Sunday, 1 January 2023

பயண படியும்,சம்பள பாக்கியும்

 


  கப்பல் காரன் டைரி 

   டீலக்ஸ் புட்வேயர்ஸ்  நாகர்கோவிலின் மைய பகுதியான மணிக்கூண்டு அருகே,எழுத்தாளுமை சுந்தர ராமசியின் சுதர்சன் ஜவுளி கடைக்கு எதிரில் உள்ள ஆசாத் ஹோட்டல் அருகில் இருக்கும் நூறு ஆண்டுகளை கடந்த செருப்புகடை. அனைத்து வகை பெல்ட்டுகளும் இங்கே கிடைக்கும்.

  நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது வார இறுதி பள்ளிநாட்களில் கடைக்கு வருவேன். ஐ டி ஐ படிப்பு முடியும் வரை பகுதி நேரமாகவும் பின்னர் மும்பைக்கு வேலை தேடி செல்வது வரை முழு நேரமாகவும் கடையில் வியாபாரம் பார்ப்பேன். அதன் முதலாளி பீர்ம்கம்மது எனது தாய் பீமாவின் சிறிய தந்தையின் மகன். எனக்கு மாமா .

   பாம்பே,மெட்ராஸ்,மதுரை போன்ற இடங்களிருந்து சரக்கு வரும் பார்சல்களை பிரித்து,சரிபார்ர்த்து கடையில் விற்பனைக்கு அடுக்குவோம்.சில நேரங்களில் ஒன்றோ,இரண்டோ ஜோடி செருப்புகள் அல்லது பெல்ட்டுகள் குறைவாக இருக்கும்.அதை மாமாவிடம் சொல்வேன்.குறித்து வைத்துகொண்டு  சரக்கை அனுப்பிய நிறுவனத்துக்கு சொல்லி அந்த தொகையை கழித்து கொள்வதாக சொல்வார்.

  “மருமொனே குறஞ்சா சொல்லி பைசாய களிக்கணும்,கூட இருந்தா”என கேட்பார். ஒன்றும் தெரியாமல் விழிப்பேன்.

 கூடுதலாக ஒரு ஜோடி இருந்தாலும் அதை அனுப்பிய நிறுவனத்துக்கு சொல்லி அதற்கான பணத்தை கொடுக்கவேண்டும் என்பார்.

“நம்மோ யாரையும் ஏமாத்த கூடாது,நம்மள மத்தவன் ஏமாத்துனா,நம்மோ ஒண்ணும் செய்யாண்டாம் அல்லாஹ் பாத்துகிடுவான் அவனை” என பீர்முகம்மது மாமா சொல்வார்.இது போல் தொண்ணூறுகளில் அவரிடம் கற்றது நிறைய.

   நான் பணிபுரியம் கப்பல் நிறுவனம் நூற்றியறுபது  ஆண்டுகளுக்கும் மேல்  பழமையானது  நார்வேயின் ஒஸ்லோ நகரில் தலைமை அலுவலகமும் . உலகம் முழுவதும் கிளைகளும் உண்டு .கப்பல் துறைக்கு தேவையான அனைத்து சேவைகளும் வழங்குகிறது.

   பணியாளர்களாகிய எங்களுக்கு இந்நிறுவனம் எப்போதுமே சம்பள பாக்கி வைத்தது இல்லை. இந்த நிறுவனத்தின் மலேசிய அலுவலகம் இயக்கும் கப்பல்களில் நான் பணிபுரிகிறேன்.மலேசியாவிலிருந்து மாதம் தோறும் முப்பத்தியிரண்டு நாடுகளை சேர்ந்த நான்காயிரம் பேருக்கு சம்பளம் அவரவர்  வங்கிகணக்கில் மாத இறுதியில் மிக சரியாக அனுப்பபடுகிறது.

 கப்பலில் பணிக்காக இணையும்போது.இந்தியாவிலிருந்து சர்வதேச விமானத்தில் ஏறும் நாள் முதல் சம்பளம் கணக்கிட்டு வழங்கப்படும்.பணியில் இணைவதற்காக சென்று ஏதாவது காரணங்களினால் கப்பல் துறைமுகம் வருவது தாமதமாகி விடுதியில் தங்கியிருந்தால் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை “மீட்டர் ஆன்”என்பார்கள். மூன்று வருடங்களுக்கு முன் இதை மாற்றி கப்பலில் பணியில் இணையும் நாள் முதல் சம்பளமும்,விமானத்தில் பயணிக்கும் நாளுக்கும்,விடுதியறையில் தங்கியிருக்கும் நாட்களுக்கு பயணபடியும் என மலேசிய அதிகாரி ஒருவர் மாற்றிவிட்டார்.அப்போது ஐடியா மணி சொன்னார் “வெள்ளக்காரன் கொஞ்சம் பாத்து,பாராம தருவான்,இவனுவோ மாத்திட்டானுவோ”என .

