நேற்று தோழி கவிதாவிடம் போனில் பேசும்போது “ஷாகுல் எங்க இருக்கீங்க” என கேட்டாள்.
“கவிதா இதுதான் நடுக்கடல்ன்னு சொல்லலாம், கொரியாலருந்து மெக்ஸிகோக்கு பெயிட்டு இருக்கோம், நார்த் பசுபிக் கடல், ரொம்ப தூரத்துக்கு ஒண்ணுமேயில்ல, சுத்தி கடல் மட்டும்தான்” என்றேன்.
ஏப்ரல் நான்காம் தேதி கொரியா வந்தோம் அதன்பின் கப்பல் மூன்றுமுறை ஆஸ்திரேலியாவில் சரக்கு நிறைத்து அதை வியட்நாம், சீனாவின் ஹாங்காங் அருகிலுள்ள ஷுகாய் மற்றும் ஷென்சென், கொரியாவின் காங்க்வாங் துறைமுகங்களில் இறக்கினோம்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் அருகிலுள்ள கிளாஸ்டோனின் கடிகாரம் GMT+10 வியட்நாம் GMT+7 சீனா GMT+8 மற்றும் கொரியா GMT+9 கடந்த இரண்டரை மாதங்களில் கப்பலில் கடிகாரம் இரண்டு மணிநேரம் முன்னேயும்,பின்னேயும் மட்டுமே மாறிக்கொண்டிருந்தது. கொரியா, ஆஸ்திரேலியா பயணத்தில் பத்து நாளில் ஒருமணி நேரம் கடிகாரம் முன்,பின் சென்றால் அதுவும் ஓய்வு கிடைக்கும் நாளில் கடிகாரம் மாறினால் கப்பல்காரனுக்கு அது பொருட்டே இல்லை.
பிப்ரவரி ஆறாம் தேதி நான் அமெரிக்காவின் கார்பஸ் கிறிஸ்டியில் பணியில் இணைந்தபோது கடிகாரம் GMT-6. அங்கிருந்து பதினான்கு நாட்கள் பயணித்து பிரான்சை அடைந்தபோது GMT+1 இரு தினங்களுக்கு ஒரு மணிநேரம் என ஏழு மணிக்கூர் கப்பலின் கடிகாரம் முன்னே சென்றது. அங்கிருந்து நைஜீரியாவின் போனி சென்றோம். போனியிலும் அதே கடிகார நேரம் தான் ஆனால் இடையில் கிரேட் பிரிட்டனை தாண்டும்போது அங்குள்ள கடிகாரம்நேரம் GMT+0ற்கு கப்பலின் கடிகாரத்தை பின்னோக்கி நகர்த்தி, இரு தினங்களுக்கு பின் மீண்டும் முன்னோக்கி நகர்த்தும் விளையாட்டு வேண்டாம், “என் கப்பல் என் இஸ்டபடி” என காப்டன் லீ சூங் சொன்னார்.
பயணத்தில் அப்போது ஒருநாள் காலை உதய நேரம் 8மணி.45நிமிடமாக இருந்தது. ரமலான் நோன்பாக இருந்த அன்று காலை சகர் உணவாக ஆறேமுக்காலுக்கு ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டேன்.
(என்ன ரொம்ப குழம்புதோ? வாசிப்பவர்களை நான் எப்போதும் குழப்புவதில்லை அருகிலிருந்து கதை சொல்வதுபோல இருக்கிறது என நீங்களே பலமுறை சொல்லியுள்ளீர்கள்)
மார்ச் ஏழாம் தேதி நைஜீரியாவிலிருந்து புறப்பட்டபின் இருபத்தியைந்து நாட்கள் பயணம் கொரியாவிற்கு. மிக மெதுவாக எட்டு மணிநேரம் கப்பலின் கடிகாரம் முன்னே சென்றதில் உடல் பொறுத்துகொண்டது.
