கப்பலில் உணவு குறித்து சில பதிவுகள் விரிவாக எழுதியுள்ளேன்.அதில் மிக முக்கியமானது கடந்த ஆண்டு எழுதிய ஷோர் லீவ் எனும் கட்டுரைகள். நான் இப்போது ஞாயிறுகளில் காலை ஒரு கருப்பட்டி சுக்கு காப்பி போட்டு குடித்தால் மதியம் பிரியாணிக்குப்பின் உணவுண்பதில்லை. மற்ற தினங்களில் மதியம் பெரும்பாலும் சாதம் சாப்பிடுவதில்லை மீன் அல்லது இறைச்சியுடன் சாலட் மட்டும். இரவுணவு சூப்,இரு சப்பாத்தி.ஆனாலும் வயிறு தள்ளி எடை கூடியிருக்கிறது.நான்கு கிலோ கூடி அறுபத்தி ஏழாக இருக்கிறது.
இரண்டாயிரத்தி ஆறாம் ஆண்டு இந்த நிறுவனத்தில் சேர்ந்தது முதல் கார் ஏற்றும் கப்பல்களில் பத்து ஆண்டுகள் வேலை செய்தேன். 2010 ஆம் ஆண்டில் பணியிலிருக்கும் போது ஆந்திராவின் ராஜுவின் மனைவி ஹைமா மகளுடன் கப்பலுக்கு வந்திருந்தாள். அந்த கப்பலில் இருந்தவர் கேரளாவின் கிருஷ்ணா. நன்றாக சமைப்பார். ஹைமா கேட்டாள் “நீங்கெல்லாம் எப்டியாக்கும் இந்த சாப்பாட திங்குதியோ”?என. அவள் கப்பலுக்கு வந்து ஒரு மாதத்தில் சொன்னாள். ஊறுகாய் குப்பி மட்டும் இல்லையென்றால் நான் பட்டினிதான் இருக்க வேண்டுமென.
அப்போது அங்கே எல்,பி.ஜி கப்பல்களிலிருந்து பணிக்கு வருபவர்கள் எல்.பி.ஜி கப்பல்களில் சாப்பாடு பிரமாதம் என்றார்கள். நான் 2016 இல் எல்பிஜி கப்பலுக்கு பணிக்கு வந்தேன். முதல் கப்பலிலேயே தெரிந்தது இங்குள்ள சாப்பாடு எப்படி என.
கப்பலில் சாப்பாடு சமையல்காரர் மற்றும் காப்டனை சார்ந்தது.சில திறமையான சமையல்காரர்கள் கூட மோசமாக சமைப்பார்கள். சில நேரங்களில் உணவு பொருட்கள் தட்டுப்பாடும் ஒரு காரணம். காப்டன் ஆக வருபவர்களுக்கும் கேட்டரிங் பற்றி கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும் என நான் நினைப்பதுண்டு.
இப்போதெல்லாம் பெரும்பாலும் நான்கைந்து நாடுகளை சேர்ந்த பணியாளர்கள் கப்பலில் இருக்கிறார்கள். அனைவரையும் சமையற்காரர் திருப்தி படுத்த முடியாது என்பது உண்மையும் கூட.
கப்பலில் மொத்தமிருக்கும் இருபது முதல் இருபத்தியைந்து பேரில் ஐந்து நாட்டவர் இருந்தால் சமையல்காரனுக்கு சிரமம்தான்.ஒரு சமையல்காரரர் உதவிக்கு ஒரு மெஸ்மேன் மட்டுமே. அனைவருக்கும் மூன்று வேளையும் சமைப்பது சமையல்காரர். மெஸ்மேன் வெங்காயம்,பூண்டு உரித்து,சாலட் நறுக்குவதோடு சரி. மெஸ்மேனுக்கு வேறு நிறைய பணிகள் உண்டு.