  நான் கடந்த 2022இல் ஏப்ரல் பதினைந்தாம் தேதி பனாமா நாட்டுக்கு சென்று கப்பலில் பணியில் இணைந்தேன்.பதிமூன்றாம் தேதி இந்தியாவிலிருந்து விமானம்.

மும்பை விமான நிலையம் 


   ஏப்ரல் மாத இறுதியில் எனது சம்பள கணக்கு வந்தது  பதினைந்தாம் தேதி முதல் சம்பளமும், பதினான்காம் தேதிக்கு பயணபடியும் கணக்கிடப்பட்டிருந்தது. நான் இந்தியாவிலிருந்து பதிமூன்றாம் தேதி இரவு எட்டு மணிக்கு விமானம் ஏறியதால் எனக்கு வரவேண்டிய ஒருநாள் பயண படி கணக்கில் வரவில்லை.எனது ஒரு நாள் பயண படி இருபத்தி நான்கு அமெரிக்க டாலர்கள்.

சத்ரபதி சிவாஜி  விமான நிலையம் 


 காப்டனை சென்று சந்தித்து விசயத்தை சொன்னேன்.அவர் என்னை குழப்பி உனக்கு ஒருநாள் தான் பயணப்படி என்றார். அவரிடம் தெளிவாக விளக்கி எனது பணி ஒப்பந்தம் பதிமூன்றாம் தேதி முதல் என சொன்னேன்.எனது ஒப்பந்த நகலை நோக்கியபின். “மலேசிய அலுவலகத்திற்கு மெயில் அனுப்புகிறேன் காப்டன் நிதின் தவறாக கண்க்கிட்டுவிட்டார் ஒரு நாள் விடுபட்டுள்ளது”என்றார் காப்டன் பிர்தௌஸ். அவர் என்னுடன் பணியில்  பனாமாவில் இணைந்தவர். நாங்கள் பணியில் இணைந்த பத்து நாட்களுக்குப்பின் கப்பலில் இருந்த காப்டன் நிதின் விடுமுறைக்கு சென்றுவிட்டார்.

பணியில் இணைய கப்பலுக்குள் ஏறுவது



சில தினங்களுக்கு பின் காப்டன் பிர்தௌஸிடம் கேட்டேன் “எனது ஒருநாள் பயண படி குறித்து மலேசிய அலுவலகம் ஏதாவது உறுதி செய்ததா? என. “நோ மெசேஜ்” என்றார்.

 மே,ஜூன்,ஜூலை மாதத்திலும் எனது ஒரு நாள் பயண படி குறித்து எந்த தகவலும் ஏதும் வரவில்லை..ஆகஸ்ட் பதினெட்டாம் தேதி காப்டன் பிர்தௌஸ் விடுமுறைக்கு  சென்றார். சிம்லாவை சார்ந்த காப்டன் பிபின் அவரை விடுவித்தார்.காப்டன் பிர்தௌஸ்  ஊருக்கு போகும் முன் அவரிடம் கேட்டபோது உனது பயனபடிக்காக பலமுறை மின்னஞ்சல் அனுப்பினேன் கோலாலம்பூரிலிருந்து பதில் வரவில்லை என பதிலிளித்தார்.

. காப்டன் பிபின் வந்த சில தினங்களில் அவரை சந்தித்து எனது ஒருநாள் பயண படி குறித்து விளக்கி ஆவணங்கள் காட்டினேன். “இது ஒரு சின்ன விஷயம்,ஏன் லாஸ்ட் காப்டன் இத செய்யல்ல” என கடிந்தவராய் கணினியில் தட்டச்சிவிட்டு. “இன்னா பாரு அனுப்பியாச்சி”என்றார்.

   மறுநாள் கோலாலம்பூர் அனுப்பிய மின்னஞ்சலை எனக்கு அனுப்பியிருந்தார்.அதில் சர்வதேச விமான பயணம் தொடங்கும் நாள் முதல்தான் பயண படி கிடைக்கும் பதினைந்தாம் தேதி பணியில் இணைந்தநாள் பாதினான்காம் தேதிக்கு பயண படி என. அப்போது என்னுடன் பணியில் இணைந்த இந்தியர் இருவருக்கு பதினான்காம் தேதி விமானம். எனக்கு பதிமூன்றாம் தேதி இரவு எட்டுமணிக்கு மும்பையிலிருந்து விமானம்.துபாய்,இஸ்தான்புல் வழியாக பனாமா சென்ற விமான சீட்டை காப்டனுக்கு அனுப்பிவிட்டு அவரை நேரில் சந்தித்தேன்.

