Friday 12 July 2024

கெபிலியே

 கெபிலியே (GEFELIGE NAVROZE)


       கப்பல் காரனுக்கு தண்டனை கொடுக்க விரும்பினால். இரண்டு நாள் அறையை விட்டு வெளியே வரவேண்டாம் என சொன்னால் போதும். அது மிகக்கடும் தண்டனையாக இருக்கும்.

  என்னைப்போல் அதிகம் பேசுபவர்களுக்கு இன்னும் கஷ்டம்தான். வாசிப்பு பழக்கமாகி அந்த இன்பத்தை உணர்ந்ததால் எனக்கு இப்போது தனிமையும்,அறைக்குள் அடைந்து கிடப்பதும் பிரச்சனை ஏதும் இல்லை.

   இந்த கப்பலில் மார்ச் மாத இறுதியில் கொரியாவிலிருந்து வாட்சில்லா நிறுவனத்தின் ஆறு கொரியர்கள் ஜெனரேட்டர் பணிக்காக வந்தனர்.ஐம்பத்தியைந்து நாட்கள் அவர்கள் கப்பலில் இருப்பார்கள் என காப்டன் சொன்னார். இரு மாதங்களுக்குபின்பும் அவர்கள் பணி தொடர்ந்தது.பணி முடிந்தபோது அவர்கள் இறங்க துறைமுகம் கிடைக்காமல் மேலும் பத்து நாட்கள் இருந்தனர்.

   ஐக்கிய அமீரகத்தின்(UAE) தாஸ் தீவில் யாரும் இறங்க அனுமதியில்லாததால் மீண்டும் நீண்டது அவர்களுடைய கப்பல் பயணம். கொரிய டெக்னீசியன் ஒருவர் ஒருநாள் காலை உணவுக்கு வரும்போது கை கால்கள்,சிவப்பாக தடுத்து அரிக்கிறது என்றார்.

 

“எதோ அலர்ஜி இருக்கிறது சிக்கன்,பீப்,மட்டன்,முட்டை வகைகளை சாப்பிடாதே” என்றேன். ஆனால் அவன் பன்றிக்கறி உட்பட எல்லா இறைச்சி வகைகளையும் வெட்டி விழுங்கிகொண்டிருந்தான். அவனது உடல் நிலையை கவனித்த மருத்துவ அதிகாரி அவருக்கு சின்னம்மை இருப்பதாக சொல்லி அறைக்குள்ளேயே இருக்கசொன்னார். உணவு அறைக்கே வழங்கப்பட்டது. மூன்று வேளையும் மெஸ்மேன் அவனது அறைக்கு வெளியே உணவு தட்டை வைப்பான். காலி தட்டுகள் பின்னர் அடுமனைக்கு கொண்டுவந்து கழுவி மீண்டும் உணவு வழங்குவான். அவனை தாஸ் தீவில் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார் காப்டன்.

மருத்துவரை சந்தித்துவிட்டு அன்று மதியம் உணவு கூடத்துக்கு வந்த அவனிடம் “டாக்டர் என்ன சொன்னார்” எனக் கேட்டேன். “சிக்கன் பாக்ஸ்” என பதிலளித்தான். “ஏன் இங்கே இருக்கிறாய் அறைக்கு போ” என்றேன்.

 இங்கிருப்பவர்களில் பத்துக்கும் மேற்பட்டவர் பிலிப்பினோ பணியாளர்கள். காடேட்டும், ஓ எஸ் கார்லோவும் “உனக்கு சிக்கன் பாக்ஸ் முன்பு வந்துள்ளதா”? எனக்கேட்டு கொஞ்சம் பயத்தில் இருந்தனர்.

  பத்து தினங்களுக்குப்பின் கொரியர்கள் அமீரகத்திலிருந்து இறங்கி சென்றனர். மறுமுறை அமீரகம் செல்லும்போது பழுதான வேறொரு ஜெனரேட்டரில் பணி செய்ய வாட்சில்லா துபையை சேர்ந்த ஐந்து இந்திய பணியாளர்கள் கப்பலுக்கு வந்தனர்.இது ஜூன் பத்தாம் தேதி.அன்று மதியமே மெஸ்மேன் கெபிலியே நவ்ரோஸ் உடலில் லேசான கொப்பளங்கள் தெரிய அறைக்குள் தனிமைப்படுத்தபட்டான்.

