Friday 9 October 2020

கப்பல் காரன் டைரி தடை படும் பயணங்கள்

 கப்பல் காரன் டைரி,

                    தடைபடும் பயணங்கள்

கப்பல் காரன் பணியில் சேரும் தேதி,துறைமுகம்,விமானத்தில் எங்கு பயணிக்கவேண்டுமென்பது முன்னரே தெரிந்தாலும் .பயண தேதி உறுதியாக யாராலும் சொல்லிவிட முடியாது.இறுதிநேர தடைகள் பலவற்றையும் தாண்டிதான் அவன் பணியில் சேரமுடியும் . 

சன்னி ஜாய் கப்பலுக்கு செல்ல வேண்டி ஏழாம் தேதி காலை சிங்கப்பூருக்கு  விமானம் இருக்கும் என சொல்லியிருந்தார்கள்.நான்காம் தேதி காது வலியால் மருத்துவர் ஹோட்டலுக்கு வந்து என்னை பரிசோதித்து மருந்துகள் தந்துவிட்டு போயிருந்தார்.

   மும்பை அலுவலக அதிகாரி அனிதா தாக்கூர் அன்று இரவு போனில் என்னை அழைத்து காது வலி எப்படி இருக்கிறது .உன்னால் பணியில் சேர இயலுமா என கேட்டார் .மூன்று தினங்கள் மருந்த்துக்கு பின் சரியாகிவிடும் என மருத்துவர் சொல்லியிருக்கிறார் .இப்போது வலி பரவாயில்லை என்றேன்.அலுவலகத்தில் இருக்கும் காப்டன் ஆஷ்லி உடல்நலம் குறித்து தினமும் தகவல் சொல்ல சொல்லியிருந்தார்.

மறுநாள் மாலை இன்னொரு அதிகாரி தர்சனா பகத் போனில் காது வலி குறித்து கேட்டறிந்தார்.உன்னால் கப்பலுக்கு போக முடியும் தானே என கேட்டறிந்தார் .

விடுதியையில் பத்து நாட்கள் சும்மாவே இருந்தோம்.கடைசி இருதினங்கள்,காலை ஒன்பதரை முதல் மாலை ஆறுவரை இணையவழி பயிற்சிகளும்,கலந்துரையாடலும் இருக்கிறது அனைவரும் கலந்துகொள்ள வேண்டியது காட்டாயம் என செய்தி வந்தது .காப்டன் சாம்சன் இருநாட்களும் எங்கள் அனைவரையும் மைக்ரோசாப்ட் இணையவழியாக  சந்தித்து,பயிற்சி வகுப்புகளை நடத்தினார்.

 ஏழாம் தேதி காலை பத்து மணி விமானத்திற்கு மும்பை சத்ரபதி பன்னாட்டு வானூர்தி நிலையதில்  எட்டு மணிக்கு வந்திறங்கினேன்.பெருகூட்டம் நோய் தொற்று சோதனைக்காக நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருந்தனர்.ரொம்ப தாமதாகிவிட்டது விமானம் தவிறிடுமோ என அஞ்சினேன். 

பயணத்திற்கு முந்தைய இருதினங்களும் தேவையே இல்லாமல் பரபப்பாகி போனது.காப்டன் சாம்சனின் பயிற்சிவகுப்புகளுக்கு இடையில் அலுவலக மின்னஞ்சல்களால் எனது மின்னஞ்சல் பெட்டி நிரம்பிக்கொண்டே இருந்தது,பணி ஒப்பந்தம்,விமான  சீட்டு,சிங்கப்பூர் செல்வதற்க்கான சில ஆவணங்கள் என.



செவ்வாய்க்கிழமை கோவிட் பரிசோதனைக்குப்பின் மதிய உணவு இடைவேளையில் .எனது  அலுவலகத்தில் இருந்து ஷிரிஷ் என்னை அழைத்தார். ஷாகுல் உனது பயணத்திற்காக  ஈ மைகிரென்ட் விண்ணப்பித்தபோது டி ஜி ஷிப்பிங் இணையதளத்தில் உனது கடவு சீட்டு எண் தவறாக உள்ளது. அதில் உனது ப்ரோபைலை திறந்துபார் என்றார் .திறந்தேன் கடவு சீட்டின் கடைசி எண் ஏழுக்கு பதில் ஒன்று என இருந்தது .திகைத்துவிட்டேன் ஈ மைகிரென்ட் இல்லாமல் எந்த ஒரு கப்பல்காரனையும் குடியுரிமை அதிகாரிகள் நாட்டைவிட்டு செல்ல அனுமதிக்க மாட்டார்கள்.

