Sunday, 27 September 2020

குண்டும் குழியும்

நாகர்கோவிலில் ஒரு ரோட்டிலும் நடந்தோ,சைக்கிளிலோ வாகனத்திலோ செல்ல முடியவில்லை. “எல்லா ரோட்டையும் பைப்பு போட தோண்டி போண்டுருக்கானுவோ எப்போ பார்த்தாலும் எதுக்காவது தோண்டிகிட்டே தான் இருக்கானுவோ,ஒருத்தன் கேபிள் போட தோண்டி,கொஞ்சநாள்ல வேற ஒருத்தன் தோன்டான். பயித்தியாற பயலுவோ தோண்டி மூடாம விட்ட குண்டுல,மூணு பேராவது விழுந்து கை,கால் முறிஞ்ச பொறவுதான் அதை மூடாவோ,வேலையை முடிக்கவோ செய்யானுவோ” என பெருசு ஒன்று புலம்பியது .

ஆம் மூன்று மாதங்களுக்கும் மேலாக பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டும் பணி துவங்கியது.எங்கும் கடும் தூசு .ஊரடங்கு காலத்தில் வாகன போக்குவரத்து குறைவாக இருந்தபோதும் எங்கும் தூசு படலம் தான் .பத்து நாட்களுக்கு முன் தோண்டி மூடியபின் செம்மண் தூசு வீடெங்கும் நிறைந்து கிடக்கிறது.

 

    கடந்த பத்து நாட்களாக மழை பெய்வதால் தூசு கொஞ்சம் குறைவு. ஆனாலும் ரோடு ,சளு,புளுன்னு கிடக்கிறது. நான் இருக்கும் வீடு சாலையிலிருந்து நூறடிக்கு மேல் தள்ளி இருந்தாலும் முழு வீடும் கடும் தூசியாக இருக்கிறது.

       எனது வீடு அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடி சாலையை விட இந்த நிலப்பகுதி தாழ்வாக இருப்பதால்.சாலையும் எனது வீடும் சமமான உயரத்தில் இருக்கிறது. வாகனங்கள் சென்றுகொண்டே இருப்பதால் அத்தனை தூசியும் வீட்டிற்குள் தான். பகலில் நான் எண்ணெய் மில்லுக்கு எண்ணெய் ஆட்ட செல்வதால் இங்குள்ள தூசியை நான் சுவாசிப்பதில்லை.ஆனால் வீட்டிலிருப்பவர்களின் நிலைமை மிக கஷ்டம். 

      எனது மாமா சொன்னார் “நம்மள எல்லாம் மனுசனாவே நெனக்க மாட்டானுவளா இந்த பயலுவோ” என. நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் இதே நிலைதான் .கடைகரர்களின் பாடு பெரும்பாடு .நண்பர் ஒருவர் மனிமேடையில் கடை வைத்துள்ளார் .தலையும்,காதும் மூடியது மாதிரி தொப்பி ஒன்றை அவரே செய்து அணிந்து அமர்ந்துள்ளார் . 

      

           வீட்டிலிருந்து புறப்பட்டால் எங்கும் நேராக சென்று விடமுடிவதில்லை .கிருஷ்ணன் கோவிலுக்கு போகவேண்டும் எனறால் .ஆனந்தா சூப்பர் மார்க்கெட்க்கு முன் சாலை திரும்பி புதுக்குடியிருப்புக்கு திருப்பி விடுவார்கள். வடசேரிக்கு போக வேண்டும் என்றால் எங்கே சாலை அடைத்து வைகபட்டுள்ளது ,எப்படி செல்வது என எதுவும் யூகிக்க முடியாது .இங்கு மணல் எடுக்க உயர்நீதிமன்ற தடை உள்ளது .எங்கும் மணல் எடுக்க முடியாது. குழாய் பதிக்க மூன்றடி பள்ளம் தோண்டினால் போதுமானது ஆனால் ஆறடிவரை தோண்டுகிறார்கள் .அந்த மணல் எங்கு செல்கிறதோ? 

     ஒழுகினசேரிக்கு செல்ல வேண்டும் என புறப்பட்டேன் .வடசேரி மேட்டில் ஒழுகினசேரி செல்லும் சாலையில் செல்ல முடியவில்லை,ஸ்டேடியம் ,கலைவாணர் கலையரங்கம் வழியாக ,தலைமை தபால் நிலையம் செல்லும் சாலையில்வந்தபோது அங்கும் தடை தட்டு தடுமாறி மணிமேடைக்கு வந்தால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி போக வேண்டிய இடத்துக்கு போய் சேர நீண்ட நேரமாகிறது .நாகர்கோவில் அப்படி ரொம்ப பெரிய ஊர் இல்லை .கோட்டார் முதல் வடசேரி ,அந்த பக்கம் ஒழுகினசேரியிலிருந்து –வடிவீஸ்வரம் ,செட்டிகுளத்தில் இருந்து மத்தியாஸ் வார்டு ,வேப்பமூட்டிலிருந்து டதி பள்ளி –மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலை அரை மணி நேரத்திற்குள் சுற்றி வந்துவிடலாம் .

ஆனால் ராமவர்மா மகாராஜா இருந்தப்போது இருந்த அதே குறுகலான சாலைதான் இப்போதும் இருக்கிறது .நூறு ஆண்டுகளில் எவ்வளவு வாகனங்கள் பெருகிவிட்டன .சாலைகள் விரியவில்லை .யாரவது சாலையை விரிக்க முயற்சி எடுத்தால் போராட்டம் செய்து தடுக்கும் அரசியல் இருக்கும் வரை ,தோண்டிய குண்டுகளில் விழுந்து கால் முறியும் அப்பாவி ஜனங்கள் தப்ப முடியாது .

நேற்று காலை ஆட்சியர் அலுவ லகம் –டதி பள்ளி சாலையில் வந்தபோது கவனித்தேன் .இரவோடு ,இரவாக அந்த சாலையை போட்டுள்ளார்கள் .மாண்புமிகு முதல்வர் எடப்பாடியார் அடுத்த வாரம் நாஞ்சில் நகருக்கு வருகை புரிவதால் இந்த தயார் எடுப்பு என அறிந்தேன் .மனதுக்குள் நினைத்தேன் மாண்புமிகு முதல்வரின் பாதம் அடிக்கடி இந்த குமரி மண்ணில் பதியட்டும் என. கொட்டும் மழையில் இரவிலும் சுசீந்திரம் அருகே சாலை பணி நடைபெறுகிறது .எத்தனை நாள் தாங்குமோ. 

ஷாகுல் ஹமீது, 

18-09-2020

No comments:

Post a Comment