Wednesday, 24 August 2016

தேவையற்ற சுமைகள்

                               
                       1996 ம் ஆண்டு மணவாளகுறிச்சியில் உள்ள கனி ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் சேர்ந்தேன் மோட்டார் வாகனம் ஓட்டி பழக.
    1700 ருபாய் கட்டணம் என்றார் அதன் உரிமையாளர் சிங் .ஒரு மாத பயிற்சிக்குபின் இரு சக்கர மற்றும்  இலகுரக வாகன ஓட்டுனர் உரிமமும் அவரே எடுத்து தருவதாக சொன்னார் .நான் ஐநூறு ருபாய் மட்டும் கொடுத்துவிட்டு பயிற்சியில் சேர்ந்தேன் .மீதி தொகை பின்பு தருவதாக சொன்னேன் .
  தினமும் காலையில் எட்டுமணிக்கு செல்லவேண்டும் நான்கைந்து பேர் இருப்போம் .ஓட்டுனர் பயிற்றுவிப்பதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கபட்ட ஜீப்பில் சிங் வருவார்.முன் இருக்கை இரண்டிலும் கிளெட்ச்,பிரேக் இருக்கும். மண்டைகாடு கோவில் அருகே சென்று வண்டி திரும்பும் அங்குள்ள புகழ்பெற்ற பகவதியம்மனை வண்டியில் இருந்தவாறே சிலர் கும்பிடுவார்கள்.மண்டைகாடு பகவதியம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என அழைக்கபடுகிறது.வருடம் தோறும் மாசி மாச கொடைவிழா பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுபோது பெண்கள் நோன்பிருந்து இருமுடி கட்டி இங்கே வருகிறார்கள் .
 சிங் ஒருமுறை கூட்டுமங்கலம் அருகில் உள்ள மேடான பகுதியில் வண்டியை நிறுத்திவிட்டு என்னிடம் பிரேக்கில் கால் வைக்ககூடாது ,வண்டி கீழேயும் போககூடாது ,வண்டியை நகர்த்துமாறு சொன்னார் .மெதுவாக கிளெட்ச்லிருந்து காலை எடுக்கவேண்டும் அரை கிளெட்ச் ல் வண்டி நகராமல் நிற்கும்,பின்பு ஆக்ஸிலேட்டரை மிதித்து லாவகமாக வண்டியை நகர்த்தலாம்.மிக நேர்த்தியான பயிற்சி அவருடையது.
   ஒரு மாதத்திற்கு பின் ஓட்டுனர் உரிம தேர்வுக்கு செல்லும் நேரம் வந்தது.நாகர்கோயிலில் உள்ள கோபால் ஓட்டுனர் பயிற்சி பள்ளிக்கு காலை 9 மணிக்குள் சென்றால் அவர்கள் உன்னை அழைத்துசெல்வார்கள் .மீதி தொகையை இங்கே கட்டிவிட்டு செல்ல வேண்டும் என்றார் .
   காலையில் பாண்டியன் மளிகைக்கடையில் சிங்கின் தம்பியிடம் ருபாய் 1200 ஐ கொடுத்தபோது அண்ணன் விவரங்களை சொல்லிவிட்டார் .நீங்கள் விரைவில் கோபால் பயிற்சி பள்ளிக்கு சென்று விடுங்கள் என்றார் .
   எனக்கு இரு சக்கர தேர்வும் இருந்ததால் எங்கள் வீட்டில் இருந்த பஜாஜ் ஸ்கூட்டரில் சென்றிருந்தேன் .
    நாகர்கோயில் கோபால் பயிற்சிபள்ளிக்கு சென்று உரிமையாளரை சந்தித்தேன் .அவர் பணம் எங்கே என கேட்டார் .நான் சிங்கின் தம்பியிடம் கொடுத்துவிட்டு வந்ததை சொன்னேன் .
    அவர் சிங் காலையில் வந்து  ஐம்பது ருபாய் குறைந்தாலும் அவனை டெஸ்டுக்கு அனுப்பாண்டம் னு சொல்லிட்டு திசையன்விளைக்கு போய்ட்டான் .நீ பணம் தந்தால் டெஸ்டுக்கு போகாலாம்  என்றார் .அவர் நான் பணம் கொடுத்துவிட்டு வந்ததை நம்பவில்லை .அப்போதே மணி பத்தாகிவிட்டது .மீண்டும் மணவாளகுறிச்சி சென்று பணத்தை திரும்ப வாங்கி கொண்டு வந்தாலும் அன்று போக்குவரத்து ஆய்வாளரின் முன் நான் தேர்வுக்கு செல்லமுடியாத நிலை .
   அன்று மாலையே நான் திருச்சி புறப்பட்டாக வேண்டும் .அப்போது திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு தேர்வாகியிருந்தேன் .
 ஸ்கூட்டரில் வேகமாக மணவாளகுறிச்சிக்கு வந்து பணத்தை திரும்ப பெற்றுகொண்டேன் .பணத்துடன் சென்றால்தான் ஓட்டுனர் உரிம தேர்வுக்கு அனுமதிப்பதாக சொன்னேன் .
    அன்று மாலையே நான் திருச்சிக்கு சென்றுவிட்டேன் .மீண்டும் ஒரு மாதத்திற்கு பின் நாகர்கோயில் கோபால் பயிற்சி பள்ளிக்கு சென்று ஓட்டுனர் உரிமத்தொகையான ரூ ஐநூறை கொடுத்து தேர்வுக்கு சென்றேன் .
   ஜீப்பில் அமர்ந்ததும் முன் இருகுக்கையில் உரிமம் வழுங்கும் அதிகாரி அமர்ந்துகொண்டு முன்னே என்றார் .இடது காலால் கிளெட்ச் ஐ அமுக்கி முதல் கியரை போட்டு மெதுவாக ஆக்சிலேட்டரிலிருந்து காலை எடுத்து வண்டியை முன்னே நகர்த்தினேன் .பேரு என்ன ஷாகுல் ஹமீது ,அப்பா பேரு சுல்தான் .ஊரு என கேட்டவர் ஸ்டாப் என்றார் .பக்க வாட்டில் கையால் சைகை காட்டிவிட்டு வண்டியை நிறுத்தினேன் .ரிவேர்ஸ் என்றார் .
