பள்ளியில் படிக்கும்போது வப்பா சொல்வார். “துணி கூடிபோச்சி,அதனால தான் திசக்கி ஒன்னாட்டு கிடக்குது” என. அப்போதெல்லாம் வருடத்தில் ரமலான் பண்டிகைக்கு ஒரு உடுப்பு,பள்ளி சீருடை ஒன்று அவ்வளவுதான்.
அவர் சிறுவனாக இருக்கும்போது வைத்தியராக இருந்த என் உப்பாவுடன் (முகம்மது குஞ்ச்)கயிறு திரிக்கும் வேலைக்கு சென்றிருக்கிறார். அப்போது அணிவதற்கு அரைக்கால் சட்டையில்லாமல் பெரிய தேக்கிலையை தென்னை ஈக்கிலால் கோர்த்து இடுப்பில் கட்டிகொள்வதை சொல்லிவிட்டு “உங்களுக்கு துணி கூடிபோச்சி”என்பார்.
இப்போது ஆடைகள் தேவைக்கு அதிகமாவே இருக்கிறது எனக்கு. எனது மகன்கள் என்னைவிட அதிக ஆடைகள் வைத்திருகின்றனர். அவர்களுக்கு தனி அலமாரியும் உள்ளது.
![]() |
நண்பர் ராஜா மற்றும் வேலுப்பிள்ளை |
அமெரிக்காவில் வாழும் நண்பன் வேலுப்பிள்ளை இரு மாதங்களுக்கு முன் ஒரு புகைப்படம் அனுப்பி 11 years ago என குறிப்பிட்டிருந்தார். 2014 ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் பெனிசியா துறைமுகத்துக்கு சென்றபோது எடுத்தது. நண்பன் ராஜா மற்றும் வேலுப்பிள்ளை அந்த படத்தில் இருந்தனர்.அந்த படத்தை அனுப்பிய அவ்வேளையில் அதே சட்டையை அணிந்திருந்தேன். ஒரு செல்பி எடுத்து இன்றும் அதே சட்டை என அவருக்கு அனுப்பினேன்.
கப்பலில் இருந்த மெஸ்மென் டானிசிடம் அதுபற்றி சொன்னபோது “ஷாகுல் சாப் இப்பவும் இந்த சட்ட நல்லா இருக்கே எப்டி” எனக்கேட்டார். காரணம் என்னவென்று யோசனையில் ஆழ்ந்தபோது எனது துணிகளை நானே கையால் துவைத்து கொள்வேன். வீட்டில் சலவை இயந்திரத்தில் எனது துணிகளை போடக்கூடாது என கண்டிப்பாக சொல்லியிருக்கிறேன். வருடத்தில் ஏழு முதல் எட்டு மாதங்கள் வரை கப்பலில் இருக்கிறேன். சட்டைகள் வீட்டில் பத்திரமாக இருக்கும்.கப்பலுக்கு வரும்போது இருப்பதில் நல்லதாக உள்ள சட்டை இரண்டும் ஒரு ஜீன்ஸ் ஒன்று பயணத்தில் அணியவும்,கப்பல் பார்டிகளில் உடுத்தவும் வைத்திருப்பேன்.
அன்றாடம் அணிவதற்கு எல்லா கப்பல் காரர்களையும் போல இருப்பதில் பழைய சட்டை, டி சர்ட் சிலதை கொண்டுவந்து உபயோகபடுத்திவிட்டு பணி முடிந்து ஊருக்கு செல்லும்போது கப்பலை துடைப்பதற்கு கொடுத்துவிட்டு போவது வழக்கம்.
இஞ்சின் மற்றும் டெக் பணியாளர்கள் நாள் முழுவதும் அந்த கனத்த பணியாடையை அணிந்திருப்போம்.மாலை ஆறு மணிக்குப்பின் வேலை முடிந்து உணவுக்கூடம் சென்றுவருவதற்கும் பொது இடமான டி வி அறையில் இருப்பதற்கும் கண்ணியமான ஆடையை அணிவது ஒரு நாளில் அதிக பட்சம் இரண்டு மணிநேரம் தான். அறைக்குள் இருக்கும்போது மேல் சட்டையில்லாமல் இடையை மறைக்கும் அரைக்கால் சட்டை மட்டுமே.