இப்போது செவ்வாய்கிழமை கொரியாவிலிருந்து புறப்பட்டோம் மெக்ஸிகோ நோக்கி. அங்கே கடிகார நேரம் GMT-6 ஜூலை ஆறாம்தேதி துறைமுகம் சென்றடைவோம். புதன்கிழமை முதல் கப்பலின் கடிகாராம் தினமும் ஒரு மணி நேரம் என முன்னே நகர்த்தப்படுகிறது. முதல் இரு தினங்கள் சிக்கலே இருக்காது.
பின்பு தூக்கம் வராது. நான்கு நாட்களில் நான்கு மணிநேரம் கடிகாரம் முன்னே சென்றால் மாலை ஆறு மணி இரவு பத்தாக இருக்கும். படுத்தால் தூக்கமே வராது. நள்ளிரவு இரண்டு மணிக்கு கண்யர்ந்தால் காலை ஐந்தரை ஆறு மணிக்கு கண் திறக்கவே முடியாது. எட்டு மணி காலை பணிக்கூட்டம் முடிந்தபின் கண் சொக்கி, உடல் கிறங்கடிக்கும்.
ஏழே காலுக்கு காலை உணவை சாப்பிடும் உணவு வயிற்றுக்கு நள்ளிரவாக இருக்கும். இந்த ரமலானுக்கு பிறகு இருவேளை மட்டுமே உண்கிறேன். காலையுணவு ஏழரை மணிக்குள், மதியம் சரியாக பன்னிரண்டு மணிக்கு லஞ்ச். மாலை ஐந்து மணிக்கு பணி முடிந்து,நீராடி உடற்பயிசிக்குப்பின், முந்தைய நாள் ஊற ஊற வைத்த ஐந்து பாதாம்பருப்பு, ஒரு கப் பால், தேனில் ஊற வைத்த பேரிட்சை, கருப்பு திராட்சை, அத்திப்பழம் அரை ஸ்பூன். இரவுகளில் உடல் லேசாக இருப்பதுடன். இரவு பத்துமுதல் காலை ஐந்துவரை நல்லுறக்கம்.
அதிகாலை எழுந்தபின் ஒரு கப் தண்ணீர் குடித்து பல் தேய்த்து, வயிறு சுத்தமானவுடன் மென் குளிர் நீரில் குளியல். உச்சியில் தண்ணீர் விழுந்து தலை குளிர்ந்தபின்தான் மண்டையே வேலை செய்யும்.
தொடர் கடிகார மாற்றத்தினால் மலம் கழிப்பதில் உள்ள சிரமத்தை புரிந்துகொள்ள பல ஆண்டுகள் ஆனது. காலையில் வயிறு சுத்தமாகமல் காலை உணவையும், மதிய உணவையும் தவிர்த்து போராடியிருக்கிறேன். 2010 இல் உடன் பணியிலிருந்த சமையல்காரர் பிரபீஸ் கிருஷ்ணா “கப்பலின்ற சமயம் கீ கொடுத்து மாற்றம், சரீரம் அது போல பெட்டந்து மாறத்தில்லா, ஆகாரம் கழிக்காத இருந்தா கக்கூஸ் வரத்தில்லா” என.
அதன்பின் புரிந்துகொண்டேன் விரைவாக கடிகாரம் மாறியபின் உடல்கடிகாரம் மாறுவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும் என. காலையில் கக்கூசில் அமர்ந்து போராடுவதில்லை குளித்து, காலை, மதிய உணவுகளை எடுத்துக்கொண்டேன்.
கடிகாரம் மாறதா நாட்களில் எல்லாம் சரியாக இருக்கிறது. இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிறு, நாளை மறுநாளும் ஞாயிறாகவே இருக்கும். பதிமூன்று நாட்களில் கடிகாரம் பத்துமணிநேரம் முன்னே நகர்ந்து, ஒரு நாள் பின்னால் செல்லும்.
