Monday 29 May 2023

நடுக்கடலில்

                                நடுக்கடலில் 





   பனாமாவிலிருந்து ஆசியாவின் தீவு நாடு ஒன்றுக்கு புறப்பட்டு நான்காயிரத்தி எண்ணூறு மைல்களை தாண்டிவிட்டோம் மொத்த தூரம் எட்டாயிரம் நாட்டிகல் மைல் (1 nautical mile=1.85km).


 இம்மாத நடுவில்  பனாமா கால்வாயை கடப்பதற்காக வந்துகொண்டிருந்த கப்பலில் இரவு நேரத்தில் கிறிஸ்டோபலில் ஏறிக்கொண்டோம்.

   கப்பலின் வேகத்தை குறைத்தபோது நாங்கள் வந்த படகு கப்பலுடன் அருகணைந்து அதன் வேகத்துக்கு இணையாக சென்றுகொண்டிருக்கும்போது  ஸ்டார்ட்போர்ட் சைடில் தொங்கிகொண்டிருந்த ஏணியில் (Gangway) தேர்ந்த சர்க்கஸ்காரனைப்போல தாவி ஏறி கப்பலுக்குள் பத்திரமாக பாதம் பதித்தோம்.

  இரவே அட்லாண்டிக் கடலிலிருந்து பனாமா கால்வாய்க்குள் நுழைந்து காட்டில் ஓடும் ஆற்றிற்குள் சென்று பாதுகாப்பான இடத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்றிருந்தோம். மறுநாள் மதியம் நங்கூரம் உருவப்பட்டு மறு எல்லையை அடைந்து (பல்போவா)பசுபிக் கடலில் நுழையும்போது இரவாகியிருந்தது.

    இரண்டாயிரத்தி ஒன்பதாம் ஆண்டுமுதல் இஞ்சின் பிட்டராக இருந்தேன்.அதில் எனது பணி பெரும்பாலும் தெரிந்திருந்ததால் அதிலேயே எளிதாக ஒன்றிபோய்விட்டேன்.

   எல்.பி.ஜி கப்பல்களில் காஸ் பிட்டராக வாய்ப்பு உள்ளது என நண்பர்கள் சொன்னபோது எல்.பி.ஜி.கப்பலில் வாய்ப்பு கேட்டு என் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தேன் 2014ஆம் ஆண்டு. முன் அனுபவம் இல்லாமல் எல்.பி.ஜி கப்பலில் அனுப்ப முடியாது என கை விரித்தார் என அப்போதைய மேலாளர் அனிதா.

  2016 ஜூன் மாதம் அனிதா என்னை அழைத்து எல்.பி,ஜி கப்பலில் வாய்ப்பு தருகிறோம் அதற்கான (course) வகுப்பில் கலந்து சான்றிதழ் பெறச்சொன்னார்.பணியில் இணையும்போது டெக் வேலைகளை கற்றுக்கொள் என்றார்.

  ஆனால் இப்போதுதான் டெக்கில் காஸ் பிட்டராக இணையும் வாய்ப்பு கிடைத்தது.எல்.பி.ஜி கப்பல்களின் இயந்திர அறையில் கடுமையான வெப்பம் இருக்கும். அதிகம் உடல் உழைப்பு சார்ந்த பணி ஆதலால் இரவில் சீக்கிரமே நல்லுறக்கம் எப்போதும்.

    இப்பொது இங்கே காஸ் பிட்டராக பணிக்கு வந்தேன்.ஆறு வருடம் ஆன புதிய கப்பல்.காலையில் கணினி திரையை பார்த்து எல்.பி.ஜி திரவம் நிரப்பபட்டுள்ள நான்கு தொட்டிகளின் வெப்பம்,அழுத்தம் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.பின்னர் காஸ் பிளாண்டில் ஓடிக்கொண்டிருக்கும் இயந்திரத்தின் வெப்பம்,அழுத்தம் போன்றவற்றை குறித்துகொண்டு புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

   மதியமும்,இரவும் அதுபோல் எழுதவேண்டும். இரவு ஒன்பது மணிக்கு மீண்டும் ஒருமுறை காஸ் பிளாண்டில் சென்று இயந்திரங்களை பார்த்து அளவுகளை குறித்து பதிவு செய்ய வேண்டும்.மீதமுள்ள பகல் பொழுதில் சில பராமரிப்பு பணிகள். புதிய கப்பலாக இருப்பதால் எளிய பணிகள் மட்டுமே எனக்கு.இத்தனை வருடங்கள் கடும் உடல்உழைப்பு சார்ந்த பணியில் இருந்ததால் இப்போது இது எனக்கு மிக எளிதாக இருக்கிறது.

