Friday 9 June 2023

பணியில் இணைதல்

 என் எஸ் பிரன்டியர் நாட்குறிப்புகள் 3

  பணியில் இணைதல்.

        ஞாயிற்றுக்கிழமை(14may2023) மாலை ஆறு மணிக்கு “டிரைவர் வருகிறார் தயாராகுங்கள்” என வரவேற்பறையிலிருந்து  அழைத்து சொன்னார்கள்.

விடுதியறையிலிருந்து பனாமாவின் சாலை

விடுதி வரேவேற்பறையிலிருந்த ெபெண் சிலை


        

விடுதியறை நாட்கள் பற்றி தனியாக எழுதவேண்டும்.முதல் மூன்று நாள் தனிமை படுத்தலுக்குப்பின் கொரோனா சோதனைக்கு சாம்பிள் எடுத்து சென்றார்கள்.(09-may -2023)செவ்வாய்க்கிழமை இரவு விடுதியறைக்குள் நுழைந்தேன்.கப்பல் பனாமா வருவது தாமதமானதால் மேலும் இரு தினங்கள் இருக்கவேண்டும் என்றபோது சற்று கடினமாகிவிட்டது.  

  (12may2023)வெள்ளிக்கிழமை காலை கொரோனா சோதனைக்காக விடுதியின் வரவேற்பறைக்கு வந்தபோதுதான் தெரிந்தது இலங்கையை சேர்ந்த பத்தி சாப் ஹிராத் (எலெக்ரிகல் ஆபிசர்) பங்களாதேசை சார்ந்த ரஹீம் உல்லா மூன்றாம் அதிகாரி இருவரும் எங்களுடன் கப்பலுக்கு வருகிறார்கள் என. 

எங்களது பாஸ்போர்ட்டுடன் இமிகிரேசன் பெண் அதிகாரி ஒருவரும்,ரஹீம் உல்லாவின் பாஸ்போர்ட்டை வைத்திருந்த அதிகாரி ஒருவரும் என பயண பைகளுடன் ஏழுபேர் காரில் ஏறிக்கொண்டோம்.இலங்கையை சார்ந்தவர்கள் பனாமாவில் வெளியே செல்ல தடையில்லை.

 பனாமா மிக சிறிய நகரம்தான் நட்சத்திர விடுதிகளும்,மால்களும்,ஹோட்டல்களும்  என வானத்தை முட்டும் கட்டிடங்கள் நிறைந்த இந்த நகரை விட்டு ஐந்து முதல் பத்து நிமிடத்திற்குள் வெளியேறி விட்டோம். பின்பு இந்தியாவின் கொங்கன் பகுதியை நினைவுபடுத்தும் சமதளமற்ற பச்சை சூழ்ந்த காடு தான்.சாலையின் இருபுறமும் வீடுகளோ,கடைகளோ கிளை சாலைகளோ எதுவும் இல்லை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சையே காட்யளித்தது அந்தியணைந்து இருள் கவ்வுவது வரை பச்சைவெளியை அமைதியாக தியானம் போல பார்த்துக்கொண்டிருந்தேன்.

  நூற்றியிருபது கிலோமீட்டர் வேகத்தில் பறந்த கார் ஒரு மணிநேரத்தில் கிறிஸ்டோபல் நகரை எட்டியது.இமிகிரேசன் அதிகாரிகள் எங்களது பாஸ்போர்ட்டை ஏஜென்டிடம்  ஒப்படைத்துவிட்டு சென்றனர். (ஐஞ்சு நாளா வெளிய எங்கயும் உடாம பிடிச்சி வெச்சி பத்திரமா கொண்டு வந்து சேத்துருக்கேன் தண்ணியில உட வேண்டியது உன் பொறுப்பு என சொல்லியிருப்பார்களோ என எண்ணிக்கொண்டேன்).

   முகவர்  துறைமுக அதிகாரிகளிடம்அனைத்து முறைமைகளையும் முடித்து கப்பல் ஏற ஒப்புதல் பெற்று கடவு சீட்டுகளை எங்களிடம் தந்தார்.டிப்பாச்சர்(DEPARTURE)என  முத்திரை குத்தப்பட்டிருந்ததை கண்டேன்.

  தூரத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்றுகொண்டிருக்கும் கப்பல்களுக்கு தேவையான உணவு பொருட்கள்,உதிரி பாகங்களை ஏற்றிய லாரிகளை இங்கே வாயிலில் சோதனை செய்து அனுப்புகிறார்கள். இங்கு ஸ்கானர் ஒரு பெரிய கறுத்த லாப்ரர்டோ நாய்.சுங்க அதிகாரி லாரியின் கதவை திறந்து  சற்று பின்னோக்கி சென்று நாயை ஓட விட்டு நான்கடி உயரமுள்ள லாரியில் ஏற்றி விடுகிறார். நாய் ஒவ்வொரு பெட்டியாக முகர்ந்து பார்க்கிறது குரைக்கவேயில்லை. 

  லாரியின் சோதனை முடிந்து சுங்க அதிகாரியும்,ஸ்கானரும் கீழே இறங்கினர்.பின்னர் சரக்குகளுடன் லாரி வாயிலை கடந்து உள்ளே சென்றது.2008 ஆம் ஆண்டு பனாமா விமான நிலையத்தின் வாயிலில் நுழைந்ததும் ஒரு புஷ்டியான நாய் தான் எங்கள் பயணபை களை சோதித்து நீ உள்ளே போலாம் என அனுப்பி வைத்தது.

 மெக்சிகோவிலும்,இஸ்ரேலிலும் கப்பல் சென்றபோது போதை பொருட்கள் சோதனைக்காக அதிகாரிகள் நாய்களையே கப்பலுக்குள் கொண்டு வந்தது நினைவில் மின்னி சென்றது.

   எங்கள் பயண பைகளை இங்கே சோதிக்கவில்லை கடவுசீட்டை கையில் தந்துவிட்டு முகவர் எங்களை படகு துறைக்கு அழைத்து சென்றார். நீண்ட வரிசையில் கப்பல்களுக்கு சரக்குகளை கொண்டு செல்லும் படகுகள் நின்றுகொண்டிருந்தது. படகில் பைகளை படகில் வைத்ததும் முகவர் “வேறொரு கப்பலுக்கு செல்லும் மாலுமி ஒருவர் வருகிறார் அவர் வந்ததும் நீங்கள் கிளம்பலாம் இருபது நிமிடங்கள் ஆகும்”என சொல்லிவிட்டு. “ஹாவ் எ சேப் வாயேஜ்” என கை குலுக்கி விடைபெற்று சென்றார்.

படகில் 


 ஆறடி உயரத்தில் நல்ல திடகாத்திரமான உடல் வாகும் கொண்ட வெள்ளைகார மாலுமி மிக குறைந்த உடமைகளுடன் படகுக்கு வந்தார். நீண்ட பயணத்தின் களைப்பால் முகம் சுருங்கி போய் இருந்தது.

   கிரிஸ்டோபலில்  கரையிலிருந்து கடலுக்குள் படகு நுழைந்தது.துறை முகப்பில் கரையணைவதற்காக  சரக்கு பெட்டகங்கள் ஏற்றிய பெரிய கப்பல் ஒன்று ஒரு தீவு போல மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது.அதில் ஒளிர்ந்த விளக்குகள் ஒரு சிறு நகரை போலிருந்தது.

   வெள்ளைக்கார மாலுமி பதினைந்து நிமிட பயணத்திற்குப்பின் அவரது கப்பலுக்கு சென்றார்.எங்கள் படகுக்காரர் அவரது பைகளை கப்பல் பணியாளரின் கையிலேயே கொடுத்தார்.குள்ளமான பெரிய மீசையுடன் அரைகால் சட்டையணிந்த வெள்ளைக்காரர் ஒருவர் அவரை வரவேற்று கப்பலுக்குள் அழைத்துசென்றார். கப்பல் காப்டனாக இருக்கும் என எண்ணிக்கொண்டேன்.

