Wednesday 19 June 2024

முழுமையாக கண்ட ஜிப்ரேல்டர்

 


      இரவில் நண்பர் ஒருவன் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். அண்ணா அந்த மலையில் ஏறி விட்டீர்களா எனக்கேட்டு. 

   காலையில் விழித்து நண்பர்களிடம் சொன்னேன் மலைமேல் செல்ல வாகனம் செல்கிறது கட்டணம் செலுத்தவேண்டுமென. தயங்காமல் போகலாம் என்றனர்.



      இரண்டாவது  நாள் நாங்கள் சாலையில் பராக்க பார்த்துக்கொண்டு நடக்கும்போது ஸ்பெயின் எல்லையை தாண்டி வந்த ஒருவன் எங்களிடம் மலை மேல் செல்லும் விளம்பர பேனரை காட்டி “இங்கே எப்படி செல்வது” எனக்கேட்டான். “நாங்கள் இவ்வூருக்கு புதுசு” என்றோம்.



   டவுன் டவுண் எனச்சொல்லும் கடைவீதியிலே மலை மேல் செல்லும் வாகனமும்,நின்றுகொண்டிருந்தது. செயின்ட் மைகேல் குகை,ஐரோப்பா முனை,ஸ்கை வாக் என விளம்பரத்தை பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்கர்களை  வழிகாட்டி ஒருவர் தெளிவான ஆங்கிலத்தில் பேசி ஆள் சேர்த்துக்கொண்டிருந்தார். அவரே வாகன ஒட்டி. இருபத்தியிரண்டு யூரோ கட்டணம், போய் வ


ர வண்டிக்கு பதினெட்டு நாற்பது யூரோ. மொத்தம் இரண்டு மணிநேரம் ஆகும் என்றான்.

    ஒத்துக்கொண்டு வண்டியில் எறிக்கொண்டோம்.  Europa பாயிண்ட் எனும் இடத்தில் முதல் நிறுத்தம். சவுதி அரேபிய மன்னர் கட்டிகொடுத்த பள்ளிவாசல் ஒன்று இங்கே இருக்கிறது அவரது பெயரிலேயே கிங் பஹத் மஸ்ஜித் என. அட்லாண்டிக் மற்றும் மத்தியதரை கடலிலிருந்து ஜிப்ரேல்டர் வழியாக ஆண்டு தோறும் ஏராளமான பறவைகள் இடம் பெயர்கின்றன அதை விளக்கும் ஒரு படமும். கப்பலோட்டிகளுக்கு வழிகாட்ட ஒரு கலங்கரை விளக்கமும் இருந்தது. கொஞ்சம் உயரதிற்கு வந்துவிட்டோம் இங்கிருந்து ஜிப்ரேல்டர் துறைமுகமும், கடலையும் வேறொரு கோணத்தில் பார்க்க முடிந்தது.

   செயின்ட் மைக்கேல் குகையை பார்த்தபோது இந்த ஜபல் தாரிக் மலை (gibreltar) பல ஆயிரம் ஆண்டுகள் கடலுக்குள் இருந்திருக்க வேண்டும் என தோன்றியது ஆசிரியர் ஜெயமோகனிடம் எனது ஐயத்தை கூறியபோது அப்படி நிச்சயமாக இருந்திருக்கும் என்றார். இந்த மலைமீது இருக்கும் குகைகள் இரண்டாயிரம் ஆண்டுகளாக ராணுவதிற்கு ஆயுதங்கள் வைக்கவும், மருத்துவமனையாகவும் உலக போர்களில் பயன்டுத்தபட்டுள்ளது. மலையின் கீழ் இரண்டாவதாக ஒரு குகை பாதையை உருவாக்க வேண்டி ராயல் இஞ்சினியர்கள் தோண்டிய போதுதான் இந்த அழகான குகையை கண்டுபிடித்துள்ளனர். இது எதிர்பாராமல் நடந்த விபத்து என்றே குறிக்கப்பட்டுள்ளது.

 உள்ளே சென்றதும் மங்கிய இருளில் கொஞ்சம் பயந்துதான் போனேன்.எங்கோ பாதாள அறையில் இறங்குவது போலிருந்தது. தலைக்கு மேலே முள்ளம்பன்றி போல் வரிசையாக அடுக்கப்பட்ட ஊசிக்கற்கள், இயற்கையாக செதுக்கப்பட்டவை போன்ற மிக அழகான பாறைகள் வெள்ளை, மற்றும் பல நிறங்களில் இருந்தது.மனிதனால் இந்த அழகிய வேலைப்பாடுகளை உருவாக்கவே முடியாது என அப்போது உணர்ந்தேன்.  உள்ளே நாற்பது மீட்டர் அகலத்தில் பளிங்குபோல தெளிவான ஒன்றரை லட்சம் லிட்டர் நன்னீரும் இருந்துள்ளது. இது இருபதாயிரம் ஆண்டுகளாக மூடியே இருந்திருக்க வேண்டும் என நம்புகின்றனர்.

    கொஞ்சம் இடத்தை வெட்டி தட்டையாக்கி அதில் நாற்காலிகள் போட்டு பார்வையாளர்கள் அமர்ந்தபின். அந்த செதுக்கு ஊசி பாறைகள் மேல் வண்ண,வண்ண வெளிச்சம் பாய்ச்சி(light show) காட்சி ஒன்றை காட்டுகிறார்கள். அதன் அழகில் மயங்கி நின்ற ரைமுண்டோ  “பைசா வசூல்” என்றார்.இயற்கை 

    அதன் ஸ்கை வாக் ஒரு பாறை உச்சியில் கண்ணாடி பாலம் அமைத்திருக்கிறார்கள்.கால்கள் கூச,வயிறு கலங்கி அதில் நடந்து ஒரு பீதியுடன் வெளியேறினேன். அங்கிருந்து பார்க்கையில் கடலின் ஒரு பகுதியில் கற்களை போட்டு அலைகளை தடுத்து மணலை பரப்பி செயற்கையாக கடற்கரையை உருவாகியிருந்தார்கள் பார்க்க நீச்சல்குளம் போல காட்சியளித்தது. (ஜிப்ரேல்டருக்கு ஒரு கடற்கரையும் இருக்கு)

    இறுதியாக மலையுச்சியின் குகைகளுக்கு சென்றோம். ராணுவ மருத்துவமனையும், ஓய்வெடுக்கும் அறைகளும், தளவாடங்கள்,போர்கருவிகள் வைக்கும் இடமாக பயன்படுத்தியுள்ளனர். முழு மலையையும் குடைந்து பாதைகள் அமைத்து காற்று வருவதற்கு ஜன்னல்கள் உருவாகியுள்ளனர்.ஒரு பகுதியிலிருந்து குடைந்து மலையின் அனைத்து திசைக்கும் சுரங்கபாதை அமைக்க எத்தனை வருடங்கள்,எவ்வளவு மனித ஆற்றல் செலவாகியிருக்கும். பிரபுல் “இவனுவளுக்கு வேற வேலையே இல்ல போல”என்றான். ஒரு திசையில் மத்தியதரை கடலும்,இன்னொரு முனைவிளிம்பில் எனது விடுதி,விமானநிலையம் ஓடு பாதை,வேறொரு திசையில் அட்லாண்டிக் கடல்,மற்றுமொரு சுரங்க முடிவில் டவுன் டவுண் கட்டிடங்கள் என பார்க்க முடிந்தது. எனது விடுதியறையிலிருந்து பார்த்தபோது மலையில் தெரிந்து சிறு துவாரங்கள் அங்கே எப்படி உருவாயிற்று யார் இந்த செங்குத்தான மலையில் ஏறி சென்றிருப்பார்கள் எனும் கேள்விக்கு விடையும் கிடைத்தது.