  கடந்த 2019ஆம்ஆண்டு  ஆகஸ்ட் மாதம் கப்பலிலிருந்து இறங்கியபின் பதினான்கு மாதங்களாக வருமானமே இல்லை .தொழில் தொடங்கி மூடியதில் சில லட்சங்கள் நஷ்டம்.மூத்த சகோதரர் மற்றும் நண்பர் ஒருவர் செய்த பொருளுதவியால் நாட்கள் நகர்ந்தது .இப்போது நான் பணிக்கு சென்றே ஆக வேண்டிய கட்டாயம்.ஜூன் மாதம் ஏழாம் தேதி  எனது கப்பல் நிறுவனத்திற்கு தகவல் அனைப்பினேன் பணிக்கு வர தயாராக இருக்கிறேன் என. எனது அமெரிக்க விசா அதே மாதம் பதினான்காம் தேதி காலவதி ஆகியிருந்தது.

  எனது மானேஜர் உன்னிடம் அமெரிக்க விசா இல்லை,அமெரிக்க தூதரகம் ,துணை தூதரங்கள் எதுவும் செயல்படவில்லை.ஐரோப்பா அல்லது ஆசியா வரும் கப்பல்களில் உனக்கான வாய்ப்பு இருக்குமெனில் முயற்சிக்கிறேன்.எனக்கு கொஞ்சம் நேரம் தா என்றார் .

  இந்த கப்பலுக்கான அழைப்புவந்தபோது பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு கப்பல் வருகிறது .அந்த நாட்டு விசா பெறவேண்டும் கடவு சீட்டு மற்றும் ஆவணங்கள் தில்லிக்கு அனுப்ப சொன்னார் .

அனுப்பிய இரு தினங்களுக்கு பின் அனிதாதாக்கூர் என்னை அழைத்து உனது கடவுசீட்டு கிழிந்து இருப்பதாக தகவல் வந்துள்ளது .உனக்கு விசா கிடைப்பது சற்று சிரமம்தான் என்றார். நான் கடவு சீட்டை தில்லிக்கு அனுப்பும்போது நன்றாகத்தான் இருந்தது .

  இரு தினங்களுக்கு பின் நான் தில்லி முகவர் ஆனந்தை  தொடர்பு கொண்டு கேட்டேன் .உங்கள் கடவுசீட்டு பிலிப்பைன்ஸ் தூதரத்திற்கு போயிருக்கிறது பார்ப்போம் என்ன ஆகிறது என விசா கிடைக்க பத்து நாட்கள் ஆகும் என்றார்.விசா கிடைகவில்லை எனில் இந்த வாய்ப்பு நழுவி போகும்.புதிய கடவுசீட்டு தட்கல் முறையில் இருதினங்களில் பெற்றுவிடலாம் என்ற தகவலை உறுதிசெய்து கொண்டேன்.

 காதுவலியை கடந்தபின் இப்போது இந்த ஈ மைக்ரென்ட் பிரச்னை.ஈ மைக்ரேன்ட் என்பது கப்பல் பணியாளர்கள் பணிக்கு செல்வதற்குமுன் இந்திய அரசின் கப்பல் துறையில் அனுமதி பெறுவது .கப்பல் காரன் பயணிக்கும் முன் குடியுரிமை அதிகாரி அதை உறுதி செய்த பின்னரே நாட்டை விட்டு செல்ல அனுமதிப்பார் .முன்பு திருட்டு தனமாக நிறைய போலிகள் கப்பல் காரர்கள் என சென்று கொண்டிருந்தனர் .இந்த ஈ மைக்ரென்ட் முறையால் போலிகள் முழுமையாக கட்டுபடுத்தப்பட்டு விட்டனர் .இதனால் முறையாக பயிற்சி முடித்து பணியில்லாமல் இருந்த திறமையான பலர் இப்போது எளிதாக பணிக்கு செல்ல முடிகிறது .

