கஞ்சியே எனக்கு உகந்தது நோன்புக்கு பின் சாப்பிட. நேரம் சரியாக அமையவில்லை ஆரம்ப நாட்களில் கஞ்சி வைக்க. ஐந்தரை மணிக்கு அடுமனைக்கு போய் மதியமுள்ள சோற்றை மிக்சியில் அடித்து மூன்று நாட்கள் கஞ்சிவைத்தேன். அது கஞ்சியாகவே இல்லை. சுனிதா சொன்னாள் “அரிசியை பொடித்து கஞ்சி வையுங்க” என. பின்பு மூன்று தினங்கள் கஞ்சி நன்றாக வந்தது.


நோன்புக் கஞ்சி

பதினெட்டாவது நாள் நோன்பில் சைனாவின் யாந்தாய் துறைமுகத்தை அடைந்தோம். கடுமையான குளிர் இங்கே வெப்பம் ஆறு டிகிரியாக இருந்தது. அறையின் வெப்பம் குறைந்து பதினைந்து டிகிரிவரை சென்றது. பகலில் கெட்டியான ஜாக்கெட் அணைந்து சூரிய ஒளி உடலில் நன்றாக படும்படி அமர்ந்திருந்தேன். இரவில் வெப்ப ஆடைகளை அணிந்து இரு கம்பளி போர்வைகளுக்குள் தூங்கினேன். நோன்பு வைத்திருக்கிறேன் என தெரியவேயில்லை. காப்டனின் மனைவி “நோன்புன்னா சாப்பிட மாட்டீங்களா? அப்ப எப்டி வேலை செய்றீங்க” 


சாகர் பாட்டில் “மேம் தண்ணி கூட குடிக்க கூடாது”


“அதெப்படி முடியும், என்னால நினச்சி கூட பாக்க முடியல”  என சொன்னவள் இரு தினங்களுக்குப்பின் “ஷாகுல் ஜி உனக்கு தலை சுற்றி கீழ உழுந்திருவேன் என தோணாதா” என கேட்டாள். அருகிலிருந்த பயிற்சி இஞ்சினியர் துர்வேஷ் “மேம் சின்ன புள்ளையா இருக்கும்போதே நோன்பிருப்பாங்க நான் ஆறாம் கிளாஸ் படிக்கும்போது என் பிரண்ட் எல்லாம் இருப்பான்” என்றான். அவருடைய நட்பு வட்டத்தில் இஸ்லாமியர் யாரும் இல்லை என தெரிந்தது.

  

ரமலான்  நோன்பு பற்றிய விளக்கத்தை கொடுத்தேன். “அப்ப நோன்பாளியின் துவா பவர் புல், என்னையும் உங்கள் துவாவில் மறக்காமல் சேர்த்து கொள்ளுங்கள்” என வேண்டினார்.

 

ரமலானின் கடைசி பத்தில் இருக்கிறோம். இன்னும் ஐந்து அல்லது ஆறு நாட்கள்தான் ரமலான் நம்மை விட்டு விலகிவிடும். பகல் முழுவதும், உண்ணாமலும், பருகாமலும் இருந்ததோடு நான் நோன்பு வைத்திருக்கிறேன் எனும் உணர்வு இருந்துகொண்டே இருந்தது. கடமையான ஐவேளை தொழுகை போக அதிகப்படியான தொழுகையும், திக்ர்ம் செய்து குரானும் ஓதினேன். குறிப்பாக எவரிடமும் கடுஞ்சொல் சொல்லாமல் (கொஞ்சம் சிரமம்தான்) பாதுகாத்துக் கொண்டேன். நண்பர்கள் நிறையபேர் தங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக துவா செய்யுமாறு கேட்டுக்கொண்டார்கள். மனதில் எண்ணங்களை நன்றாக வைத்துகொள்ளுவது சற்று கடினம். கப்பலில் கண்களை பாதுகாக்க வேண்டிய தேவையே இல்லை. இங்கே பணிபுரியும் இருபத்திமூன்று முகங்களும் வெட்டவெளியும், சுற்றிலும் பெரும் நீர்ப்பரப்பும், இரவில் இருள் வானில் ஜொலிக்கும் நட்சத்திரங்களும்தான் காட்சி, வேறு காட்சிகளே இல்லை. அதனால் பிற எண்ணங்களுக்கு தூண்டுதல் என்பதே இல்லை. 

 

கப்பல்காரனுக்கு மனம் தூய்மையடைய உகந்த இடம் கப்பல்தான். சைனாவில் இருக்கும்போது காப்டன் கேட்டார் “ஷாகுல் வெளிய போகலியா” என.

“நோன்பு வெச்சிருக்கேன்” என்றேன். 

நான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தியானமும், தத்துவமும் கற்றுகொண்டபோதே உணர்ந்தேன் கண்களை மட்டும் பாதுகாத்து கொண்டால் போதும் உயர்நிலையை எளிதில் அடைந்து விடலாம் என்பதை. ரமலானின் நோன்பு காலம் ஒரு நல்வாய்ப்பு. இருபத்திநான்கு நோன்புகள் முடிந்து இன்று இருபத்தி ஐந்தாவது நாள் இரவு. இன்று லைலத்துல் கத்ர் இரவாக இருக்க வாய்ப்புண்டு. அந்த எண்ணத்தோடு இரவுறங்க செல்கிறேன்.


24-march -2025,

நாஞ்சில் ஹமீது.


தொடர்புடைய பதிவு: லைலத்துல் கத்ர்