              நாங்கள் வண்டியில் செல்லும்போதே விமானம் ஒன்று தரையிறங்க வந்துகொண்டிருந்தது. மலையிலிருந்து அதை காண்பது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் தெளிவாக தெரியும் இடத்தில் நான் வண்டியை நிறுத்துகிறேன் என்றார் ஓட்டுனர். ஆனால் சாலை பராமரிப்பு வண்டி ஒன்று அங்கே திரும்பிகொண்டிருந்ததால் எங்களால் விமானம் தரையிறங்கும் காட்சியை காண முடியவில்லை.

   மலைக்குள் குகையில் இருக்கும்போது விமானம் மேலெழும்புவதை கண்டோம்.  ஓட்டுனர் திரும்பிவருகையில் நடக்க இயலுமாயின் நடந்தே வாருங்கள் அது ஒரு நல்ல அனுபவத்தை தரும் என்றார். எங்களுடன் வந்த வயதான அமெரிக்கர்கள் வண்டியில் சென்றார்கள். நாங்கள் மூவரும் மலையிச்சியில்  இருந்து குகைகளை கண்ட பின் நடந்தே கீழிறங்கி வந்தோம்.

 பாறைகளிலேயே வீடுகளும் முடிவில் கடை வீதியும் இருந்தது.வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வந்து ஒரு பெண்மணி மலைப்பாதையில் தனது இருசக்கர வண்டியை நிறுத்திவிட்டு பாறைகளில் வெட்டபட்டிருந்த படிக்கட்டுகளில் சிரமப்பட்டு இறங்கிகொண்டிருந்தாள். மனமிரங்கிய பிரபுல் ஒரு பையை தூக்கி கொண்டு வீட்டு வாசல் வரை கொண்டு கொடுத்துவிட்டு வந்தான்.

ஒரு ஊருக்கு சென்றால் அதன் ஒரு சிறு பகுதியை மட்டுமே நாம் காண்போம். ஜிப்ரேல்டார் எனும் இந்த ஒரு நாட்டை நாங்கள் முழுமையாக சுற்றி பார்த்தோம் என உறுதியாக சொல்வேன்.

 களைத்து விடுதிவந்து சேர்ந்து குளித்து ஓய்வெடுத்து இரவுணவுக்குப்பின் ரைமுண்டோவிடம் கேட்டேன். “இன்னும் ஒரு இடம் மட்டும் பாக்கி இருக்கிறது நாம் பார்க்காதது” என. “செல்வோம்” என்றார். 

 கடை வீதி,உணவகங்கள், மிதக்கும் உல்லாச கப்பல் வடிவில் கட்ட பிரமாண்ட கட்டிடம். வரிசையாக நிறுத்திவைக்கபட்டிருந்த ‘யாட்ச்கள்’ வங்கிகள், ஷேர் மார்கெட் கட்டிடம் என பார்த்தோம்.அந்த இரவிலும் கால்பந்து போட்டி நடந்துகொண்டிருந்த மைதானத்தில் நுழைந்து காலரியில் அமர்ந்து சிறிது நேரம் போட்டியை கண்டோம். ரைமுண்டோ முன்னாள் கால்பந்து வீரர். ரோடு போன போக்கில் எங்கெல்லாமோ நடந்தோம்.இறுதியாக மலையுச்சியில் தெரிந்த விளக்கொளியை அடையாளம் வைத்து விடுதி இருக்கும் திசையை கணித்து நடக்க தொடங்கினோம்.

  ஜிப்ரேல்ட்டரை முழுமையாக கண்டுவிட்டோம் எனும் அக மகிழ்வில் நடந்து களைத்து விடுதியை அடைந்தோம். மறுநாள் காலை பத்தரை மணிக்கு புறப்பட வேண்டும். லண்டன் வழியாக மும்பை- திருவனந்தபுரம் செல்ல விமான டிக்கெட்டுகள் வந்திருந்தது. ரைமுண்டோ கோவாவிற்கும்,பிரபுல் மும்பைக்கும்.

