Sunday, 4 October 2020

காது வலி

 கப்பல் காரன் டைரி.

நேற்று மதியத்திற்கு பின் இடது காதில் லேசான வலி,

 ஒன்னும் கஷ்டம் இல்லை.



இரவில் பதினோரு மணிக்குமேல் துயிலசென்றேன்.அதிகாலை மூன்று மணிக்கு காதுவலியால் விழித்துவிட்டேன்.லேசாக வீக்கமும் இருந்தது கையால் தடவி பார்த்தேன் லேசாக கட்டியாக இருந்தது .

மருத்துவ  தோழி மகேஸ்வரியுடன் மானசீகமாக பேசினேன்.அரை மணிநேரத்திற்குப்பின் மீண்டும் தூங்கிவிட்டேன் .ஐந்தேகாலுக்கு விழித்து தொழுகை முடித்து மருத்துவ தோழிக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.

ஏழுமணிக்கு மேல் மருத்துவர் என்னை அழைத்து காது வலி பற்றி கேட்டறிந்துவிட்டு .இன்றே ஒரு ஈ என் டி மருத்துவரை பார்த்துவிடுங்கள் என அறிவுரை கூறினார்.நீங்கள் பயணம் செய்ய வேண்டியுள்ளது கண்டிப்பாக இன்றே பாருங்கள் என்றார்.பொது மருத்துவர் வேண்டாம் காதுக்குள் என்ன ஆகியிருக்கிறது என பார்க்கவேண்டும் என்றார்.மருத்துவர் உங்களை பரிசோத்தபின் என்னை அழையுங்கள் என்றார் மருத்துவர் மகேஸ்வரி.

எனது மும்பை அலுவகத்தில் உள்ள காப்டன் ஆஷ்லி மற்றும் உதவி மேலாளர் அங்கிட் கிறிஸ்டியன் ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். ஒருமணி நேராமாகியும் பதிலேதும் வாராததால் காப்டன் ஆஷ்லியை போனில் அழைத்து விபரம் சொன்னேன்.அவர் நீ ஹோட்டலை விட்டு வெளியே செல்ல முடியாது நான் பேசிவிட்டு வருகிறேன் என்றார்.

பத்து நிமிடத்திற்கு பின் அழைத்து டாக்டர் வர்மா உனது ஹோட்டலுக்கு வந்து உன்னை பரிசோதிப்பார்.கையில் பணம் இருக்கிறதா மூவாயிரம் கட்டவேண்டும் என கேட்டு விட்டு மருத்துவர் வர்மாவின் தொடர்பு எண்ணை தந்தார் .ஹோட்டல் வரவேற்பறையில் பேசிவிட்டேன்.நீ மருத்துவரிடம் பேசி விடு என்றார்.

மருத்துவர் வர்மா விபரங்களை கேட்டுவிட்டு அரை மணிநேரத்தில் வருகிறேன் என்றார் . 

 

  இதே ஹோட்டலில் தங்கியிருக்கும் தம்பி ஹெல்டன் என்னை போனில் அழைத்தபோது விபரங்களை சொன்னேன்.என்னிடம் பணம் இருக்கிறது பெற்றுகொள்ளுங்கள் என்றான்.

   பனிரெண்டு மணிக்கு முன்பாக மருத்துவர் வர்மா வந்துவிட்டார் .வரவேற்பறையில் இருந்து என்னை அழைத்து “மீட்டிங் ரூம் எண் 2 முதல் தளத்தில் மருத்துவர் இருக்கிறார் நீங்கள் அங்கே செல்ல வேண்டும்” என்றனர். ஆடை மாற்றி முதல் தளத்தில் இருந்த மீட்டிங் அறைக்கு சென்றேன் .

உள்ளே டாக்டர் அரவிந்த் குமார் வர்மா அமர்ந்திருந்தார்.கண் கண்ணாடியும்,மூக்குக்கு கீழே முககவசமும் அணிந்து  காதுக்குள் செலுத்தி பார்க்கும் கருவிகளை ஒரு பையில் இருந்து வெளியில்வைத்துகொண்டிருந்தார்.அது எனக்கு குழைந்தைகளின் விளையாட்டு பொருள் போல இருந்தது .

“வணக்கம்” என்றேன் .

“கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா,நான் அறை எண் 603 இல் ஒரு நோயாளியை பார்க்க வந்துள்ளேன்”.

“நான் தான் அது” என்றேன் .

