தென்னாபிரிக்காவின் ஒரு துறைமுக நகரம் தான் கேப் டவுன். இவ்வூரை சொல்லும்போதே காந்தியும்,நெல்சன் மண்டேலாவும் நினைவுக்கு வருவார்கள். ஆப்ரிக்காவின் தென்பகுதியில் உள்ள தென்ஆப்ரிக்காவில் இந்தியாவின் cape comerin போல வளைந்த பகுதியில் இருப்பது கேப் டவுன் நகரம்.
கிழக்கில் இந்தியபெருங்கடலும் , மேற்கில் தென் அட்லாண்டிக் கடலாலும் சூழ்ந்துள்ளது. ஜூன் பத்தொன்பதாம் தேதி இந்தியாவில் முகேஷ் அம்பானிக்கு சொந்த ஊருக்கு அருகிலுள்ள தகேஜ் துறைமுகப்பில் சரக்கை இறக்கியபின் நைஜீரியா செல்லும் உத்தரவு வந்தது. இருபத்தியாறு நாள் பயணம்.
மே ஆறாம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும், குஜராத்துக்கும் நான்கு முறை போய் வந்தோம். நாற்பது நாட்களில் எட்டு துறைமுகம் என்பது கிணற்றில் தண்ணீர் ஊற,ஊற எடுப்பது போல.கப்பல் காரனின் சக்தியை துளியும் மிச்சமில்லாமல் பிழிந்தெடுப்பது மிகக்குறுகிய பயணங்கள். ஒவ்வொரு நான்கு நாட்களிலும் துறைமுகம் கூடவே கடும் கோடை,தலை பொசுங்கிவிடும் சுட்டெரிக்கும் வெயில்.
நீண்ட பயணத்தை காப்டன் சொன்னதுமே உடலும்,உள்ளமும் ஓய்வுக்கு தயாரானது. சோம்ராஜ் கேட்டான் “அங்கயும் இது போல சூடா இருக்குமா” என.“அங்க இப்ப வின்டர் தொடக்கமாக்கும்” என்றார் போசன். செல்லும் வழியில் கேப்டவுனில் பணியாளர் மாற்றம்,உணவுபொருட்கள் தருவித்தல்,உதிரிபாகங்கள் வாங்குதல் போன்றவை திட்டமிடப்பட்டது.
பயணம் தொடங்கிய மூன்றாவது நாள் ஞாயிறாக இருந்ததால் முழு ஓய்வு கிடைத்தது நீண்ட இடைவெளிக்குப்பின். நைஜீரியா எங்கோ தூரத்தில் இருந்ததால். செய்து முடிக்க வேண்டிய பணிகளுக்கு போதிய நேரமும் அவகாசமும் இருந்ததால் எந்த அழுத்தமும் இல்லை. காலை எட்டு முதல் ஐந்து வரை பணி என சாதாரண நாட்கள். பெரும்பாலும் மதியம் மூன்றரைக்கு மேல் எனக்கு பணியே இல்லாத நாட்கள்.
துறைமுகம் விட்ட எட்டாவது நாளே கடும் கடல் சீற்றமும்,கொந்தளிப்புமாக இருந்தாள் கடலம்மா. கடும் காற்று காரணமாக டெக் பணியாளர்கள் இரு தினம் குடியிருப்புக்குள்ளேயே வேலை செய்தார்கள்.வெளியே செல்ல அனுமதியில்லை. காலையில் எல் என் ஜி மோட்டார் அறை மற்றும் கம்ப்ரசர் அறைக்கு நான் சென்றே ஆக வேண்டும் என்பதால் மிக எச்சரிக்கையாக சென்று வந்தேன்.
இருதினங்களுக்குப்பின் கடல் சாந்தமானது. வெப்பம் வெகுவாக குறைந்தது. இரண்டு நாட்களுக்கு பின் மீண்டும் கடலில் எழுந்த பேரலைகளும், கடும் காற்றும் முன்னூறு மீட்டர் நீளமுள்ள இந்த பெருங்கலத்தையே சுழன்றடிக்க வைத்தது. அறையின் பொருட்கள் அனைத்தையும் மேஜை பெட்டிகளுக்குள் போட்டேன். கப்பல் ரோல்லிங்கில் அவை வலமும்,இடமும் உருண்டோடி மரப்பலகையில் இடித்து எழும் சப்தம் கேட்டு இடைவெளி இல்லாமல் இறுக்கி வைத்தேன்.