   பனாமாவில் இருந்து புறப்பட்டது முதல் இதுவரை இருதினங்களுக்கு ஒரு மணிநேரம் என ஆறு மணிநேரம் கப்பலின் கடிகாரம் பின்னே சென்றுவிட்டது.இந்த வாரத்தில் ஒரு  நாளை முன்னே நகர்த்தி(https://kappalkaran.wordpress.com/2021/06/05/563/ காணாமல் போன செவ்வாய் கிழமைகப்பல்காரன் டைரியில்) மேலும் நான்கு மணிநேரம் பின்னே சென்று  ஆசியாவின் தீவு நாட்டை அடையும்போது  இரவு பகலாகியிருக்கும்.

  பனாமாவில் இருந்து புறப்பட்ட மறுநாளே அறையின் வெப்பம் அதிகரித்து 27 டிகிரியை எட்டியது கடல் நீர் முப்பத்தி நான்கு டிகிரியிலும்.கப்பலின் குளிரூட்டி மிக சிறியதாக இருந்ததால் குடியிருப்பின் அறைகளை குளிர்விக்க இயலவில்லை. எல்லா அறைகளிலும் மின்விசிறி இருந்தது.படுக்கைக்கு அருகில் நாற்காலியை போட்டு மின்விசிறியை அதில் கட்டிவைத்தபின் சுழல வைத்து சட்டையில்லாமல் படுத்துக்கொண்டேன்.

 


  வெப்ப பகுதிகளில் செல்லும்போது கொஞ்சம் கஷ்டம் தான் என்றார்கள். இங்கிருந்த இஞ்சினியர்கள். படிப்படியாக வெப்பம் குறைந்து ஐந்தாவது நாளே அறையின் வெப்பம் 21 டிகிரியில் சென்றதால் குளிரூட்டியை அணைத்து வைத்தேன்.பகலில் கொஞ்சமாக திறந்தாலும் பத்தொன்பது பாகைக்கு சென்றதால் நேற்று வரை அணைத்தே வைத்திருந்தேன்.

   பதினைந்து நாட்டிகல் மைல் வேகத்தில் செல்லும் கப்பல் உத்தேசமாக ஒரு நாளில் முன்னூற்றி முப்பது மைல்களுக்கு மேல் கடப்பதால் மொத்த தொலைவில்  இன்று வரை பாதிக்குமேல் கடந்துவிட்டோம். பசுபிக் கடலில் பயணிக்க தொடங்கியபின் அருகில் எங்கும் நிலமே இல்லை வட பசுபிக் கடலில்   ஆசியாவுக்கும் அமெரிக்காவுக்கும் கடலின் நடுவில் இருக்கிறது ஹவாய் தீவு இதை எழுதிகொண்டிருக்கும் போது ஹாவாயின் கோணலுலு(honlulu)    தீவிலிருந்து 370 மைல் தொலைவில் கப்பல் சென்றுகொண்டிருக்கிறது.

   நண்பர்கள் சிலர் கேட்டார்கள் இப்போது எங்கே இருக்கிறாய் என நடுக்கடலில் என்றேன்.



  கப்பலுக்கு வந்தபின் தினமும் ஒருமணிநேரம் எழுதுவது ஒருமணி நேரம் வாசிப்பது என வகுத்துகொண்டேன்.ஆனால் எண்ணியது போல் நடக்கவில்லை.சிறுகதை ஒன்று எழுதினேன்.கட்டுரை எழுதவதை போல் அது எளிதல்ல என்பதை எழுதியபின் உணர்ந்தேன். கடந்த வாரத்தின் முழு ஞாயிறையும் மற்ற நாட்களின் ஓய்வு நேரத்தின் பெரும்பகுதியையும் அது எடுத்துகொண்டது பயிற்சியின்மையே காரணம் என உணர்ந்தேன்.இனி அடிக்கடி கதை எழுத வேண்டும்.

 கப்பலின் கடிகாரம் பின்னோக்கி செல்வதால் இரவில் சீக்கிரமே தூக்கம் அழுத்துகிறது .அதிகாலை நான்கு மணிக்கே விழித்தாலும் நான் நினைத்தது போல் எழுதவோ படிக்கவோ முடியவில்லை.

இனி வரும் நாட்களில் நாட்குறிப்புகள் எழுதியும்,வாசிக்கவும் செய்ய வேண்டும்.

புதிய பணியில் கற்றுகொண்டே இருக்கிறேன்.ஒருமுறை சரக்கை இறக்கி பின்னர் சரக்கை ஏற்றும்போது போது முழுமையாக எனது பணிகளை தெரிந்துகொள்வேன்.

                ட்்

  இனி மேல் எனது  கட்டுரைகள் நாஞ்சில் ஹமீது எனவும் புனைவுகள் கப்பல்காரன் எனவும் வரும்.

  நாஞ்சில் ஹமீது.

1 comment:

  1. அருமை
    இந்த செய்திகள் வியப்பு மேலிட வாசிக்கிறேன்.

    ReplyDelete