 படகுக்காரர் தனது மொபைலை எங்களிடம் காட்டி கப்பல் வந்துகொண்டிருக்கிறது  இன்னும் பதினைந்து நிமிடங்கள் ஆகும் என சொல்லியபின் காத்திருந்தோம்.படகு நின்றதும் பயங்கரமாக ஆடத்தொடங்கியது. மீண்டும் படகை இயக்கி அலையின் போக்குக்கு தகுந்தமாதிரி திருப்பி பின் நிறுத்தினார் படகோட்டி.  பனாமா அதிகமான மழை பொழிவுள்ள இடம் மேற்கூரை இல்லாத படகில் பயணபைகளுடன் ஒருமணி நேரம் இருந்தபோது மழை இல்லாமல் காத்த இயற்கைக்கு  நன்றி சொன்னேன்.

    என் எஸ் பிரண்டியர் அருகில் வந்ததும் கப்பலின் முன் பகுதிக்கு சென்று பயண பைகளை அடுக்கிய ராட்சத பையை கப்பலிலிருந்து இறங்கிய கிரேனின் கொக்கியில் இணைத்தோம்.ஆவணங்கள்,மடி கணினி இருந்த பைகளுடன் மெதுவாக ஓடிக்கொண்டிருந்த கப்பலின் ஏணியில் தாவி ஏறி கப்பலின் மேல் தளத்துக்கு சென்றோம். எங்கள் பைகளை பத்திரமாக கப்பலுக்குள் கிரேன் மூலம் இறக்கி வைத்திருந்தார் லக்னோவின் போசன் யாதவ் (கிருஷ்ணனின் உறவு காரராக இருப்பாரோ) ஐடியா மணி இருந்திருந்தால் கோனாரே என கட்டியணைத்திருப்பார்.

  ரத்னகிரியின் ஓ எஸ் இர்பான் எங்களிடம் கையொப்பம் பெற்றபின் “வெல்கம் ஆன் போர்ட்”உள்ளே போக சொன்னார்.எங்களுடன் வந்த பயிற்சி காப்டனும்,மூன்றாம் இன்ஜியரும், ஏழு மாதங்களுக்குபின் மீண்டும் இங்கே வருகிறார்கள்.இலங்கையின் முதன்மை அதிகாரி டான் ............................அலெக்ஸ்  பயிற்சி காப்டனை கட்டித்தழுவி வரவேற்றார்.கப்பல் பனமா கால்வாயை நோக்கி நகர்ந்தது.

  எங்களுக்கான அறைகளை காட்டித்தந்தார் காடட் மும்பையின் அஞ்சுமன். உணவுகூடம் சென்றோம். ஹாட் டாக் இருந்தது. ஆளுக்கொன்று சாப்பிட்டோம்.

  அறைக்கு வந்து பத்திசாபிடம் இணையம் கடன் வாங்கி சுனிதாவிற்கு அழைத்து சொன்னேன் “வந்து விட்டேன் கப்பலுக்கு” என.

  நீராடி கடமையான தொழுகைக்குப்பின் நீண்ட பயணத்திற்குப்பின் கப்பலுக்கு பத்திரமாக வந்து சேர்ந்தமைக்கு நன்றி சொல்லும் பொருட்டு இரண்டு ரக்காத் நபில் தொழுதபின்  அறைக்கு வெளியே வந்தேன்.மழை சட்டைகளை அணிந்துகொண்டு கப்பல் பணியாளர்கள் கயிறுகளை பனமா கால்வாயின் ஓரங்களில் வீசி எறிந்தனர்.கால்வாய் பணியாளர்கள் அதை இழுத்து பெரிய கயிற்றின் கண் வடிவ கண்ணியை பொலர்ட்டில் பொருத்தினர்.




பனாமா கால்வாய்


 கப்பல் கால்வாயின் முதல் கேட்டுக்குள் நிறுத்தப்பட்டபின் தண்ணீரை நிரப்பதொடங்கினர் கப்பல் மேலே உயர தொடங்கியது.

மேலும் .

நாஞ்சில் ஹமீது.

 கப்பல் காரன் டைரி இனி தொடர்ந்து வரும். இணையம் கிடைக்கும்போது எனது தளத்தில் வலையேற்றுவேன்.

   

  


No comments:

Post a Comment