சத்தமா ஒரு சிரிப்புக்குப்பின். “உட்காருங்கள்” என்றார் .

இருக்கையில் அமர்ந்தேன் .

“நான் நேரத்துக்கு வந்துட்டேனா,நான் மிந்தி மிலிட்டிரில வேல பார்த்தேன்”கண் சிமிட்டி விட்டு மீண்டும் சிரிப்பு .

“சொல்லு” என்றார் .

“நேத்தைக்கு மத்தியானத்துக்கு போறவுல இருந்து காதுல லேசா வலி,விடியகாலம் மூணு மணிக்கு எழும்பிட்டேன்,வலியால.கை வெச்சு பார்த்தேன் லேசா வீங்கி இருக்கு”.

“நல்லா வீங்கியிருக்கு,நீ குத்துனியா கன்னத்துல”

“இல்ல டாக்டர்”

“அடி ஏதும் பட்டுதா”

“இல்ல”.

“நீ வேற எதாவது செய்தியா”

“இல்ல”

“எங்கயாவது இடிசிகிட்டியா”

நான் இல்லை என சொல்லும் போதெல்லாம் “சுவர்,சுவர்” என கேட்டுகொண்டார் .

“இதுக்கு முன்ன எப்பவவாது இது போல ஆயிருக்கா”

“இல்ல”

“சைனஸ் பிரச்னை உண்டா”

“இல்ல நான் யோகா மாஸ்டர்,ப்ரீதிங்  எக்ஸசைஸ் செய்வேன்”.

“என்ன செய்வா,மூக்குக்குள்ள ஏதாவது போட்டு இழுப்பியா”

‘அதெல்லாம்,கடையாது,மூச்சு பயிற்சி மட்டும்”

“சொட்டு மருந்து ஊத்துனியா”

“இல்ல”

“திரும்பி உட்காரு காதை பார்க்கட்டு”

இரண்டு காதுகளையும் சிறிய கருவியை காதுக்குள் செலுத்து பார்த்தார் .

மூக்குகுள்ளும் சோதனை செய்தார் .

“காதுகுள்ளதண்ணி போச்சா”

 “ஆமா குளிக்கத்துல”

அதான் காரணம் என்றார்

“டயபடீஸ் இருக்கா”

“இல்ல”

 பெயர் மற்றும் வயதை கேட்டு குறித்து கொண்டு ,சீட்டில் ஒரு படம் வரைந்தார் .

காது ட்ரம்,டிராக் பிளேம்டு.டிம்பனிக் மெம்ரீன் என சொன்னார் .    


  

நான் சொன்னது புரிந்ததா என கேட்டார் .

இல்லை என்றேன் .மீண்டும் விளக்கினார்.



செவிவழி குழாய் (track)உட்புற சவ்வு(மெம்ரேன்) போன்றவை இன்பெக்ஷன் ஆகியுள்ளது என்றார் . காதுக்குள் தண்ணீர் போனதுதான் காரணம் .

காதுக்குள் சொட்டு மருந்து விடக்கூடாது,காது எப்போதும் உலர்ந்து இருக்க வேண்டும் ,குளிக்கும்போது தண்ணீர்  உள்ளே போக கூடாது,காதில் பஞ்சு வைத்துகொள்,நீச்சல் அடிக்க கூடாது .காரமான உணவுகள் கூடாது .

குளிக்கும்போது காதில் பஞ்சு வைத்துகொள் அல்லது வாசலீன் அல்லது பெட்ரோலியம் ஜெல்லியை இயர் பட்ஸ் ஆல் காதில் தடவிக்கொள் குளிப்பதற்கு முன் என்றார் .

“இங்க என்ன செய்கிறாய்,இன்னைக்கா வந்தா நீ”.

“நான் வந்து பதினோரு நாள் ஆயிட்டு,கப்பலுக்கு போனும்,அங்க போனா மருந்து கிடைககாதுல்லா”.

“ஒன்னும் பிரச்னை இல்ல இன்னைக்கே பார்த்ததுனால,மருந்து தாரேன் போறதுக்கு முன்ன எனக்கு ஒருக்கா போன் பண்ணு ,கப்பலுக்கு போனபொறவும்,எனக்க நம்பருல கூப்பிடு என்றார்

 மூன்று வித மாத்திரைகள் மூன்று தினங்களுக்கு எழுதிவிட்டு,

“இன்று ஞாயிறு ஒரு மருத்துவமனையும் இல்லை .யாரும் வந்து பார்க்கமாட்டார்கள் ,மூவாயிரம்” என்றார் .

