Tuesday, 18 June 2024

ஜிப்ரேல்டர் எங்கே இருக்கிறது.


 

       தூங்கி எழுந்து  அதிகாலை தொழுகைக்குப்பின் இன்றும் கடற்கரைக்குப்போனேன்.காலை உணவுக்கு சென்றேபோது வரவேற்பறையில் எங்களுக்கு எந்த செய்தியும் இல்லை. முகவரை அழைக்க சொன்னோம். பதினோரு மணிக்கு மேல் தான் இங்கே அழைப்பது வழக்கம் என்றார். வரவேற்பறையில் இருந்த லூசி. 

  லூசி நேற்றிரவும் பணியில் இருந்தாள். தான் ஸ்பெயினில் வசிப்பதாகவும். தினமும் இங்கு வந்து போவதாகவும் தன்னை போல தினமும் பத்தாயிரம் பேர் ஸ்பெயினிலிருந்து இங்கு பணிக்கு வந்து செல்வதாக சொன்னாள். இங்கே சம்பளம் கொஞ்சம் அதிகம் என்றாள்.

  நான்காவது மாடியிலுள்ள என் அறையிலிருந்து படிக்கட்டுகள் வழியாக இறங்கும்போது விடுதியின் பின்புறமுள்ள மயானமும்,விமான ஓடுதளமும்,கடலும் காட்சியளித்தது.அதை லூஸியிடம் சொல்லி எனக்கு முன் பக்க அறையின் கண்ணாடி ஜன்னல் வழியாக பார்த்தல் ஓங்கி உயர்ந்த ஜிப்ரால்டார் மலையின் சிறு பகுதி தெரிவதை சொன்னபோது. “ நீ அதிர்டசாலி முன் பக்க அறை கிடைத்தது. பாறை தெரிவது பரவாயில்லை, பின்புற அறையில் இருந்தால் இரவில் ஆவிகளை பார்க்கும் வாய்ப்பு உனக்கு கிடைக்கும்” என மஞ்சள் நிற பற்கள் தெரிய சப்தமாக சிரித்தாள். 


   காலை உணவு முடிந்து வெளியே சென்றோம் நேற்று சென்ற திசைக்கு எதிர் திசை இன்று. விமான நிலையத்தின் ஓடு பாதைக்குள் புகுந்து மறுபுறம் சென்றோம். ஓடு பாதையில் நின்று படம் எடுத்துக்கொண்டோம்.விமானம் இறக்கும் பாதையில் நடந்து செல்வது ஒரு கிளர்ச்சியை தந்தது. மறு புறம் ஸ்பெயின் எல்லை உரிய ஆவணங்கள் இருப்பவர்கள் ஸ்பெயின் நாட்டிற்குள் செல்கிறார்கள். விமான நிலையத்தை சுற்றி இடுப்பளவு கம்பி வேலி அமைத்திருக்கிறார்கள். நாட்டின் எல்லை அதுதான்.கண்காணிப்பு காமிரா மூலம் கண்காணிப்பார்கள் போல. ஸ்பெயின் – ஜிப்ரால்டர் கடற்கரையும் அதேயளவு கம்பி வேலியிட்டு உள்ளனர்.

Runway 


   விமானம் ஒன்று தரை இறங்கியது ஓடு பாதையின் இருபுறம் மூடப்பட்டு காவலர்கள் பாதுகாத்தனர். மீண்டும் பாதை திறந்தபின் மக்கள் செல்ல அனுமதித்தனர். வாகனங்களுக்கு அனுமதியில்லை.மதியம்வரை சுற்றிவிட்டு விடுதிக்கு வந்தபோது மேலும் இருதினங்கள் காத்திருக்க சொல்லி தகவல் வந்திருப்பதை வரவேற்ப்பறை பெண் சொன்னாள்.