இப்போது நான் இருக்கும் கப்பல் எல்.என்.ஜி வகையை சார்ந்தது இங்கே முதன்மை சமையர்காரர்.இரண்டாம் சமையல்காரர் ஒரு மெஸ்மேனும் உண்டு. காப்டனும்,முதன்மை இஞ்சினியரும் கொரியர்கள். கப்பல் கொரிய நாட்டுக்கு சொந்தமான நிறுவனம். அதனால் அவர்கள் உத்தரவு அது.
இங்கு மொத்தமுள்ள 29 பணியாளர்களில் மலேசியா,பங்களாதேஷ்,இந்தோனேசியா,பிலிப்பைன்ஸ்,இலங்கை,இந்தியர்கள் என அதிகாரிகளும்,பணியாளர்களும் உள்ளோம். பிலிப்பைன்ஸ் நாட்டவர் எண்ணிக்கையில் அதிகம் பத்துபேர் அதில் இரண்டாம் சமையல்காரனும்,மெஸ்மேனும் அடக்கம். கொரியர்களுக்கும், பிலிப்பினோ களுக்கும் இரண்டாம் சமையல்காரர் சமைப்பார்.அதையே மலேசிய,இந்தோனேசியர்களும் விரும்பி உண்பார்கள்.
இந்தியர்கள் மொத்தம் எட்டுபேர். தலைமை சமையற்காரருக்கு மிக குறைவான வேலை.ஆனால் இங்கே கடந்த ஆறு மாதமாக ஒரே விதமாக சமைக்கிறார். சமையல்காரர் கோவாவின் ரைமுண்டோ இருபத்தியைந்து ஆண்டு அனுபவமுள்ளவர்.
திங்கள் காலை போகா – அவல் தாளித்து மஞ்சளும் கடலையும் சேர்த்தது. மதியம். சாதம்-பருப்பு-கூட்டு –பொரித்த மீன், சாலட்.இரவு சூப் சப்பாத்தி-கூட்டு-கோழி குழம்பு.
செவ்வாய் காலை ஊத்தப்பம்- சட்னி.மதியம் சாதம்-பருப்பு-கூட்டு-பொரித்த மீன் சாலட் . இரவு சூப் சப்பாத்தி-கூட்டு-கோழி குழம்பு வடிவம் மாறியது.
புதன் காலை-உள்ளி வடை.மதியம் சாதம்-பருப்பு-கூட்டு-மாட்டிறைச்சி குழம்பு சாலட். இரவு சூப் சப்பாத்தி-கூட்டு-கோழிக்கறி.
வியாழன் காலை சீஸ் பிரட்- மதியம் சாதம்-பருப்பு-கூட்டு-பொரித்த மீன் சாலட் . இரவு சூப்,சப்பாத்தி-கூட்டு-கோழி குழம்பு வடிவம் மாறியது.
வெள்ளி காலை-உப்புமா மதியம் சாதம்-பருப்பு-கூட்டு-ஆட்டிறைச்சி சாலட் . இரவு சூப் சப்பாத்தி-கூட்டு-கோழி குழம்பு வடிவம் மாறியது.
சனி காலை-இட்டலி சாம்பார் மதியம்- சாதம்-பருப்பு-கூட்டு-பொரித்த மீன் சாலட்.இரவு சூப் பீப் ஸ்டேக்,சிக்கன் ஸ்டேக்,ப்ரோக்கொலி,கார்லிக் பிரட்.
ஞாயிறு காலை- நூடுல்ஸ், மதியம் சிக்கன் பிரியாணி இரவில் பிட்ஸா அல்லது பர்கர் ஐஸ் கிரீம்.
பிலிப்பினோ விதவிதமாக சமைக்கிறான். பெரும்பாலும் அதில் பன்றி கறியும்,மாட்டிறைச்சியும் இருப்பதால் இந்தியர்கள் தொடுவதில்லை.கணவாய்,இறால் இருக்கும் நாட்களில் நானும்,போசனும் எடுத்துக்கொள்வோம்.
