Friday, 2 October 2020

கப்பல் காரன் டைரி , தண்ணீர்

 

கப்பல் காரன் டைரி

தண்ணீர்

   சுற்றிலும் தண்ணீர் இருந்தாலும் தாகம் தீர்க்க உதவாது என்பது கப்பல் காரனுக்கு மிக சரியாக பொருந்தும் . முந்தைய காலங்களில் கப்பல் கரையணையும் போது பிராமாண்ட தொட்டிகளில் நன்னீரை தேக்கிவைத்து பயண தூரம் மற்றும் பயண நாட்களை கணக்கில் கொண்டு மிக சிக்கனமாக செலவு செய்வார்கள். எனது முதல் கப்பலான மெர்டிப்-4 ல் துபாய் துறைமுகப்பில் தண்ணீர் நிரப்புவார்கள் .அதன் பயண தூரம் இரண்டரை நாள் ஈராக் செல்ல,ஏழு நாட்களுக்குள் திரும்பி துபாய் வந்துவிடுவோம் அதனால் தண்ணீருக்கு எந்த பிரச்னையும் இல்லை.



   இப்போதுள்ள கப்பல்களில் கடல் நீரை நன்னீராக்கும் இயந்திரங்கள் உள்ளன.இருபத்தி நான்கு மணிநேரத்தில் இருபது முதல் இருபத்தியைந்து மெட்ரிக் டன்கள்(ஒரு மெட்ரிக் டன்= ஆயிரம் லிட்டர்) நன்னீரை தயாரிக்கும் சக்தி கொண்ட இயந்திரங்கள் அவை.ஆயிரம் முதல் நான்காயிரம் பயணிகள் வரை பயணிக்கும் நவீன உல்லாச கப்பல்களில் தேவையான எண்ணிக்கையில்  ஆர் ஒ பிளாண்ட்கள் உள்ளன.





 ஒருநாள் பயணித்தபின் கரையணையும் கப்பல்களில்  ஜெட் வகை நன்னீர் தயாரிக்கும் இயந்திரங்கள் இருபத்தி நான்கு மனைநேரத்திற்குள் நூற்றியைம்பது டன் நீரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.

    நான் பணிபுரிந்த பெரிய கார் ஏற்றும் கப்பல்கள் பதினான்கு அடுக்குகளை கொண்டது ,சுமோ காரின் அளவுள்ள 6500 கார்களை அதில் ஏற்றி கொண்டு செல்லமுடியும் .அதிக பட்சம் இருபத்தியைந்து பணியாளர்கள்தான் அதில்  இருப்போம்.



   கப்பலில் இரண்டு சலவை இயந்திர அறை(ஒவ்வொரு அறையிலும் மூன்று சலவை இயந்திரங்கள் இருக்கும்) அடுமனையில் உணவு தயாரிக்க,பாத்திரம் கழுவுதல்,மாலுமிகளின் சுய தேவையான குளிப்பது,கழிப்பறை உபயோகம்,கப்பலின் தினசரி சுத்தம் செய்யும் இடங்களான குடியிருப்புபகுதி,இயந்திர அறையின் கண்ட்ரோல் ரூம்,இரு உணவுக்கூடம்,மேல் தளத்தில் உள்ள கப்பலோட்டும் அறை(navigation bridge) ,இயந்திர அறையின் நீராவி (boiler)கொதிகலன்,எஞ்சின் இயங்கும்போது குளிர்விப்பானில் குளிர்விக்க தேவை என தினசரி தேவை பத்து முதல் பனிரெண்டு டன்கள் .

 கப்பலின் உள்ள நன்னீர் குழாய்கள் எதிலும்  ஒழுகல் இல்லாமல்,கப்பலின் கழிப்பறை வெற்றிட (vacum) வகையை சார்ந்ததாக இருப்பின் அதிக பட்சம் தினசரி தண்ணீர் தேவை ஆறு முதல் எட்டு டன்கள்.

 கப்பல் துறைமுகம் செல்லும் முந்தையநாள் முழுகப்பலும் உயரழுத்த தண்ணீர் பீய்ச்சியடிக்கும் இயந்திரத்தின் உதவிகொண்டு சுத்தம் செய்வார்கள் அன்றையதினம்  இருபது டன் நன்னீர் செலவாகிவிடும். கப்பல் காரன் எப்போதும் நீர் சிக்கனத்தை கடைபிடிப்பவனாக இருக்க வேண்டும்.அறையிலும் வெளியிலும் நன்னீர் குழாயை திறந்தால் கவனமாக மூட வேண்டும்.


                  கரையொட்டிய பயணம் அர்ஜென்டினா 

   கரையையொட்டிய பயணங்களான மலேசியா- சிங்கப்பூர் பனிரெண்டு மணிநேரம்,அர்ஜென்டினாவின் ஸராட்டே துறைமுகத்திற்கு ஆற்றில் பதினாறு மணிநேர பயணங்களில் நன்னீர் தயாரிப்பதில்லை.இது போல் பெரிய கப்பல்கள் பயணிக்கத்தக்க ஆறுகள் உலகெங்கும் நிறைய உள்ளது அது ஒரு வரம் என்பேன் .

