Wednesday 30 September 2020

பயர் ஆன் தெமிஸ் லீடர்

 கப்பல் காரன் டைரி,

                                                       பயர் ஆன் தெமிஸ் லீடர்        

   

   அது 2015 டிசம்பர் கைலான் (வியத்னாம்)எனும் துறைமுகம் அருகில் நங்கூரம் பாய்ச்சி  நின்றிருந்தோம்.தெமிஸ் லீடர் எனும் கார்களை ஏற்றும் கப்பல் அது.2010ஆம்  கட்டப்பட்டது.ஐந்தாண்டுகளே ஆன புதிய கப்பல்( 14 DECK).பதினான்கு அடுக்குகளை கொண்டது.199மீ மீளமும்  32மீ அகலமும் கொண்டது.இந்த நீள,அகலம் உள்ள கப்பல்கள் தான் பனாமா கால்வாயை கடக்க இயலும் . ஒரே நேரத்தில் 6500 கார்களை இதில் ஏற்ற முடியும். கடந்த பத்தாண்டுகளில் நான் பணிபுரியும் புதிய கப்பல் இதுவே.

                                                    கப்பலின் உள்ளே கார்கள்
 

                                                   தெமிஸ் லீடர் சிங்கப்பூரில்

   எனது நண்பர் கேரளாவின் புருசோத்தமன்  நான் கடந்த ஜூலையில் நான் வரும்போது இங்கிருந்தார் .அறுபது வயது பூர்த்தியாகி கடந்தமாதம் பணி ஓய்வு பெற்றார்.

 
                                                    நண்பர் புருசோத்தமன்

  நான்  ஜூலையில் நோன்பு பெருநாளுக்கு மறுநாள் அமெரிக்காவின் பால்டிமோர் எனும் துறைமுகத்திலிருந்து இந்த கப்பலில் ஏறினேன் .அமெரிக்காவில் ஒரு மாதம் சுற்றிவிட்டு ஜப்பான் சென்றோம்.அங்கிருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன்,போர்ட் காண்ட்லா,மெல்பெர்ன் துறைமுகங்களுக்கு சென்று விட்டு (அங்கு திடீரென அடித்த காற்றில் கப்பலை கட்டி வைத்திருந்த ஆறு கயிறுகள் அறுந்ததை தனியாக எழுத வேண்டும்)மீண்டும் ஜப்பான் .அங்கிருந்து அரேபியாவின் மஸ்கட் ,தோஹா,ஜெத்தா,தமாம்,பஹரின்,துபாய் ,ஜபெல் அலி ,அபுதாபி பின் தாய்லாந்தின் லாம்ச்சபாங்  சென்றுவிட்டு  இறுதியாக கைலான்.

       

                              பட்டாயா கடற்கரை. தாய்லாந்து .



 

 

   இரு தினங்களுக்கு முன் மிக சிறப்பாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியிருந்தோம் .அன்று அது ஞாயிறு  மதியத்திற்குமேல் கப்பல் துறைமுகம்  செல்லும் என்றனர் .


                                                          கிறிஸ்துமஸ்

   


        வலது புறம் அமர்திருப்ப்வர் சீப் இஞ்சினியர்  பண்டாரே சதாசிவ்  தத்தா

  உடன் பணிபுரிந்த நண்பர் கைத்தனோ பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே ஊரில் ஆறு மாதங்கள் இருந்ததாகவும்.மிக அழகான ஊர், இங்கே அவருக்கு ஒரு தோழி இருப்பதாகவும் சொன்னார். நான் வியத்னாம் வருவது இதுதான் முதல் முறை .கப்பல் கரையணைந்ததும் வெளியில் செல்லலாம் என உற்சாக மனநிலையில் இருந்தோம்.மாலை நான்கு மணிக்குமேல் கரையணையும் என சொல்லியிருந்தனர் .

   ஞாயிறுகளில்  மதியம் பிரியாணி உண்டபின் அரை நாள் ஓய்வு கிடைக்கும்.எந்த அவசர வேலையும் இல்லை என்றால் மட்டுமே. அன்றைய ஓய்வில் அறையில் இருந்து ஆசிரியர் ஜெயமோகனின் வெண்முரசின் வெண்முகில் நகரம்  வாசித்துகொண்டிருந்தேன் .

