சக்குரா மலர்கள்.
விடுமுறையில் இருந்த நாட்கள் முதல் முறையாக நினைவுக்கு வரவேயில்லை. மூன்றரை மாதத்திற்குப்பின் எனெர்ஜி ஒர்பஸ் எனும் கப்பலில் இணையசொல்லி அழைத்தார்கள்.
நான் 2016 இல் பணிபுரிந்த கப்பல். கப்பலிலிருந்து ராமநாதபுரத்தை சார்ந்த பெசில் அழைத்து கிரிக்கெட் பேட் இரண்டு வாங்கிவரச்சொன்னார். கொச்சி அலுவலகத்திலிருந்து மும்பை வழியாக சிங்கைக்கு பயணம். இரவு பதினோரு மணிக்கு மும்பையிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் ஏறியதும் டூ நாட் டிஸ்டரப் ஸ்டிக்கரை இருக்கையில் ஓட்டிவிட்டு தூங்கிவிட்டேன்.உணவுக்காக விமான பணிப்பெண்கள் என்னை எழுப்பவே இல்லை.
சிங்கையில் இறங்கியோது கப்பல் தாமதமாகிவிட்டதால்.ஹோட்டலுக்கு அனுப்பினார்கள். குளித்து காலை உணவுக்குப்பின் கால் நடையாக நகரை சுற்றிவந்தேன். மதிய உணவுக்குப்பின் தூங்கி எழுந்ததும் மாலையில் படகில் ஏற்றி கப்பலுக்கு கொண்டுவிட்டார்கள்.
சன்னி கிரீனில் என்னுடன் இருந்த இரண்டாம் இஞ்சினியர் அபிஷேக் பானர்ஜி இங்கும் இருந்தார். நான் விடுவித்த கேரளாவின் தினேசை முன்பே கொச்சி அலுவலகத்தில் சந்தித்துள்ளேன். கப்பலில் இணைந்தபோது அறை,குளியலறை மிக சுத்தமாக பேணப்பட்டிருந்தது. இரண்டாம் இஞ்சினியரிடமும் சொன்னேன் “ஸார் கேபின் ரொம்ப கிளீன் ஆ இருக்கு”
“ஆம் நாலஞ்சி நாளாவே நாலு மணிக்கே இஞ்சின் ரூம்ல இருந்து கேபின் கிளீன் பண்ணனும்னு சீக்கிரமே அறைக்கு சென்றான்” என.
தினேசுக்கு வாடசப்பில் செய்தி அனுப்பினேன் அறை சுத்தமாக இருந்தது நன்றி என.
தினேஷ் பதிலனுப்பியிருந்தார் “சேட்டா ஞான் கப்பல்ல கேறிய ஆத்தியத்த திவசம் முறில கிடந்தொறங்காம் பற்றுல்லா அதுகொண்டு ஞான் கொடுக்கும்போ விர்த்தியாயிட்டு கொடுக்கணும்னு தீர்மானிச்சு”
கப்பலிலிருந்து இறங்கும்போது சிலர் அறையை அசுத்தமாக விட்டுசெல்வர். முறையாக பேணப்படாத அறையில் முதல் இரவு தூங்குவது மிக கடினம்.அப்படி எனக்கும் சில சிலமுறை கிடைத்துள்ளது.
ஜப்பான் சென்றபோது வெளியே செல்லும் வாய்ப்பு கிட்டியது. உடன் பணிபுரியும் பத்திசாப் திலோச்சன் சிங், பிலிப்பினோ மாலுமி மைக்கேல்,மற்றும் மூன்றாம் அதிகாரியுடன் வெளியே சென்றோம். ரயிலேறி சற்று தள்ளியிருந்த வணிகவளாகத்திற்கு சென்றோம்.சர்வதேச விமான நிலையத்தை போல பராமரிக்கபடுகிறது.ஜப்பானின் சுத்தம் குறித்து முன்பே எழுதியிருக்கிறேன்.
கப்பல் பணியில் இணைந்தபின் 2006 ஆண்டு முதல் ஜப்பானுக்கு வந்துகொண்டே இருக்கிறேன்.இங்கே கோடையில் பூக்கும் சக்குரா பூவை பார்க்கும் வாய்ப்பே கிடைக்கவேயில்லை. இம்முறை துறைமுகத்திலிருந்து வெளியேறும் முன்பே சக்குராமலர்களை கண்டேன். அதை உறுதி செய்வதற்காக அங்கே வாழும் நண்பர் எழுத்தாளர் செந்தில்குமாரை அழைத்தேன். அவர் அதை உறுதி செய்ததோடு “ஷாகுல் சக்குரா பூக்கள் ஒரு வாரம் தான் இருக்கும் பின்னர் சிறு தூறல் விழும்போதே உதிர்ந்துவிடும்,உங்களுக்கு அதை காண்பதற்கான நல்ல வாய்ப்பு இது”என்றார்.
தெருக்களை மூடி சக்குரா
மலர்களை நிறைந்து இருந்த பாதையில் இருந்த சிமென்ட் நாற்காலிகளில் வெகுநேரம்
அமார்ந்திருந்தோம். வேறு பூக்களும் நிறைவே பூத்திருந்தன. அங்கிருந்த சிறுகடை
ஒன்றில் சக்கரைவள்ளி கிழங்கும் வாங்கினேன்.
இருபத்தியைந்து ஆண்டு பழைமையான கப்பல் ரிப்பேர் டீம் பிட்டர் ராம் பாபு,அவருக்கு உதவியாக பண்டிட் என ஒருவரும் ட்ரை டாக் பணிகளுக்காக வந்தனர்.எனெர்ஜி ஒர்பஸ் இரு மாதத்திற்குப்பின் சைனாவில் ட்ரை டாக்கில் நிறுத்தப்பட்டது. ஜப்பானில் ஒரு கப்பலுக்கு ஆகும் செலவில் இங்கே மூன்று கப்பல்களை ட்ரை டாக் செய்ய முடியும்.அதனால் ஜப்பானிய முதலாளிகள் இப்போது தங்களது கப்பல்களை சைனாவுக்கு அனுப்புகிறார்கள்.
சைனா ஐரோப்பாஅளவிற்கு வளர்ந்த நாடு. இங்குள்ள உள் கட்டமைப்புகள் பொது சுகாதாரம்,பொது இடங்களின் தூய்மை என. ட்ரை டாக்கில் கப்பலில் என்ன வேலைகள் செய்யப்படும் எனபதை மிக விரிவாக முந்தைய கட்டுரைகளில் எழுதியுள்ளேன்.
இரு தினங்களுக்கு ஒருமுறை வெளியே சென்று வந்தோம். மலிவான விலையில் காலானிகள்,துணிகள் வாங்கினோம். ட்ரை டாக்கின் வாயிலின் வெளியே நிறைய உணவு கடைகள் இருந்தன. பெரும்பாலும் யாரும் இங்கே ஆங்கிலம் பேசுவதில்லை. கூகிள் மொழிபெயர்ப்பு உதவியில் உலகையே வலம்வரலாம்.நண்பர்கள் பெரும்பாலும் சீன சிம் கார்டு வைத்திருந்தனர்.
டாக் வாயிலை ஒட்டிய கடையிலிருந்த இளம்பெண்ணொருத்தி சுமாரான ஆங்கிலம் பேசுவாள். டாலருக்கு நல்ல எக்ஸ்சேஞ் விலையும் அவளிடம் கிடைக்கும்.(ஒரு அமெரிக்க டாலர் ஆறு சீன யுவான்) கப்பல்காரர்கள் அவளிடம் வேண்டிய தகவல்களை பெற்று செல்வோம்.
நண்பர் ஒருவர் அவளை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அவள் சொன்னாள் உங்கள் ஊரில் பெண்களை கற்பழித்து விடுவார்களாமே என கேட்டாள்.
யாரோ தவறான தகவலை சொல்லியிருக்கிறார்கள் என நண்பர் பெசில் சொன்னதும் அவள் “நான் செய்திதாளில் படித்தேன்,தில்லி அருகே ஆசிபா எனும் பள்ளிசிறுமியை ஆறுபேர் கொண்ட கும்பல் கற்பழித்ததை நான் வாசித்தேன்”என்றாள்.
“இங்கே நள்ளிரவு நான் தனியாக செல்லமுடியும், இந்தியாவில் சாத்தியமா”என கேள்வி எழுப்பினாள்.
டாக்கை ஒட்டிய சாலையோர கடைகள் அனைத்திலும் பீர்,மது வகைகள் விற்பனை செய்யபடுகிறது. டாக் தொழிலாளார்கள் அங்கே அமர்ந்து மிதமாக குடித்துவிட்டு உணவுண்டு செல்கின்றனர். ஒரு நாளும் எந்த பிரச்சனையை நாங்கள் கண்டதே இல்லை.
அதன் பின் அந்த பெண்ணை சந்திப்பதே தலைகுனிவாக உணர்ந்தோம்.உலக அரங்கில் நாம் தாய்நாடு எப்படி பேசப்படுகிறது என்பதும் புரிந்தது.
சமூக வலைத்தளங்களில் டூப்ளிகேட்=சீனா என பரப்புகிறார்கள்.சீனாவில் நாம் கொடுக்கும் பணத்திதிற்கு தகுந்தமாதிரி பொருள் கிடைக்கும். உதராணமாக ஒரு தரமான பேரிங்க் ஐம்பது டாலர் என்றார். தரம் குறைந்த பேரிங்க் பத்து டாலரிலும் வாங்கலாம். பணத்திற்கு தகுந்தமாதிரி பொருளின் தரம் இருக்கும். நான் வாங்கிய காலணிகள்,துணிகள் நீண்ட காலம் உழைத்தது.
ட்ரை டாக்கில் வெல்டிங் மற்றும் பிற பணிகளுக்கு பெண்கள் நிறையே வேலைக்கு வருகிறார்கள். பெண் என்பதால் எந்த சலுகையும் இல்லை. ஆணுக்கு நிகராக அவர்களும் பணிசெய்கிறார்கள்.
மூன்று வாரங்கள் ட்ரை டாக் முடிந்து எங்கள் கப்பல் பயணத்திற்கு தயாராகியது. காப்டன் ஆசுதோஷ் கவுல் என்பவர் புதிதாய் எங்கள் நிறுவனத்தில் இணைந்து எனெர்ஜி ஒர்பசில் பொறுப்பை ஏற்றுகொண்டார்.
நாஞ்சில் ஹமீது,
27 nov 2025.
sunitashahul@gmail.com
தொடர்புடைய பதிவுகள்



