  ஆறுகளிலும்,கரையொட்டிய கடல் பகுதிகளிலும் நீர் அசுத்தமாக இருப்பதும்,மிக மெதுவாக கப்பலை இயக்கவேண்டுமென்பதுமே  இங்கெல்லாம் நன்னீர் தாயாரிக்காமல் இருப்பதற்கான மற்றுமொரு காரணம். கடல் நீரை நன்னீராக்குவது மிக எளிது. தண்ணீர் நூறு பாகை வெப்பமடையும்போது ஆவியாகும்,கடல் நீரை வெப்பபடுத்தி அந்த நீராவியை குளிரவைத்து நன்நீராகவும் உப்பை தனியாகவும் பிரித்து எடுக்கும் இயந்திரம் தான் fresh water generator .



சாதாரண நிலையில் (1bar ) தண்ணீர் நூறு பாகையில் கொதிநிலையை அடையும் .நன்னீர் இயந்திரத்தில் செயற்கையாக ஏற்டுத்தபட்டுட்ட குறைந்த அழுத்தம் கராணமாக அறுபது முதல் எண்பது பாகைக்குள் தண்ணீர் கொதிநிலையை அடைந்துவிடும்

                                                           fresh water generator

 கப்பல் கரையிலிருந்து புறப்பட்டு மெதுவாக வேகம் அதிகரித்து முக்கிய இயந்திரம் அறுபது ஆர்பிஎம்க்கு மேல் வந்த பின்தான் நன்னீர் இயந்திரத்தை இயக்குவார்கள்.

நன்னீர் இயந்திரத்தில் கடல் நீர் உட்புகையில்  முக்கிய இயந்திரத்தில் இருந்து வரும் ஜாக்கட் வாட்டரின் வெப்பத்தை எடுத்துகொண்டு அறுபதிலிருந்து எண்பது  பாகையை அடையும் அந்த வெப்பநிலையில் தண்ணீர் கொதிநிலையை அடைந்து ஆவியாகிறது ,அந்த நீராவியை கடல் நீர்கொண்டு குளிர வைத்து நன்னீராக மாற்றுவது தான் நன்னீர் இயந்திரத்தின் வேலை .

   

நன்னீர் இயந்திரத்தில் இருந்து நீர் வெளியேறுகையில் தேவையான ரசாயனமும்,மினரல்களும் அதில் சேர்க்கப்படும் .குறிப்பட்ட இடைவெளிகளில் நாங்கள் பருகும் நீர் தரமானதாக இருக்கிறதா என கரையிலிருக்கும் ஆய்வுகூடங்களில் சோதனை செய்வார்கள் .

 நீண்ட நாட்கள் நங்கூரம் பாய்ச்சி நிற்கையில் நீராவியை செலுத்தி கடல்நீரை வெப்பபடுத்தி நன்னீர் தயாரிப்போம் .ஆனால் ஒரு நாளில் ஏழு முதல் ஒன்பது டன் நீர் கிடைப்பது அதிர்ஷ்டம்.நீராவிக்காக  கொள்கலனை இயக்குவதால் நாள் ஒன்றுக்கு ஒன்றரை டன் எரிபொருள் செலவாகும் அது கொஞ்சம் விலை அதிகம்தான் .

  இருநூறு டன் கொள்ளளவு உள்ள இரண்டு தண்ணீர் தொட்டிகளில் நன்னீரை தேக்கி வைப்போம் .அங்கிருந்து குழாய்கள் வழியாக ஹைட்ரோ போர் எனும் தொட்டியில் தண்ணீரை கொண்டுவந்து அதில் காற்றை உட்செலுத்தி நாற்பது மீட்டர் உயரமும் ,இருநூறு மீட்டர் நீளமும் உள்ள கப்பலின் முன் பகுதியில் இருக்கும் குடியிருப்பில் உள்ள அறைகளில் குழாயை திறந்தால் அதிக அழுத்தத்தில் தண்ணீர் வரும் .



நதிக்கரையில் இருந்தாலும் தண்ணீரை வீணாக்காதே . திரு குர்ஆன்.

