Wednesday, 19 June 2024

முழுமையாக கண்ட ஜிப்ரேல்டர்

 


      இரவில் நண்பர் ஒருவன் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். அண்ணா அந்த மலையில் ஏறி விட்டீர்களா எனக்கேட்டு. 

   காலையில் விழித்து நண்பர்களிடம் சொன்னேன் மலைமேல் செல்ல வாகனம் செல்கிறது கட்டணம் செலுத்தவேண்டுமென. தயங்காமல் போகலாம் என்றனர்.



      இரண்டாவது  நாள் நாங்கள் சாலையில் பராக்க பார்த்துக்கொண்டு நடக்கும்போது ஸ்பெயின் எல்லையை தாண்டி வந்த ஒருவன் எங்களிடம் மலை மேல் செல்லும் விளம்பர பேனரை காட்டி “இங்கே எப்படி செல்வது” எனக்கேட்டான். “நாங்கள் இவ்வூருக்கு புதுசு” என்றோம்.



   டவுன் டவுண் எனச்சொல்லும் கடைவீதியிலே மலை மேல் செல்லும் வாகனமும்,நின்றுகொண்டிருந்தது. செயின்ட் மைகேல் குகை,ஐரோப்பா முனை,ஸ்கை வாக் என விளம்பரத்தை பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்கர்களை  வழிகாட்டி ஒருவர் தெளிவான ஆங்கிலத்தில் பேசி ஆள் சேர்த்துக்கொண்டிருந்தார். அவரே வாகன ஒட்டி. இருபத்தியிரண்டு யூரோ கட்டணம், போய் வ


ர வண்டிக்கு பதினெட்டு நாற்பது யூரோ. மொத்தம் இரண்டு மணிநேரம் ஆகும் என்றான்.

    ஒத்துக்கொண்டு வண்டியில் எறிக்கொண்டோம்.  Europa பாயிண்ட் எனும் இடத்தில் முதல் நிறுத்தம். சவுதி அரேபிய மன்னர் கட்டிகொடுத்த பள்ளிவாசல் ஒன்று இங்கே இருக்கிறது அவரது பெயரிலேயே கிங் பஹத் மஸ்ஜித் என. அட்லாண்டிக் மற்றும் மத்தியதரை கடலிலிருந்து ஜிப்ரேல்டர் வழியாக ஆண்டு தோறும் ஏராளமான பறவைகள் இடம் பெயர்கின்றன அதை விளக்கும் ஒரு படமும். கப்பலோட்டிகளுக்கு வழிகாட்ட ஒரு கலங்கரை விளக்கமும் இருந்தது. கொஞ்சம் உயரதிற்கு வந்துவிட்டோம் இங்கிருந்து ஜிப்ரேல்டர் துறைமுகமும், கடலையும் வேறொரு கோணத்தில் பார்க்க முடிந்தது.

   செயின்ட் மைக்கேல் குகையை பார்த்தபோது இந்த ஜபல் தாரிக் மலை (gibreltar) பல ஆயிரம் ஆண்டுகள் கடலுக்குள் இருந்திருக்க வேண்டும் என தோன்றியது ஆசிரியர் ஜெயமோகனிடம் எனது ஐயத்தை கூறியபோது அப்படி நிச்சயமாக இருந்திருக்கும் என்றார். இந்த மலைமீது இருக்கும் குகைகள் இரண்டாயிரம் ஆண்டுகளாக ராணுவதிற்கு ஆயுதங்கள் வைக்கவும், மருத்துவமனையாகவும் உலக போர்களில் பயன்டுத்தபட்டுள்ளது. மலையின் கீழ் இரண்டாவதாக ஒரு குகை பாதையை உருவாக்க வேண்டி ராயல் இஞ்சினியர்கள் தோண்டிய போதுதான் இந்த அழகான குகையை கண்டுபிடித்துள்ளனர். இது எதிர்பாராமல் நடந்த விபத்து என்றே குறிக்கப்பட்டுள்ளது.