ஆடி,ஆடி அசைந்து தூக்கமே பிடிக்காமல் நெடுநேரத்திற்கு பின் கண்சொருகும் நேரம் ஏதாவது ஒரு பொருள் உருண்டு,ஓடி,இடித்து எழும் ஓசை தூக்கத்தை கலைக்கும். அது எந்த பொருள்,எந்த மேஜை டிராயரில் என கண்டுபிடித்து துணியை போட்டு அசையாமல் வைத்துவிட்டு தூக்கத்திற்கும்,விழிப்பிற்கும் இடையில் கண்மூடி இரவை கழித்து காலையில் டான்ஸ் ஆடிக்கொண்டே எழுந்தேன்.
பின்னர் தான் அறிந்தேன் கப்பலில் பலரும் இந்நாட்களில் படுக்கையை தவிர்த்து சோபாவில் தான் துயில்கின்றனர் என. அதன் நீளம் குறைவாக இருப்பதால் தரையில் கம்பளியை விரித்து கப்பலின் குறுக்குவாக்கில் படுத்துக்கொண்டேன். ஆம் தூங்கவும் செய்தேன்.
மடகாஸ்கர் தாண்டி கேப் டவுனுக்கு வளைந்து திரும்பி மேலேறுகையில் கப்பலின் ஆட்டம் குறையவேயில்லை. ஜூலை ஐந்தாம் தேதி அதிகாலை மூன்று மணிக்கு கேப்டவுனில் கப்பலை நிறுத்தி பொருட்கள் ஏற்றுவதும் பணியாளர் மாற்றமும் நடக்கும். மூன்று மணி நேரம் போதும் என்றார் காப்டன். முந்தைய நாள் மதியத்திற்கு மேல் எங்களனைவருக்கும் ஓய்வு தரப்பட்டது. மறுநாள் அதிகாலையே விழிக்கவேண்டியிருந்ததால். இரு தினங்களுக்கு முன் ஜெனரேட்டர் ஒன்றில் ஏற்பட்ட பழுதால் இருநூறு லிட்டர் அளவுள்ள முப்பது எண்ணெய் பீப்பாய்கள் வருவதும் உறுதியாகியது.நான்காம் தேதியே வரவேண்டிய கப்பல் கடல் சீற்றம் காரணமாக ஒரு நாள் தாமதமானது.
கேப் டவுனுக்கு தயாராகும் பொருட்டு இரவு எட்டரைக்கே படுத்துவிட்டேன். அதிகாலை மூன்று மணிக்கே விழித்திருந்தேன். அதற்கு முன்பும் கப்பலின் ஆட்டத்தால் இரு முறை விழித்தேன்.கழிப்பறையின் தண்ணீர் வாளி அறை சுவரில் இடித்து எழுப்பிய சப்தத்தால்,குளியலறையின் சோப்பு விழுந்து எழுப்பிய சப்தம் என.
மூன்றரை மணிக்கு ஆகாயத்திலிருந்து விழுந்தது போல எழும்பிய பெரும் ஓசை நெஞ்சில் இடி இறங்கியது போல் கேட்டது. அலைகளுக்கு ஏற்ப கப்பலை திருப்ப முயற்சித்தபோது எழுந்த பேரலை கப்பலை தூக்கி கீழே அடித்தது தான் காரணம். நெஞ்சில் இடி இறங்கிய அந்த ஒரு சப்தம் அனைவருக்கும் நினைவு இருந்தது.
ஐந்தே முக்காலுக்கு ராம் அழைத்தார். “அண்ணே ஸ்டோர்ஸ் ஹெல்ப் பண்ண கூப்பிறாங்க” என. அழைப்பை நோக்கி காத்திருந்த நான் அடுத்த பதினாறாவது நிமிடத்தில் டெக்கில் இருந்தேன். பாட்டீல்,தலேர் சிங்,போசன் முதன்மை அதிகாரி,மோட்டர்மேன் அஸ்பக்,ஜெர்ரி,வைப்பர் ஜோ, காடேட் ஜேம்ஸ் ஆகியோர் டெக்கில் இருந்தனர். “பாட்டீல் ரொம்ப சீக்கிரமே வந்துட்டா” எனக்கேட்டார். “இப்போது தான் அழைப்பு வந்தது” என்றேன். லேசான காற்றுடன்,மெல்லிய குளிரும் இருந்ததால் அனைவரும் வெப்ப ஆடைகளை அணிந்திருந்தோம்.
