Thursday, 23 July 2026

கோஸ்டா அசுல் (மெக்ஸிகோ)



       இந்த மாதம் ஆறாம்தேதி மெக்ஸிகோவின் கோஸ்டா அசுல் (COASTA AZUL) துறைமுகப்பிற்கு வந்தோம். 2008 ஆம் ஆண்டு முதன்முதலாக மெக்ஸிகோ வந்தேன். 

 அக்கபுல்கோ, மன்சிலனோ, வெராகுரூஸ், லார்சனோ கார்டனஸ் என அழகிய துறைமுகங்கள். தமிழகத்தை போன்ற தட்பவெப்பநிலை, அழகான பெண்கள் மற்றும் நம்மை போலவே கொஞ்சம் காரமான உணவை சாப்பிடுபவர்கள். 

 கப்பலை நிறுத்தியபின் வாயிலை தாண்டினால் சாலை. மிக அழகான கடற்கரைகளை கொண்ட ஊர் சனிக்கிழமை மாலையானால் சாலையை ஒட்டிய கடைகளில் அளவான மதுவருந்திய ஜோடிகள் (இருபது முதல் அறுபது வயது வரை) நிதானமாக ஆடி மகிழ்வதை காணலாம்.

கார் ஏற்றும் கப்பல் 


  காரேற்றும் கப்பலிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு முன் எல்பிஜி கப்பலில் வந்தபின் இப்போதுதான் முதல் முறையாக மெக்ஸிகோ வருகிறேன். இருந்தும் இங்கே வெளியே செல்ல அனுமதியில்லை பழைய நினைவுகளில் மூழ்கி வெளியேறினேன்.

 துறைமுகத்தை ஒட்டிய பகுதி கரையாக இருக்கும் அதன்பின் நிலப்பரப்பு. கரையை ஒட்டி பச்சைபசெலென மரங்களோ புல்வெளியோ கட்டிடங்களுமாகவே இருக்கும். கோஸ்டா அசுல் பசுபிக் கடலில் இருக்கிறது. இந்த டெர்மினல் கடலுக்குள் இருப்பது போலவே இருக்கிறது. பசுபிக் கடலில் இருக்கும் மலையில் அலைகள் அடித்துக்கொண்டிருக்கிறது. கடலில் அறுநூறு மீட்டருக்கு மேல் கான்க்ரீட் தளம் அமைத்து பிரேக் வாட்டர் அமைத்து பாறையை வெட்டி சமதளபடுத்தி டெர்மினல் அமைத்துள்ளனர். 

 இது கொஞ்சம் உயரமான நீண்ட மலை, மலையின் மறுபுறம் நெடுஞ்சாலை செல்கிறது அங்கு சமதளபகுதியும் ஊரும் இருப்பதை கற்பனையில் விரித்துக்கொண்டேன். அதாவது மலை ஏறி, இறங்கினால் இருக்கிறது நெடுஞ்சாலை. மலையில் மேற்பரப்பில் ஒரு கிராமம் இருக்கிறது. நூறு வீடுகள் இருக்கலாம். பைனாகுலர் வழியாக அந்த வீடுகளை பார்த்துக்கொண்டிருந்தேன். 

 வீட்டின் வாசலில் அல்லது ஜன்னலை திறந்தால் கண்முன் வரிந்துகிடக்கும் பசுபிக் கடல் தான் காட்சி. இரவில் இருளில் வானில் ஜொலித்துக்கொண்டிருக்கும் கோடானுகோடி நட்சத்திரங்களை பார்த்தவாறு பிரபஞ்சத்தோடு இணைந்துவிடலாம். சுத்தமான காற்றும் உறுதி. அந்த வீடுகளில் வாழ்பவர்கள் அசீர்வதிகபட்டவர்கள். 

சுனாமி வருமோ எனும் எண்ணம் எனக்கு வராமலில்லை. சுனாமி மலை உச்சிவரை செல்லாது என்பதே என் கணிப்பு. கப்பலை கட்டியிருந்த டெர்மினலில் பணிசெய்பவர்களை அழைத்து செல்லும் வண்டிகள் மலையிறங்கி வருவதையும் பார்த்தேன். கப்பல் நகர்ந்தபின் மலை முடியும் இடத்தில் கொஞ்சமான சமவெளி பரப்பில் இன்னும் சில வீடுகள் இருக்கிறது. ஆனால் மலையுச்சியில் வாழ்பவர்களுக்கு கிடைக்கும் அனுபவம் இவர்களுக்கு நிச்சயம் இருக்காது.

  கப்பலுக்கு வந்திருந்த டெர்மினல் பணியாளர்களிடம் டெர்மினலிலிருந்து சற்று தள்ளியிருந்த பிரமாண்டமான பங்களாவை காட்டி கேட்டேன். அரசு மற்றும் ராணுவ உயரதிகாரிகள் ஓய்வுக்காக வந்து தங்குமிடம் என்றார்கள். நான் கேட்ட பணியாளரிடம் அந்த பங்களாவின் வீடியோக்கள் இருந்ததை மொபைலில் காட்டினார்.

 ரகசிய பாதாள அறை, உணவுக்கூடம், நீச்சல்குளம், அடர்த்தியான கார்பெட் விரித்த வரவேற்பு அறை, நட்சத்திர விடுதியின் தரத்தில் இருக்கும் படுக்கையறை ஆகியவை இருந்தன.

இந்த டெர்மினலில் எங்கள் கப்பல்தான் முதல்முறையாக சரக்கு நிரப்பி செல்ல வந்ததால் கப்பல் கட்டும்முன்பே ட்ரோன் வைத்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்கள். கப்பல் இங்கே நின்றிருந்த இருநாளும் கப்பலை பார்க்க டெர்மினல் அதிகாரிகள், ஊழியர்கள் என எண்பதுபேருக்குமேல் வந்து சென்றனர்.

திரும்ப திரும்ப முப்பது முகங்களையே தினமும் பார்க்கும் எங்களுக்கு இதுவும் நன்றாகத்தான் இருந்தது. 

  கோஸ்டா அசுல் துறைமுகமும், அந்த மலையுச்சியில் இருக்கும் வாழும் வீடுகளும் என்றும் நினைவில் நிற்கும்.

நாஞ்சில் ஹமீது,

19 july 2026.

sunitashahul@gmail.com

பிரேக் வாட்டர் கல்லில் வாழும் பறவைகள்


No comments:

Post a Comment