 மூன்று மணிக்கு சற்று முன்பாக அவசரகால  மணி ஒலித்தது . அறையிலிருந்து வெளியே வந்தேன் எனது பக்கத்துக்கு அறையில்  இருந்தது போசன், கேரளாவின் குட்டி.அவர்  வாக்கி டாக்கியுடன் வெளியே வந்து “பயர் அலாரம் ,இயந்திர அறையில் தீ” என்றார்.அவசரமாக உடை மாற்றி காலனி அணியாமல் வேகமாக ஓடினேன் கப்பலின் பின்புறம் இயந்திர அறையை நோக்கி.


                                              GENERATOR

   வழக்கத்தைவிட அதிகமாக வெண்புகை புகைபோக்கியிலிருந்து வந்து கொண்டிருந்தது.படிகட்டுகளில் விரைந்தேன் இயந்திர அறைவரை  நூறுக்கும் மேற்பட்ட படிகள்.நான் இயந்திரஅறைக்குள் நுழைந்தபோது போது மூன்றாம் இஞ்சினியர் சந்தீப் ஜெனேரேட்டர்  இருக்கும் தளத்தில் நின்றுகொண்டிருந்தான். மூன்றாம் ஜெனேரேட்டரில் எதோ பிரச்னை என சைகையால் சொல்லிவிட்டு கட்டுபாட்டு அறைக்குள் சென்றான் அதிகமாக புகை வந்து கொண்டிருந்தது  .

                      சந்தீப் ,ராஜ முந்தரி ,ஆந்திரா .

   நான் ஜெனேரேட்டர் இருக்கும் தளத்தை நெருங்கும்போது மூன்றாம் ஜெனேரேட்டர் வெடித்து சிதறியது மிக பெரிய தீப்பிளம்புடன். ஜெனேரேட்டர் தளத்திலிருந்து ஒரு ஆறடி தூரத்தில் நான் நெருங்கும்போது அது வெடித்தது .மிக உயரமாக ஆக்ரோஷத்துடன்  தீ பற்றி எரியதொடங்கியது எனது கைக்கெட்டும் தூரத்தில் தீ அணைப்பான் .அதை எடுத்து இயக்கி அணைக்க முயற்சித்தேன் இயலவில்லை .



 

ஜெனேரேட்டரின் மறுபுறம் கழிவு எண்ணெய் தொட்டி அதிலிருந்த ஒரு வால்வ் ம் தீ பற்றிகொண்டது,அது வெடித்தால் மிகப்பெரிய ஆபத்து கையிலிருந்த தீயணைப்பானால் அதை அணைத்தேன் அதற்குள் கப்பலின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு  விளக்குகள் அணைந்து(black out)முழு இருளாகி   சில வினாடிகளில் மீண்டும் விளக்குகள் எரிய தொடங்கின .அழைப்பான்கள்(alarm)தொடர்ந்து அடித்துகொண்டேயிருந்தது .

               இதுதான் வெடித்து சிதறிய பகுதி
 

   என் கையிலிருந்த தீ அணைப்பான் முழுவதும் தீர்ந்துவிட்டது.கரும்புகையும் பயங்கர தீயும் என்ன செய்வது என தெரியவில்லை.மிக பெரிய தீ சிறிய அணைப்பானால் அணைக்க இயலாது என உள்ளுணர்வு சொன்னது.இயந்திர அறையை முழுமையாக பூட்டிவிட்டு கார்பன்டைஆக்சைடை திறந்துதான் அணைக்க வேண்டியிருக்குமென நினைத்தேன்.பின் புறமாக ஓடி ஸ்டீயரிங் அறையில் இருந்து காப்டனுக்கு அழைத்தேன் ஜெனேரேட்டரில் பயங்கர தீ என .பின்னர் தீயணைக்கும் தண்ணீர் குழாயை(fire hose) வால்வில் பொருத்தினேன்.இயந்திர அறையில் தீ எரிந்துகொண்டிருந்தது .

