Saturday 8 April 2023

இஃதிகாஃப்

 

      

                                                                            இஃதிகாப்

இம்முறை விடுமுறையில் ஊருக்கு வந்த சில நாட்களிலேயே வடசேரி பள்ளிவாசலில் அதிகாலை பஜர் தொழுகைக்குப்பின் நடந்த பயானில் இஃதிகாப் பற்றி குர் ஆனில் உள்ள வசனத்தை இமாம் சொன்னார்கள். 



இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து(இஃதிகாஃபில்) இருக்கும்போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள். இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அதை (வரம்புகளை மீற) நெருங்காதீர்கள். இவ்வாறே (கட்டுப்பாட்டுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். (அல்குர்ஆன் 2:187)

   எனது மகன்கள் படிக்கும் பள்ளிக்கு அருகில் உள்ள நெசவாளர் காலனி பள்ளிவாசலிலும்

  இந்த பள்ளியில் இஃதிகாஃப் இருக்க விரும்புகிறேன் (நிய்யத் வைக்கிறேன்)என வாசகம் எழுதி வைத்திருப்பார்கள்.

                     

  இஃதிகாஃப் என்றால் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்காக இறை இல்லமான பள்ளியில் தங்கியிருப்பது, நோன்பு காலத்திலும் நோன்பு அல்லாத காலத்திலும் இஃதிகாஃப் இருக்கலாம். நோன்பு காலத்தில் இஃதிகாஃப் இருப்பது மிகச் சிறந்தது. நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் நோன்பு மாதத்தின் கடைசி பத்து நாட்களும் இஃதிகாஃப் இருப்பார்கள். மரணித்த வருடத்தில் இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். இஃதிகாஃப் இருப்பவர் குளிப்பது, மலஜலம் கழிப்பது போன்ற அவசியத் தேவைக்கின்றி பள்ளியை விட்டும் வெளியில் செல்லக்கூடாது, நோன்பின் கடைசிப்பத்தில்; இஃதிகாஃப் இருப்பதனால் லைலத்துல் கத்ரின்(குர் ஆன் இறக்கப்பட்ட நாள்) இரவை அடைந்து கொள்ளலாம். யாருக்கெல்லாம் இஃதிகாஃப் இருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றதோ, அவர்கள் சந்தர்பத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

 எனது தாயின் வாப்பா மீரான் பிள்ளை அப்பா பள்ளியில் இஃதிகாப்  இருக்கும்போது பார்த்திருக்கிறேன்.மூன்று தினங்கள் நோன்பிருந்து இஃதிகாப் இருந்தபின்னர் வண்டல் தர்காவிலிருந்து பீர் பானை எடுத்து ஒன்றரை கிலோமீட்டர் தூரமுள்ள பள்ளிக்கு வருவார்.

   யோக வகுப்புகளில் இருபத்தியிரண்டு வயதுவரை பிரம்மசரியம்,பின்னர் திருமணமாகி இல் வாழ்க்கையான கிரகஸ்தம்,நாற்பத்தியைந்து வயதில் வனபிரஸ்தம் அதாவது மகன் கல்வி கற்று முடித்து வேலைக்கு செல்ல தயாராகும் வயதில் தன்னை துறவுக்கு தயார்செய்யும் வகையில் காட்டுக்கு சென்று கற்பதும்  வீட்டுக்கு வருவதுமாக இருத்தல்.அறுபது வயதுக்குமேல் மகன் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பற்றும் நிலையயை அடைந்ததும் நிரந்தராமாக சந்நியாசம் செல்தல்.

  அக பயணம் செல்ல விரும்புபவர்களுக்கு இஃதிகாப் பேருருதவியாக இருக்கும்.இரு தினங்களுக்கு முன்பு தராவீஹ் தொழுகைக்குப்பின் இமாம் உங்களது கடமைகளை சீக்கிரமாக முடித்துவிட்டு ரமலானின் கடைசி பத்து நாட்கள் பள்ளியில் இஃதிகாப் இருக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

(ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருப்பார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.) (ஆதாரம்: புகாரி)

 

 இரவு தொழுகைக்குப்பின் வீட்டிற்கு வந்து இஃதிகாப்கிற்கு அழைப்பு விடுத்ததை சுனிதாவிடம் சொன்னேன். “நீங்கோ போங்கோ மூணு மாசாம இங்கேயே இருந்து ஸ்ட்ரெஸ் கூடிட்டு உங்களுக்கு” என்றாள்.

“என்னய ஏன் விரட்டா” எனக்கேட்டேன்.

  “அது நல்லது இல்லா” என்றாள்.

இஃதிகாப் விருப்பம் போல் ஒரு நாள் ,மூன்று நாள் அல்லது ஏழு நாட்களும் இருக்கலாம் என சொன்னேன்.

“நீங்கோ பத்து நாள் போங்கோ”   என சுனிதா சொன்னாள்.நானும் முடிவு செய்து விட்டேன் இந்த வருடம் இஃதிகாப் இருப்பது என.

இஃதிகாப் இருக்கும்போது ரமலான் நோன்பு காலம் ஆதலால் பசித்திரு,விழித்திரு,தனித்திரு என்பது சாத்தியம்தான்.

 இஃதிகாப் இருப்பவர்கள் வீட்டிற்கு செல்ல கூடாது,நோன்பு நோற்று பகலில் பசியுடன் இருந்து இரவில் தூங்காமல் தொழுகை வணக்க வழிபாடுகளில் ஈடு படவேண்டும்.தூங்கி விழித்துவிட்டால் வீண் பேச்சுக்கள் பேசாமல்,உடன் இஃதிகாப் இருப்பவர்களை தொந்தரவு செய்யாமல் தனிமையில் இறைவனை தியானிக்க வேண்டும்.

குறிப்பாக செயல்களை உதறிவிட்டு குர்ஆன் ஓதுதல் சிறப்பு. உலகியலிருந்து தன்னை விடுவித்து கொள்வதாகும்.வரும் செவ்வாய்க்கிழமை மாலை மக்ரிப் தொழுகைக்குப்பின் வடசேரி பள்ளிக்கு சென்று இஃதிகாப் இருக்க நான் தயாராகிவிட்டேன்.இந்த பத்து நாட்களும் உலக தொடர்புகளிலிருந்து என்னை விடுவித்து கொண்டு அக பயணத்திற்கு தயாராகி விட்டேன்.

முகநூல்,இன்ச்டக்ராமில் நான் இல்லை.போனில் வாட்ஸ்அப் மட்டும் பார்ப்பேன்.எனது போனை வீட்டில் சுனிதாவிடம் கொடுத்துவிட்டு தேவையான மிக குறைந்த துணிகளை மட்டும் எடுத்துக்கொண்டு செல்லவிருக்கிறேன்.

விரிக்க,படுக்க இரு போர்வைகள். இரு வேட்டி,சட்டைகள் ஒரு கைலி,ஒரு துண்டு,துவைக்கும் சோப்,தலைக்கு தேய்க்கும் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை மட்டும் எடுத்து செல்கிறேன்.

    


 விபாசன பயிற்சியில் பிறர் கண்களை பார்க்கவே கூடாது என நண்பர்கள் சொன்னார்கள். வடசேரி பள்ளி என் வீட்டிலிருந்து நடக்கும் தூரத்தில் தான் உள்ளது.வீட்டிற்கு வரமால் யாரையும் சந்திக்காமல் முழுமையாக செயல்களிலிருந்து என்னை விடுவித்து கொண்டு அகம் நோக்கி பயணிக்க இந்த இஃதிகாப் நாட்கள் எனக்கு உதவும் என நம்புகிறேன்.

   எனக்கு இந்த இஃதிகாப் நாட்களில் எந்த வேண்டுதலும்,சங்கற்பமும் இல்லை.இறையை வழிபடுதல் மட்டுமே.

 பெண்களும் பள்ளிவாசல்களில் வசதி இருக்கமானால் இஃதிகாஃப் இருக்கலாம்.அல்லது வீட்டில் தனியறையில் இஃதிகாஃப் இருக்கவேண்டும்.தனது குடும்ப கடமைகளை செய்துவிட்டு இஃதிகாஃப் எண்ணத்தோடு வீட்டில் தனியறையில் இருக்கலாம். வீட்டை விட்டு வெளியேசெல்லக்கூடாது.

  ஷாகுல் ஹமீது,

 08-april -2023.

https://www.dailythanthi.com/Others/Devotional/2019/08/29153253/God-consciously-Refuge-in-the-house-of-the-god.vpf

 

2) நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். (ஆதாரம்: புகாரி)

3) நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளான் மாதமும் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள். மரணித்த வருடத்திலே இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)

No comments:

Post a Comment