Sunday, 7 July 2024

பணியில் இணைதல்.

 எல் என் ஜி அலையன்ஸ் நாட்குறிப்புகள்

LNG ALLAIANCE 



  கடந்த பிப்ருவரி மாதம் ஜிப்ரேல்டர் வரை வந்து பணியில் இணையமுடியாமல் ஊருக்கு திரும்பிசென்ற இரு தினங்களுக்குப்பின் மும்பை அலுவலகத்தை அழைத்து வேறு கப்பலுக்கு மாற்றசொன்னேன். இருபதாம் தேதி தென் ஆப்ரிக்காவின் கேப் டவுனில் பணியில் இணையலாம் என்றார்கள்.

கப்பல் நைஜீரியாவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் செய்தி கிடைத்தது.பதிமூன்றாம் தேதி நைஜீரிய துறைமுகம் விட்டபின் தென்னாபிரிக்காவை கப்பல் கடக்கும்போது கேப்டவுன் அருகில்  கப்பலின் வேகத்தை குறைத்து கப்பலில் ஏற வேண்டும். எப்போதும் அங்கு கடல் சீற்றமாக இருக்கும் கடல் அது.  கொஞ்சம் ஆபத்துதான் வேறு வழியில்லை போய் தான் ஆகவேண்டும்.

  பிப்ரவரி இருபத்தி நான்காம் தேதி அதிகாலை திருவனந்தபுரத்திலிருந்து கத்தாரின் தோகா வழியாக கேப்டவுனுக்கு விமானம். இருபத்தி மூன்றாம் தேதி இரவு பத்துமணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு என் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மூர்த்தி அண்ணாவின் ஆட்டோவில் வடசேரி பேருந்து நிலையம் சென்று பஸ் ஏறினேன். ஸாலிமும்,ஷல்மானும்  வந்து ஏற்றிவிட்டார்கள். பஸ் எனது வீட்டை தாண்டும்போது சுனிதா எனக்கு கையசைத்தாள்.

    மறுநாள் திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கால் பகவதி பொங்கலிடும் நாளாக இருந்ததால் பேருந்து நிரம்பியிருந்தது. “போன ட்ரிப்புல ரூட்ட மாத்தி உட்டானுவோ,போறதுக்கு நாலு மணிக்கூர் ஆகிவிட்டது”என்றார் நடத்துனர். எனக்கு அதிகாலை மூன்று ஐம்பதுக்கு விமானம்  இரண்டு மணிக்குள் விமான நிலையத்தில் இருந்தாக வேண்டும். சாலை காலியாக இருந்ததால் ஒரு மணிக்குள் திருவனந்தபுரம் போய் சேர்ந்துவிட்டேன்.

  தம்பி ஜானகி ஒரு மணிக்கு மேல் வந்து என்னை அழைத்து சென்றான். விமான நிலையத்தில் பணிபுரிவதால் அவனது அடையாள அட்டையை காண்பித்து சகாய விலையில் சுலைமானி குடித்துவிட்டு என்னை அனுப்பி வைத்தான்.

   சிறு நகரங்களிருந்து புறப்புடுகையில் எளிதாக இருக்கிறது.அதிக கூட்டமில்லை. இணையத்தில் இருக்கை பதிவு செய்திருந்ததால் வரிசையில் நிற்காமல் எளிதாக பயண பைகளை போட்டு விட்டு,குடியுரிமை,பாதுகாப்பு சோதனைகளை கடந்து விமானம் புறப்படும் வாயிலின் அருகில் சென்று பயண தொழுகையை தொழுதுவிட்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்து தூங்கிவிட்டேன். குடியுரிமை அதிகாரி “கடந்த முறை எங்கிருந்து இறங்கி வந்தாய்” என்ற ஒரு கேள்வியை மட்டும் கேட்டார்.

   விமானம் சரியாக நான்கு மணிக்கு வானத்தில் பறக்க தொடங்கியது. நான்கு மணிநேர பயணம் தோகாவிற்கு. நான் அதிக முறை வந்த விமான நிலையம் இதுவாக்கதான் இருக்குமென நினைக்கிறேன்.   விமான நிலையத்தில் இருந்த தொழுகையறைக்கு சென்று காலை நேர பஜர் தொழுகையை ஜமாத்தாக நிறைவேற்றினேன்.


     பிரபுல் மற்றும் ரைமுண்டோ கேப்டவுன் செல்லும் வாயிலில் காத்திருந்தனர். மூவருமாக பேசிகொண்டிருந்ததால் காத்திருப்பு நேரம் விரைவாக கடந்து விமானம் ஏறும் நேரம் வந்தது. பத்து மணி நேர பயணம், இரு முறை நல்ல உணவும்,குடிக்க தேநீர்,பழச்சாறுகள் தந்தனர். நீண்ட நேர பயணம் கொண்ட கத்தார் ஏர்வேஸில் எப்போதும் உணவு நன்றாக இருக்கும்.

     கேப் டவுனில் மாலை மூன்று மணிக்கு மேல் இறங்கியது விமானம். இரு படங்கள் பார்த்தேன்.இப்போதெலாம் சினிமா பார்ப்பது விமான பயணத்தில் தான்.

  ஐந்தரை அடிக்குமேல்  குண்டான கறுப்பின  பெண் குளிரை தாங்கும் வெப்ப ஆடைகளை அணிந்து எங்கள் பெயர் எழுதிய அட்டையை பிடித்துகொண்டிருந்தாள். வேறு கப்பலுக்கு செல்லவேண்டிய பிலிப்பினோ மாலுமிகள் சிலர் வருவதற்காக காத்திருந்தோம்.சுற்றியிருந்த கூட்டத்தை மறந்து விமான நிலையத்திலிருந்து வெளியேறிய இளம் பெண்ணை உதடுகள் அழுந்த முத்தமிட்டு கொண்டேயிருந்தான். மனைவி ஒரு மாதம் தாய் வீட்டிற்கு சென்றிருப்பாள் போல.

குடியுரிமை அதிகாரி எங்களது கப்பல் நிறுவன கடிதத்தை பெற்றுகொண்டு ஸீ மேன் புக்கை பார்வையிட்டு ,பாஸ்போர்ட்டில் முத்திரை பதித்து தந்தார்.கேள்விகள் ஏதும் இல்லை.சுங்க அதிகாரி எங்கள் பைகளை சோதிக்கவே இல்லை கிரீன் சானலில் வெளியேறினோம்.

  மெல்லிய குளிரில் வெளியே வந்து காரில் ஏறிக்கொண்டோம்.வழியிலேயே முகவர் பெண் இறங்கிகொண்டாள்.அரை மணிநேர பயணத்தில் விடுதியை அடைந்தோம். நீராடி,உடை மாற்றியபின் சுனிதாவிற்கு தகவல் சொன்னேன்.இரவுணவுக்கு சென்று ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருந்தோம். முக்கால் மணி நேரத்திற்குப்பின் எங்கள் உணவுகள் மேஜைக்கு வந்தது. உண்டு முடிக்கும்போது ஒரு ஒன்றரை மணிநேரம் ஆனது. உணவுகள் அனைத்து எதிர்பார்த்ததைவிட அளவுகள் அதிகமாக இருந்தது. “வயிறு அடைத்து விட்டது” என்றார் ரைமுண்டோ. எனக்கும் அப்படித்தான் இருந்தது.

       இரவு தொழுகையை முடித்துவிட்டு தூங்கவிட்டேன். நீண்ட பயணத்திற்குப்பின் உடல் சுத்தமாகி வயிறும் நிறைந்ததால் இரவில் நல்லுறக்கம். காலையில் தாமதமாக விழித்தேன்.

  காலை உணவுக்குப்பின் நாங்கள் மூவரும் கேப்டவுன்  சாலையில் ஒரு நீண்ட நடை சென்றோம்.வயிறு லேசாகியது மதியம் மீண்டும் சாப்பிட்டோம்.உணவக்கதில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும் என தெரிந்ததால் ஒரு மணிக்கு முன்பாகவே சென்று ஆர்டர் கொடுத்தோம். மூன்றரை மணிக்கு எங்களை அழைத்துச்செல்லும் காரோட்டி வருவதாக சொன்னதால்.பைகளுடன் வரவேற்பறைக்கு வந்தோம்.

  என்னுடன் சிங்கப்பூர் எனெர்ஜி கப்பலில் பணிபுரிந்த கொரியாவின் முதன்மை இஞ்சினியர் சாய் நின்றுகொண்டிருந்தார். என்னை நினைவிருந்தது அவருக்கு பெயர் சொல்லி அழைத்தார். அந்த கப்பலில் பணிமுடிந்து செல்லும்போது காஸ் பிட்டருக்கு பரிந்துரை செய்து கடிதம் கேட்டேன். தர இயலாது என சொன்னதாக இரண்டாம் இஞ்சினியர் அப்போது சொன்னார்.நான் அடுத்த கப்பலிலேயே காஸ் பிட்டராக பதவி உயர்வு பெற்று சென்றேன். 

    விடுதியிலிருந்து துறைமுக குடியுரிமை சோதனை மற்றும் அனுமதிகள் பெற்று எங்கள் முகவர் அலுவலகத்தை அடைந்தோம். கப்பல் வருவது தாமதமாகிறது எனவே ஒரு மணிநேரத்திற்குப்பின் படகில் புறபட்டால் போதும் எனக்கூறினார்.

    கப்பல் கேப்டவுன் துறைமுகத்திற்கு  வராது. கேப்டவுன் வழியாக கரையிலிருந்து நாற்பது மைல் தொலைவில் சென்றுகொண்டிருக்கும் கப்பலில் படகில் சென்று ஏற வேண்டும். கடல் கொஞ்சம் சீற்றமாக இருந்தது. தத்தளித்து கொண்டே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணித்தபின் கப்பலை கண்டோம். நைஜீரியாவில் முழுமையாக சரக்கு நிறைக்கப்பட்ட கப்பல் வேகம் குறைத்து மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தபோது படகு அருகணைந்து  தேர்ந்த சர்க்கஸ் காரனை போல ஏணிகளில் தொத்தி ஏறி டெக்கில் போய் சேர்ந்தோம்.

    உணவு பொருட்கள் மற்றும் உதிரிபாகங்களை படகிலிருந்து கிரேன் மூலம் ஏற்றியபின் எங்கள் பயணபைகளும் வந்து சேர்ந்தது.கேரளாவின் தினேஷ் டெக்கில் நின்றிருந்தார்.அங்கேயே கை குலுக்கி விடைபெற்று கொண்டார். பணிகள் குறித்து போனிலேயே சொல்லியிருந்தார்.இங்கே காஸ் இஞ்சினியர் இருப்பதால் பார்துக்கொள்ளலாம் என நானும் எதுவும் கேட்கவில்லை.

  2018 ஆம் ஆண்டு எனெர்ஜி ஒர்பஸ் எனும் கப்பலில் அவரை விடுவித்துள்ளேன். அறையை மிக சுத்தமாக பராமரிப்பவர். முதல் நாள் இரவில் சுத்தபடுத்தாமலேயே அறைக்குள் தூங்க இயலும்.ஞாயிறு இரவாததால் தூங்கி காலையில் விழித்து.  பணியாடைகள் மற்றும் காலணியை பெற்றுகொண்டு பணிக்கு சென்றேன்.

  என்னுடன் சிங்கப்பூர் எனெர்ஜி கப்பலில் பணிபுரிந்த மாலுமி பிலிப்பினோ ஜோயல் மற்றும் கொரிய காப்டன் கிம் தெரிந்தவர்களாக இருந்தனர். கொரியன்,மலேசியன்,பிலிப்பினோ,ஸ்ரீலங்கன் மற்றும் இந்தியர்கள் பணிபுரியும் கப்பல் இது.

நாஞ்சில் ஹமீது.

26.feb.2024.


No comments:

Post a Comment