  மீண்டும் வண்டியை பின்னால் நகர்த்தினேன் .அடுத்த ஆள் என்றார் . பின்பு ஸ்கூட்டரில் ஓட்டிகாட்டினேன் . என் தேர்வு முடிந்தது ,மீண்டும் திருச்சிக்கு சென்றுவிட்டேன் .700 ருபாய் லாபம் .சிங்கை ஏமாற்றிவிட்டேன் .
    நான் பணம் கொடுத்ததை நம்பாததால் என் மனம் பழி வாங்கும் பொருட்டு அப்படி செய்ய தோன்றியதா ,எனக்கு தெரியவில்லை.
  ஒருமாதத்திற்கு பின் ஓட்டுனர் உரிமம் வீட்டிற்கு வந்தது 2016  ம் ஆண்டு வரை 20ஆண்டுகளுக்கு சிறிய புத்தகம் போலிருந்தது .
 சிங்கின் தம்பி என்னை தேடிவந்தான் நான் வசித்த காந்தாரிவிளை தெருவிற்கு அண்ணன் அழைக்கிறான் என .எனது பெரியப்பாவின் மகன் ஜாகிர் அண்ணனிடம் ஒருமுறை சொல்லி அனுப்பினான் பணம் தரவேண்டி .சிங்கை சந்திப்பதையே தவிர்த்துவிடுவேன் .
   அதன்பின் எங்கு சிங் தென்பட்டாலும் நான் மறைந்து கொள்வேன் .ஒரு முறை நாகர்கோயில் டெரிக் பூங்காவிலும் ,கல்யாண வீடுகளிலும்,சாலையிலும் என எங்கு பார்த்தாலும் ஓடி ஒளிவேன் . என் மனம் சொல்லிக்கொண்டேதான் இருந்தது .நான் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது , நான் அவரை ஏமாற்றிவிட்டேன் என .
   2007 ம் ஆண்டு யோகா கற்றுகொள்ள தொடங்கினேன் .வாழ்க்கை தத்துவங்கள் ஒவ்வொன்றாக புரிந்தது .இறை வேதங்களும் அதையே சொல்கிறது .நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்முள் ஒரு பதிவை ஏற்படுத்திவிடுகிறது .நற்செயல்கள் மனதுக்கு மகிழ்ச்சியையும் ,நாம் செய்த தீய செயல்கள் மன அமைதியின்மையையும் ,ஒரு தீராத வலியையும் தருவதை உணர்ந்தேன் .அந்த நினைவு ஆன்மாவில் பதிவதால் அழிவதே இல்லை .அந்த பதிவை அழிப்பதென முடிவு செய்தேன் .
   2010 ம் ஆண்டு சிங் நாகர்கோயில் தண்ணீர்தொட்டி சாலையில் சென்றுகொண்டிருப்பதை பார்த்தேன் .இரு சக்கர வாகனத்தில் சென்ற அவரை கையசைத்து நிறுத்தினேன் .அவருக்கு எதுவும் நினைவில் இல்லை .நான் உங்களுக்கு பணம் தரவேண்டும் என்றேன் .யோசித்தவாறே ஆம் என்னிடம் பயிற்சிக்கு மட்டும் வந்தாயல்லவா என்றார் .
  பின்பு அவருக்கு நினைவுபடுத்தி ருபாய் 700 ன் கணக்கை சொன்னேன் . இப்போதே தருகிறேன் 5 நிமிடம் காத்திருங்கள் ஏ .டி .ம் ல்பணம் எடுத்து வருகிறேன் என்றேன்.அவசரமாக செல்கிறேன் .பின்பு வந்து தொலைபேசி நிலையம் அருகில் வாங்கி கொள்கிறேன் என சொல்லிவிட்டு சென்றவர் பின்பு வந்து பணத்தை பெற்றுகொண்டார் .
  மனம் அப்போது இலகுவானதை உணர்ந்தேன் .அடுத்த சில தினங்களுக்கு பின் ஷாலிமை மாவட்ட ஆயர்(BISHOP HOUSE) வாளகதிலுள்ள அசிசி பள்ளியில் ஒரு போட்டி தேர்வுக்காக அழைத்து சென்றிருந்தேன் .எதிரில் சிங் தன் குழந்தையுடன் வந்துகொண்டிருப்பதை பார்த்தேன் .அவரின் முன் சென்று சிங் நலமா என கை குலுக்கினேன் புன்னகயுடன் ஆம்,என்று சொல்லிவிட்டு மகனை அழைத்து வந்தீர்களா என அன்புடன் புன்னகைத்தார் .
  அவருக்கு நான் தரவேண்டியது நினைவில்லாத போதும் அவரை எங்கு தூரத்தில் பார்த்துவிட்டாலும் மறைந்து கொண்ட நான் .இன்று அவருடன் கை குலுக்கவும் ,நலம் விசாரிக்கவும் முடிந்தது .எதனால் இது சாத்தியமாயிற்று பதிமூன்று வருடங்களாக என் மனதில் கொண்டு அலைந்த சுமையை இறக்கி வைத்ததினால் .
   உரியதை உரியவர்களுக்கு கொடுத்துவிட்டால் .அதுவே நமது இயல்பான மகிழ்ச்சியான வாழ்கையை  வழி நடத்தும் .
  தீயவை தீய பயத்தலால் தீயவை
  தீயினும் அஞ்சப் படும் .
 இருபது ஆண்டு களுக்கு பின் அந்த ஓட்டுனர் உரிமத்தை கடந்த ஏப்ரல் மாதம் புதிப்பிதேன்.மே மாதத்தில் மனைவி குழந்தைகளுடன் ஒரு மலை பயணம் செல்ல வேண்டியிருந்தது .புதிய ஓட்டுனர் உரிமம் அழகான பிளாஸ்டிக் அட்டையில் இருந்தது .இப்போது  ஒன்பது ஆண்டுகளுக்கு தந்தார்கள் ஒன்பது ஆண்டுகள் என்ன கணக்கோ ?
   ஆயிரம் ருபாய் பணத்தை முன்கூட்டியே ஹமீது ஓட்டுனர் பள்ளியில் கட்டிவிட்டுத்தான் .பண்டாரபுரதிலிருக்கும்  மாவட்ட போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றேன்.
 ஷாகுல் ஹமீது .