 படிக்கட்டுகளில் ஏறி ஆறாம் டெக்கில் வந்தபோதுதான் நினைவு வந்தது சந்தீப் உள்ளே மாட்டிகொண்டான். என் மனம் பதறியது.ஆறாம் டெக்கிலிருந்து நேரடியாக  கட்டுபாட்டு அறைக்கு செல்லும் செங்குத்தான ஏணியில் இறங்கி கட்டுப்பாட்டு அறையை அடைந்தேன் சந்தீப் அங்கேயில்லை கட்டுப்பாட்டு அறை கண்ணாடி வழியாக பார்த்தேன் இயந்திர அறை முழுவதும் பயங்கர புகை எதுவும் தெரியவில்லை .

   ஆபத்தை உணர்ந்து சந்தீப் எனக்கு முன்பே வெளியேறி இருப்பானோ? என எண்ணி அதே ஏணியில் ஏறி ஆறாம் டெக்கிற்கு  வந்து குடியிருப்பு பகுதிக்கு வந்து காலனியை அணிந்துவிட்டு மஸ்டர் ஸ்டேஷன்(ஆபத்து காலங்களில் அனைவரும் கூடும் இடம் ) சென்றேன் .கார்பன்டை- ஆக்சைடை திறக்கவேண்டுமேன்றால் அனைவரும் வெளியில் இருப்பதை காப்டன் உறுதி செய்தபின்தான் அதற்கு உத்தரவிட முடியும் என்னை அவர்கள் தேடிக்கொண்டிருக்கலாம் என்ற எண்ணத்தில் மஸ்டர்  ஸ்டேஷன் சென்றேன் .

  மஸ்டர் ஸ்டேஷனில் யாரும் இல்லாததால் மீண்டும் ஓடினேன் ஸ்ட்ரீயங்  அறைக்கு சென்றபோது தீ யை அணைக்க பிராண வாயு நிரப்பிய குப்பிகளை முதுகில் சுமந்தபடி இயந்திர அறைக்குள் செல்ல தாயராகி இருந்தனர். நான் சந்தீப்பை தேடினேன் .அவன் அங்கும் இல்லாதது எனக்கு அதிர்ச்சியளித்தது. அப்போதும் உள்ளே  தீ எரிந்துகொண்டிருக்கும் என எண்ணினேன்.

    இயந்திர அறையிலிருந்து ஒருவர் வெளியே வந்தார் .வந்தவர் தீ அணைந்து விட்டது என்றார் .நான் அவசரமாக உள்ளே ஓடினேன் தீ முழுவதுமாக அணைக்கபட்டிருந்தது . ஜெனேரேட்டருக்கு மேலிருந்து தண்ணீர்  ஒழுகிகொண்டிருந்தது .அதிக வெப்பத்தினால் தானாகவே இயங்கி தண்ணீரை பீய்ச்சியடிக்கும் கருவியிலிருந்து தண்ணீர் (hyper mist)ஒழுகிகொண்டிருந்தது .

 கட்டுபாட்டு அறைக்குள் சென்றபோது அங்கே முதன்மை இஞ்சினியர் பண்டாரே சதாசிவ் தத்தாவும்,சந்தீப்பும் நின்றுகொண்டு இருந்தனர். அவன் “நீ எங்கு என்றாய் உன்னை காணாமல் தவித்துவிட்டேன்”  என்றான் .

   “என்னாயிற்று எப்படி தீ அணைந்தது” என கேட்டேன். “முதன்மை இஞ்சினியர் இரண்டு தீ அணைப்பான்களை உபயோகித்து அணைத்தார்”என்றான். அவரால் எப்படி சாத்தியமாயிற்று என எண்ணினேன். .

   சந்தீப் சொன்னான்  “கடும் புகை,எதுவுமேதெரியவில்லை , அவரது கையை பிடித்து இழுத்தேன், வாருங்கள் தப்பித்து விடலாம்  என ஆனால் அவர் விடாபிடியாக பெரும் முயற்சியடன் துணிச்சலாக அதை செய்தார்”என்றான் சந்தீப்.

  இருபத்தைந்து ஆண்டு கால கப்பல் அனுபவம் உறுதியான மனம்  அவர் அதை அப்போது அணைக்கவில்லை என்றால் மிகபெரும் பொருட்சேதம் ஏற்பட்டிருக்கும் .