 மீண்டும் ஷிரீஷ் என்னை அழைத்து உனது பாஸ்போர்ட் எண்ணை மாற்றுவதற்கு விண்ணப்பித்து விட்டு ,அந்த அலுவலக மின்னஞ்சல் முகவரியை தந்தார் .நாளை காலை எனக்கு விமானம் கடவு சீட்டின் எண்ணை திருத்தம் செய்து தாருங்கள் என மின்னஞ்சல் அனுப்பினேன்.

மாலை ஆறு மணிவரை தகவல் இல்லை .என்னுடன் பயணிக்கும் சக பணியாளர்கள் இருபது  எனக்கு மட்டும் வரவில்லை .பத்து மணிக்கு மேல் அலுவலக பெண் ஷில்பா என்னை அழைத்து ஈ மைகிரென்ட் அனுப்பியுள்ளேன் .இதை எடுத்துகொள் இணையத்தில் நீ கடவு சீட்டு எண் திருத்தம்  வேண்டி அனுப்பிய இணைய பக்கத்தை அச்சு பிரதி எடுத்துகொள் ஈ மைக்ரேண்டில் எண் தவறாக இருக்கிறது என கேட்டால் அதைக்காட்டு என்றார் .

நண்பர் அசோக் கை அழைத்தேன் . நான் பணிக்கு செல்வது குடியுரிமை அதிகாரியின் கையில் இருக்கிறது . அவர் நினைத்தால் என்னை அனுமதிக்கலாம் இல்லை தடுக்கலாம். அனுபவம் உள்ள மூத்த அதிகாரி என் பயணத்தை தடுக்கமாட்டார்.



நான் ஒன்றும் செய்வதற்கில்லை .

நண்பர் சாம் இரவில் எனது பிரார்த்தனையில் வைக்கிறேன் . பிரைஸ் த லார்ட் என்றார்.


இரவில் உடன் பணிக்கு வரும் லீவிஸ்லி,கின்லேக்கர்,ஹெல்டன் ஆகியோருக்கும் சேர்த்து ஆவணங்கள் பதிவிறக்கம் செய்து. விடுதி வரவேற்பறையில் அச்சு பிரதி எடுத்து பனிரெண்டு மணிக்குமேல் எனது பயண இருக்கையை (வெப் செக் இன் ) எமிரேட்ஸ் இணையதளத்தில் சென்று பதிவு செய்தேன்.விடுதி வரவேற்பறையில் காலை ஆறு மணிக்கு எனக்கு விமான  நிலையம் செல்ல வாகனம் வேண்டும்,நான் சற்று முன்னதாக செல்லவேண்டியுள்ளது கீழே வந்து விடுங்கள் என்றார்.

நள்ளிரவு முகசவரம் செய்து ஆவணங்களை 

சரிபார்த்து பயனபைகளை அடுக்கிவிட்டு துயில்கையில் அதிகாலை மணி இரண்டு.

4.40 தானாக விழித்தேன். 

 மீத ஒரு பயண ஆவணமும் மின்னஞ்சலில் வந்திருந்தது .அதை வரவேற்பறைக்கு அனுப்பி அச்சு பிரதி எடுத்து வைக்க சொல்லிவிட்டு நண்பர் பழனியுடன் 10 நிமிடம் உரையாடினேன் . 25 நிமிடம் குளியல்.எயர் பிளக் கொண்டு காதை அடைத்து வைத்திருந்தேன்.

அதிகாலை தொழுகை, பயண தொழுகையும் முடித்து விட்டு . சுனிதாவிடம் பேசிவிட்டு  அறையை விட்டு வெளிய றும் போது மணி 7. ஹெல்டனும் , சரத்தும் நாங்கள் கீழே இருக்கிறோம் பாதி பேர் சென்று விட்டனர் என அழைத்த்துக்கொண்டே இருந்தனர்.வரவேற்பறையில் எல்லோரும் ஒன்றாகக் வந்து விட்டதால் தாமதமாகிறது என்றார்கள்.




நான் கடைசியாக

அறை சாவியை கொடுத்துவிட்டு வெளியேறும் போது காலை உணவு வேண்டுமென்றால் உணவு கூடம் சென்று வாங்கி கொள்ளுங்கள் என்றார் ஓம் கார். அச்சுபிரதி மற்றும் துணி துவைத்ததற்கு இரண்டாயிரம் ருபாய் தம்பி ஹெல்டன் கட்டினார்.