21-08-2016 .

Sunday, 14 August 2016

தாயன்பு

                                                             
                                                                                   தாயன்பு
    நான் பிறந்து வளர்ந்த காந்தாரிவிளை தெருவில் என் வீட்டருகில் இருந்தது செல்லப்பன் தாத்தா வீடு .அந்த தெருவில் பெரும் பகுதி அவர்களுடைய நிலமாக இருந்தது .இப்போதும் அங்கு செல்லப்பன் ஆசான் காம்பவுண்ட் ,இது பொது வழி அல்ல என்று எழுதியிருக்கும் காந்தாரிவிளையின் நுழைவு வாயிலில் .
   
     செல்லப்பன் தாத்தா ஐந்தரை அடிக்கு மேலே உயரமும் கொஞ்சம் குண்டான நல்ல கட்டுமஸ்தான உடல்வாகும் கொண்டவர் .மரத்தாலான கதை போன்ற ஒன்று  அவர் வீட்டில் இருக்கும் அவர் அதில்தான் உடற்பயிற்சி செய்வார் .நல்ல வெற்றிலையும் சுவைப்பார் .
  எலும்பு முறிவு ,கை,கால் பிசகுதல்,தென்னை,பனை மரத்திலிருந்து கீழே விழுபவர்கள் ,மீன்பிடிக்க செல்லும் போது அடிபட்டு வருபவர்கள் என  சிகிழ்சையளிப்பார். எங்கள் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளிருந்து பலரும் அவரிடம் சிகிழ்ச்சை பெற்று நலம் பெற்றனர் .மூலிகை தைலத்தால் தடவி கட்டு போடுவார் ,முறிவு என்றால் மர துண்டுகளை வைத்து கட்டு போடுவார்.
  
     அவர் வீட்டிலேயே அதற்கான மூலிகை தைலத்தை தயாரிப்பார். சிகிழ்ச்சைக்காக அவராக காசு கேட்கமாட்டார் .நாமாக எதாவது விரும்பி கொடுத்தால் அவரது வெற்றிலை பெட்டியில் வைக்க சொல்வார் .ஒரு முறை நடிகர் மோகன் முட்டத்திற்கு படபிடிப்புக்கு  வந்தபோது கால் பாதம் பிசகி செல்லப்பன் ஆசானிடம் தைலம் போட்டு தடவி சென்றார்.எனக்கும் இரு முறை கால் மூட்டு கீழே விழுந்து விலகியபோது அவரே தடவியும் ,தைலம் போட்டும் சரியாகியது அதுவும் இலவசமாகவே .அவர் பசு மாடுகளுக்கும் சிகிழ்ச்சையளிப்பதால் அவர்  மாட்டுவைத்தியர் எனவும்  பல முகங்களை கொண்டவர் .
   
    அவர் நினைத்திருந்தால் பெரும் பொருள் ஈட்டியிருக்கலாம். அப்போதெல்லாம் மருத்துவம் பொருள் ஈட்டுவதற்க்காக செய்யவில்லை .மேலும் வீட்டருகே ராமகிருஷ்ணன் வைத்தியர் நாடி பார்த்து நோயை அறிந்து மருந்து தருவார் அவரும் நோயாளிக்களுக்கான மூலிகை மருந்தை வீட்டிலேயே தயாரிப்பவர்,குழந்தைகளுக்கும் மருத்துவம் செய்வார்.அது போல வேலுவைத்தியர் அவர்களெல்லாம் அப்போது மருத்துவத்தை சேவை நோக்கிலேயே செய்தனர் .
     
     செல்லப்பன் தாத்தாவின் வீட்டு முற்றத்தில் கிணற்றுக்கு அருகில்  பாக்கு மரமும் ,தென்னை மரங்களும் இருக்கும்.அவர் அதன் நிழலில் சாய்வு நாற்காலியில் மதியஉணவிற்கு பின் படுத்து ஓய்வெடுப்பார். நான் குழந்தையாக இருக்குபோது செல்லப்பன் தாத்தாவின்  தொப்பையில் கவிழ்த்து படுத்து விளையாடி கொண்டிருப்பேன் .
  
 அப்போதெல்லாம் குழந்தைகளை மூன்று வயதில் அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைப்பார்கள் .அது எங்களூரில் அரை கிளாஸ் எனப்படும் .நானும் சென்று வருவேன் .ஆண் குழந்தைகள் இரண்டு வயதில் 52 வார்த்தைகளும் ,பெண்குழந்தைகள் 54 வார்த்தைகளும்  பேசவேண்டும் என கேட்டிருக்கிறேன் .

     ஆனால் எனக்கு பேச்சு திருத்தமாக வரவில்லை .என் வீட்டருகில் இருந்த தாய்மார்கள் அவர்கள் கூடியிருந்து கதை பேசும் மாலை வேளைகளில் என்னை அழைத்து. “சாலமது இண்ணக்கி அர கிளாசுக்கு என்ன கொண்டு போனா”என கேட்பார்கள். நான் “சோவு,மோவு,ஊகா” என சொல்வேன். “நேத்து ராத்திரி தாத்தா வீட்டு பட்டி எப்படி குலச்சது”என கேட்டால்,”அவ் ,அவ்” என குலைத்தது என்பேன். (இது இப்போதும் என் நினைவில் இருக்கிறது ) .அவர்கள் நகைத்து மகிழ்ந்திருக்கலாம். அதன் பின் எனது எட்டு வயதில் நடந்தவையே நினைவுக்கு வருகிறது .
  
    எனது உம்மா மட்டும் கவலைப்பட்டிருப்பாள்,குழந்தைக்கு பேச்சு வரவில்லையே என. தாயன்பு,பத்து மாதம் கருவில் சுமந்தவள் எப்படி கவலை இல்லாமல் இருந்திருப்பாள்.காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே .பெண்ணின் முழுமை தாய்மை .தாய்மையை அடைந்தவர்களுக்கு தானே அதை உணரவும் முடியும். தாயன்பு தானே எல்லாவற்றிலும் மேன்மையானது. தாய் குழந்தையிடம் காட்டும் அன்பு மட்டுமே முழுமையானது ,எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது .ஆம் எல்லா தாயும் தான் .
     
         எனது மகன்களின் குழந்தை பருவத்தில் சுனிதாவும் அப்படித்தான் இருந்தாள்.அவள் தூங்கி விட்டாள் எழுப்பவே முடியாது,இடியோசை கேட்டாலும் தூங்கிகொண்டிருப்பாள். ரமலான் மாதங்களில் ,நோன்பு வைக்க அதிகாலை மூன்று மணிக்கே அவளை எழுப்ப துவங்கினால் தான் மூன்றரைக்காவது எழுவாள். ஆனால் ஷாலிமும் ,ஷல்மானும் குழந்தையாக இருக்கும் போது அவள் எப்போது தூங்குவாள் என்றே எனக்கு தெரியாது .பின்னிரவில் படுத்திருந்திருப்பாள் குழந்தையின் ஒரு சிறு முனகலில் விழித்து விடுவாள் .மேலும் பால் புகட்ட,குழந்தை சிறுநீர் கழித்து ஈரமான உடை மாற்ற என பலமுறை .
   

         குழந்தைகளின் மொழி தாய்க்குதானே நன்றாக தெரிகிறது.பசித்தால் எப்படி அழும்,உடை ஈரமானால் அதன் அழுகை எப்படி எனவும்,முக பாவனையிலேயே குழந்தை இப்பொது மலம் கழிக்க போகிறது என கண்டுபிடிப்பவள் தாய் மட்டுமே.
  
       எனக்கு எட்டு வயதிருக்கும் போது எனது உம்மாவிடம் ஒரு பெத்தா சொன்னார்கள் “கோட்டாரிலுள்ள ஒரு பள்ளிக்கு முஹரம் மாத முழு நிலவு மற்றும் முன்,பின் பிறை நாளில் மூன்று நாட்கள் நோன்பிருந்து ,உன் புள்ளைக்காக எட்டு வீடுகளில் வாய் பேசாமல் மடிப்பிச்சை எடுத்து அந்த பைசால  மிளகும்,உப்பும் வாங்கி பள்ளியில் வை,மஞ்சள் சோறும்,கொழுக்கட்டையும் வெச்சி  அஞ்சாறு பாவங்களுக்கு சாப்பாடு குடு” உன் மகன் நிச்சயம் பேசுவான் என உறுதி தந்திருக்கிறாள்.
    
   என்  தாய் மூன்று தினம் நோன்பிருந்து என்னை அழைத்துக்கொண்டு பிச்சைஎடுக்க வந்தாள்  பக்கத்து வீடுகளில் ,முதலிலேயே சொல்லிவைத்திருந்தாளாம்  “புள்ள வருவான் நேர்சைக்கு” என .அவுக்கார் பெத்தா,சாரதா அத்தை வீட்டு வாசல்களில்  நின்று என் தாய் முந்தானையை விரித்து மடிப்பிச்சை கேட்டது இப்போதும் என் கண்முன்னே காட்சியாகிறது .நேர்ச்சையை நிறைவேற்றினாள் என் தாய் .அவளது விடாபிடியான நம்பிக்கையும்,நோன்பும்,ஆழ்மனதின் சங்கல்பமும் வீண் போகவில்லை .இறைவனிடம் மண்டியிட்டு அழுதிருப்பாள் எட்டு வயது வரை மகனுக்கு பேச்சு சரியாக வரவில்லையே என .
  

    இப்போதெல்லாம் நான் எப்படி பேசுவேன் என என்னை தெரிந்த அனைவருக்கும் தெரியும். “நீ பேசியது போதும் நிறுத்துப்பா” என்று  சிலர்  சொல்வார்கள். திருமணமான புதிதில் சுனிதாவிடம் இதை சொல்லிகொண்டிருந்த போது அவள் “மாமி மூன்று நாள் நோன்பை இரண்டாக  குறைச்சிருக்கலாம், ரொம்ப பேசுறாரு” என்றாள் உம்மாவிடம் .

         2005 ல் வேலை செய்துகொண்டிருந்த கப்பலில் இருந்து வேறு கப்பலுக்கு மாற்றமாகி சென்றேன் .ஒரு மாதத்திற்கு பின் மீண்டும் பழைய கப்பலின் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியபோது ஷாகுல் தும் கெயா ஜாஹாஜ் சாந்த் ஓஹையா(நீ சென்றதும் கப்பல் அமைதியாகி விட்டது ) என்றனர் .
  
     இப்போதும் குழந்தைகளுக்கு உடல் முடியாமல் ஆகும் போதும் ,சில இன்னல்களின் போதும் தொடர்ந்து வாரம் தோறும் ஏழைகளுக்கு உணவு அல்லது உணவிற்கான பொருட்களை கொடுப்பதை வழக்கமாக செய்து வருகிறார் என் தாய் .
  
     குழந்தைகளின் பிறந்தநாட்களில் கேக் வெட்டுவதை விட ஐந்து அல்லது ஏழு என ஒற்றைபடை யில் ஏழைகளுக்கு உணவளிக்கவே விருப்பம் .படித்தவர்களுக்கு இதிலெல்லாம்  நம்பிக்கை இல்லை .அவர்கள்  எப்போதும் கேள்விகள் கேட்பார்கள் .
  
    ஆங்கில கவிஞன் மில்ட்டனின் கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது . தூரத்தில் இருக்கும் நட்சத்திரத்திற்கு தெரியாமல் ஒரு பூவை கூட நீங்கள் கிள்ள முடியாது என.நமது எண்ணங்கள் இந்த பிரபஞ்சம் முழுமையும் பரவுகிறது .அந்த இறையாற்றலே அனைத்து உயிர்களுக்கும் உதவி செய்கிறது .

     இதையே குர்-ஆனும் ,கீதையும் குறிப்பிடுகின்றன .இயேசு மகானும்  வள்ளுவரும்,பாரதியும் ,இதையே சொன்னார்கள் .

    எண்ணியர் எண்ணியாங்கு எய்துபர் எண்ணியார்
   திண்ணியர் ஆகப் பெறின் .

    என் தாயின் உறுதியான நம்பிக்கை அது தன் மகன் பேசுவான் என .
  
 ஷாகுல் ஹமீது ,
14-08-2016.
        

Thursday, 11 August 2016

உலங் காங் (ஆஸ்திரேலியா )

 ஆஸ்திரேலியாவின் போர்ட் கெம்ப்லாவுக்கு, காலையில் கப்பல் வந்து சேர்ந்தது இரண்டாவது முறை இங்கு வருவது 2009 ல் ஒருமுறை வந்தேன்.சிட்னி நகருக்கு ரயிலில் இங்கிருந்து 2 மணி நேரம் என சொன்னதாக நினைவு  .
    மாலைவரையில் வேலை 5 மணிக்கு மேல் குளித்து தயாரானேன் .யாரும் என்னுடன் வெளியில் வர விரும்பவில்லை வேலை செய்த களைப்பு . கப்பலின் மேல் தளத்திலிருந்து பார்த்தால்  தெரியும் அழகிய கடற்கரை தான் என்னை தூண்டில் மீனை கவர்ந்திழுப்பது போல் அழைத்தது .
    இரு துறைமுக வாயில்கள் இங்கு கப்பலில் இருந்து இறங்கி நடப்பது தடை செய்யப்பட்டுள்ளது .வாயிலில் இருக்கும் காவலரை அழைத்து அவருடன் காரில் தான் செல்லவேண்டும் .அங்கு அடையாள அட்டைகளை சரிபார்த்துவிட்டு அனுமதிப்பார் .
    பின்பு அடுத்த வாயில் வரையில் நடக்கத்தான் வேண்டும் .துறைமுகத்தை ஓட்டிய இடம் முன்பு காடாக இருந்திருக்கலாம் செல்லும் வழியிலேயே பெரிய முயல்களை பார்த்தேன் .
     சிறிய வாயிலில் இன்முகத்துடன்  மீண்டும் அடையாள அட்டை  மற்றும் ஆஸ்திரேலியா நாட்டில் செல்வதற்குரிய அனுமதி சீட்டை பரிசோதித்து விடைதந்தார்  காவலர் .
  சிட்னி செல்லும் நெடுஞ்சாலையில்  வாகனங்கள் வேகமாக சென்று கொண்டிருந்தது. ஞாயிறு ஆகையால் போக்குவரத்து குறைவாக இருந்தது .பாதசாரிகள் ,மிதிவண்டியில் செல்பவர்களுக்கு தனி பாதை .அதுவும் ஒருவழி பாதை .நம்மூரை போல பயப்படவேண்டியதில்லை சாலையில் நடக்கும்போது  .சாலையிலும் போக்குவரத்து விதிகளை யாரும் மீறுவதில்லை .காவலர் இல்லாத போதும் .
   சாலையை ஒட்டியே உயர்ந்த ,அடர்ந்த மரங்கள் நிரம்பிய காட்டு பகுதிதான் இருக்கிறது .பத்து நிமிடங்கள் மெதுவான நடைக்குபின் மழைமேகம் சூழ்ந்து வருவதை கண்டேன். வழக்கமாக வெளியே செல்லும் போது கைப்பையுடன் ஒரு பாலிதீன் பையும் வைத்திருப்பேன் இன்று மறந்து விட்டேன் .சட்டை பையில் எனது கைபேசி,அனுமதி சீட்டு ,அடையாள அட்டையை மழை வந்தால் எப்படி நனையாமல் காப்பது என எண்ணியபோதே லேசான தூறல் விழ ஆரம்பித்தது .வேகமாக நடக்க தொடங்கினேன் .பலத்த மழை நெருங்கி வருகிறது என்பதை பலத்த குளிர் காற்று உணர்த்தியது .
   ஒதுங்கி நிற்பதற்கு  சாலையில் இடமே இல்லை .பலத்த மழை என்னை நெருக்கியபோது ஒரு நட்சத்திர விடுதியை கண்டடைந்து அதன் வாயிலில் ஒதுங்கிகொண்டேன் .
    சூறாவளி காற்றுடன் பலத்த மழை ,சாலையில்  வாகனங்கள் இன்றி வெறிச்சோடின. விடுதியின் முன்பிருந்த மரம் வில்போல வளைந்து தரையில் விழுந்துவிடும் என்றே எண்ணினேன் .எனது கப்பல் என்னவாகியிருக்கும் என்ற எண்ணம் என் மனதில் மின்னல் போல் வந்து சென்றது .அந்த பெருமழையிலும் ஒரு பெண் சாலையோரமாக சென்றுகொண்டிருந்தாள் என்ன அவசர வேலையோ அவளுக்கு .
     இருபது நிமிட பெருமழை ஒய்ந்து மீண்டும் தூறல் .போய்விடலாம் என நினைத்தபோது கைப்பேசி நினைவு வந்தது .விடுதியின் வரவேற்பரையிலிருந்த பணிப்பெண்ணிடம் சென்று என்னை அறிமுகம் செய்துகொண்டு எனது கைபேசியை மழை நனையமால் பத்திரமாக கொண்டு செல்ல உதவுமாறு வேண்டினேன் .எதாவது பாலிதீன் பை வைத்துருப்பார்கள் என நினைத்தேன் .ஒரு பிளாஸ்டிக் டப்பாவை கொண்டு தந்தாள் .இது பெரியதாக இருக்கிறதே ,பாலிதீன் பை இல்லையா என கேட்டேன் .சிரித்து கொண்டே ஒன்றும் இல்லாததுக்கு இது பரவாயில்லை என அழகிய பற்கள் தெரிய சிரித்தாள்  (something is better than nothing take this ) நானும் சிரித்தேன். நன்றி கூறி கடற்கரை செல்லும் வழி கேட்டேன் .அடுத்த சந்தில் சென்றால் கோல்ப் மைதானம் வரும் தாண்டியதும் கடற்கரை என்றாள் .மீண்டும் நன்றி கூறி விடை பெற்றேன் .
    பச்சை பசேலென கண்ணுக்கெட்டிய தூரம் வரை  புல்வெளியாக இருந்தது .மாணவர்கள் நான்கு பேர் புல் தரையிலிருந்து எதையோ எடுத்து ஒருவர் மீது ஒருவர் எறிந்து விளையாடிக்கொண்டு இருந்ததனர் .அருகில் சென்று பார்த்தபோது தான் தெரிந்தது அது பனிக்கட்டிகள் என கையில் எடுத்து பர்ர்தேன் நிலக்கடலையைவிட சற்று அளவில் பெரிது அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே அளவில் .இதை இப்படி ஒரே அளவில் செய்தது யார் என தோன்றிற்று .மனம் மகிழ்ச்சியில் துள்ளியது .பெய்தது ஆலங்கட்டி மழை .
    அங்கிருந்து பார்த்தால் அழகிய வானவில் அதை ரசித்து கொண்டே கீழிறங்கினால் கடற்கரையும் ,வானவில்லும் என்னை வரவேற்றன .மக்கள் நடமாட்டமே இல்லை .கணவன் ,மனைவி ,ஒரு குழந்தை அடங்கிய சிறிய குடும்பம் ஒன்று விளையாடி கொண்டிருந்தது .
   கடற்கரையின் மறு எல்லையில் ஒரு கலங்கரை விளக்கம் தெரிந்தது  அதை நோக்கி மெதுவாக நடக்க தொடங்கினேன் .இருவர் கடலலையில் சர்பிங் விளையாடும் தட்டுகளுடன் அலையை நோக்கி மகிழ்ச்சியுடன் சென்றுகொண்டிருந்தனர் .மழை ஓய்ந்திருந்தது ,கடற்கரையில் குப்பைகளின்றி சுத்தமாக இருக்கிறது .
    கலங்கரைவிளக்கம் நெருங்கும் போது நிறையபேர் ஆண்களும்,இளங்குமரிகளும் ,புதிதாக பயிற்சி செய்பவர்களும் உற்சாகத்துடன் கடலலையில் விளையாடி கொண்டிருந்தனர் சர்பிங் விளையாட்டுக்கான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடலை ஒட்டிய உடை அணிந்திருந்தனர். வடஇந்திய குடும்பம் ஒன்றை பார்த்தேன் .அங்கிருந்த பாறைகளில் குழந்தைகளுடன் மாலை பொழுதை மகிழ்வுடன் கழித்துகொண்டிருன்தனர் .
   கலங்கரை விளக்கம் அருகிலேயே பெரிய புல்வெளி .வாகனங்களில் வருபவர்கள் கலங்கரை விளக்கம் அருகில் வரை வந்து விடலாம் .வாகன நிறுத்துமிடத்தில் யாரும் ,இடையூறாக வாகனங்களை விட்டு செல்லவில்லை.புல்வெளியில் விளையாடி கொண்டிருந்த இரு குழந்தைகள் மலையாளம் பேசுவதை கேட்டேன் .அருகில் தாய் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள் .அயல் தேசத்தில் நம்மூர் முகம் கண்டால் பத்து நாள் ஆட்டுக்குட்டி போல்  மனமும் துள்ளுகிறது .பின்பு சந்திக்கலாம் என கலங்கரை விளக்கம், அருகில் இருந்த பழைய பீரங்கிகள் இருந்த இடம் நோக்கி சென்று விட்டேன்.
  