  நவ்ரோஸ் இந்த கப்பலில் மெஸ் மேனாக கடந்த ஏப்ரல் மாதம் சிங்கபூரிலிருந்து பணியில் இணைந்தான். இருபத்தியாறு வயதே ஆன நவ்ரோஸ் ஒல்லியான தேகமும் ஐந்தடி ஐந்து அங்குல உயரமும் என்னைபோல லேசான கறுத்த தேகம் கொண்ட அவன் இந்தியாவின் லட்சதீவிலுள்ள மினிகோய் எனும் ஊரில் பிறந்தவன். 

   மூன்று வருட ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தபின் ஓராண்டு கோவையில் நட்சத்திர விடுதியில் பணி,கொச்சி மினிகோய் பயணியர் படகில் ஆறு மாதம் பணி. பின்னர் உல்லாச கப்பலில் ஓராண்டு பணிசெய்தான்.

  எங்கள் நிறுவனத்தில் கடந்த ஆண்டு தேர்வாகி சிங்கப்பூர் எனர்ஜி எனும் கப்பலில் முதல் முறையாக பணியில் இணைந்தான். மூன்றே மாதத்தில் அக்கப்பலில் ஆட்குறைப்பு செய்ததால் இந்த கப்பலுக்கு பணி மாற்றம் பெற்று வந்தான்.

    ஊரில் வாப்பா,உம்மா உடன் பிறந்தவர்களும் உண்டு. பக்கத்து ஊரில் உள்ள ஒரு பெண்ணுடன் காதல் கொண்டு இவ்வருடம் அக்டோபரில் திருமணம் நிச்சயயிக்கபடுள்ளது. அந்த பெண் ரேடியோ டெக்னீசியனாக கொச்சியில் பணி புரிவதாக சொன்னான். அவனது பெயரை பலநாள் கூர்ந்து நோக்கியும் என்னால் வாசிக்க முடியாததால் “உனது முதல் பெயரை எப்படி உச்சரிப்பது” என கேட்டபோது “கெபிலியே என்ற வீட்டு பேரானு” என்றான்.

(கேரளாவில் பெரும்பாலானவர்களுக்கு வீட்டு பெயர் உண்டு அணில் குமார் கூரியாட், கூரியாட் வீட்டு பேரு,உப்பாலா ஜாவித்,உப்பாலா ஆஸிப்,உப்பாலா ஊரின் பெயர்.)

  மெஸ்மேன் செய்யும் அனைத்து பணிகளும் முடங்கின. சாப்பிட்ட தட்டுகளை அவரவரே கழுகி கொள்ள வேண்டும். காப்டன்,சீப் இஞ்சினியர் உட்பட அனைத்து அறைகளும் சுத்தபடுத்துதல் இல்லாமல் ஆனது. மெஸ் மேன் சுத்தம் செய்ய வேண்டிய குடியிருப்பின் பொது இடங்கள் டெக் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

   அடுமனையில் சாலட் தயார் செய்தல், அடுமனை பாத்திரங்கள் கழுவுதலை முதன்மைசமையல்காரர் மற்றும் இரண்டாம் சமையல்கரார்கள் செய்தார்கள். இரவுணவுக்கு (வாரத்தில் மூன்று நாட்கள் )சப்பாத்தில் செய்த நாட்களில் ரைமுண்டோ சப்பாத்தியை பரத்தி தர நான் மாலை நான்கரைக்கே அடுமனைக்கு சென்று சப்பாத்தி சுட்டு கொடுத்தேன்.

   நவ்ரோஸ் அறைக்கு சென்ற முதல் நாள் அழைத்தேன் “கெஹ்னத்தே” அவனது தாய்மொழியில் எப்படி இருக்கியாய் என. “ரங்க்காலோ, ரங்க்காலோ” என்று பதில் சொன்னான். வழக்கமாக நானும் அவனும் மலையாளத்தில் பேசிக்கொள்வோம்.

  “மேலில் புள்ளி,புள்ளியாக வந்துள்ளது லேசான அரிப்பும் உள்ளது என்றான்.

 இரு தினக்ளுக்குப்பின் அவனது அறையை தட்டி வெளியில் நின்று அவனை பார்த்தேன். இரு கைகளிலும்,வயிறு,முதுகு கால்கள் தொடை என புள்ளி புள்ளியாக சிறு கொப்புளங்கள் போல இருந்தது. அவனிடம் சொன்னேன் “கோளி இறைச்சி,முட்ட,நான் வெஜ் ஒண்ணும் வேண்டா” என்றேன்.

