அதிகாலை தூங்கி எழுந்து தொழுகைக்குப்பின் விடுதியிலிருந்து வெளியேறி நேற்று நடந்த திசைக்கு எதிர்பக்கமாக நடந்தேன். விடுதியின் எதிரில் அந்த ஜிப்ரேல்டர் ராக் நின்றுகொண்டிருக்கிறது.அதிகாலையே குளிருக்கான வெப்ப ஆடை
அணிந்து பேட்டரி சைக்கிளில் நின்றபடி பணிக்கு சென்றுகொண்டிருந்தாள் ஒருத்தி.ஒரு கிலோமிட்டருக்குள்ளாகவே கடற்கரை வந்தது.
கடற்கரை ஆளோழிந்து கிடந்தது நல்ல காற்றும் கடல் லேசாக சீற்றமாகவும் இருந்தது, தூரத்தில் சில கப்பல்கள் காற்றில் ஆடிகொண்டிருந்தது. கடற்கரையில் நாய்கள் அனுமதியில்லை,மாற்றுதிறனாளிகளுக்கு வாகனம் நிறுத்த தனியிடம்,ஒரு வாகனம் அதிகபட்சமாக ஒரு மணிநேரம் மட்டுமே நிறுத்த அனுமதி, காற்றில் அடித்து சென்று விடாமல் இருக்க இறுக்கமாக கட்டிவைத்த மூடி போட்ட குப்பைத்தொட்டிகள் சீரான இடைவெளியில்,கடலில் குளித்தபின் நன்னீரில் குளிக்க நன்னீர் குழாய்கள் சில அங்கே இருந்தது.
இறுக்கமாக உடையணிந்த ஒருவர் ஓட்டபயிற்சி செய்து கொண்டிருந்தார். சாலையை ஒட்டிய வணிக நிறுவன சுவர்களில் நாய்கள் கால்களை தூக்கி மூத்திரம் போக அனுமதியில்லை எனும் படம் என்னை ஆச்சரியபடுத்தியது.சில உணவகங்கள் திறந்திருந்தன. இருவர் மட்டும் வெளியில் அமர்ந்து பெரிய குவளையில் காபி குடித்துக்கொண்டிருன்தனர்.
ஹாலிடே இன் எனது விடுதியில் நுழைந்து வரவேற்பறையில் ஒரு கப் நீர் அருந்திவிட்டு அறைக்கு சென்று நீராடினேன். காலை உணவுக்குப்பின் முந்தையநாள் மாலை சென்ற கடைவீதிக்கு பிரபுல், ரைமுண்டோவை மற்றும் சௌகானை அழைத்துச்சென்றேன்.
மிக பழமையான கடைவீதி கருங்கற்களால் ஆன நடைபாதை காயத்ரி ஜிவல்லர்ஸ்,விஜய் மணி எக்ஸ்செஞ் ஆகிய இந்திய நிறுவனங்கள் இங்கும் இருக்கிறது.சௌகான் எனது இன்னொரு பெயர் விஜய் என் பெயரில் இங்கே கடை இருக்கிறது என மகிழ்ந்து படம் எடுத்துக்கொண்டார்.அங்கே தனக்கொரு மதுகுப்பியை வாங்கிக்கொண்டார் விஜய் சௌகான்.
மதியம் வரை சுற்றிவிட்டு விடுதிக்கு வந்தோம் நீண்ட நடை லேசான குளிர் இருந்ததால் களைப்பே இல்லை.சாப்பிட்டுவிட்டு மூன்று மணிக்குமேல் நல்ல தூக்கம். மாலைகுளியலுக்குப்பின் பெட்டியில் அனைத்தையும் அடுக்கி தயார் செய்தேன்.ஆறுமணிக்குமேல் ஏஜென்ட் எங்களை கப்பலுக்கு அழைத்துச்செல்ல வரலாம்.
மாலையில் உணவுகூடத்தில் அமர்ந்திருந்தோம் முகவரின் வருகையை எதிர்பார்த்து. ஆறரை மணிக்குமேல் சௌகான் சொன்னார் அவர் கப்பலுக்கு செல்வது ரத்தாகி விட்டது என.
தனது மொபைலில் கப்பல் ஜிப்ரேல்டர் தாண்டி சென்று கொண்டிருப்பதை காண்பித்தார்.அவரது கப்பல் நிறுவனமே அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தது. அவருடன் பணியில் இணைய வேண்டிய காப்டனும் உணவு கூடத்தில் வந்து அவருக்கு அந்த செய்தியை உறுதி செய்தார்.
பிரபுல் நாங்கள் இணைய வேண்டிய கப்பலின் இரண்டாம் இஞ்சினியரை தொடர்புகொண்டார். நாங்கள் பணியில் இணைவதும் ரத்தான செய்தி உறுதியானது. நான் கப்பல் சென்று விடுவிக்கவேண்டிய தினேஷ் எனக்கு செய்தி அனுப்பியிருந்தார். எங்கள் பயண பைகளை டெக்கில் வைத்துவிட்டு கப்பலில் இருந்து இறங்குவதற்காக நாங்கள் நெடுநேரம் காத்திருந்தோம். காப்டன் அழைத்து “யுவர் சைன் ஆப் கேன்சல்” என சொல்லிவிட்டதாக சொன்னார்.
எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை ஏன் ரத்தானது என. நாங்களும் தயாராக இருந்தோம் கப்பல் செல்ல. ஜிப்ரல்டர் துறைமுகம் இன்று மூடபட்டிருப்பதாகவும்,படகு கடலுக்குள் செல்ல இயலாது எனவும் அறிந்தோம். ஆப்பிரிக்காவின் நைஜீரியாவை நோக்கி செல்லும் கப்பல் ஜிப்ரேல்டரை கடக்கும்போது படகில் சென்று நாங்கள் ஏறிகொள்ள வேண்டும் என்பது திட்டம். தீடீர் கடல் சீற்றம் காரணமாக படகு கடலுக்குள் செல்ல இயலாததால் நாங்கள் பணியில் இணைவது ரத்தாகி போனது.
இரவில் தினேஷ் செய்தி அனுப்பியிருந்தார் அருகில் கனேரி எனும் தீவில் பணியாளர் மாற்றம் செய்ய காப்டன் முயற்சிக்கிறார் என. அது சாத்தியமானால் ஞாயிறன்று நீங்கள் கப்பலுக்கு வரமுடியும் என்றார்.
எங்கள் ஏஜென்டிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அடுத்து என்ன ஆகும் என எந்த உறுதியும் இல்லாமல் இரவில் தூங்க சென்றோம்.
03 feb2024,
நாஞ்சில் ஹமீது.