     மாலைநேர தற்காலிக கேளிக்கை கூடாரங்கள் காற்றில் தூக்கி வீசிஎறியபட்டு கலவரபகுதி போல் காட்சியளித்தது .
   இந்த அழகிய சிறிய நகரத்தின் பழைய பெயர் இல்லவாரா  ,தற்போது  உலங்காங் (woollongong)என்றழைக்கபடுகிறது .இந்த அழகிய கடற்கரை ப்ரிங்க்டான் பீச் (Brighton beach)  இங்கு  1800  முன்பே மீன்பிடி துறைமுகம் இருந்திருக்கிறது .1829 ல் ஒரு ராணுவ ரெஜிமென்ட் இங்கு துவங்கியிருக்கிரார்கள் .
    1888 ல் (அப்பவே ரயில் ) சிட்னி –உலங்காங் இடையில் ரயில் போக்குவரத்து துவங்கியபோதுதான் பயணம் எளிதாகியுள்ளது .அதன் முன்பு சரியான சாலைகள் இல்லாததால்(மலைபகுதியும் கரடு முரடாக சாலை வசதி இன்றி இருந்திருக்கலாம் ) .கடினமான கடல் போக்குவரத்து மட்டும் இருந்துள்ளது .போர்ட் கெம்லாவும்  நூற்றாண்டு பழமை வாய்ந்தது .
   பின்பு வந்து மலையாளி பெண்ணிடம் என்னை அறிமுக படுத்திகொண்டு பேசினேன் .கண்டப்ப மலையாளி னு தோனி நாட்டில எவிடயா என்றாள் .நான் கன்னியாகுமரி,தமிழ்நாடு என்றேன் .ஓ மலையாளம் அறியாம் அல்லே என்றாள் .தனது பெயர் லக்ஷ்மி எனவும் இங்கு கடந்த 5 ஆண்டுகளாக நர்ஸாக பணிபுரிவதாகவும் ,ஒரு ஆணும் ,பெண்ணும் என இரு குழந்தைகள் .தனது கணவன் நடை பயிற்சிக்கு சென்றுள்ளதாகவும்  ,நாட்டில் கோட்டயமானு எனவும், இந்த ஊரில் இந்தியர்கள் இன்னும் நிறையப்பேர் உள்ளதாகவும் கூறினாள் . பின்பு நான் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என கூறி விடைபெற்றேன் .
        லேசாக இருள தொடங்கியதும் மனம் நிறைவாக இருப்பதை உணர்ந்தேன் தனியாக வரும் போதுதான் இயற்கையுடன் மனம் லயித்து ரசிக்கவும் ,இதுபோன்ற அழகிய இடங்களையும் கண்டுபிடிக்கவும் முடிகிறது .கப்பல் பணியாளர்கள் இதுபோன்ற இடங்களுக்கு வர விரும்புவதில்லை .கிடைத்த வாய்ப்பில் வெளியில் வந்து குடிக்கவும் ,வணிக வளாகங்களில் தேவை உள்ளதும் ,தேவை இல்லாததுமான பொருட்களை வாங்கி குவித்து நேரத்தையும் ,பணத்தையும் வீணடிப்பர் என்னை போல விதிவிலக்கும் உண்டு .
    அருகிலேயே  உணவுவிடுதியை கண்டேன் .மக்கள் கையில் வைன் குடுவையுடன் மாலைநேரம் முடிந்து இருள் துவங்கும் வேளையில் தெரியும் செவ்வானத்தை ரசித்துக்கொண்டு இருந்தனர் .
   எனக்கு பிடித்த மீன் உணவை தேர்வு செய்யும்முன் அமெரிக்க பணம் வாங்கி கொள்வீர்களா என்றேன் .இல்லை ஆஸ்திரேலிய பணம் மட்டுமே ஏற்றுகொள்வோம் என்றார்கள் .இன்று ஞாயிறு ஆதலால் எல்லா பணம் மாற்றும் இடங்களும் அடைத்திருப்பார்கள் என்றாள் புன்னகையுடன் அங்கிருந்த பணிப்பெண் .
    எனக்கு உடனே நினைவு வந்தது .அந்த மலையாளி சேச்சியை கண்டு பணம் மாற்றிக்கொள்ளலாம் என .விரைந்து சென்றேன் .அப்போது அவளது கணவன் அஜீத் நடைபயிற்சி முடிந்து வந்திருந்தார் .வழக்கமான விசாரிப்புக்குபின் .இருபது அமெரிக்க பணம் கொடுத்து ஆஸ்திரேலிய பணம் தரும்படி வேண்டினேன் .இன்று இங்குள்ள உணவு விடுதியில் சாப்பிட ஆசை படுகிறேன் என்றேன் .
   கணவன் ,மனைவி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர் .எதோ தவறாகிவிட்டதோ என நினைத்தேன் .நாங்கள் காசு உபயோகிப்பதே இல்லை என்றார் அஜீத்.அனைத்து தேவைகளுக்கும்  வங்கி அட்டைதான் ,லக்ஷ்மி உன்னிடம் காசு இருக்கிறதா என்றார் ,சேச்சி தனது கைப்பையை துழாவிவிட்டு 5 டாலர் இருக்கிறது என்றாள் .