திரும்பி வருகையில் அதே போல் பதிமூன்று தினங்களில் இரவு பகலாகி ஒரு நாள் காணாமல் போய்விடும். அதாவது ஒரு மாதத்திற்குள்ளாக இருமுறை பகலிருந்து, இரவுக்கும் மீண்டும் இரவிலிருந்து, பகலுக்கும் மாறுவதில் கடிகாரத்திற்கு எந்த சேதமும் இல்லை.
சைனா, கொரியா, வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு ஓடிக்கொண்டிருக்கையில் கடும் வெப்பமான நாட்களாக இருந்தது. ஜூன் மாதம் ஆஸ்திரேலியவில் குளிர்கால துவக்கம் என்றாலும் நாங்கள் சென்ற துறைமுகம் டார்வின் வடக்கு ஆஸ்திரேலியா, இந்தோனேசியாவின் அருகில் எனினும் டார்வினில் ரம்மியமான பருவ நிலை இருந்தது. சைனாவின் சூஹாய் துறைமுகப்பில் நின்ற நாளில்தான் கடும் வெப்பத்தில் மிகவும் களைத்துபோயிருந்தோம்.
வட பசுபிக் கடலில் நுழைந்தது முதல் வெப்பம் குறையத்தொடங்கியது வெள்ளிக்கிழமை பதிமூன்று டிகிரியை தொட்டது. ஜாக்கெட் அணிந்து சென்றோம் டெக்கில். வெண்சாம்பல் மேகங்கள் வானத்தில் அடர்த்தியாக நிறைந்து இருக்கிறது. சூரியக்கதிரின் சிறு பிசிறு கூட கீழே வராமல் மேகங்கள் அதன் வேலையை செய்கிறது.
வெள்ளிக்கிழமை இரவு படுக்கைக்கு போகும்முன் அறையின் வெப்பம் இருபத்தியொரு டிகிரியாக இருந்ததால் வெப்ப சட்டையை அணிந்து, கால்சட்டையை அருகில் வைத்துகொண்டு படுத்தேன். இரவில் குளிர்ந்தால் அணியலமென. காலை விழித்தபோது அறையின் வெப்பம் பதினெட்டு டிகிரிக்கு குறைந்திருந்தது.
தொழுகை நேரம் நம்பவே முடியவில்லை. மாலை நேர மக்ரிப் இரவு ஒன்பதரைக்கு,இரவு நேர, இஷா நள்ளிரவு 12.03 ஆகவும், அதிகாலை பஜர் தொழுகை 0328 வும் இருந்தது.
சனிக்கிழமை வேலைகளுக்காக டெக்கில் சென்றபோது குளிரை உணர்ந்தேன். ஒன்பது டிகிரி. கடிகார மாற்றத்தினால் சனி மாலை சுக்கிரி மீட்டிங் நடக்கும் இந்திய நேரம் ஐந்து மணி, எனக்கு இரவு பதினொன்றரை மணி மீட்டிங் முடிந்து இரண்டு மணிக்கு தூங்க செல்கையில் அலமாரியிலிருந்து இரண்டாவது கம்பளி போர்வையை எடுத்துக்கொண்டேன். குளிருக்கான வெப்ப ஆடையை, காலுக்கும், உடலுக்கும் அணிந்து இரு கம்பளிகளுக்குள் நுழைந்துகொண்டேன்.
பாதங்கள் மட்டும் லேசாக குளிர்ச்சியாக இருந்தது. காலையில் விழிக்கும்போது, உடலின் வெப்பம் கம்பளிக்குலிருந்து வெளியேறாமல் இருந்ததால் கதகதப்பாக இருந்தது. அறையின் வெப்பம் பதினாறு டிகிரிக்கு கீழிறங்கியிருந்தது.
நாஞ்சில் ஹமீது,
28-JUNE- 2026.
sunitashahul@gmail.com





Super sir. நீங்கள் எழுதுவது உண்மையிலேயே பக்கத்தில் இருந்து கதை கேட்பது போலதான் இருக்கிறது. உங்களுடைய அனுபவங்கள் படிக்க படிக்க சுவாரஸ்யமாக இருக்கின்றன.
ReplyDelete