கோலாலம்பூர் விமான நிலையத்தில் இறங்கியதும் ரைமுண்டோ ,பாட்டீலிடம் சொன்னேன். “எனது டிக்கெட்டை திருவனந்தபுரத்திற்கு மாற்ற முடியுமா பார்க்கிறேன்” என விரைந்து மலேசிய ஏர்லைன்ஸ் உதவி மையத்திலிருந்த பெண்ணை அணுகினேன். அதற்கான கவுண்டரை கை காட்டினாள்.
எனது டிக்கெட்டை கொடுத்து “இது கோலாலம்பூர் – மும்பை, இதை கோலாலம்பூர் –திருவனந்தபுரத்திற்கு மாற்ற முடியுமா”?
மும்பை விமான சீட்டின் விலையில் பாதிக்கும் குறைவான கட்டணமே திருவனந்தபுரத்திற்கு இருந்ததை இணைத்தில் பார்த்திருந்தேன். நிர்வாக கட்டணமாக அறுபத்தியாறு மலேசிய ரிங்கிட் மட்டும் பெற்றுக்கொண்டு டிக்கெட்டை மாற்றி தந்தார்.
கையில் மலேசிய பணம் இல்லை இந்திய முக சாயலில் இருந்த ஒரு பயணியிடம் ஹிந்தியில் பேசி அமெரிக்க டாலரை கொடுத்து மலேசியா பணம் தருமாறு வேண்டினேன். அமெரிக்க டாலரை பார்த்த அவர் “இது எந்த நாட்டு பணம்,இதன் மதிப்பு என்ன”என கேட்டவிட்டு என்னை பார்த்தார். பதிலுக்கு,சிரித்தேன்.
ரைமுண்டோவை போனில் அழைத்தேன். மும்பை செல்லும் விமானம் ஏழரைக்கு அதலால் அவர்களை போக சொன்னேன்.எங்கள் மூவருக்குமான குடியுரிமை கடிதம் ஒன்றாக இருந்ததால் நான் தனியாக செல்ல முடியாது என விவரித்தார்.
கவுண்டரில் பணத்தை கட்டிவிட்டு விரைவாக சென்று பயணபைகளை அளித்துவிட்டு குடியுரிமை சோதனைக்கு சென்றோம். எனக்கு பதினொன்றரை மணிக்குதான் விமானம். ஆனால் மூவரும் ஒன்றாக குடியுரிமை சோதனையை முடிக்க வேண்டும். காசிமேடு மீன் கடையை போல பெருங்கூட்டம் நின்றுகொண்டிருந்தது. மொத்தமே பதினோரு கவுண்டர்கள் மட்டுமே அங்கிருந்தது.
மூத்த குடிமகன்கள் மாற்று திறனாளிகளுக்கென இருந்த கவுண்டர் ஆலொளிந்து கிடந்தது. பாஸ்போர்ட்டுடன் அந்த அதிகாரியை அணுகி “விமானம் புறப்பட இன்னும் சிறிது நேரம்தான் இருக்கிறது” எனச்சொன்னேன். “அதனானென்ன வரிசையில் போய் நில் என”கறாராக சொன்னார். மெதுவாக நகர்ந்துகொண்டிருந்த வரிசை கொஞ்சம் விரைவாக நகர்ந்ததில் சரியான நேரத்தில் பாட்டீலும்,ரைமுண்டோவும் மும்பை விமானத்தில் ஓடிச்சென்று ஏறிக்கொண்டனர்.
நான் சுனிதாவை அழைத்து டிக்கெட் மாற்றிய விபரம் சொல்லி இரவிலேயே விமான நிலையம் வரச்சொன்னேன். மும்பையில் ஏழு மணிநேர காத்திருப்பு பின் இரண்டு மணிநேர பயணம் மிச்சம்.காப்டன் மிக எளிதாக மாற்றியிருக்க முடியும். அவர் அதை செய்யவில்லை.
தொழுகை கூடத்தை கண்டைந்து மக்ரிப் தொழுதபின் நல்ல பசி நாசி லெமாக் எனும் மலேசிய உணவை ஆர்டர் செய்தபின் விமான நிலைய ஊழியர் சொன்ன இருக்கையில் காத்திருந்தேன். அரை மணிநேரமாகியும் எனக்கான உணவு வரவில்லை. என் எதிரில் வந்தமர்ந்த ஐரோப்பியர் உணவுண்டு எழுந்து சென்றார்.
எனது பில்லை கொடுத்து கேட்டேன் உணவு பரிமாறும் பெண்ணிடம். “ப்ளீஸ் வெயிட்” என புன்னகைத்துவிட்டு சென்றாள். கவுண்டரில் சென்று நாற்பது நிமிடங்கள் ஆகிறது. உணவு வேண்டாம் பணத்தை கொடு என்றேன். பில்லை வாங்கி பார்த்தவர் அடுமனை சென்று பேசிவிட்டு. சற்று அமருங்கள் என்றார்.
எதற்காக இவ்வளவு தாமதம் என கடிந்தபோது எனது உணவு அரை மணிநேரத்திற்கு முன்பே வேறொருவருக்கு பரிமாறபட்டு ஜீரணமாகியிருந்தது தெரிந்தது. பில்லில் இருந்த மேஜை எண் வேறு. உணவக ஊழியர் சொன்ன மேஜையில் இருந்தது என் தவறல்ல. பில்லில் அமர வேண்டிய மேஜை எண்ணை பார்த்து அமர வேண்டுமென்பதும் அப்போது தான் எனக்கும் தெரிந்தது. அரிசி சாதம்,அவித்த முட்டை,வெள்ளரிக்காய்,பொரித்த நிலக்கடலை,அப்பளம் மாட்டிறைச்சி தொவுட்டல் என சுவையான நாசி லெமாக் உண்டபோது பசியடங்கியது.
பதினொன்றரைக்கு விமானம் இரு முறை விமான நிலையத்தை சுற்றி வந்தபோது நேரம் கடந்திருந்தது. மூன்றரை மணிநேரத்தில் திருவனந்தபுரம். ஸாலிமும்,சல்மானும் வெளியே காத்திருந்தனர். பாஸ்கரன் அண்ணன் கார் ஒட்டி வந்திருந்தார். பாட்டீலை அழைத்தபோது வீட்டிற்கு சென்று கொண்டிருப்பதாக சொன்னார். கோலாலம்பூர் –மும்பை ஐந்து மணி நேர பயணம்.களியக்காவிளையில் நிறுத்தி கட்டன் சாயா குடித்தோம்.
அதிகாலை மூன்று மணிக்கு வீடு,தூக்க கலக்கத்தில் சுனிதா கதவை திறந்தபோது எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை. சல்மான் “பூச்சய கண்டாலே சந்தோஷ படுவா,வாப்பா எட்டு மாசம் கழிச்சி வீட்டுக்கு வருது உனக்கு சந்தோசமே இல்லையா” என கேட்டான். சுனிதா சிரித்துவிட்டாள்.
நாஞ்சில் ஹமீது.
No comments:
Post a Comment