  “ஞான் இப்போள் ஈ முறிக்குள்ள கிடக்குந்த அவஸ்தையில் ஈ ஆகாரமும் இல்லேங்கி என்னே கொண்டு பற்றுல்லா” என்றான்.

  மருத்துவ அதிகாரி எல்லாம் சாப்பிடலாம் என சொன்னதாக சொன்னான்.பதினான்கு நாட்கள் ஆகியும் அவனுக்கு சரியாகவேயில்லை. இந்தியாவில் இருந்தபோது மருத்துவரிடம் அனுப்ப காப்டன் தவறிவிட்டார். பின்னர் நெடும் பயணமாக கப்பல் ஆப்ரிக்காவின் நைஜீரியாவை நோக்கி புறப்பட்டது இடைநில்லாமல்.

  

நான் அவனை இரு தினங்களுக்கு ஒரு முறை அறைக்கு வெளியே நின்று சந்தித்து வருவேன். அவனிடம் புகைப்படங்களை பெற்று எனது மருத்துவ நண்பர் மாரி ராஜிக்கும், தோழி மகேஸ்வரிக்கும் அனுப்பினேன். புது மாப்பிள்ளை டாக்டர் மாரிராஜ் இது குணமான சின்னம்மை போலுள்ளது. இன்னும் மூன்று தினங்களுக்குப்பின் படம் எடுத்து அனுப்புங்கள் நான் சொல்கிறேன் என்றார்.

  தோழி மகேஸ்வரி மேலும் சில விவரங்களை கேட்டறிந்தபின் சக மருத்துவரிடம் கலந்தாலோசித்து இது வைரல் இன்பெக்ஷன் குணமாக இன்னும் ஒரு மாதம் ஆகலாம் என உடலில் பூச இரு மருந்துகளை பரிந்துரைத்தார்.

   நாட்கள் செல்ல,செல்ல அறைக்குள்ளேயே அடைந்து கிடந்த நவ்ரோஸ் அரை பயித்தியம் போல் ஆகிவிட்டான். அறையின் கண்ணாடி ஜன்னலின் திரைசீலையை விலக்கினால் கொந்தளிக்கும் கடலும்.அலையும் மட்டுமே காண முடியும்.காப்டனிடம் என்னை ஊருக்கு அனுப்புங்கள் என மன்றாடினான். காப்டன் செய்த தவறு அவன் உடல் நலமில்லாமல் ஆனதை எங்கள் நிறுவனத்தில் தெரிவிக்கவேயில்லை. சிக்கன் பாக்ஸ் பதினைந்து நாளில் சரியான பின் அவன் மீண்டும் பணியில் இணைந்துவிடுவான் என உறுதியாக நம்பியிருந்தார்.

   ஒப்பந்த காலம் முடியும் முன்பே வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால். விமான கட்டணம் கொடுத்துதான் செல்ல வேண்டும். கப்பல் தென்ஆப்பிரிக்கவாவின் கேப் டவுன் அருகில் செல்லும்போது பணியாளர் மாற்றத்திற்கு கப்பலை நிறுத்தும் திட்டம் இருந்தது. நவ்றோஸ் சொந்த செலவில் செல்லவேண்டுமென்றால் அவனது இருபது நாள் சம்பளத்தை கொடுக்கவேண்டும்.

    காப்டன் அவனது உடல் நிலையை விளக்கியபோது எங்கள் நிறுவனம் அவனை கேப்டவுனில் இறக்கி மருத்து பரிசோதனை செய்துவிட்டு அடுத்த துறைமுகமான நைஜீரியாயில் பணியில் இணைய சொல்லி உத்தரவு வந்தது.

  இருபத்தியைந்து நாட்களுக்குப்பின் கடந்த வெள்ளியன்று (05 july 2024) பணியாளர் மாற்றத்திற்கு கப்பலை நிறுத்தியபோது நவ்ரோஸ் இறங்கி சென்றான் மருத்துவ பரிசோதனைக்கு.

   அவன் கப்பலில் இருந்து இறங்கும்போது மீண்டும் கொரிய வாட்சில்லா பணியாளர்கள் கப்பலுக்குள் ஏறி வந்தனர். முன்பு சிக்கன் பாக்ஸ் வந்தவர் நவ்றோசிடம் “நீ ஏன் சீக்கிரமாக ஊருக்கு செல்கிறாய்” என கேட்டார்.

  “எல்லாம் உன்னால் தான்” என சொன்னான்.

07-07-2024

At sea 

நாஞ்சில் ஹமீது..

No comments:

Post a Comment