அவர்களை காலை நான்கு மணிக்கே அழைத்து கப்பலின் முன் பகுதியில் இருந்து அறுபது காலி ட்ரம்களை கொண்டு வந்து கப்பலின் நடுப்பகுதியில் வைத்திருந்தனர். கப்பலுக்கருகில் பொருட்களுடன் வந்த சிறு படகு கப்பலுடன் அணையாமல் தத்தளித்து கொண்டிருந்தது. கப்பலுக்கு வரவேண்டிய ஐந்து மாற்று பணியாளர்கள், வாட்சில்லா நிறுவனத்தின் கொரிய டெக்னீசியன்கள் ஐவர் படகில் இருந்தனர்.
கப்பலிலிருந்து ஐம்பது மீட்டர் தூரத்தில் அலைகளில் சிக்கி மேலும்,கீழும்,வலமும்,இடமும் என கள்ள சாராயம் குடித்தவன் போல் தள்ளாடிக்கொண்டிருந்தது படகு.
அரை மணிநேரத்திற்கு பின் தலேரிடம் கேட்டேன் “இந்த குளுத்திக்கி சூடா ஒரு சாயா குடிச்சா எப்டி இருக்கும்” என.
“நானும் அதான் நினைச்சேன், ஆனா இந்த ரோல்லிங்ல எப்டி சாயா போடுது”
அஸ்பக் “ஒரு மணிக்கூரா போட் கிட்ட வர முடியாம சுத்திகிட்டே இருக்கு வா போவோம்” என அடுமனைக்கு அழைத்து சென்றார். கப்பலை நிறுத்தியிருந்ததால் இருபது டிகிரிக்கு மேல் ரோல்லிங் இருந்தது. அடுமனைக்குள் ரைமுண்டோ புர்ஜி போட உடைத்த பதினேழு முட்டைகள் சிதறி தரையில் கொட்டி கிடந்தது. தள்ளாடிக்கொண்டே “பேகன் சூத் மேரா அண்டா கெயா, க்யா ரோல்லிங் ஹை ரே” என சிதறிய பாத்திரங்களை ஒவ்வொன்றாக கிடைத்த இடங்களில் சொருகி கொண்டிருந்தார்.
இஞ்சி,ஏலக்காய்,பால்,சீனி கலந்து அடுப்பில் வைத்த பாத்திரம் ஓடாமல் பிடித்து வைத்து சாயா போட்டு பிளாஸ்கில் ஊற்றி இறுக்கமான இடத்தில் சொருவிவிட்டு குடித்த சூடான சாயா உடலில் பரவி குளிருக்கு சுகத்தை தந்தது. டெக்கிலிருந்து ஒவ்வொருவராக சாயா குடிக்க உணவுக்கூடம் போய் வந்தனர்.மணி எழரையை தாண்டிய பின்பும் படகு அருகணைய முடியவில்லை. இருள் விலகி மெல்லிய வெளிச்சம் கப்பலுக்குள் வரத்தொடங்கியது.
ஜெர்ரியும்,ஜோவும் காலைவுணவுக்கு சென்றனர். ப்ரிட்ஜிலிருந்து மூன்றாம் அதிகாரி ரவுப் போர்ட் சைடில் ஏணியை போட சொன்னார். பின்னர் சிறிது நேரம் கழித்து ஸ்டார்போர்ட் சைடில் ஏணியை தயார் செய்யுங்கள் என்றார். பொருட்கள் ஏற்றி வந்த படகுகாரர் சொல்வதை முதன்மை அதிகாரிக்கு உத்தரவுகளாக சொல்லிகொண்டிருந்தார்.அதற்கேற்ப போசனும் குழுவினரும் கப்பலின் போர்ட்,ஸ்டார்போர்ட் சைடுகளுக்கு பூனை போல சுற்றி கொண்டிருந்தனர். இப்போது இரு பக்கமும் ஏணி தயாராக இருந்தது.
எட்டுமணிக்கு தலேர் சின் என்னிடம் “நாஸ்டா ஓஹையா க்யா? எனக்கேட்டான். “இல்லை” எனச்சொன்னதும். “போய் ஏதாவது சாப்பிட்டுட்டு வா இது எவ்வளவு நேரம் ஆகும் என தெரியாது” என்றான்.