காப்டன் மற்றும் நேவிகேசன் அதிகாரிகளுக்கு மட்டுமே நல்ல ஆடைகள் நான்கைந்து தேவைப்படும்.நான் பணி முடிந்து ஊருக்கு செல்லும்போது சுனிதாவிடம் கேட்பேன் “பழைய சட்டய எல்லாம் தூர போட்டுடுறேன்” என.
“கிழிஞ்சி போவல்லேன்னா,லக்கேஜ்ல இடம் இருந்தா கொண்டு வாருங்கோ” என்பாள். வீட்டுக்கு வந்தபின் வாட்ச்மேன் அல்லது துப்புரவு பணியாளர் அதை அணிந்திருப்பதை காண்பேன்.
திருமணத்திற்குப்பின் என் ஆடையை சுனிதா தேர்வுசெய்ய தொடங்கினாள். அதனால் கலர்,கலாரக நல்ல ஆடைகள் சில சேர்ந்துவிட்டன. கப்பலிலும்,வீட்டிலும் எனது துணிகளை நானே கையால் துவைப்பதால் எனது ஆடைகள் வருடக்கணக்கில் வீணாகாமல் மிக நன்றாக இருக்கிறது. வருடத்தில் இருநூறு நாட்களுக்கு மேல் கப்பலில் இருப்பாதால் என் ஆடைகள் பெட்டியில் காத்திருக்கிறது.
வீட்டிற்கு வந்து தினமும் ஒரு சட்டை அணிந்தும் தொடர்மழையால் துணிகளை துவைக்காமல் இருந்தபோது ஒரு மாதம் வரை எனக்கு தினம் ஒரு சட்டை பெட்டியில் இருப்பதை கண்டு இனிமேல் சட்டையே வாங்க கூடாது என முடிவு செய்தேன். ஒரு மனிதனுக்கு ஆறு சட்டைகள் போதுமானது. அதனால் எனக்கான துணிகளை தேவையே இன்றி வாங்குவதே இல்லை. உள்ளாடைகள்,காலுறைகள் மட்டுமே வாங்கும் தேவை உள்ளது.
எனது பிறந்தநாளில் சுனிதா ஒரு சட்டை வாங்கி தருவது வழக்கம். கப்பலில் இருந்து வந்தபின் அவள் வாங்கி வைத்திருந்த சட்டையை அவள் முன் அணியாமல் விஷ்ணுபுரம் விழாவில் என் நண்பர்களுக்கு காட்டுவதற்காக அணிந்ததாக குற்றம்சாட்டி தற்போது எனக்கு உடை ஏதும் அவள் வாங்குவதே இல்லை. கடந்த சில வருடங்களாக தம்பி ஷேக் என் பிறந்தநாளுக்கு வாங்கிதரும் சட்டையே அணிகிறேன். எனது அண்ணன் சென்னை சென்றால் உடைகள் வாங்கும்போது எனக்கும் ஒரு சட்டை வாங்கி தந்துள்ளார். மலேசியாவில் வாழும் சகோதரி ஹமீமா மைனி சந்திக்கும்போதெல்லாம் எனக்கு சில சட்டைகள் வாங்கி தந்துள்ளார்.
ரமலான்,பக்ரீத் பண்டிகைகளில் நான் கப்பலில் இருந்தால் பழைய ஆடையையே அணிகிறேன் என்பதால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் கப்பலுக்கு வரும் முன் இரண்டு பெருநாளுக்கும் இரண்டு டி ஷர்ட் வாங்கி கொண்டுபோக சொன்னாள் சுனிதா. என்னிடம் “போத்தீஸ்ல போய் ஆயிரத்தி இருநூறு ரூவாக்கு குறையாம ரெண்டெண்ணம் வாங்குங்கோ,அதுல குறஞ்சா நல்லா இருக்காது’ என சொல்லி அனுப்பினாள்.
நான் கடைக்கு சென்று எனக்கு பிடித்த வெள்ளைநிறம் கலந்த ஒரு டி ஷர்ட்டை தேர்வு செய்தேன் ‘otto’ என அதன் காலரில் எழுதியிருந்தது. 1399 என அதன் விலையும் ஒட்டபட்டிருந்தது. அதை தனியே எடுத்துவைத்துவிட்டு இன்னும் ஒன்றை தேர்வு செய்ய பார்த்துக்கொண்டிருந்தேன். (எனக்கு செலக்சன் தெரியாது என சுனிதாவும்,தோழிகள் சிலரும் சொல்கிறார்கள். மூத்த சகோதரி ஒருவர். சென்னைக்கு வந்தால் நல்ல சட்டைகள் ரெண்டு வாங்கி தருகிறேன். நீ போடும் கலர் ஒன்றும் சரியில்லை என்றும் சொல்லியுள்ளார்.)