    ஜிப்ரேல்டர் எங்கே இருக்கிறது மத்தியதரைக்கடலில் ஸ்பெயினுக்கும், மொராக்கோவுக்கும் இடையில் உள்ள பகுதி. பிரிட்டனின் ஆளுமைக்கு உட்பட்டது. பிரிட்டனின் கவர்னர் ஆட்சி புரிகிறார்.எல்லா வரலாற்றையும் போல் இங்கும் சண்டையும் உயிர்பலியும் ஏராளமாக நடந்துள்ளது. இஸ்லாமிய மன்னர் தாரிக் பின் சயீத் என்பவர் பெயரால் ஜபல் (மலை) தாரிக் என இருந்த இங்குள்ள மலையின் பெயரால் பின்னர் இப்பகுதி ஜிப்ரால்டர் என பெயர் பெற்றுள்ளது. முன்பு இந்த மலை ஜபல் மூஸா எனவும் இருந்துள்ளதாக வராலாற்று குறிப்புகள் சொல்கிறது. தொழிற்நுட்பம் வளரும் முன் இந்த ஜிப்ரேல்டார் மலை கப்பலோட்டிகளுக்கு பெரும் உதவியாக இருந்துள்ளது.

   இஸ்லாமியர் ஆட்சியை வெளியேற்றி விட்டு ஸ்பானிஷ் ஆட்சி நெடுங்காலம் அமைந்துள்ளது.பின்னர் ட்ச்சு,பிரெஞ்ச் ஆளுமைக்கு உட்பட்டும் ஆட்சி நடந்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரில் எரிபொருள் நிரப்பி செல்லும் இடமாக போக்குவரத்திற்கு மிகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்போதுதான் பிரிட்டிஷ் கைபற்றியிருக்க வேண்டும்.

   இறுதியாக ஆட்சி மாற்றத்துக்காக நடந்த ஒட்டெடுப்பில் பெருன்பான்மை மக்கள் பிரிட்டன் ஆட்சியை விரும்பியாதல் அதுவே இப்போதும் நீடிக்கிறது. பிரிட்டனின் கடற்படை தளம் ஒன்றும் இங்குள்ளது.

  மொத்தமே 6.4 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ள இந்நாட்டின் மக்கள் தொகை (34,000)முப்பதினான்காயிரம் மட்டுமே.வருமான வரி மற்றும் இன்ன பிற சலுகைகளை வழங்கி இங்கே தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கும் விளம்பரங்கள் ஆங்காங்கே உள்ளது.

    மாலையில் கடற்கரைக்கு சென்றபோது வயதான இந்தியர் ஒருவர் மீன்களுக்கு பூஞ்சை பிடித்த பிரட்டை பிய்த்து போட்டுகொண்டிருந்தார். (1975 இல் இங்கு பணிக்காக வந்தவர்) ஐம்பது ஆண்டுகளாக இங்கே வசிப்பதாவும் பிறந்து வளர்ந்தது இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரம் என்றும் சொன்னார்.

   அங்கே கட்டபட்டிருந்த விலையுர்ந்த உல்லாச படகு ஒன்றை புகைப்படம் எடுத்தோம்.ஆப்ரிக்காவிலிருந்து இங்கிலாந்தில் குடியேறிய நண்பர்கள் குழு  சுற்றலா வந்திருந்தது.




  இந்தியர் எங்களின் ஜிப்ரேல்டர் வருகை குறித்து கேட்டறிந்தபின் அவரது காரில் எங்களை விடுதியில் இறக்கி விடுவதாக சொன்னார். நடந்தே ஊர் சுற்ற இருப்பதை சொன்னபோது இந்த ஊரில் நீங்கள் வழி தவற வாய்ப்பே இல்லை இந்த மலையை பார்த்துகொண்டு நடந்தால் எளிதாக உங்கள் விடுதிக்கு சென்று விடலாம் எனச்சொல்லி விடைபெற்றார்.

 தனது மகள் இங்கே மருத்துவராக பணிபுரிவதாக சொன்னார்.இங்கே வசிப்பிடம் மிக விலைஅதிகம் எனவும் சொன்னார். இடப்பற்றாக்குறையே அதற்கு காரணாமாக இருக்கும்.

   இரவு வரை சுற்றி களைத்துவிட்டு விடுதிக்கு திரும்பினோம்.

 நாஞ்சில் ஹமீது,

03-feb-2024

No comments:

Post a Comment