05 feb 2024.

நாஞ்சில் ஹமீது.

Tuesday 18 June 2024

மிகக்குறுகிய பயணங்கள் .

 

நீ.....ண்...........ட  பயணம் என ஒரு பதிவு எழுதியிருந்தேன். யார் கண் பட்டதோ. அமீரகத்தின் தாஸ் தீவில் மே மாதம் ஐந்தாம் தேதி கரையணைந்து ஆறாம் தேதி பின் மதியம் சரக்கு நிறைக்க துவங்கி எழாம் தேதி புறப்பட்டு பன்னிரெண்டாம் தேதி இந்தியாவின் சூரத் அருகிலுள்ள ஹசிராவில் சரக்கை இறக்கினோம்.

தாஸ் தீவு இரவில் 


ஒரு முறை சரக்கு ஏற்றி இறக்க மட்டுமே கப்பலை வாடகைக்கு எடுத்தது ஒரு நிறுவனம். எங்களது எல் என் ஜி கப்பலில் சரக்கு நிறைத்தால் குறைந்தது இருபத்தியைந்து நாட்கள் பயணித்து வேறொரு நாட்டில் சரக்கை கொடுப்போம். அதாவது மாதத்தில் ஒரு துறைமுகம் அல்லது  இரண்டு. மீதி நாட்கள் கப்பல் ஓடிக்கொண்டே இருக்கும். எங்களது பணியும்,கப்பல் வாழ்க்கையும் அதிக சிரமமில்லாமல் நகர்ந்துகொண்டிருக்கும்.

  பதிமூன்றாம் தேதியே  கப்பல் ஹசிரா விட்டபின் வேறொரு நிறுவனம் விரைந்து தாஸ் தீவுக்கு வர சொன்னது தாஸ் தீவில் கப்பல் கரையணைந்தது முதல் கப்பலுக்கு அவர்கள் வாடகை தரத்தொடங்குவார்கள். மே மாதம் பதினேழாம் தாஸ் தீவில் சரக்கை நிரப்பிவிட்டு  பத்தொன்பதாம் தேதி  புறப்பட்டு நான்கு நாள் பயணத்திற்குப்பின் மீண்டும் ஹசிராவை அடைந்தோம்.

  இருபத்தியைந்தாம் தேதியே மீண்டும் புறப்பாடு. ஒவ்வொரு துறைமுகத்திற்கும் இடையில் மிகச்சிறிய இடைவெளிகள். அதிக பட்சமாக நான்கு பயண நாட்கள். கப்பல் காரனுக்கு வேலை மிக கடுமையாகிவிட்டது. துறைமுகம் செல்வதற்கு முன்னால் பாதுகாப்பு ஒத்திகைகள், சரக்கு தொட்டிகளை தயார் செய்தல்,எல் என் ஜி திரவ குழாய்களில் காஸ்கட் மாற்றுதல்,சரக்கு தொட்டி மற்றும் குழாய்களின் வால்வுகளை இயக்கி பார்த்தல், டெக் பணியாளர்கள் கப்பல் கரையில் கட்டப்படும் கயிறுகளை தயார் செய்து வைத்தல், கப்பலை உப்பு பிசுக்கு இல்லாமல் கழுவி சுத்தபடுத்தல்.

  கரையணையும் முன் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் நேவிகேஷன் அதிகாரியுடன் கண்காணிப்பில் ஒருவர் அதிகமாக இருத்தல். இயந்திர அறையிலும் தானியங்கி சிஸ்டதிலிருந்து மாற்றி இரவும் பகலும்  இருவர் பணியில் இருப்பது. பைலட் மற்றும் கரையில் வரும் அதிகாரிகள் தங்கும் அறையை சுத்தப்டுத்தல். கரையில் இருக்கும்போது நடக்கும் ஆய்வுகளுக்கு கப்பலை தயாராக வைத்தல் இப்படியாக  சனி,ஞாயிறு என பாராமல் எப்போதும் வேலை, வேலை, வேலை ஓடி ஓடி அனைவரும் களைததுவிட்டோம். அதாவது மாதத்தில் ஒரு முறை செய்ய வேண்டிய வேலையை ஆறு முறை செய்யவேண்டிய கட்டாயம்.