ஆறு மாதமாக மாறாத ஒரே மாதிரியான உணவு. உணவு மேஜையில் எப்போதும் ஒரே புலப்பம். நான் ஒரு முறை சொல்லி இரவுணவில் ஆலு பரோட்டா செய்தார். போசன் பூரி செய்ய சொன்னபோது எல்லோருக்கும் சேர்த்து செய்வது இயலாது என்றார். சோம்ராஜ் தோசை வேண்டுமென கேட்டான் வாய்ப்பே இல்லையென மறுத்துவிட்டார் ரைமுண்டோ. இந்த கப்பலில் ரைமுண்டோ எட்டு பேருக்கு மட்டும் சமைத்தால் போதும்.
நான் ஜூன் மாதம் ஒருநாள் ரசம் வைத்து கேட்டேன். புதிதாய் கொத்துமல்லி தளையும்,தக்காளியும் வரட்டும் என்றார். ஜூலை ஐந்தாம் தேதி புதிதாய் பொருட்கள் வந்து தீர்ந்தபின்பும் ரசம் வரவில்லை. மீண்டும் ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூரில் உணவுப்பொருட்கள் நிறைத்தபோது மீண்டும் நினைவூட்டியபோது ஒரு முறை ரசம் வந்தது நல்ல சுவையும் கூட. “இது ஆந்திரா ரசம்” என்றார். மூத்த அதிகாரிகள் யாரும் இந்தியராக இல்லாததும் எங்களுக்கு ஒரு குறை.கடந்த வாரத்தில் ஒரு நாள் இரவுணவில் சப்ப்பாத்தியுடன்,சிக்கன் தந்தூரியும்,உருளைக்கிழங்கு-காலி பிளவரும் செயதிருந்தார். “ரெண்டும் ட்ரையா இருக்கு சப்பாத்தி கூட எப்டி சாப்டது” என சோம்ராஜ் கேட்டான். போசன் “எல்லாரும் சேர்ந்து எழுதி தந்தா நான் முதன்மை அதிகாரியிடம் கொடுக்கிறேன்” என்றார்.
இன்னுமொருமுறை அவரிடம் சொல்வோம். ஆறு மாதமாக சாப்பாடு ஒரே மாதிரி இருக்கிறது என சொன்னேன். “செரி அன்பாய் சொல்லி பார்ப்போம்” என்றார் போசன். காலையில் அவர் ரைமுண்டோவிடம் சொல்லிவிட்டு என்னிடமும் சொல்ல சொன்னார். “ஒரே மாதிரி சாப்பாடு இருக்கு,எல்லாருக்கும் மெனு மனப்பாடம் ஆயிட்டு கொஞ்சம் சபல் பண்ணுங்க” என்றேன். ‘யார் சொன்னது,யார் சொன்னது”எனக்கேட்டார்.எல்லாரும் சேர்ந்து சொன்னது என சொன்னேன்.
புதன்கிழமை காலை உள்ளி வடைக்கு பதிலாக பிரஞ்ச டோஸ்ட், மதியம் மீன் குழம்பும் செய்தார். வியாழன் காலை ஓட்-மீல் மதியம் லாம்ப் புதிய சுவையில் செய்தார்.
வெள்ளிக்கிழமை காலை மெது வடை-சாம்பார் மதியம் மாட்டு வால் ரோஸ்ட் செய்தார்.புதனும்,சனியும், மாலையில் பிறந்த நாள் பார்ட்டி சிறப்பு உணவுகள் இருந்தது.உணவின் வகைகளும் சுவையும் மாறியிருந்தது.
சோம்ராஜ் சொன்னான் எல்லாம் “எல்லாம் தெரியும் இருந்தாலும் குழு மடி அவனுக்கு” என.
நாஞ்சில் ஹமீது.
01 septemper 2024.
sunitashahul@gmil.com.
No comments:
Post a Comment