அய்யன் மலை
நேற்று மாலை அய்யன் மலைக்கு சென்றிருந்தேன் .முன்பு மருத்துவமலைக்கு செல்லும்போது ஒரு குகையில் ஒரு அம்மா இருப்பார்கள்.பின்பு அந்த குகை பூட்டியிருந்தது .மீண்டும் ஒருநாள் அந்த குகை திறந்திருந்தது ஆம் அந்த அம்மா அங்கே இருந்தார்கள் .
“உங்கள காணல்ல கொஞ்ச நாளா” எனக்கேட்டேன் .
“மக்களே ஞான் இப்போ அய்யன் மலையில இரிக்கேன்,ஞாறாட்ச மாத்ரம் தான் இங்க வருவன் .புன்னார்குளம் அய்யன் மலைக்கி வாங்கோ அங்க அன்ன தானம் உண்டு” என்றழைத்தார் .
ஐந்து ஆண்டுகள் இருக்கும் அய்யன் மலைக்கு போகவே இல்லை.எனக்கு பிடித்தது மருந்துவாழ் மலை தான் .அனுமார் மூலிகை மலையை கையில் ஏந்தி பறந்து செல்கையில் பிய்ந்து விழுந்த ஒரு துண்டு தான் மருந்துவாழ் மலை என சொல்கிறார்கள்.
ஊரில் இருக்கையில் மாதம் ஒரு முறையாவது மருந்துவாழ் மலையில் ஏறிவிடுவேன்.பள்ளிவாசலில் அதிகாலை தொழுகை முடிந்து வைகறையில் எனது சுசுகி பைக்கை கிளப்பினால் கதிரேழுவதற்கு முன் பொத்தையடி மருந்துவாழ் மலை அடிவாரத்தில் இருப்பேன் .
கையில் எதுவும் இருக்காது வேகமாக ஏறி நாற்பது நிமிடங்களுக்குள் பிள்ளைதடத்தை அடைவேன் .பிள்ளை தடம் என்பது ஸ்ரீமன் நாராயண குரு தவமியற்றிய குகை,அதற்கும் மேலே ஒரு குன்று ஏறினால் அங்கே ஆஞ்சநேயர் சிலை ஒன்று இருக்கும்.ஞாயிறுகளில் அங்கே செல்லும் பக்தர்களுக்கு பிராசதமாக ஒரு மோரிஸ் பழம் கிடைக்கும்,குடிக்க தண்ணீரும்.
அதிலிருத்து ஒரு பாறையை ஏறிவிட்டால் அதுதான் மலையின் உச்சி. கடல் மட்டத்திலிருந்து ஆயிரத்தி முந்நூறு அடிக்கு மேலே நின்றுகொண்டிருப்பேன். முக்கடலும் சங்கமிக்கும் குமரி முனையை அங்கிருந்து மட்டுமே காணாமுடியும்.சுவாமி விவேகானந்தரும்,அய்யன் திருவள்ளுவரும் நின்றுகொண்டுஇருப்பார்கள். வெள்ளையாக தெரியும் மணக்குடி கோயிலில் இருந்து
ஞாயிறுகளில் பாதிரியாரின் ஜெப வார்த்தைகளை காற்று நம் காதில் கொண்டு போடும் “ஆண்டவர் நம்மோடு இருப்பாராக” என ஆமென் மட்டும் சொன்னால் போதும் .
குறிஞ்சியில் நின்றுகொண்டு,முல்லை,மருதம்,நெய்தல் நிலத்தை ஒருசேர காணக்கிடைக்கும் பாக்கியம்.அடிவாரத்திலிருந்து துவங்கும் வயல்கள் மற்றும் தென்னையோலையின் பச்சையை தொடர்ந்து எல்லையில்லாமல் நீண்டு கிடக்கும் கடல் .வலமாக திரும்பினால் பச்சையும் மலை தொடர்களும் .வடக்கில் மலைகளும் கடும் பச்சையும் .மேலே நின்றால் நாள் முழுவதும் அங்கே நிற்கதோன்றும் மன மயக்கம் வந்துவிடும்.அதற்கு ஒப்பு கொடுக்காமல் கீழே இறங்கி விட்டால் நல்லது .