 உள்ளே சென்றதும் மங்கிய இருளில் கொஞ்சம் பயந்துதான் போனேன்.எங்கோ பாதாள அறையில் இறங்குவது போலிருந்தது. தலைக்கு மேலே முள்ளம்பன்றி போல் வரிசையாக அடுக்கப்பட்ட ஊசிக்கற்கள், இயற்கையாக செதுக்கப்பட்டவை போன்ற மிக அழகான பாறைகள் வெள்ளை, மற்றும் பல நிறங்களில் இருந்தது.மனிதனால் இந்த அழகிய வேலைப்பாடுகளை உருவாக்கவே முடியாது என அப்போது உணர்ந்தேன்.  உள்ளே நாற்பது மீட்டர் அகலத்தில் பளிங்குபோல தெளிவான ஒன்றரை லட்சம் லிட்டர் நன்னீரும் இருந்துள்ளது. இது இருபதாயிரம் ஆண்டுகளாக மூடியே இருந்திருக்க வேண்டும் என நம்புகின்றனர்.

    கொஞ்சம் இடத்தை வெட்டி தட்டையாக்கி அதில் நாற்காலிகள் போட்டு பார்வையாளர்கள் அமர்ந்தபின். அந்த செதுக்கு ஊசி பாறைகள் மேல் வண்ண,வண்ண வெளிச்சம் பாய்ச்சி(light show) காட்சி ஒன்றை காட்டுகிறார்கள். அதன் அழகில் மயங்கி நின்ற ரைமுண்டோ  “பைசா வசூல்” என்றார்.இயற்கை 

    அதன் ஸ்கை வாக் ஒரு பாறை உச்சியில் கண்ணாடி பாலம் அமைத்திருக்கிறார்கள்.கால்கள் கூச,வயிறு கலங்கி அதில் நடந்து ஒரு பீதியுடன் வெளியேறினேன். அங்கிருந்து பார்க்கையில் கடலின் ஒரு பகுதியில் கற்களை போட்டு அலைகளை தடுத்து மணலை பரப்பி செயற்கையாக கடற்கரையை உருவாகியிருந்தார்கள் பார்க்க நீச்சல்குளம் போல காட்சியளித்தது. (ஜிப்ரேல்டருக்கு ஒரு கடற்கரையும் இருக்கு)

    இறுதியாக மலையுச்சியின் குகைகளுக்கு சென்றோம். ராணுவ மருத்துவமனையும், ஓய்வெடுக்கும் அறைகளும், தளவாடங்கள்,போர்கருவிகள் வைக்கும் இடமாக பயன்படுத்தியுள்ளனர். முழு மலையையும் குடைந்து பாதைகள் அமைத்து காற்று வருவதற்கு ஜன்னல்கள் உருவாகியுள்ளனர்.ஒரு பகுதியிலிருந்து குடைந்து மலையின் அனைத்து திசைக்கும் சுரங்கபாதை அமைக்க எத்தனை வருடங்கள்,எவ்வளவு மனித ஆற்றல் செலவாகியிருக்கும். பிரபுல் “இவனுவளுக்கு வேற வேலையே இல்ல போல”என்றான். ஒரு திசையில் மத்தியதரை கடலும்,இன்னொரு முனைவிளிம்பில் எனது விடுதி,விமானநிலையம் ஓடு பாதை,வேறொரு திசையில் அட்லாண்டிக் கடல்,மற்றுமொரு சுரங்க முடிவில் டவுன் டவுண் கட்டிடங்கள் என பார்க்க முடிந்தது. எனது விடுதியறையிலிருந்து பார்த்தபோது மலையில் தெரிந்து சிறு துவாரங்கள் அங்கே எப்படி உருவாயிற்று யார் இந்த செங்குத்தான மலையில் ஏறி சென்றிருப்பார்கள் எனும் கேள்விக்கு விடையும் கிடைத்தது.


