Friday, 9 June 2023

சான்றிதழ் பிறந்தநாள்

  

           விடுமுறையில் ஊரில் இருந்தபோது டிசம்பர் மாதம் பன்னிரெண்டாம் தேதி துவங்கும் நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த என்னை இளைய மகன் சல்மான் எழுப்பினான் அருகில் மூத்தவன் ஸாலிமும்,சுனிதாவும் நின்றுகொண்டிருந்தனர்.

  சல்மானின் கையில் எரியும் மெழுகுவர்த்தியை நடுவில் குத்திய கேக் இருந்தது. ஹாப்பி பிர்த்டே என சொல்லி கேக்கை வெட்ட சொன்னார்கள். 2012 ஆண்டு வீட்டுக்கு வந்திருந்த நண்பன் ஜெகநாத நாகராஜா “ஷாகுல் 12-12-12 மீண்டும் வராது கொண்டாடுவோம் என பிறந்தாநாள் கேக் வாங்கி வந்து ஊட்டியும் விட்டார்.

  சின்ன வயதில் பிறந்தநாள் எப்போது என்றே எனக்கு தெரியாது.கேக் வெட்டியதாக நினைவேயில்லை.நான் பிறந்த மாலை வேளையை எனது தாய் பீமா கூற கேட்டிருக்கிறேன்.

 உம்மா அப்போது காந்தாரிவிளை ஓடை செய்யது அவர்களின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தாள்.நிறை மாத கர்ப்பிணியான எனது தாயை பார்த்த்துவிட்டு மருத்துவச்சி ராமலெட்சுமி பாட்டி, “மக்களே மூஞ்சிய பாத்தா நீ இன்னைக்கு பெறுவா” என சொல்லிவிட்டு ராமலெட்சுமி பாட்டி திண்ணையிலேயே அமர்ந்திருக்கிறாள். 

  எனது உம்மாவிற்கு ராமலெட்சுமி கிழவியிடம் பிரசவம் பார்க்க விருப்பமில்லை. மருத்துவச்சியும் நகர்வதாக இல்லை.தான் இன்று குழந்தையை பெற்றெடுப்பேன் என உணர்ந்த வேளையில். ராமலெட்சுமி கிழவி “பீமா நான் போய்ட்டு வாறன் நொம்பலம் வந்த சொல்லிவுடு” என கூறிவிட்டு சென்றதும்.

   என் தாய் சந்திரி நர்ஸை அழைத்துவர ஆள் அனுப்பியிருக்கிறாள். அன்று மாலை ஆறரை மணிக்கு நான் பிறந்தேன். “ரொம்ப கஷ்டபடுத்தமா நீ பொறந்தா”என தாய் சொல்வாள். அதே ஆண்டு மிக அருகிலேயே வீடு கட்டி குடியேறியதாக என் வாப்பா சொல்வர். 

  என் மகனுடன் காந்தாரிவிளைக்கு சென்றபோது இதுதான் நான் பிறந்த வீடு என அந்த வீட்டை காட்டிகொடுத்தேன். “அப்போ நீங்கோ ஆசுபத்திரியில பொறக்கலியா என” கேட்டான்.

   நான்கரை வயதானபோது மணவாளக்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளியில் என்னை சேர்ப்பதற்காக பக்கத்து வீட்டு உதவி அப்பா (நாடக உதவி இயக்குனர்) பள்ளிக்கு அழைத்து சென்றார். அப்போது ஐந்து வயது பூர்த்தியானதால் ஒன்றாம் வகுப்பில் சேர்த்து கொள்வார்கள் கையை தலைக்கு மேலே சுற்றி காதை தொடசொல்லி சோதனை செய்வார்கள்.

  அப்படி நான்கரை வயதான என்னை உதவியும்,தலைமையாசிரியர் வறுவேல் சாரும் சேர்ந்து மே இருபதாம் தேதி என புதிய பிறந்த நாளை உருவாக்கி பள்ளியில் சேர்த்தனர்.

  அப்படி பள்ளி சான்றிதழ்கள் வழியாக பாஸ்போர்ட் மற்றும் அனைத்து ஆவணங்களிலும் பிறந்தநாள் மே இருபதாம் தேதியாகிவிட்டது. 2019இல் முதல் முறையாக கப்பலில் எனது சான்றிதழ் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள்.



    இப்போது இருக்கும் இந்த கப்பலில் சென் சாம்ராஜ் என்பவருக்கு பதினெட்டாம் தேதி பிறந்தநாளாக இருந்தது.கப்பலில் காப்டன் ஆசிஸ் நய்யார்,சமையல்காரர் சிரஞ்சீவியிடம் இருவரின் பிறந்தநாளையும் ஒன்றாக கொண்டாடுவோம் என சொல்லி கேக் தயார் செய்ய சொல்லியுள்ளார்.





   இருபதாம் தேதி மாலை கப்பலில் கேக் வெட்டி,பார்டியுடன் பாட்டும் ஆட்டமும் உண்டு.வங்கி,எனது கப்பல் நிறுவனம்,நான் படித்த மரைன் கல்லூரிகள் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி அனுப்பிய மின்னஞ்சல்களால் மெயில் பாக்ஸ் நிரம்பிவிட்டது. முன்பு என்னுடன் புணிபுரிந்த எர்ணாகுளம் கோப குமார் சொல்வார்  “சாஹுலே அது ஒரு செட்டபானு ஈ திவசத்தில மெயில் தன்னே வருந்நது” என்பார்.

   மனைவி சுனிதாவிற்கும் இன்று சான்றிதழ் பிறந்தநாள். முன்னாள் பாரத பிரதமர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு நான்கு வருடங்களுக்கு (பிப்ரவரி  29) ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். யாருக்கு கிடைக்கும் இரட்டை பிறந்தநாள். 

Shahul hameed ,

20 05 2023.

2 comments: