என் எஸ் பிரன்டியர் நாட்குறிப்புகள் 2
மும்பையிலிருந்து அதிகாலை 2.25 மணிக்கு விமானம் தரையை விட்டு மேலெழும்பியது. விமானத்திற்காக
காத்திருக்கையில் நாட்குறிப்புகளை எழுத தொடங்கி கணினியில் பேட்டரி தீரும் வரை
எழுதினேன்.
மும்பை விமான நிலையம்
உலக தரத்துக்கு இணையாக இருக்கிறது.நாங்கள் இமிகிரேஷன் முடித்து வரும்போது விமான
ஊழியர் ஒருவர் தாய்லாந்து செல்லும் பயணியா எனக்கேட்டார்.
நாங்கள் காத்திருக்கும்போதும் ஏர் இந்தியா விமான ஊழியர்
தாய்லாந்து செல்லும் பயணிகள் இருவரை தேடி கூவி,கூவி அழைத்துகொண்டிருந்தார். நான்
நினைத்தேன் இப்போது ஐடியா மணி இருந்தால் என்ன சொல்வார் என “தாய்லாந்துக்கு
போறதுக்கு மின்னையே மட்டையாயாச்சி,இனி அங்க போய் சேருமோ,சேராதோ?”என.
வானில் பறந்த விமானம்
4257மைல்களை ஒன்பதரை மணிநேரத்தில் கடந்ததும் மிக
பத்திரமாக ஆம்ஸ்டர்டாமில் தரையிறக்கினார் பைலட்.கோயம்பேடு பேருந்து நிலையத்தை போல
நெருக்கமாக நின்ற விமானங்களால் ஓடு தளத்தை தவிர நீலத்தில் மூடியிருந்தது ஆம்ஸ்டர்டாம்.பதினான்கு
டிகிரி குளிரில்,மென்மழை தூறிக்கொண்டிருந்தது. இந்தியாவைவிட மூன்று மணிநேரம்
பின்னே சென்று காலை எட்டரை மணியாக இருந்தது.
இங்கே இருந்த தியான
கூடத்தில் காலை தொழுகையை தொழுதுவிட்டு அடுத்த விமானம் புறப்படும் வாயில் அருகே
அமர்ந்துகொண்டோம். மிகப்பெரிய விமான நிலையம் உலகம் முழுவதையும் தனது சேவையால்
இணைக்கிறது KLM விமான நிறுவனம் எனினும் அதிக பரபரப்பில்லாத தோற்றத்தை அளித்தது.மும்பை
விமான நிலையத்தில் எழுதத் தொடங்கிய கட்டுரையின் மிச்சத்தை எழுதி முடித்தேன்.
பிரம்பலியுடன்
மெக்டொனால்ட் சென்று பர்கர் சாப்பிட்டோம்.நான் ஒரு பிஷ் பில்லெட் உண்டேன்.
காபியை பார்க்கும்போதெல்லாம் குடிக்க வேண்டும் என ஆசை
தூண்டும்.மூன்று யூரோ கொடுத்து வாங்கிய காபியை என்னால் குடிக்க முடியவில்லை.அந்த
கசப்பை எப்படி ருசித்து அருந்துகிறார்களோ?காபி பிரியர்கள்.
நான்கரை மணிநேர காத்திருப்புக்குப்பின் நெதர்லாந்து நேரப்படி
மதியம் 12.50 க்கு விமானம் நகர்ந்தாலும் ஓடு பாதையில்
போக்குவரத்து நெரிசல் காரணமாக பன்னிரண்டு நிமிடம் தமாதமாக மேலெழும்பும் என பைலட்
அறிவித்தார்.மூன்று பயணிகளுக்காக முன்பு காத்திருக்கிறோம் என்ற பைலட் பின்னர்
ஒருவர் வரவில்லை அவரது பயணபைகள் விமானத்தில் உள்ளது எனவும் சொன்னார்.
போயிங் 777-300Er விமானம் நீல
கழுகைப்போல் பிரமாண்டமாக வானில் சிறகை
விரித்து 285
பயணிகள் மற்றும்
பத்துக்கும் மேற்பட்ட சிப்பந்திகளுடன் பதினோரு மணிநேரத்தில் 5470 மைல்களை பறந்து கடந்து பனாமாவில் இறங்கும்போது மாலை மணி ஐந்தாகியிருந்தது.இந்த
மிகப்பெரிய விமானம் தரையிரங்கியதே தெரியவில்லை விமானத்தின் வாயிலில் நின்று
புன்னகையுடன் வழியனுப்பிக்கொண்டிருந்த துணை விமானியிடம் பத்திரமாக விமானத்தை தரையிரக்கியதற்காக
நன்றி சொன்னேன்.2003 ஆண்டு தொடங்கிய என் முதல் விமான பயணம் 99வது பயணத்தை கடந்த
இருபது ஆண்டுகளில் நிறைவுசெய்திருக்கிறேன்.KLM விமானத்தில் எனது
முதல் பயணம் இது.
கடிகாரம் பின்னோக்கி சென்றுகொண்டே இருந்ததால் இருள் வரவே இல்லை. இருக்கையில் அமர்ந்தே கடமையான லுகர்,அஸர் தொழுகைகளை நிறைவேற்றினேன். இங்கே இப்போது புதிய விமான நிலையம் கட்டியுள்ளனர்.நான் கடந்த ஆண்டு வரை வந்த விமான நிலையம் தூரத்தில் இருப்பதாக சொன்னார்கள்.இங்குள்ள கார் நிறுத்துமிடம் என்னை கவர்ந்தது.
கப்பல் பணியாளர்களுக்கு
இமிகிரேசனில் தனி வரிசை.அனைத்து சோதனைகளையும் முடித்து விடுதியறைக்கு வரும்போது
மணி எட்டரையாகிவிட்டது. பனாமாவில் கப்பல் ஏற வரும் இந்தியர்கள் யாரும் வெளியே
செல்ல அனுமதியில்லை குடியுரிமை பணியாளர் ஒருவர் கடவு சீட்டுகளுடன் உடன் வருவார்.விடுதியலிருந்து
வெளியேறி கப்பல் ஏறும்வரை எங்களது பாஸ்போர்ட் அவரது கையிலிருக்கும்.விடுதி வரவேற்ப்பறையில்
காவலிருப்பார்.
கடந்த ஆண்டு ஏப்ரல்
மாதம் சிங்கப்பூர் எனெர்ஜி கப்பலில் இணைவதற்காக கடைசியாக இங்கே வந்திருந்தேன்.ஓர்
இரவு விடுதியில் தங்கிவிட்டு பல்போவா சென்று கப்பல் ஏறினேன்.பசுபிக் கடலிலிருந்து பனாமா கால்வாயை கடந்து அட்லாண்டிக் கடலில் கிறிஸ்டோபல்
சென்று நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினோம் கரையிலிருந்து ஏழு மைல் தொலைவில் ஐந்து
மாதங்கள் நின்றுகொண்டிருந்தோம்.
இப்போது மூன்று தினங்கள்
விடுதியில் தனிமைபடுத்தலுக்குப்பின் பன்னிரெண்டாம் தேதி கப்பலேற வேண்டுமென சொல்லியிருந்தார்கள்.கப்பல்
இங்கு வருவது இரு தினங்கள் தாமதமாகிவிட்டதால் வரும் ஞாயிறுவரை விடுதியறையில்
இருக்க வேண்டும்.
பனாமாவின் விக்டோரியா
ஹோட்டலின் சூட் அறையை எனக்கு தந்தார்கள்.நான் தற்போது வசிக்கும் இரண்டு படுக்கையறை
கொண்ட வீடளவுக்கு மிகப்பெரிய அறை அனைத்தையும் மிக சிக்கனமாக செலவு செய்து பழகிய
எனக்கு இந்த வசதிகள் அதிகம்தான்.
அறைக்கு வந்தபின்
உணவுண்டு ஒன்பதரைக்கு தூங்கிவிட்டேன்.ஒன்றரைக்கு விழிப்பு
வந்தது.இந்தியாவிலிருந்து புறப்பட்டபின் கடிகாரம் பத்தரை மணிநேரம் பின்னோக்கி
சென்று பகல் இங்கே இரவாகி போனதால் துயில் இல்லை. நான்காவது மாடியின் கண்ணாடி ஜன்னல்
அருகில் நாற்காலியை போட்டு அமர்ந்துகொண்டேன். இந்த நள்ளிரவிலும் இளம்பெண்கள் சாவகாசமாக
நடமாட முடிகிறது இந்த ஊரில்.
அதிகாலை ஆறு
மணிவரை பணிக்கு சென்று திரும்பும் சில
பெண்களின் நடமாட்டம் இருந்தது.
ஷாகுல் ஹமீது,
11-05-2023
No comments:
Post a Comment