  மே மாதம் இரண்டாம் முறையாக ஹசிராவிலிருந்து புறப்பட்டு தாஸ் தீவுக்கு நான்கு நாட்களில் சென்று சேர்ந்தாலும் கப்பல் கரையணைவில்லை. துறைமுகத்தில் சில பழுதுபார்க்கும்பணிகள் நடந்துகொண்டிருந்ததால். துறைமுகம் எப்போது அழைத்தாலும்  செல்லும் வகையில். தாஸ் தீவுக்கு இரண்டு மணி நேர பயண தூரம் இருக்கையில் கப்பலை வட்டமடித்து கொண்டிருந்தோம்.

  முப்பத்தி ஒன்றாம் தேதி உள்ளே வாருங்கள் என செய்தி வந்ததும் போய் சரக்கை நிரப்பினோம்  ஜூன் மாதம் ஐந்தாம் தேதி குஜராத்தின் பரூச் அருகிலுள்ள தகேஜ் என்னுமிடத்தில் துறைமுகம். இங்கே கடுமையான நீரோட்டம் காரணமாக கப்பலை கரையில் கட்டும் கயிற்றின் நுனியில் இருக்கும் வட்டத்தின் நீளம் இருபத்தியிரண்டு மீட்டர் வேண்டும் என்றார்கள்.  முன்பும் பின்பும் மொத்தம் இருபத்திமூன்று கயிறுகளின் நுனியை ஐந்துபேர் கொண்ட குழு ஒரே நாளில் மாற்றி சோர்வடைந்து சாய்ந்தது.ஜூன் ஆறாம் தேதி கடுமையான நீரோட்டம் கொண்ட தகேஜ் துறைமுகப்பில் மிக கஷ்டப்பட்டுத்தான் கப்பலை கட்ட முடிந்தது.

   இப்படியாக மே ஆறாம் தேதி முதல் ஜூன் ஆறுக்குள் ஆறு முறை கரையில் கப்பலை கட்டி சரக்கை கையாண்டோம்.மே மாதம் அரபிக்கடல் கடுமையான கோடை வெள்ளி உருகுவது போல வெயில் இறங்கும் வெப்பத்தால் கடல்நீர் உருகி மேலெழும் நீராவியின் வெப்பமும்.  .தலையிலிருந்து கழுத்து வரை வெள்ளைத்துணியால் கட்டி கண்களுக்கு கறுப்பு கண்ணாடியும் அணிந்தோம். தண்ணீரும்,எலுமிச்சை உப்பு,சீனி கலந்த பானம்,மோர் குடித்து தகிக்கும் வெயில் நாட்களை சமாளித்தோம்.

    இப்போதும் தாஸ் தீவில் கடந்த பதினொன்றாம் தேதி சரக்கு நிரப்பிவிட்டு  தகேஜ் நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறோம். பதினேழாம் தேதி கரையணைவோம். அடுத்து எங்கு செல்வது என இதுவரை தகவல் இல்லை. மிகக்குறுகிய பயணத்தில் தேதி, கிழமை நினைவில்லாமல் போனதில் ஒரு மாதம் விரைவாக ஓடிவிட்டது.

Dahej (gujrat)


  நாஞ்சில் ஹமீது,

16  june 2024.

ஜிப்ரேல்டர் எங்கே இருக்கிறது.