முப்பந்தலை ஒட்டிய பகுதியில் மின்சாரம் தயாரிக்கும் காற்றாடிகள் ஒரு கோடியை நெருங்கிவிட்டது . குமரியின் இந்த முனைதான் இத்தனை காற்றையும் இங்கே கொண்டு வருகிறது போல . இனிமேல் காற்றாடிகள் வைக்க இங்கே இடமே இல்லை என நான் முன்பு பணி செய்த காற்றாடி நிறுவன முதாலாளி ஆறுமுகம் சொல்லி கேட்டிருக்கிறேன் .
கடந்த வாரம் கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக அய்யன் மலையில் ஒரு மூலிகை தியான மண்டபம் மும்மத ஆன்மீக தலைவர்களுடன் சேர்ந்து திறப்புவிழா அறிவிப்பை கண்டேன் .
கலப்பை மக்கள் இயக்க தலைவரின் செய்தி குறிப்பு இவ்வாறு இருந்தது மருத்துவாழ் மலையை ஒட்டிய மூலிகை மலை. இங்கு துவங்கும் மேற்கு தொடர்ச்சி மலை இமையமலையில் முடிகிறது இந்த தியான மையத்தை மக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என இருந்தது.
நேற்று மாலை அய்யன் மலைக்கு சென்றிருந்தேன்.மருத்துவமலையின் பின்புறமுள்ள பொட்டல்குளத்தில் இருக்கிறது .கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் கண்டுபிடித்தேன் அய்யன் மலையை .கொட்டாரம் ,மருத்துவமலை அருகில் வசிப்பவர்கள் யாருக்கும் தெரியவில்லை அய்யன் மலை எங்கிருக்கிறது என .
நான் செல்லும்போது அய்யன் மலையை பாதுகாக்கும் பெரியவர் தியாகராஜர் கீழே இருந்தார் .என்னை கண்டதும் அவரது மனைவியிடம் தியான மண்டபத்துக்கான சாவியை வாங்கி விட்டு மேலே ஏற தொடங்கினோம் .
பெரியவரிடம் என்னை அறிமுகபடுத்திக்கொண்டேன். “எங்க இருந்து வாறிய” என கேட்டார் .
“நாரோல்”,
“தாமசம் எங்க”
“ கிருஷ்ணன் கோயில்”
அய்யன் மலை குமரியின் சபரிமலை என பாதகை வைத்திருந்தார் .மணிகண்ட சித்தர் புலிமேல் அமர்ந்து செல்லும் சிலை ,பதினெட்டாம் படி தாண்டி ஐயப்பன் கோவில் இருக்கிறது .ஐயப்பன் கோவில் நடை சாத்தியிருந்தது. ஊரடங்கு தளர்வு அறிவித்த பின்பும் ஒரு பக்தர் கூட இல்லை. இங்கே கேளிக்கை ஏதும் இல்லை .முழுமையான தேடல் உள்ளவர்கள் மட்டுமே இந்த இடத்திற்கு வரமுடியும் என தோன்றியது ..
பெரியவர் கையில் நான்கு சாவிகளை வைத்து மாத்தி,மாத்தி திறந்து பார்த்தார் .கதவு திறக்கவில்லை .என்னை அழைத்து “துறக்க மாட்டேங்கது”என்றார் .நான் சாவிகளை வாங்கி திறக்க முயற்சித்தேன் ஒரேயொரு சாவி மட்டும்தான் பொருந்தியது எனினும் திறக்கவில்லை . “இதுக்கு இதான் சாவியா,வேற சாவி இருக்கா?”என கேட்டுவிட்டு.நான் வெளியில் நின்று தென்னை மரங்களின் அடர்பச்சையை பார்த்துக்கொண்டிருந்தேன்.