துபாய் விமான நிலையம் 

  
இஸ்தான்புல்

“இட்ஸ் கிளியர் ப்ளீஸ் அப்ரூவ்”என அவர் அனுப்பியதை கணினி திரையில் காண்பித்தார்.பின்னர் சந்திக்கும்போதெல்லாம் பதிலேதும் இல்லை என்பார். அக்டோபர் மாதத்தில் என்னிடம் ஏழு முறை  நினைவூட்டி மின்னஞ்சல் அனுப்பியதையும்,வாட்ஸ் அப்பில் அனுப்பியதையும் காட்டினார்.அக்டோபர் பத்தாம் தேதி காப்டன் பிபின் ஜமைக்காவிலிருந்து ஊருக்கு சென்றார்.

 புதிதாய் வந்தவர் கொரியாவின் கிம்.ஆங்கிலத்தில் எழுத ஒரு கைஆள் வேணும்.சொல்ல வேண்டியதை மிக மெதுவாக சொல்லி புரிய வைக்க வேண்டும். அவரிடமும் முதலிலிருந்து தொடங்கி விசயத்தை புரியவைத்துவிட்டேன். முன்பு போல் கோலாலம்பூர் பதிலேதும் அனுப்பவில்லை.

 மீண்டும் கேட்டபோது உனது முகவரை கேட்டு பெற்றுகொள் என சொன்னார்.மும்பை அலுவலக அதிகாரி தர்சனா பகத்துக்கு விரிவாக எழுதி அனுப்பினேன்.பதிலேதும் வரவில்லை.

 சில தினங்களுக்குப்பின் மும்பை அலுவலகத்தின் தலைமை  அதிகாரி காப்டன் டி சில்வாவுக்கு எழுதினேன். அதற்கு தர்சனாவிடமிருந்து பதில் வந்தது. கே எல் ஆபிசுக்கு எல்லாம் அனுப்பிவிட்டேன் காப்டனிடம் கேள் இல்லையெனில் எனக்கு மீண்டும் எழுது என இருந்தது.

காப்டன் கிம் என்னிடம் “உனக்கு மெசஜ் இருக்கிறது” என சொல்லி நான் தர்சனாவுக்கு அனுப்பிய மின்னஞ்சலின்  அச்சுபிரதியை  தந்தார். “ஸார் இது நான் பாம்பே ஆபீஸுக்கு அனுப்பினது” என்றேன்.கண்ணாடியை போட்டு பார்த்துவிட்டு,உனக்கு அனுப்புனத எனக்கும் பார்வர்ட் பண்ணிருக்கு” என சிரித்தார்.

  என்னுடன் இருந்த பிலிப்பினோ எரிக் “சின்ன பைசா இத ஏன் ஆபீஸ் தரமாட்டேங்கிறது” என சொல்லி சிரித்தான். கோவாவின் பெர்னாண்டோ  “அத நீ மறந்துரு உனக்கு கிடைக்காது” என்றான்.

“அத எப்புடி நான் உடுவேன் எனக்கு வரவேண்டியதை நான் பெற்றே தீருவேன்” என சொன்னேன்.

பனாமா படகு துறை 


  விடுமுறைக்காக கப்பலிலிருந்து இறங்கும் முன்  எங்களது சம்பள கணக்கு முழுதாக  முடிக்கப்பட்டுவிடும். இறுதியாக எனது ஒருநாள் பயணப்படி ஏழரை மாதங்களுக்குப்பின் என் கணக்கில் வரவு வைத்து எனது கணக்கை முடித்து டிசம்பர்  இரண்டாம் தேதி சிங்கப்பூர்-திருவனந்தபுரம் விமான சீட்டை தந்தார் காப்டன் கிம். ஒன்றாம் தேதி சிங்கப்பூர் கடலில் கப்பலுடன் அருகணைந்த  படகில் ஏறி நிலத்தில் பாதம் பதித்து மூன்றாம் தேதி ஊர் வந்து சேர்ந்தேன்.

 கப்பலிலிருந்து இறங்கும்போது எங்கள் கணக்கில் இருக்கும் பணம் முழுவதையும் கையில் தருவார்கள் அல்லது வங்கி கணக்கில் அனுப்பிவிடுவார்கள். இம்முறை காப்டன் கிம் என்னிடம் “ஷாகுல் உனக்கு ஆயிரத்தி முப்பத்தி எட்டு டாலர் பாக்கி, ஐநூறு கைல தாரேன்,மிச்சத்த பேங்குல அனுப்பேன்”என்றார்.