இதை போல் கப்பல் காரன்  ஒரு துளி கூட வீணாக்கதவானாக இருக்க வேண்டும்.பத்து நாள் பயணத்திற்கு பின் தொடர்ச்சியாக பத்து நாட்களுக்கு கப்பல் துறைமுகங்களில் கரையணைகையில் நன்னீர் தயாரிக்க முடியாமல் நீர் பற்றாகுறை ஏற்படும்.2013 ஆம் நான் பணிபுரிந்த ஹார்மொனி ஏஸ் எனும் கப்பல் மெக்ஸிகோவின் வேராகுரூஸ் துறை முகத்தில் இருந்து புறப்பட்டால் நான்காவது நாள் உருகுவேயின் மாண்டி வீடியோ அடுத்தடுத்த நாட்களில் பிரேசிலின் சாவ் புவுலோ,சாண்டோஸ்,ரியோ டி ஜெனீரோ ரியோ கிரந்தோ என தினமும் கரையணைதலும்,காத்திருப்பும் என  தண்ணீர் கையிருப்பு வெறும் நாற்பது டன்னாக இருந்தது.நன்னீர் இயந்திரமும் பழுதானதால் கப்பல் தலைவனுக்கு தலைவலி ஏற்பட்டது .




                            ரியோ டி ஜெனிரோ 

  சில துறைமுகங்களில் நன்னீர் இலவசம்,சில ஊர்களில் ஆயிரம் லிட்டருக்கு 22 அமெரிக்க டாலர் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். 2009 ஆம் ஆண்டு லியோ லீடர் எனும் கப்பலில் பணியில் இருக்கையில்,ஜப்பான் அருகில் மிதந்து கொண்டிருந்தோம்.அப்போது ஏற்பட்ட பொருளாதார முடக்கம் காரணமாக எங்கள் கப்பல் இரண்டு மாதங்களுக்கு சரக்கு ஏற்றுமதி இல்லை என தகவல் வந்தது .மொத்தம் முன்னூறு டன் தண்ணீர் மட்டுமே  கையிருப்பு இருந்தது.காப்டன் அனைவரையும் அழைத்து “நிறைய கப்பல்கள் சரக்கு இல்லாமல் நிறுத்திவைக்கபடுள்ளது, நிறையப்பேர் பணியை இழந்துவிட்டனர் . நமக்கு குறைந்தபட்சம் பணியாவது இருக்கிறது.இருக்கும் தண்ணீரை சிக்கனமாக செலவு செய்யுங்கள் ,நாளை முதல் சலவை இயந்திரங்கள் அடைக்கப்படு, மாலை ஐந்து முதல் ஆறு மணி வரை மட்டுமே தண்ணீர் விடப்படும்” என்றார் .

 அந்த கப்பலில் பொது கழிப்பறை முறை இருந்தது.மொத்தம் இருபத்தியொரு பணியாளர்கள் இருந்தோம் .பதினோரு பேருக்கு மூன்று மூன்று குளியல் அறை,மூன்று கழிப்பறை இருந்தது. அதிகாரிகளுக்கு தனியறைகள்.பொது கழிப்பறையின் முன் இருநூறு லிட்டர் கொள்ளளவுள்ள மூன்று பீப்பாய்களில் தண்ணீர் வைத்திருந்தனர் .இரண்டாவது நாளே கழிப்பறைக்கு மூக்கில் துணியை கட்டி கொண்டு செல்லும் நிலை .



  இது போன்ற ரேசன் நாட்களில்  சமையல் அறையில் உள்ள எல்லா பாத்திரங்களிலும் தண்ணீர் பிடித்து வைத்திருப்பனர்.தண்ணீர் வரும் நேரம் குளித்து, அறையில் குறைந்தது இரண்டு வாளிகளில் தண்ணீர் பிடித்து  வாளியை கட்டி வைக்க மறக்ககூடாது .

2017 நான் இருந்த கப்பல் சன்னி கிரீன் .சிங்கப்பூரில் புறப்பட்டு கானா அருகில் உள்ள டோகோ கடற்கரையிலிருந்துஏழு கடல் மைல் தொலைவில்ஆறு மாதங்கள்  நங்கூரம் பாய்ச்சி நின்றோம் .நீராவியால் கடல் நீரை வெப்படுத்தி நன்னீர் தயாரிப்போம்.தினமும் பத்து டன் வரை நன்னீர் கிடைக்கும் செலவு எட்டு முதல் ஒன்பது டன்கள்.சலவை இயந்திர அறை ஞாயிறு மட்டுமே கிடைக்கும்.அன்று இருபது டன் நீர் தீர்ந்துவிடும்.நான் ஞாயிறு சலவை இயந்திரத்தில் டவல்,தலையணை உறை,கம்பளி உறை மற்றும் மெத்தை விரிப்பு மற்றும் பணி செய்யும் போது அணியும் ஆடைகளை மட்டுமே துவைப்பேன் .

  குளியல் தினமும் மிக சிக்கனமாக கால்களுக்கு இடையில் வாளியை வைத்திருப்பேன்,உள்ளாடைகள் மற்றும் காலுறையை  வாளியில் நிறையும் நீரில் துவைத்து எடுப்பேன் .

 நீரின்றி அமையாது உலகு மட்டுமல்ல  நீரில் மிதக்கும் கப்பலும் தான் .

ஷாகுல் ஹமீது ,

03 oct 2020.

sunitashahul@gmail.com

2 comments: