நீ.....ண்...........ட பயணம் என ஒரு பதிவு எழுதியிருந்தேன். யார் கண் பட்டதோ. அமீரகத்தின் தாஸ் தீவில் மே மாதம் ஐந்தாம் தேதி கரையணைந்து ஆறாம் தேதி பின் மதியம் சரக்கு நிறைக்க துவங்கி எழாம் தேதி புறப்பட்டு பன்னிரெண்டாம் தேதி இந்தியாவின் சூரத் அருகிலுள்ள ஹசிராவில் சரக்கை இறக்கினோம்.
தாஸ் தீவு இரவில் |
ஒரு முறை சரக்கு ஏற்றி இறக்க மட்டுமே கப்பலை வாடகைக்கு எடுத்தது ஒரு நிறுவனம். எங்களது எல் என் ஜி கப்பலில் சரக்கு நிறைத்தால் குறைந்தது இருபத்தியைந்து நாட்கள் பயணித்து வேறொரு நாட்டில் சரக்கை கொடுப்போம். அதாவது மாதத்தில் ஒரு துறைமுகம் அல்லது இரண்டு. மீதி நாட்கள் கப்பல் ஓடிக்கொண்டே இருக்கும். எங்களது பணியும்,கப்பல் வாழ்க்கையும் அதிக சிரமமில்லாமல் நகர்ந்துகொண்டிருக்கும்.
பதிமூன்றாம் தேதியே கப்பல் ஹசிரா விட்டபின் வேறொரு நிறுவனம் விரைந்து தாஸ் தீவுக்கு வர சொன்னது தாஸ் தீவில் கப்பல் கரையணைந்தது முதல் கப்பலுக்கு அவர்கள் வாடகை தரத்தொடங்குவார்கள். மே மாதம் பதினேழாம் தாஸ் தீவில் சரக்கை நிரப்பிவிட்டு பத்தொன்பதாம் தேதி புறப்பட்டு நான்கு நாள் பயணத்திற்குப்பின் மீண்டும் ஹசிராவை அடைந்தோம்.
இருபத்தியைந்தாம் தேதியே மீண்டும் புறப்பாடு. ஒவ்வொரு துறைமுகத்திற்கும் இடையில் மிகச்சிறிய இடைவெளிகள். அதிக பட்சமாக நான்கு பயண நாட்கள். கப்பல் காரனுக்கு வேலை மிக கடுமையாகிவிட்டது. துறைமுகம் செல்வதற்கு முன்னால் பாதுகாப்பு ஒத்திகைகள், சரக்கு தொட்டிகளை தயார் செய்தல்,எல் என் ஜி திரவ குழாய்களில் காஸ்கட் மாற்றுதல்,சரக்கு தொட்டி மற்றும் குழாய்களின் வால்வுகளை இயக்கி பார்த்தல், டெக் பணியாளர்கள் கப்பல் கரையில் கட்டப்படும் கயிறுகளை தயார் செய்து வைத்தல், கப்பலை உப்பு பிசுக்கு இல்லாமல் கழுவி சுத்தபடுத்தல்.
கரையணையும் முன் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் நேவிகேஷன் அதிகாரியுடன் கண்காணிப்பில் ஒருவர் அதிகமாக இருத்தல். இயந்திர அறையிலும் தானியங்கி சிஸ்டதிலிருந்து மாற்றி இரவும் பகலும் இருவர் பணியில் இருப்பது. பைலட் மற்றும் கரையில் வரும் அதிகாரிகள் தங்கும் அறையை சுத்தப்டுத்தல். கரையில் இருக்கும்போது நடக்கும் ஆய்வுகளுக்கு கப்பலை தயாராக வைத்தல் இப்படியாக சனி,ஞாயிறு என பாராமல் எப்போதும் வேலை, வேலை, வேலை ஓடி ஓடி அனைவரும் களைததுவிட்டோம். அதாவது மாதத்தில் ஒரு முறை செய்ய வேண்டிய வேலையை ஆறு முறை செய்யவேண்டிய கட்டாயம்.
மே மாதம் இரண்டாம் முறையாக ஹசிராவிலிருந்து புறப்பட்டு தாஸ் தீவுக்கு நான்கு நாட்களில் சென்று சேர்ந்தாலும் கப்பல் கரையணைவில்லை. துறைமுகத்தில் சில பழுதுபார்க்கும்பணிகள் நடந்துகொண்டிருந்ததால். துறைமுகம் எப்போது அழைத்தாலும் செல்லும் வகையில். தாஸ் தீவுக்கு இரண்டு மணி நேர பயண தூரம் இருக்கையில் கப்பலை வட்டமடித்து கொண்டிருந்தோம்.
முப்பத்தி ஒன்றாம் தேதி உள்ளே வாருங்கள் என செய்தி வந்ததும் போய் சரக்கை நிரப்பினோம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி குஜராத்தின் பரூச் அருகிலுள்ள தகேஜ் என்னுமிடத்தில் துறைமுகம். இங்கே கடுமையான நீரோட்டம் காரணமாக கப்பலை கரையில் கட்டும் கயிற்றின் நுனியில் இருக்கும் வட்டத்தின் நீளம் இருபத்தியிரண்டு மீட்டர் வேண்டும் என்றார்கள். முன்பும் பின்பும் மொத்தம் இருபத்திமூன்று கயிறுகளின் நுனியை ஐந்துபேர் கொண்ட குழு ஒரே நாளில் மாற்றி சோர்வடைந்து சாய்ந்தது.ஜூன் ஆறாம் தேதி கடுமையான நீரோட்டம் கொண்ட தகேஜ் துறைமுகப்பில் மிக கஷ்டப்பட்டுத்தான் கப்பலை கட்ட முடிந்தது.
இப்படியாக மே ஆறாம் தேதி முதல் ஜூன் ஆறுக்குள் ஆறு முறை கரையில் கப்பலை கட்டி சரக்கை கையாண்டோம்.மே மாதம் அரபிக்கடல் கடுமையான கோடை வெள்ளி உருகுவது போல வெயில் இறங்கும் வெப்பத்தால் கடல்நீர் உருகி மேலெழும் நீராவியின் வெப்பமும். .தலையிலிருந்து கழுத்து வரை வெள்ளைத்துணியால் கட்டி கண்களுக்கு கறுப்பு கண்ணாடியும் அணிந்தோம். தண்ணீரும்,எலுமிச்சை உப்பு,சீனி கலந்த பானம்,மோர் குடித்து தகிக்கும் வெயில் நாட்களை சமாளித்தோம்.
இப்போதும் தாஸ் தீவில் கடந்த பதினொன்றாம் தேதி சரக்கு நிரப்பிவிட்டு தகேஜ் நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறோம். பதினேழாம் தேதி கரையணைவோம். அடுத்து எங்கு செல்வது என இதுவரை தகவல் இல்லை. மிகக்குறுகிய பயணத்தில் தேதி, கிழமை நினைவில்லாமல் போனதில் ஒரு மாதம் விரைவாக ஓடிவிட்டது.
Dahej (gujrat) |
நாஞ்சில் ஹமீது,
16 june 2024.
No comments:
Post a Comment