 கையில் வாங்கியது,போக மீதி தொகை ஐநூற்றி முப்பத்தெட்டு டாலரை வங்கியில் அனுப்புவதற்கான  படிவத்தில் கையொப்பமிட்டு கொடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

   வழக்கமாக வீடு வந்துசேரும் முன் பணம் வங்கியில் வந்துவிடும்.இம்முறை எனது பணம் வரவில்லை.ஏழாம் தேதி காப்டனுக்கு சம்பள பாக்கி வரவில்லை என எழுதினேன். கோலாலம்பூர் அலுவலகத்திற்கு சொல்லிட்டேன் என பதில் தந்தார்.

  பத்தாம் தேதி தாண்டியும் பணம் வராததால் சம்பள பாக்கிகான இரண்டாவது கடிதத்தை கப்பல் காப்டனுக்கு அனுப்பினேன். அவர் கோலாலம்பூருக்கு அனுப்பிய வங்கி படிவம் மற்றும் கடிதத்தை எனக்கு தந்துவிட்டு,இனிமேல்  மும்பையில் தொடர்புகொள் என கையை மலத்திவிட்டார்.

  தர்ஷனாவுக்கு எழுதினேன்.இரு தினங்களுக்குப்பின் என்னை  போனில் அழைத்து. “உன் சம்பளம் வரல்லல்ல வெள்ளிக்கிழமை வர பார்த்துவிட்டு,எனக்கு திங்கள் போன் பண்ணு”என்றார்.

 டிசம்பர்  23 ஆம் தேதி  புதன்கிழமை மீண்டும அழைத்தேன். “மலேசியா ஆபிஸுக்கு சொல்லியாச்சி,ரெண்டு நாள் கூட பாப்போம்”என்றார் தர்ஷனா.

 29 ஆம் தேதி எனது வங்கி அனுப்பிய மின்னஞ்சலில்  மலேசியாவிலிருந்து எனது நிறுவனம் 1038 டாலர்கள் அனுப்பிய தகவல் இருந்தது. அந்த தொகை  இந்திய ரூபாயாக மாற்றியபின் பின்னர்  கணக்கில் வரவு வைக்கப்படும். ஒரு மாதிற்கு பின் பணம் வந்துவிட்டது. 530 டாலருக்கு பதில்  1038 டாலர்  508 அதிகமாக.

. ஒரு மாதம் இழுத்தடித்ததற்கு போனஸ் போல. தர்ஷனாவை அழைத்தேன் “என் சம்பள பாக்கி வந்துவிட்டது,எதோ தவறு நடந்துள்ளது 508 டாலர் அதிகமாக வந்துள்ளது” என்றேன். சிரித்துவிட்டு “ஷாகுல் சென்ட் மீ மெயில் ஐ வில் பார்வர்ட் டு கே எல் ஆபிஸ்”என்றார்.

 இரவு எட்டுமணிக்கு 1038 டாலர் இந்திய ரூபாயாக மாற்றப்பட்டு எனது கணக்கில் வரவு வைக்கபட்ட தகவலை வங்கி உறுதி செய்தது.41,475 ரூபாய் அதிகமாக கிடைத்தது. இரவு பத்து மணிக்கு அதிகமாக வந்த பணத்தின் விபரத்தை வைத்து  தர்ஷனாவுக்கு மெயில் அனுப்பினேன்.அதன் பின் மனம் அமைதியாகி நிம்மதியான உறக்கம்.

   சுகி சிவம் இந்த நாள் இனிய நாள் தொடரில் பேசியதில் ஒருநாள்  சும்மா கிடைக்கிற காசு நமக்கு வேண்டாம். நான் சன் டிவியில் பேசுவதற்கு காசு வாங்கி கொண்டுதான் பேசுகிறேன்.உங்களுக்கு லாட்டரியில் பரிசு கிடைத்தால் வேண்டாம் என்று சொல்லுங்க என இருபத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன் பேசியதும் ஆழ் மனதில் பதிந்திருக்கிறது.

  நாம் வேலை செய்யும் பணம் நம்மிடம் இருந்தால் போதும் அதனால்  தான் சும்மா கிடைத்த 508 டாலரை உடனே திரும்ப அளிப்பதாக சொன்னேன்.எனக்கு கிடைக்கவேண்டிய இருபத்திநான்கு டாலரை ஏழரை மாதங்கள் போராடி பெற்றேன் .

  02december 2022.

sunitashahul@gmail.com 

1 comment:

  1. உரிமைக்காக போராடு என்று மார்கம் கூறுகிறது...

    நம்மை ஒருத்தன் ஏமாற்றினால் ......

    என் கருத்து...நாம் ஏமாருவதை குறைக்க வேண்டும்.. வாழ்நாளில் நமது மற்றும் பிறரின் அனுபவ பாடம் இதற்கு உதவும்...

    ஆனால் நாம் நிற்பந்தமாக ஏமாறுவது உண்ணடு...

    ரோட் டேக் இருக்கும் ஆனா ரோட் இருக்காது...

    சரியா ?

    ReplyDelete