அருகில் இருந்தும் அய்யன் மலைக்கு வரவில்லையே எனும் எண்ணம் தோன்றி மறைந்தது .மருத்துவ மலையில் சந்தித்த அம்மாவை கேட்டேன் . “அவங்க கொஞ்சம் களியாம இருந்தாவோ,கொஞ்ச நாளுக்கு முன்ன மேல போயிட்டாவோ” என்றார் .
மீண்டும் மீண்டும் இருவருமாக கதவை திறக்க முயற்சித்தோம்.
“இதுதான் சாவி, இதுதான் சாவி” என உறுதியாக சொன்னார். “கப்பல் காரனுக்கு ஒரு கதவ கூட திறக்க முடியலியே” என,எனக்குள் இருந்து அந்த ஷாகுல் சொல்வது கேட்டது .
சும்மா கதவை தள்ளினேன் திறந்துவிட்டது .முதலிலேயே திறந்து தான் இருந்திருக்கிறது . ஒரு பெரிய அறை உள்ளே எந்த உருவமும் இல்லை .சுவரில் முழுநிலவுடன் வானம் பிராகசித்து கொண்டிருந்தது.
அறையின் மறுபுறமுள்ள கதவை திறக்கபோனேன். “பாத்து தொறோங்கோ காத்து தள்ளிரும்” என்றார். காற்று வேகமாக அறைந்து சென்றது கீழே வயல்களின் இளம் பச்சையும் ,கிரிவல பாதையும்,மருத்துவ மலையும்.
“மருத்துவ மலையில உள்ள அவ்வளவு மூலிகை காத்தும் இங்க தான் வரும்,இங்குன நின்னா ஒரு நோயும் வாரது” என்றார்
அறையின் வெளியே சென்று அங்கிருந்த பாறையில் அமர்ந்தோம்.
பெரியவரின் கைபேசியில் ஒரு பெண்மணி அழைத்தார் .”நான் மலையில இருக்கேன் இங்க வா”என சொன்னார் .
செல்லும் வழியில் மயில் ஒன்று |
சிறிது நேரத்தில் நடுவயதை தாண்டிய ஒரு தம்பதி வந்தார்கள்.அந்த பெண் மட்டும் எங்கள் அருகில் வந்து பெரியவரை பார்த்து சுவாமி என வணங்கினார் .
நான் தியானம் செய்வதற்காக அறைக்குள் சென்றேன் .அந்த பெண்மணியின் கணவர் மேல் சட்டையை கழற்றிவிட்டு கண்மூடி அமர்ந்திருந்தார் .நான் தியானம் கலைந்து வெளியே வரும்போது.பெரியவருடன் அந்த தம்பதியர் பேசிக்கொண்டிருந்தனர்.
“ஒரு நாலாயிரம் பேருக்கு வேலை கொடுக்க ப்ராஜெக்டாக்கும்” என்பது என் காதில் கேட்டது .இருட்ட தொடங்கியதும் .கீழே போகலாம் என்றார் .அந்த பெண்மணி பெரியவரிடம் சுவாமி “நாங்கோ,செய்யலாமா”
“உனக்கு நம்பிக்க இருந்தா செய்” என்றார் பெரியவர் .
கீழே வந்ததும் பெரியவரின் அறையில் அமர்ந்து அரை மணி நேரம் பேசிகொண்டிருந்தேன்.
அய்யன் மலை உருவாக்கம் பற்றி சொன்னார் .மீண்டும் அங்கு சில பணிகளை செய்ய பொருளுதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
மீண்டும் ஒரு நாள் அதிகாலை இங்கருந்து கதிரேழுவதை பார்க்கவேண்டும் .
கடந்த செப்டம்பர் மூன்றாம் தேதி அய்யன் மலைக்கு போயிருந்தேன் .
ஷாகுல் ஹமீது ,
09 sep 2020
No comments:
Post a Comment