உணவு விடுதியில் பதருதீன் 

“அஸ்ஸலாமு அலைக்கும் ஸார் என்ன வேண்டும்” 

“முசலி சீரியல்ஸ்,அவிச்ச முட்டை இருக்கா?

“அண்டா தயார் ஹே, வேறேதும் வேண்டுமா?

“சீக்கரம் தா,விமான நிலையம் போக வேண்டும்” என்றேன்

“இது தான் உணவுக்கூடம் தனிமைபடுத்தல் இல்லையெனில் இங்கு வந்துதான் நீங்கள் உணவருந்த வேண்டும்” என்றான்.

 சுற்றிலும் செயற்கையான பச்சை புற்கள் விரிக்கப்பட்டு நடுவில் கண்ணாடியானால் ஆனா உணவுக்கூடம் ஒரு கோல்ப் மைதானத்தில் அமர்ந்திருக்கும் உணர்வு ,இருக்கைகளும்,கூரையின் அடிப்பகுதியும் அலங்கரிக்கட்டு,வண்ண விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருந்த்து.

காகித பையில் உணவை தந்தான்.கடந்த பனிரெண்டு நாட்கள் தினமும் மூன்று வேளையும் ஆறாவது மாடியில் இருக்கும் அறைக்கு உணவு கொண்டு தந்தவர்கள் இந்த பதருதீன்,சாகர்,மங்கேஷ் மற்றும் சுசாந்த அவர்களுக்கு நன்றி கூறுமாறு சொன்னேன்.

பதருதீன் புன்னைகையுடன் ,பத்திரமாக போய் வாருங்கள்.

“அஸ்ஸலாமு அலைக்கும்”

“வலைக்கும் ஸலாம்”

“அலைக்கும் ஸலாம்” என பதில் கூறி விடைபெற்றேன்.

  ஐந்து நிமிட பயணதூரம்தான், விமான நிலையம்.அதற்குள் இருபது ஆண்டுகளுக்கு முன் இதே மும்பை நகரில் பசியோடு கைகளில் பைலுடன்,கப்பல் கம்பனிகளில் வேலை தேடி அலைந்த நினைவுகளில் மூழ்கி வெளியேறினேன் .

பயண பைகளை ஓட்டுனர் குந்தன் எடுத்து வெளியே வைத்தார்.பர்சிலிருந்த கடைசி இந்திய பணம் நூறு ரூபாயை குந்தனிடம் கொடுத்துவிட்டு,பார்த்தபோது தான் அங்கிருந்த பெருங்கூட்டம் அதிர்ச்சியாக இருந்தது.மிக தாமதாகிவிட்டேன் என .பின்பு தான் கவனித்தேன் முன்பே வந்த பலரும் உள்ளே செல்லாமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பதை.

நீண்டவரிசையில்சென்றுநின்றோம் ஹெல்டன்,சரத்,சஞ்சீவ்,செல்வன்,தண்டேல் என தண்டேலிடம்,அடையாள அட்டை அணிந்த ஒரு “பெண் எந்த விமானம்” என கேட்டாள்.

“எமிரேட்ஸ்” 

“இங்கே யார் நிற்க சொன்னது  எட்டாம் நம்பர் கேட்டில் செல்” என்றாள்.

அது காலியாக இருந்தது.எங்களை உள்ளே விட மறுத்தார்  மத்திய பாதுக்காப்பு துறை காவலர்.ஏழாம் எண் வாயிலுக்கு போங்கள் என்றார்.அப்போது எங்கள் குழுவில் உள்ள த்ரிலோச்சன் சிங் எட்டாம் எண் வாயிலில் உள் நுழைவதை கண்டோம்

சரத் அங்கு தான் அரை மணிநேரம் நின்றுகொண்டு இருந்தோம் இங்கே வரசொன்னர்கள் என்றதும்.பணியாளர் ஒருவரை  அங்கு அனுப்பி விசாரித்துவிட்டு உள்ளே செல்ல அனுமதித்தார் .

உள்ளே சென்றுவிட்டேன் பயண இருக்கை அட்டையை வாங்கிவிட்டு சீக்கிரமாக குடியிரிமை சோதனைக்கு சென்றால் குடியுரிமை அதிகாரியிடம் விளக்கம் கொடுக்க முடியும்.

EK 505 இன்கவுண்டருக்கு முன் எங்கள் குழுவில் உள்ளவர்கள் மற்றும் வேறு பயணிகள் என அங்கும் ஒரு திரள் நின்றுகொண்டிருந்தது.வெப் செக் இன் செய்தவர்களுக்கான கவுண்டரில் எனது  பயண பைகளை கொடுத்துவிட்டு  எனக்கான இருக்கை அட்டையை பெற்றேன் .சிங்கப்பூரில் உங்கள் பைகள் கிடைக்கும் என்றார் .

விரைந்து சென்று குடியுரிமை அதிகாரியின் முன் நின்றேன் .கூட்டமில்லை 

“கப்பலுக்கு செல்கிறாயா”

“ஆமா” 

“எங்கே செல்கிறாய்”

“சிங்கப்பூர்”

“ஓகே டு போர்ட்”

கொடுத்தேன் .

“ஈ மைகிரென்ட்” கேட்டார் .

கொடுத்தேன்.

கணினியில் ஆவணங்கள் சரிபார்த்துவிட்டு கேமராவை பார் என்றார்.

பார்த்தேன்,கடவு சீட்டில் முத்திரை பதிக்கவில்லை,எதையோ தேடிக்கொண்டிருந்தார்.

வெளியே வந்து தன்னுடன் வருமாறு அழைத்தார்.குடியுரிமை அதிகாரிகள் நிறையபேர் இருந்த அறைக்கு வெளியே என்னை காத்திருக்க சொல்லிவிட்டு உள்ளே சென்று வேறு ஒருவரிடம் எனது கடவுசீட்டை காண்பித்து இருவருமாக கணினியில் எதையோ தேடினார்கள் .

பின்னர் வேறோரு மூத்த அதிகாரியிடம் விவாதித்து ஆலோசித்தபின் மீண்டும் கணினியில் எதையோ தேடினார்கள் அந்த அறைக்குள் நடப்பது  அனைத்தையும் வெளியே  நின்று பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்.



வெளியே வந்த அந்த அதிகாரி என்னிடம் ஈ மைகிரென்ட் அச்சு பிரதியை காட்டி “இதில் உள்ள கடவு சீட்டின் எண் வேறுஒருவருக்கு  வழங்கப்பட்டுள்ளது,இதுதான் உனது கடவு சீட்டு,உனக்கு ஈ மைகிரென்ட் விண்ணப்பித்தவர் தவறான எண்ணை பதிந்துவிட்டார்,நீ பயணம் செய்யும் முன் இவற்றை கவனமாக பார்க்கவேண்டும்”என்றார்.

என்ன நடந்தது எனும் விபரத்தை சொன்னேன்.மீண்டும் அழைத்துசென்று கடவுசீட்டில் முத்திரையை பதித்தார் .புறப்பாடு என.பின்னர் பாதுகாப்பு சோதனையை முடித்து விட்டு திரையை பார்த்தேன். 

EK 505 DUBAI GATE B 66,

BOARDING STARTED 0940 என இருந்தது.



மணி ஒன்பது ஆகியிருந்தது .அங்கிருந்த செடியின் அருகில் அமர்ந்து காலையுணவை சாப்பிட்டேன்.காப்டன்,சரத்,சஞ்சீவ்,செல்வன், ஹெல்டன் என்னருகில் வந்தனர்.விமானம் ஏறும் வாயில் அருகில் செல்லலாம் என்றனர்.



“ஒரு எண்ணெய் ஆர்டர் இருக்கு அனுப்பிட்டு வாறேன்,அங்க வந்தா பேசிட்டே இருப்பேன்,அனுப்பிட்டு வருகிறேன்”என்றேன்.

இதை எழுதி முடிக்கையில் .

துபாய் – சிங்கப்பூர் விமானத்தில் இருந்தேன். விமானி நாம் மலேசியாவின் மேலே பறந்து கொண்டிருக்கிறோம்.இன்னும் சிறிது நேரத்தில் சிங்கை சாங்கி சென்றுசேரும் என கேட்டதும் .மடிக்கணினியை .மூடினேன்.

ஷாகுல் ஹமீது ,

08-oct-2020.

sunitashahul@gmail.com









2 comments:

  1. தானாய் வரும் தடங்கல்கள் நம்மை வடிவமைக்கும். அதில் கற்றல் நிச்சயம் இருக்கும். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அண்ணா, நாம் விமானம் ஏறும் நிகழ்வுகள் அப்படியே கண் முன்னே வருகிறது. நன்றி

    ReplyDelete