பேசாம டாக்குடருக்கு படிச்சிருக்கலாம் என தோன்றியது .

இப்போ வாறன் என சொல்லிவிட்டு வரவேற்பறையில் கேட்டேன் .ஹெல்டனின் அறைக்கு செல்ல வேண்டுமென. “அறை கதவை தட்டி வெளியே நின்று வாங்கிகொள்ளுங்கள்” என்றார்.

பணம் வாங்கி கொண்டு கீழிறங்கி வருகையில் டாக்டர் வர்மா உயர்த்தியின் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தார் .

“நீ ஆறாவது மாடிக்கு போய்விட்டா வருகிறாய்”

“ஆமா”என்றேன் .

பணத்தை பெற்றுகொண்டு.கைகுலுக்க கையை நீட்டியவர் ,கைகளை மடக்கி நீட்டினார் ,இடித்து கண்டோம் .

மீண்டும் “கப்பல் செல்லும் முன் என்னிடம் பேசிவிட்டு போ” என்றார்.உயர்த்தியின் அருகில் சென்றவர். திரும்பி “நானும் படியிறங்கி சென்கிறேன் என” வளைந்து செல்லும் அழகான படிகளில் இறங்கினார் .

ஹோட்டல் மேலாளரை பார்த்து “மருந்து வாங்க வேண்டும்” என்றேன் “அறைக்கு செல்லுங்கள்,மருந்து கடையின் எண் அழைத்து சொல்வார்கள்,உங்களுக்கு வேண்டிய மருந்துகள் இங்கே வரும் ,நாங்கள் அறையில் தருகிறோம்” என்றார் .

“உங்க   பேரு என்னதுன்னு” கேட்டேன். “பால்ராஜ்”என்றார் .அவர் சீக்கியர்கள் அணியும் டர்பன் அணிந்திருந்தார். “பால்ராஜ் சிங்கா” என கேட்டுவிட்டு. “எங்க ஊர்ல நிறைய பால்ராஜ் உண்டு” என்றேன் .

“பல்ராஜ்” என்றார் .

“ஒ பல்ராஜ”

அறைக்கு வந்து மருந்து கடைக்கு அழைத்தேன்.ஒரு மணி நேரம் ஆகும்.என்றார்.ஹோட்டலின் ஹேமந்த் அறைக்கு வந்து மருதுக்கான பணத்தை வாங்கிகொண்டு,விடுதியின் வாசலுக்கு மருந்து வரும் வாங்கி தருகிறேன் என்றார்.

தோழி மகேஸ்வரிக்கு விபரங்களை சொன்னேன்.கொஞ்சம் சூடா எதாவது குடிச்சிட்டே இருங்க,தலை காது கொஞ்சம் சூடா இருப்பது போல் பார்த்து கொள்ளுங்கள்.தண்ணீர் நிறைய குடியுங்கள் இந்த மருந்து சப்பிடுப்வதால் வயிற்று போக்கு வரும் என்றார் .

நல்ல பசி இன்று.போன் பண்ணினேன் 603 ஷாகுல் என்றதும் “ஸார் மே சாகர்” என்றான். “நல்லா இருக்கியா சாப்பாடு கொண்டு வா  என்றேன் . .  சாப்பிட்டுவிட்டு எழுத தொடங்கினேன்.காதுக்கு கீழிருந்து வலி லேசாக  மேலேறி நெற்றிபொட்டில் மையம் கொண்டது .

காத்திருந்தேன் .அறை கதவை தட்டும் சப்தம் ,ஹேமந்த் கையில் மருந்துடன் நின்றுகொண்டிருந்தார் .மருந்துக்கு எழுநூறும்,ஹெமந்துக்கு நூறும் குடுத்தேன் .



ஹோட்டல் அறையில்உள்ள குளியல் தொட்டியில் முங்கி குளிச்சதுக்கு,ரூ நாலாயிரமும்,வலியும் .


04 oct 2020,

ஷாகுல் ஹமீது.

sunitashahul@gmail.com


2 comments:

  1. Anna .unga story romba nalla iruku .ana ungaluku ipo kathula ( ear) vali iruthathal konjam kastama because ipo namma hotel quarantine la irukom .. our God always with us .so don't worry.....

    ReplyDelete
  2. Nicely written.get well soon

    ReplyDelete