  முதன்மை இஞ்சியரிடம் கேட்டேன்.நான் ஓடியதும் அடுத்த பத்து வினாடிக்குள் அவர் இயந்திர அறைக்குள் நுழைந்திருக்கிறார் அது மிக சரியான நேரம் இல்லையெனில் தீ வேகமாக பரவி கட்டுபடுத்த முடியாமல் போயிருக்கும்.அவர் பலமுறை சொல்லியிருக்கிறார்  தீ பற்றி விட்டால் முதல் ஏழு நிமிடங்கள் மிக முக்கியமானவை அதற்குள் செயல் படவேண்டும் .அதாவது தீயை அணைத்தாக வேண்டும் இல்லையெனில் நம்மால் கட்டுபடுத்த முடியாது என.

வெடித்து சிதறிய ஜெனேரேட்டரின் எடை கூடிய பல பாகங்கள் வெளியே சிதறி கிடந்தது .கவுண்டர் வெயிட் ,கனெக்டிங் ராட்,பிஸ்டன் என, ஜெனேரேட்டர் தளம் முழுவதும் எண்ணெய் படலம் . நல்ல வேலையாக யாருக்கும் காயம் இல்லை .ஞாயிறு அரை நாள் ஓய்வு என்பதால் தான் அது தவிர்க்கபட்டிருந்தது. இல்லையெனில் எப்போதும் இயந்திர அறையில் பணியாளர்கள் இருப்போம் .வெடித்து சிதறிய ஜெனேரேட்டர் அருகிலேய இயந்திரஅறையின் கழிப்பறையும் இருந்தது .

                பிஸ்டன் ,கவுண்டர் வெயிட்,கனெக்டிங் ராட்

  கப்பல் கைலான் துறைமுகத்திற்குள் செல்வதற்கு உத்தரவு கிடைத்து தயாராகிகொண்டிருந்தது .நாங்கள் ஜெனேரேட்டர் தளத்தில் இருந்த எண்ணெய் படலத்தை சுத்தம் செய்ய துவங்கினோம் .தண்ணீரும் கலந்திருந்தது .


                   கப்பலில் ஏற்ற காத்திருக்கும் கார்கள்

  துறைமுகத்தில் கப்பல் கட்டப்பட்டு கார்கள் இறங்கதொடங்கியது .இரவு பத்து மணிவரை தொடர் பணி .இடையில் உணவுக்கு மட்டும் சென்று வந்தோம் .பத்து மணிக்கு முதன்மை இஞ்சினியர் பணியை நிறுத்த சொன்னார்.  ஓய்வு எடுத்துவிட்டு காலை ஆறு மணிக்கு வருமாறு அழைத்தார். கரும்புகை படிந்த சுவர்களையும்,எண்ணையும் தண்ணீரும் கலந்து  படர்ந்திருந்த தரையையும் அனைவரும் ஒன்றாய் இணைந்து  சுத்தபடுத்தினோம் .

  மறுநாள் காப்பீடு நிறுவன அதிகாரி ஒருவர் வந்து இயந்திர அறையை சோதனையிட்டு சென்றார். ஜெனேரேட்டர் முழுமையாக சேதமடைந்துவிட்டது .முழுவதும் மாற்றத்தான் வேண்டும் .ஜப்பானை நோக்கி கப்பல் மறுநாள் பயணத்தை துவக்கியிருந்தது.

   

                                                     புத்தாண்டு வந்தது
 

    அடுத்த இருதினங்களில் புத்தாண்டு,காப்டன் நடந்ததை மறப்போம் புதிய ஆண்டு எந்த இடர்களும் இல்லாமல் துவங்கட்டும் .நாம் எளிமையாக புத்தாண்டை கொண்டாடுவோம் என்றார் .