அருகிலிருந்த வேறு கவுண்டரில் எனக்கு பிடித்த கலரில் 499 விலையில் மிக அழகான டி சர்ட்கள் என்னை கவர்ந்தன. முதலில் தேர்வு செய்த டி சர்ட்டின் விலையில் இதில் மூன்று வாங்கலாம் என மனம் சொல்லியது. இரண்டு பெருநாள் இரண்டே போதுமென இரண்டை மட்டும் ஆயிரம் ரூபாயில் வாங்கிகொண்டு வீட்டிற்கு வந்துவிட்டேன்.
இனிமேல் ஆடைகளை குறைக்கவேண்டும். ரயில் பயணத்தில் உடன் பயணித்த ஒருவர் தான் உடுத்திருப்பது போக மாற்று உடை ஒன்றை கையில் வைத்திருத்தார்.
மும்பையில் இருக்கும்போது அறை நண்பர் மானாமதுரை மாயாவி ஒருமுறை சொன்னார் நடிகர் சிவாஜி கணேசன் தினமும் ஒரு ஜட்டி அணிவார் என. “நானும் டெய்லி ஒண்ணுதான் போடுவேன்” என்றேன். “புதுசா”
“இல்ல டெய்லி துவைச்சி போடுவேன்”
“அவரு புதுசில்லா போடுவாரு” என்றார் மாயாவி.
சமீபத்தில் நடிகர் கமலஹாசன் ஒரு ஆடையை ஒரு முறை மட்டுமே அணிவார் என நண்பர் ஒருவர் சொல்லி அறிந்துகொண்டேன்.
பத்து ஆண்டுகளுக்குப்பின் வீட்டு மாடியில் குடில் கட்டி அமரும்போது இடுப்புக்கு கீழே ஒரு வெள்ளை துணி, உடலை சுற்றி மூட ஒரு வெள்ளை துணி அதுதான் என் உடை என முடிவு செய்துவிட்டேன்.
![]() |
அசோக் வீட்டில் 2014 |
தற்போது சொல்லிகொண்டிருக்கும் அந்த சட்டையை 2013 ஆம் ஆண்டு வாங்கியிருக்கிறேன் சுனிதாவின் தேர்வு. அது ஒரு ரமலான் அல்லது பக்ரீத் பண்டிகைக்கு வாங்கியதாக இருக்கலாம். அதே ஆண்டு அந்த சட்டையை அணிந்து நண்பர் அசோக்கின் வீட்டு கிரகபிரவேசத்துக்கு சென்றிருக்கிறேன். கடந்த ஆண்டு எல்என்ஜி அலையன்ஸ் கப்பலுக்கு போகும்போது அந்த சட்டையை அணிந்து சென்று கப்பலை துடைப்பதற்கு கொடுத்துவிட வேண்டுமென எண்ணியிருந்தும் ஏனோ கொடுக்காமல் எடுத்து வந்துள்ளேன், நண்பர் அசோக்கிடம் அந்த சட்டையின் வரலாறு குறித்து சொன்னபோது “ஷாகுல் அது தூர போட்டுராதீங்க அது உங்கள் நினைவாக இருக்கட்டு” என்றார்.
தற்போது எழுதும் இருபது ஆண்டு நிறைவு தொடருக்காக படங்களை தேடும்போது நிறைய படங்களில் அந்த சட்டையுடன் இருக்கிறேன். அமேரிக்கா,ஐரோப்பா,மலேசியா போன்ற உலகநாடுகள் பலவற்றுக்கும் இந்தியாவின் பல ஊர்களுக்கும் அந்த சட்டை பயணித்துள்ளது. .இம்முறையும் விடுமுறைக்கு வீட்டுக்கு செல்லும்போது அந்த வரலாற்று சிறப்புமிக்க சட்டையை துவைத்து மடித்து கொண்டு செல்ல வேண்டியதுதான்.
கொல்லிமலை வாசகர் சந்திப்பு 2016 |
நாஞ்சில் ஹமீது,
28 – july-2025.
sunitashahul@gmail.com