எட்டுமணிக்கு மேல் படகு ஸ்டார் போர்ட் சைடில் கப்பலுடன் அருகணைய முயற்சித்தது இரண்டு மீட்டருக்கு மேல் எழுந்த அலையில் மேலும் கீழும் என அலைகளிக்கபட்டது. பெரிய இரு அலைகளுக்கு இடையில் கொஞ்சம் இடைவெளி விட்டு வந்த ஒரு சிறிய அலையில் அருகணைந்த படகிலிருந்து ஏணியில் தாவி ஏறி, இரும்பு காங்க்வேயில் ஏறி கப்பலுக்குள் வந்தார் ஹரியானாவின் விகாஸ்.
மேலும் பத்து நிமிடம் கழித்தே ஏணியில் தாவும் வாய்ப்பு கிடைத்தது காஸ் இஞ்ஜினியரான லக்னோவின் அருணுக்கு. மூன்றாவதாக காத்திருந்த இந்தோனேசியாவின் நான்காம் இஞ்சினியர் தும்பாக் ஏணியில் தாவ இயலவேயில்லை.இரையை கொண்டு செல்லும் எறும்பு கூட்டங்கள் போல இடைவெளியில்லாமல் பேரலைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே இருந்தது.
படகுகாரர் பொருட்களை ஏற்றுவோம்.அலைகள் குறைந்ததும் ஆட்களை அனுப்புகிறேன் என்றார்.கப்பலின் பின் பகுதியில்தான் பொருட்களை இறக்கி எங்களால் அடுமனைக்கும், டெக்,இஞ்சின் ஸ்டோர்களுக்கு கொண்டு செல்ல முடியும். கப்பலின் பின் பகுதி உள்பக்கமாக வளைந்து இருப்பதால் கப்பலின் அடிப்பகுதிக்கு செல்லும் படகு அலையில் மேலெழுந்து கப்பலில் இடித்து உடையும் அபாயம் உண்டு அதனால் கப்பலின் நடுப்பகுதியில் உள்ள கிரேனை கீழே இறக்க சொன்னார்கள்.
கடும் ஆட்டத்தில் கீழே சென்ற கிரேன் கொக்கியில் பொருட்கள் அடங்கிய பெட்டியை சுற்றிய அதிக எடையை தாங்கும் கயிற்றின் முனையிலுள்ள கொக்கிகளை மாட்டி மேலே தூக்கினர். கிரேன் கொக்கியில் மூன்று கயிறுகளை கட்டி முன்பும்,பின்பும்,பக்கவாட்டிலும் என மூவர் பிடித்து காற்றின் போக்கில் கட்டுப்பாடில்லாமல் ஆடும் பெட்டியின் ஆட்டத்தை குறைக்க முயற்ச்சித்தது பலனளிக்கவில்லை.
கப்பலின் பக்கங்களில் இடித்தும், உரசியும் ஒவ்வொன்றாக மேலேறி வந்தது. அலை குறைந்தபோது எலக்ட்ரிகல் ஆபிசர் சுஷ்மாண்டோவும்,இரண்டாம் இஞ்சினியர் அலெக்ஸ் தர்சனும் மேலேறி வந்தனர். குட்டி யானையை போல இருந்த தும்பாக் நீரில் முக்கிய கோழி போல சோர்ந்து வந்து சேர்ந்தான். ஜேம்ஸிடம் சொல்லி உணவுகூடத்துக்கு தும்பாக்கை அழைத்து செல்ல சொன்னேன்.
சப்பாத்தி மாவு,மைதா பைகள் கிழிந்து டெக்கில் கொட்டி கால்கள் பட்டு நீல நிற டெக் வெண்மையாக மாறியது. அவ்வப்போது வந்த பெரிய அலைகளில் டெக்கில் வைத்த பொருட்களும் உருண்டோட தொடங்கியது. சக்கரம் பொருத்திய வண்டிகளில் பொருட்களை அடுக்கி உடனடியாக கப்பலின் பின்புறத்தில் கிடைத்த இடத்தில் எல்லாம் வைத்து கட்டினோம்.