              நாங்கள் வண்டியில் செல்லும்போதே விமானம் ஒன்று தரையிறங்க வந்துகொண்டிருந்தது. மலையிலிருந்து அதை காண்பது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் தெளிவாக தெரியும் இடத்தில் நான் வண்டியை நிறுத்துகிறேன் என்றார் ஓட்டுனர். ஆனால் சாலை பராமரிப்பு வண்டி ஒன்று அங்கே திரும்பிகொண்டிருந்ததால் எங்களால் விமானம் தரையிறங்கும் காட்சியை காண முடியவில்லை.

   மலைக்குள் குகையில் இருக்கும்போது விமானம் மேலெழும்புவதை கண்டோம்.  ஓட்டுனர் திரும்பிவருகையில் நடக்க இயலுமாயின் நடந்தே வாருங்கள் அது ஒரு நல்ல அனுபவத்தை தரும் என்றார். எங்களுடன் வந்த வயதான அமெரிக்கர்கள் வண்டியில் சென்றார்கள். நாங்கள் மூவரும் மலையிச்சியில்  இருந்து குகைகளை கண்ட பின் நடந்தே கீழிறங்கி வந்தோம்.

 பாறைகளிலேயே வீடுகளும் முடிவில் கடை வீதியும் இருந்தது.வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வந்து ஒரு பெண்மணி மலைப்பாதையில் தனது இருசக்கர வண்டியை நிறுத்திவிட்டு பாறைகளில் வெட்டபட்டிருந்த படிக்கட்டுகளில் சிரமப்பட்டு இறங்கிகொண்டிருந்தாள். மனமிரங்கிய பிரபுல் ஒரு பையை தூக்கி கொண்டு வீட்டு வாசல் வரை கொண்டு கொடுத்துவிட்டு வந்தான்.

ஒரு ஊருக்கு சென்றால் அதன் ஒரு சிறு பகுதியை மட்டுமே நாம் காண்போம். ஜிப்ரேல்டார் எனும் இந்த ஒரு நாட்டை நாங்கள் முழுமையாக சுற்றி பார்த்தோம் என உறுதியாக சொல்வேன்.

 களைத்து விடுதிவந்து சேர்ந்து குளித்து ஓய்வெடுத்து இரவுணவுக்குப்பின் ரைமுண்டோவிடம் கேட்டேன். “இன்னும் ஒரு இடம் மட்டும் பாக்கி இருக்கிறது நாம் பார்க்காதது” என. “செல்வோம்” என்றார். 

 கடை வீதி,உணவகங்கள், மிதக்கும் உல்லாச கப்பல் வடிவில் கட்ட பிரமாண்ட கட்டிடம். வரிசையாக நிறுத்திவைக்கபட்டிருந்த ‘யாட்ச்கள்’ வங்கிகள், ஷேர் மார்கெட் கட்டிடம் என பார்த்தோம்.அந்த இரவிலும் கால்பந்து போட்டி நடந்துகொண்டிருந்த மைதானத்தில் நுழைந்து காலரியில் அமர்ந்து சிறிது நேரம் போட்டியை கண்டோம். ரைமுண்டோ முன்னாள் கால்பந்து வீரர். ரோடு போன போக்கில் எங்கெல்லாமோ நடந்தோம்.இறுதியாக மலையுச்சியில் தெரிந்த விளக்கொளியை அடையாளம் வைத்து விடுதி இருக்கும் திசையை கணித்து நடக்க தொடங்கினோம்.

  ஜிப்ரேல்ட்டரை முழுமையாக கண்டுவிட்டோம் எனும் அக மகிழ்வில் நடந்து களைத்து விடுதியை அடைந்தோம். மறுநாள் காலை பத்தரை மணிக்கு புறப்பட வேண்டும். லண்டன் வழியாக மும்பை- திருவனந்தபுரம் செல்ல விமான டிக்கெட்டுகள் வந்திருந்தது. ரைமுண்டோ கோவாவிற்கும்,பிரபுல் மும்பைக்கும்.

05 feb 2024.

நாஞ்சில் ஹமீது.

No comments:

Post a Comment