     ஜப்பானுக்கு ஜனவரி மாதம் சென்று சேர்ந்தோம் ஜெனேரேட்டர் தயாரித்த நிறுவனத்திலிருந்து உயரதிகாரிகள்,இஞ்சினியர்கள் ,காப்பீடு நிறுவனம் என பல விசாரணைகள் நடந்தது . பத்தாம் தியதி ஜப்பானின் கடைசி துறைமுகத்தில் கார்களை ஏற்றினோம் .அங்கு பணியாளர்கள் பலர் வந்து புதிய ஜெனேரேட்டர் பொருத்துவதற்கும் ,சேதமானதை கழட்டவும் உரிய வெல்டிங் வேலைகளை செய்தனர் .சேதமடைந்த அனைத்து பாகங்களுக்கும் புதிய பகாங்களை கப்பலில் ஏற்றினர் . ஜெனேரேட்டரை முழுமையாக அகற்றிவிட்டு புதியதை பொருத்தவேண்டும் என்பதே திட்டம்.

                  புதிய  ஜெனரேட்டரின் BLOC

 
                                                     புதிய உதிரி பாகங்கள்

 அடுத்து கப்பல் செல்வது அமெரிக்காவிற்கு எங்களுடன் நான்கு ஜப்பானிய பொறியாளர்கள் அமெரிக்காவரை பயணித்தனர் .அவர்கள் காலை எட்டு முதல் மாலை ஆறு மணிவரை பணி செய்தனர் .நாங்களும் அவர்களுடன் இணைந்து பணிசெய்தோம் .கப்பல் ஊழியர்களுக்கு இரவும்,பகலும் பணி இருந்தது.நல்ல குளிர் அதனால் இயந்திர அறையில் வெப்பமில்லை வியர்வையும் வராது ,அதனால் களைப்படையாமல் நீண்ட நேரம் வேலை செய்வது குளிர் காலங்களில் சாத்தியம் .எனக்கு காலை நான்கு முதல் பனிரெண்டு வரையும் பின்பு மாலை நான்கு முதல் எட்டு வரை இரண்டாம் இஞ்சிநியருடன் பணி.


                      ஜப்பானியர்கள்

  இருபத்தி ஐந்தாம் தியதி கப்பல் அமெரிக்காவை அடையும் முன் ஜெனேரேட்டர் முழுமையாக தயாராகிவிட்டது .அமெரிக்காவின் முதல் துறைமுகத்திலிருந்து ஜப்பானிய பொறியாளர்கள் ஜப்பான் புறப்பட்டு சென்றனர் .தோராயமாக ஐம்பது கோடி ஆகியது என்றனர் புதிய ஜெனெரேட்டரை நிறுவ .

 கப்பலின் இயந்திர அறையில் மூன்று ஜெனேரேட்டர் இருக்கும்.கப்பல் கரையணையும் போதும்.துறை முகப்பில் சரக்கு ஏற்றும் ,இறக்கும்போதும் மூன்று ஜெனரேட்டரும் இயங்கி கொண்டிருக்கும்.இயந்திர அறையில் உள்ள மூன்று ஜெனரேட்டரும் ஏதாவது காரணத்தால் இயக்க முடியாமல் போனால்(கடல் நீர் புகுதல்,இயந்திர அறைதீ பிடித்தல் ) அவசர காலத்திற்கு ஒரு ஜெனேரேட்டர்(EMERGENGY GENERETOR) கப்பலின் மேல் தளத்தில் இருக்கும்.

ஷாகுல் ஹமீது,

01 OCT 2020.


navication bridge or wheel house 

 





                                                   நீச்சல் குளம் 





                                              சிங்கப்பூர் நண்பர் மணிவண்ணனின் வீடு மற்றும் அருகே உள்ள முருகன் கோவில்.

6 comments:

  1. Good Article related ERP in HSE

    ReplyDelete
  2. அண்ணா பரபரப்பு ஏற்படுத்தி விட்டீர்கள்...

    ReplyDelete
  3. சுஜாதா பிரசன்னா
    சாகுல் ஒரு முழுமையான கப்பல் பயணம் சென்று வந்த உணர்வு 👍 படங்கள் அருமை 🌸

    ReplyDelete
  4. கச்சிதமான கட்டுரை

    ReplyDelete
  5. அருமையான பதிவு. துல்லியமான விபரக்குறிப்புகள்...நன்று காக்கா!

    ReplyDelete
  6. அந்த நிமிட பரபரப்பையும் துரித செயல்களையும் எழுத்தில் கொண்டு வந்து விட்டீர்கள்..

    ReplyDelete