இருபத்தி எட்டு எண்ணெய் பீப்பாய்கள் கயிற்று வலையில் கட்டி மேலே எடுத்தோம் சிலமுறை டெக்கில் ட்ரம்கள் இடித்த போதும் உடையாதது அதிர்ஷ்டம். ஐந்து லிட்டர் அளவில் உள்ள பெயின்றுக்கான கார்ட்னர்கள் பெருபாலும் உடைந்து கொட்டி விட்டது. இறுதியாக வாட்சில்லா பணியாளர்கள் பன்னிரெண்டு மணிக்கு மேலேறி வந்தனர். படகிலேய வாந்தி எடுத்து சோர்ந்துபோய் இருந்தனர்.
மீன்,இறைச்சி,பழங்கள்,காய்கறிகள்,பிரட்,ஐஸ்க்ரீம்கள் உடனடியாக அடுமனையின் குளிரூட்டிகளில் கொண்டு செல்லப்பட்டது.கிடைத்த இடைவெளிகளில் ரைமுண்டோவும்,ஜானியும் மதிய உணவையும் தயார் செய்தனர்.
ஊருக்கு செல்லும் ,லாரன்சும்,ஹபிக்கும் படகில் இறங்கியதுமே வாந்தி எடுத்து பின் படுத்து கொண்டதாக பத்தி சாபும், நவ்ரோசும் சொன்னார்கள். இயந்திர அறைக்கான உதிரி பாகங்கள், பணியாளர்களின் பயண பைகள் மேலே வந்தபின் உடைந்த இயந்திர பாகங்களை அடைத்திருந்த பெரிய பெட்டி ஒன்றை கீழே இறக்கினோம். இருமுறை கவிழ்ந்து கடலில் விழாமல் தப்பித்து படகின் பலகையில் அமர்ந்தது. படகின் போக்கு குழாயில் ஒரு சிறு சொட்டல் மட்டும் விழுந்தது.மிக திறைமையான படகு பணியாளர்கள் கயிறுகளை பிடித்தும், விலகி ஓடியும் பொருட்களை இறக்கினர்.
ஒன்றரை மணிக்கு மேல் ஆபத்தான ஆப்ரேசன் முடிந்ததாக முதன்மை அதிகாரி சொன்னார். உடனே இஞ்சின் இயக்கப்பட்டு கப்பல் நகர தொடங்கியது. கப்பலின் நடுப்பகுதியில் இருந்த பொருட்களை போசனிடம் சொல்லி அங்கேயே கட்டி வைக்க சொன்னார். முதன்மை அதிகாரி காப்டனிடம் இனிமேல் உணவுக்குப்பின் பொருட்களை அப்புறப்படுத்துவோம் என்றார்.
முதன்மை அதிகாரி,போசன்,இரு ஒ எஸ், இரு மாலுமி, காஸ் இஞ்சினியர், முதன்மை இஞ்சினியர்,இரண்டாம்,மூன்றாம் இஞ்சினியர்கள், மூன்று மோட்டார் மேன்கள்,வைப்பர், பயிற்சி இஞ்சினியர், இரு அடுமனை பணியாளர்கள், பிரிட்ஜில் காப்டன், மாலுமி ஒருவர், நேவிகேசன் அதிகாரி என இருபது பேர் மிக போராடி முடித்த பணி இன்று.
எனது பத்தொன்பது ஆண்டு கால அனுபவத்தில் ஜப்பானில் கப்பல் பாறையில் மோதி கப்பலின் முன் பகுதி ஓட்டையாகி தண்ணீர் புகுந்தது,இயந்திர அறையின் ஜெனரேட்டர் வெடித்து பெரும் தீ பற்றி எரிந்தபோது பத்து மீட்டர் அருகில் நின்ற நான் தீயனைப்பானை கொண்டு அணைக்க முடியாமல் ஓடி தப்பியது,இன்சிநிரேட்டர் தீ பற்றிய விபத்து, இயந்திர அறையின் தீ விபத்து ஏற்பட்டால் உபயோகிக்கும் கார்பன்டை ஆக்சைடு தவறுதலாக ஒருவர் திறந்துவிட மயிரிழையில் உயிர்பிழைத்த மிகக்கடுமையான நாட்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் இன்று போல் ஆட்டம் கண்ட,இவ்வளவு கடினமான ஒருநாள் இதற்கு முன் இருந்ததில்லை.
O5 july 2024,
நாஞ்சில் ஹமீது.
No comments:
Post a Comment