   அஜீத் என்னை காரில் அழைத்து சென்றார் .நான் சென்ற அதே உணவு விடுதி நான் சாப்பிடவிரும்புவதை சொன்னேன் ,அது வேண்டாம் என கூறி வேறு ஒரு உணவை காட்டி நன்றாக இருக்கும் என்றார் .எனக்கும் அவருக்கும் என இரண்டை கட்டிதருமாறு கூறிவிட்டு .குடிப்பதற்கு என்ன வேண்டும் என கேட்டார் கோக் ,பெப்ஸி எதுவும் நான் குடிப்பதில்லை என்றேன் விழி உயர்த்தி அதிசயமாக என்னை நோக்கிவிட்டு ,வங்கி அட்டைமூலம் பணம் செலுத்தினார் .பத்து ஆஸ்திரேலிய டாலர்  வீதம் .நான் அவரிடம் இருபது அமெரிக்க டாலர்களை அவரிடம் கொடுத்தேன் அதை வாங்க மறுத்து விட்டார்.
    தானும் கப்பலில் பணி செய்ய விரும்பி அதற்க்கான பயிற்சிகளை முடித்து , (CDC ) கப்பலில் செல்வதற்க்கான அடையாள அட்டையை பெற்று ஒரு  வருடம் மும்பையில் அலைந்துவிட்டு . பின்பு இங்கு வந்தாதாக சொன்னார் .கப்பலில் காப்டனின் சம்பளம் என்ன என கேட்டார் உத்தேசமாக 5 லட்சத்திற்கு மேல் என்றேன் .இவ்வளவு பணத்தை வைத்து என்ன செய்வார் அவர் என கேட்டார் .காப்டனிடம் கேட்க வேண்டிய கேள்வி என மனதிற்குள் சிரித்துகொண்டேன். இங்கே உதிரி பாகங்கள் விற்பனை பிரிவில் பணிசெய்வதகாவும் ,சிட்னியிலிருந்து இந்திய உணவு மற்றும் மசாலா பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை நண்பருடன் நடத்துவதாகவும் சொல்லிவிட்டு .எனது கப்பல் காப்டனிடம் சொல்லி அடுத்தமுறை இங்கு வரும்போது கப்பலுக்கான உணவு பொருட்களை தன்னிடம் வாங்குமாறு கேட்டுகொண்டார் .
  தனது தொலைபேசி எண்ணும் ,விலாசமும் அடங்கிய அட்டையை தந்து காப்டனிடம் கொடுக்கவும் சொன்னார் .
     அடுத்தமுறை வரும்போது அவரது வீட்டிற்கும் அழைத்து செல்வதாக உறுதியளித்தார் .நன்றி கூறி விடைபெற்றேன் .அருகில் இருந்த பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டேன் .
    நன்றாக இருட்டி விட்டிருந்தது கடற்கையை ஒட்டிய சாலையிலிருந்து விலகி பிரதான சாலைக்கு வரும் வழியில் ,பெரிய கேளிக்கை விடுதிகளும் ,விளையாட்டு மைதானமும் இருந்தது .
   கிளை சாலைகளில் கொஞ்சம் சுற்றிவிட்டு மீண்டும் பிராதன சாலைக்கு வந்து நடக்க ஆரம்பித்தேன். சாலையில்  வாகனங்களும் ,மக்கள் நடமாட்டமும் இன்றி  வெறிச்சோடிவிட்டது.நீண்ட நடைக்குபின் துறைமுக வாயிலை நெருங்குவதற்கு முன் உலங்காங் ஆடி கார் விற்பனை மையத்தை தாண்டி ,அடர்ந்த மரங்களும் ,போதிய வெளிச்சமின்றி இருந்த இடத்திற்கு அருகில் வரும் போது என்னெதிரில் வந்த  சுமாராக 15 வயது நிரம்பிய பெண்  தனியாக என்னை கடந்து சென்றாள் முதுகில் புத்தக பையாக இருக்கலாம் .
   அந்த இடம் கடந்ததும் இருளும் ,அடர் மரங்களும் உள்ள பகுதி .மனதில் தோன்றியது தேச தந்தை காந்தி விரும்பிய சுதந்திரம் ஆஸ்திரேலியாவில் சாத்தியாமாகி இருக்கிறது .இந்தியாவும் விரைவில் மாறவேண்டும் .
    துறைமுக காவலருடன்  காரில்  கப்பலுக்கு  செல்லும்போது .மாலையில் சூறாவளி காற்றுடன் பெய்த பெருமழையில்  கப்பலை கட்டியிருந்த  அனகோண்டா அளவில் இருக்கும் கயிறுகள் அறுந்து கப்பலின் முன்பகுதி கடலுக்குள் திரும்பி சென்றுவிட்டது என்றார் .
  கப்பலின் வாயிலில் அன்சாரி பாய் பணியிலிருந்தார் .மழை ,காற்று பற்றிய எந்த உள்ளூர்  வானிலை அறிக்கையும் தரவில்லை(இயற்கை தன் கட்டுப்பாட்டில் இருக்கிறது )  எதிர்பாராமல் நடந்தது .எனினும் கப்பலில் அவசரகால ஒலி எழுப்பி அனைவரும் சமயோசிதமாக  செயல்பட்டு பெரும் விபத்து தவிர்க்கபட்டிருந்தது.
  2015 நவம்பர்மாதம் போய்வந்தேன் .மெல்போர்ன் நினைவுகளை பின்பு எழுதுகிறேன் 

ஷாகுல் ஹமீது 
11-08-2016


படங்கள்   விரைவில்  .இணையம் போதிய வேகம் இல்லை .

Friday, 5 August 2016

அந்த பெரியவர்

                          அந்த பெரியவர்
                           ====================
     மணவையில்(மாணவாளக்குறிச்சி ) கடற்கரை சாலையில் பள்ளிவாசல் தாண்டியதும் காணவிளை செல்லும் சந்துக்கு எதிரில் இருந்தது சோமன் அண்ணனின் வொர்க்ஷாப் . மீனவர்கள் கட்டுமரத்தை இயக்குவதற்குரிய லம்பார்தினி டீசல் இயந்திரம் பழுதுபார்க்குமிடம் . முட்டம் ,கடியபட்டணம் ,அழிக்கால் போன்ற ஊர்களிலிருந்து மீனவ நண்பர்கள் கொண்டுவரும் இயந்திரத்தை சரி செய்து கொடுத்தால் .கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு பெரும் தொகையை கடன் சொல்லுவார்கள்  , மேஸ்த்ரி சனிக்கிழமைக்கு வாறேன் , என சொல்லிவிட்டு சென்றால் அவர்கள் மீண்டும் வருவது அடுத்த முறை இயந்திரம் பழுதடையும் போது .
      ஐ.டி.ஐ படிப்பு முடித்ததும் அங்கு சோமன் அண்ணனிடம் பயிற்சிக்காக பணியில் சேர்ந்தேன் .சம்பளம் கிடையாது ஆனால் செலவுக்கு ஏதாவது கிடைக்கும் .சில சமயம் காஸ் குப்பி எடுக்க நாகர்கோவில் செல்வோம் ஒருமுறை இந்து கல்லூரி அருகில் உள்ள அனாதைமடம் வளாகத்தில் நடந்த பாம்பே சர்கஸ்க்கும் சோமன் அண்ணன் மனைவி, குழந்தையுடன் அழைத்து சென்றார் .
    அப்போதெல்லாம் கடற்கரை கிராமங்களில் அடிக்கடி சண்டைகள் நடக்கும் .ஒருமுறை கடலில் கட்டுமரங்கள் தீ வைக்கப்பட்டது என்று கேட்டதும் நாங்கள் நான்கைந்து பேர் பாபுஜி பள்ளிக்கூடம் செல்லும் வழியாக ஓடி சின்னவிளை கடற்கரையை அடைந்தபோது ஆடு மேய்ச்சான் பாறைக்கு அப்பால் ஒரு படகு கொழுந்துவிட்டு எரிவதை கண்டோம் .
   சோமன் அண்ணனிடம்  ஒரு லேம்பெர்ட்டா ஸ்கூட்டர் இருந்தது (1978 ம் ஆண்டு தயாரிப்பு )அதில் தான் உற்சாக பயணம் நாகர்கோயில் ,திங்கள்சந்தை என உதிரி பாகங்கள் வாங்க செல்வோம் .நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே எங்கள் வீட்டில் பஜாஜ் ஸ்கூட்டர் இருந்ததால் நன்றாகவே ஸ்கூட்டர் ஓட்ட பழகியிருந்தேன் .சோமன் அண்ணனின் லேம்பெர்ட்டாவில் பெட்ரோலுடன் ,மண்ணெண்ணெய்யும் 1:1 என்று கலந்து ஓட்டுவோம் .(அப்போது காற்றை மாசுபடுத்துகிறோம் என தெரியவில்லை .)
     கடியபட்டணம் கிறிஸ்துவ கோயில் அருகில் ஒரு உதிரி பாகங்கள் வாங்கும் கடை இருந்தது .அங்கும் அடிக்கடி சென்று வருவோம் .
      ஒருமுறை முட்டம் ,கடியபட்டணம் கிராமங்களுக்கிடையே பயங்கர சண்டை போக்குவரத்து நிறுத்தபட்டிருந்தது .மணவாளகுறிச்சியிலிருந்து       கடியபட்டணம் செல்லும் சாலையில் செங்குழி அருகில் சாலையை முழுவதுமாக துண்டித்திருந்தார்கள் .வெளியாட்கள் எவரும் ஊருக்குள் வருவதை தவிர்க்க .
   சண்டை முடிந்து சில நாட்களுக்கு பிறகு கடியபட்டணதிலுள்ள கடையில் உதிரி பாகம் வாங்குவதற்காக சோமன் அண்ணனின் லேம்பெர்ட்டாவில் புறப்பட்டேன் .வள்ளியாறு பாலம் தாண்டி கடியபட்டணம் சாலையில் திரும்பியபோது ஒரு பெரியவர் கையசைத்ததும் வண்டியை நிறுத்தினேன் .எங்க போறோம் என கேட்டார் ,கடியபட்டணம் என்றதும் ,நான் வரட்டா என கேட்டார்  .
     கும்பாரி பெறத்த ஏறுங்க என்றேன்  .பின் இருக்கையில் ஏறிக்கொண்டார் . வண்டி மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த போது செங்குழி பாலம் தாண்டியதும் சாலையில் ஒரு வளைவு உள்ளது ,மிக அருகில் சென்றபோது தான் தெரிந்தது ,சாலை துண்டிக்கப்பட்டிருந்தது .ஒன்றரை அடி அகலமும் ,ஒரு அடி ஆழமும் இருந்திருக்கும் .
   என்னால் வண்டியை கட்டுப்படுத்த இயலவில்லை மிக அருகில் சென்றதும் நான் வண்டியில் இருந்து கீழே குதித்துவிட்டேன் .வண்டி சென்ற வேகத்தில் பள்ளத்தை தாண்டி சாலையின் மறுபுறம் சென்று டாமர் என விழுந்தது .பின்னால் இருந்த பெரியவர் தூக்கிவீசப்பட்டு சாலையில் பேச்சு ,மூச்சற்று  குப்புற விழுந்து கிடந்தார் .
    சப்தம் கேட்டு அருகில் இருந்த ஒரு வீட்டில் வெள்ளை அடிக்கும் (சுண்ணாம்பு பூசும் )வேலை செய்துகொண்டிருந்த நாராயணன் மற்றும்இருவர் ஓடிவந்தனர் .
   நாராயணன் என் வீட்டருகில் வசிப்பவர் .மாப்ளே ரோடு தோண்டி போட்டுருக்கு தெரியாதா என கேட்டுகொண்டே ,பெரியவரின் அருகில் சென்று  அவரை லேசாக தட்டி எழுப்ப முயன்றார் .
  எனக்கு கை ,கால் உதற ஆரம்பித்தது .பெரியவர் இறந்துவிட்டார் என்றே  நினைத்தேன் .எனக்கும் மூச்சு நின்று விடுவது போன்ற பயம் ஏற்பட்டது .
   பின்பு நாராயணன் கொஞ்சம் தண்ணீரை பெரியவரின் முகத்தில் தெளித்ததும் கொஞ்சம் அசைந்து பின்பு எழுந்து உட்கார்ந்தார் .நாராயணன் என்னிடம் மாப்ளே வண்டிய பாரு என்றார் .
   இருவருமாக வண்டியை தூக்கி நிறுத்தினோம் .ஐந்தாறு முறை உதை வாங்கியபின் வண்டி உறுமலுடன் புகையை கக்கிகொண்டு பயணத்திற்கு  தாயாரகிவிட்டது .
   பெரியவர் என்னருகில் வந்து என்னய கோயிலுகிட்ட இறக்கியுடுங்க என்றார் .மீண்டும் என்னுடனா என மனதில் எண்ணிக்கொண்டேன் .மாப்ளே பாத்து போ பெருச பத்திரமாக இறக்கிவிடு என்றார் நாராயணன் .
   கிறிஸ்துவ கோயில் அருகில் அவரை இறக்கிவிட்டேன் .உதிரி பாகங்கள் வாங்கிவிட்டு வரும் வழியில் வள்ளியாறு பாலம் அருகில் உள்ள செங்குழி சைக்கிள் கடை மாமாவின் மகன் நடத்தும் இரு சக்கர பழுதுபார்ப்பு நிலையத்தில் வண்டியை நிறுத்தி விஷயத்தை சொன்னேன் ,மாமா அங்கு இருந்தார் .
   அவர் வண்டியை பரிசோதித்து விட்டு வண்டியில் போர்க் உடைந்துவிட்டது எப்படி இதை ஓட்டிக்கொண்டு வந்தாய்  இறைவன்தான் உன்னை காப்பாற்றினான் என்றார் .இப்படி இதை ஓட்டுவது பெரும் ஆபத்து இங்கேயே விட்டு விட்டு செல் என்றார் .
   அங்கிருந்து நடந்தே வொர்க்ஷாப் வந்து சோமன் அண்ணனிடம் விபரம் கூறினேன் ,உனக்கு ஒன்றும் ஆகவில்லையே என கேட்டார் .மாலையில் வழக்கமாக வரும் மீனவ நண்பர்கள் 3 பேர் வந்தனர் .
  கும்பாரி காலம்பற என்ன நடந்தது .உம்ம கூட வண்டில  வந்த ஆளு பழைய அடிமுறை ஆசான் அதனால ஆளு தப்பிட்டது ,நீரு பிழச்சிரூ என்றனர் .ரோடு வெட்டி போட்டிருக்குன்னு தெரியாமலா வண்டில போனோம் என கேட்டனர் .ஆம் என தலைய மட்டும் அசைத்து பெருமூச்சு விட்டேன் .
    பின்பு அந்த லேம்பெர்ட்டா ஸ்கூட்டர்க்கு போர்க் கிடைக்காமல் எடைக்கு போட்டுவிட்டு ,ஷாபி வைத்திருந்த வேறு ஒரு லேம்பெர்ட்டா வண்டியை வாங்கினார் சோமன் அண்ணன் . 7000 ருபாய் என நினைவு அது பெட்ரோலில் மட்டுமே ஓடியது .
 1995 ல் நடந்தது .
02 ஆகஸ்ட் 2016
படங்கள் இல்லை .