 

       தூங்கி எழுந்து  அதிகாலை தொழுகைக்குப்பின் இன்றும் கடற்கரைக்குப்போனேன்.காலை உணவுக்கு சென்றேபோது வரவேற்பறையில் எங்களுக்கு எந்த செய்தியும் இல்லை. முகவரை அழைக்க சொன்னோம். பதினோரு மணிக்கு மேல் தான் இங்கே அழைப்பது வழக்கம் என்றார். வரவேற்பறையில் இருந்த லூசி. 

  லூசி நேற்றிரவும் பணியில் இருந்தாள். தான் ஸ்பெயினில் வசிப்பதாகவும். தினமும் இங்கு வந்து போவதாகவும் தன்னை போல தினமும் பத்தாயிரம் பேர் ஸ்பெயினிலிருந்து இங்கு பணிக்கு வந்து செல்வதாக சொன்னாள். இங்கே சம்பளம் கொஞ்சம் அதிகம் என்றாள்.

  நான்காவது மாடியிலுள்ள என் அறையிலிருந்து படிக்கட்டுகள் வழியாக இறங்கும்போது விடுதியின் பின்புறமுள்ள மயானமும்,விமான ஓடுதளமும்,கடலும் காட்சியளித்தது.அதை லூஸியிடம் சொல்லி எனக்கு முன் பக்க அறையின் கண்ணாடி ஜன்னல் வழியாக பார்த்தல் ஓங்கி உயர்ந்த ஜிப்ரால்டார் மலையின் சிறு பகுதி தெரிவதை சொன்னபோது. “ நீ அதிர்டசாலி முன் பக்க அறை கிடைத்தது. பாறை தெரிவது பரவாயில்லை, பின்புற அறையில் இருந்தால் இரவில் ஆவிகளை பார்க்கும் வாய்ப்பு உனக்கு கிடைக்கும்” என மஞ்சள் நிற பற்கள் தெரிய சப்தமாக சிரித்தாள். 


   காலை உணவு முடிந்து வெளியே சென்றோம் நேற்று சென்ற திசைக்கு எதிர் திசை இன்று. விமான நிலையத்தின் ஓடு பாதைக்குள் புகுந்து மறுபுறம் சென்றோம். ஓடு பாதையில் நின்று படம் எடுத்துக்கொண்டோம்.விமானம் இறக்கும் பாதையில் நடந்து செல்வது ஒரு கிளர்ச்சியை தந்தது. மறு புறம் ஸ்பெயின் எல்லை உரிய ஆவணங்கள் இருப்பவர்கள் ஸ்பெயின் நாட்டிற்குள் செல்கிறார்கள். விமான நிலையத்தை சுற்றி இடுப்பளவு கம்பி வேலி அமைத்திருக்கிறார்கள். நாட்டின் எல்லை அதுதான்.கண்காணிப்பு காமிரா மூலம் கண்காணிப்பார்கள் போல. ஸ்பெயின் – ஜிப்ரால்டர் கடற்கரையும் அதேயளவு கம்பி வேலியிட்டு உள்ளனர்.

Runway 


   விமானம் ஒன்று தரை இறங்கியது ஓடு பாதையின் இருபுறம் மூடப்பட்டு காவலர்கள் பாதுகாத்தனர். மீண்டும் பாதை திறந்தபின் மக்கள் செல்ல அனுமதித்தனர். வாகனங்களுக்கு அனுமதியில்லை.மதியம்வரை சுற்றிவிட்டு விடுதிக்கு வந்தபோது மேலும் இருதினங்கள் காத்திருக்க சொல்லி தகவல் வந்திருப்பதை வரவேற்ப்பறை பெண் சொன்னாள்.

    ஜிப்ரேல்டர் எங்கே இருக்கிறது மத்தியதரைக்கடலில் ஸ்பெயினுக்கும், மொராக்கோவுக்கும் இடையில் உள்ள பகுதி. பிரிட்டனின் ஆளுமைக்கு உட்பட்டது. பிரிட்டனின் கவர்னர் ஆட்சி புரிகிறார்.எல்லா வரலாற்றையும் போல் இங்கும் சண்டையும் உயிர்பலியும் ஏராளமாக நடந்துள்ளது. இஸ்லாமிய மன்னர் தாரிக் பின் சயீத் என்பவர் பெயரால் ஜபல் (மலை) தாரிக் என இருந்த இங்குள்ள மலையின் பெயரால் பின்னர் இப்பகுதி ஜிப்ரால்டர் என பெயர் பெற்றுள்ளது. முன்பு இந்த மலை ஜபல் மூஸா எனவும் இருந்துள்ளதாக வராலாற்று குறிப்புகள் சொல்கிறது. தொழிற்நுட்பம் வளரும் முன் இந்த ஜிப்ரேல்டார் மலை கப்பலோட்டிகளுக்கு பெரும் உதவியாக இருந்துள்ளது.

   இஸ்லாமியர் ஆட்சியை வெளியேற்றி விட்டு ஸ்பானிஷ் ஆட்சி நெடுங்காலம் அமைந்துள்ளது.பின்னர் ட்ச்சு,பிரெஞ்ச் ஆளுமைக்கு உட்பட்டும் ஆட்சி நடந்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரில் எரிபொருள் நிரப்பி செல்லும் இடமாக போக்குவரத்திற்கு மிகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்போதுதான் பிரிட்டிஷ் கைபற்றியிருக்க வேண்டும்.

   இறுதியாக ஆட்சி மாற்றத்துக்காக நடந்த ஒட்டெடுப்பில் பெருன்பான்மை மக்கள் பிரிட்டன் ஆட்சியை விரும்பியாதல் அதுவே இப்போதும் நீடிக்கிறது. பிரிட்டனின் கடற்படை தளம் ஒன்றும் இங்குள்ளது.

  மொத்தமே 6.4 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ள இந்நாட்டின் மக்கள் தொகை (34,000)முப்பதினான்காயிரம் மட்டுமே.வருமான வரி மற்றும் இன்ன பிற சலுகைகளை வழங்கி இங்கே தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கும் விளம்பரங்கள் ஆங்காங்கே உள்ளது.

    மாலையில் கடற்கரைக்கு சென்றபோது வயதான இந்தியர் ஒருவர் மீன்களுக்கு பூஞ்சை பிடித்த பிரட்டை பிய்த்து போட்டுகொண்டிருந்தார். (1975 இல் இங்கு பணிக்காக வந்தவர்) ஐம்பது ஆண்டுகளாக இங்கே வசிப்பதாவும் பிறந்து வளர்ந்தது இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரம் என்றும் சொன்னார்.

   அங்கே கட்டபட்டிருந்த விலையுர்ந்த உல்லாச படகு ஒன்றை புகைப்படம் எடுத்தோம்.ஆப்ரிக்காவிலிருந்து இங்கிலாந்தில் குடியேறிய நண்பர்கள் குழு  சுற்றலா வந்திருந்தது.




  இந்தியர் எங்களின் ஜிப்ரேல்டர் வருகை குறித்து கேட்டறிந்தபின் அவரது காரில் எங்களை விடுதியில் இறக்கி விடுவதாக சொன்னார். நடந்தே ஊர் சுற்ற இருப்பதை சொன்னபோது இந்த ஊரில் நீங்கள் வழி தவற வாய்ப்பே இல்லை இந்த மலையை பார்த்துகொண்டு நடந்தால் எளிதாக உங்கள் விடுதிக்கு சென்று விடலாம் எனச்சொல்லி விடைபெற்றார்.

 தனது மகள் இங்கே மருத்துவராக பணிபுரிவதாக சொன்னார்.இங்கே வசிப்பிடம் மிக விலைஅதிகம் எனவும் சொன்னார். இடப்பற்றாக்குறையே அதற்கு காரணாமாக இருக்கும்.

   இரவு வரை சுற்றி களைத்துவிட்டு விடுதிக்கு திரும்பினோம்.

 நாஞ்சில் ஹமீது,

03-feb-2024