Monday, 12 September 2016

சதாமின் அரண்மனையில்

  செப்டம்பர் 13 2003 ம் ஆண்டு ஈராக் போர்முனையில் அமெரிக்க ராணுவத்துடன் பணியில் இருந்தேன். ஈராக் ன் திக்ரித் நகரில் டைகிரிஸ் நதிக்கரையில்  இருக்கும் சதாமின் அரண்மனை அது.26 அரண்மனைகளை கொண்ட பெரிய வளாகம் .பல மைல் சுற்றளவு கொண்டது செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர்வீழ்ச்சி, பெட்ரோல் நிரப்பும் மையம் என அனைத்து நவீன வசதிகளும் கூடியது .
     முக்கிய அரண்மனையில் ராணுவ காமண்டோவும் சில முக்கிய அலுவலக வீரர்களும் தங்கிவிட்டனர் .மற்ற அரண்மனைகளில் வேறு ராணுவ அதிகாரிகளும் பணியாளர்களும் .ஈராக் முழுமையும் அமெரிக்காவின் பிடியில் இருந்த காலம் அது.
   திக்ரித் சதாம்ஹுசைன் பிறந்த ஊர் .இது ஈராக்கின் வடக்கு பகுதி, எல்லை தாண்டினால் துருக்கி.  ஐரோப்பாவை ஒட்டியிருப்பதால்  பசுமையாக இருக்கும் .நான் தங்கியிருந்த இடத்தில் நிறைய ஆலிவ் மரங்களும் ,பேரீச்சம் மரங்களும் கைக்கு எட்டும் தூரத்தில் காய்த்து தொங்கிகொண்டிருக்கும் .
      குளிர் காலத்தில் -2 டிகிரி வரையும் ,கோடையில் அதிகபட்ச வெப்பம் 46 டிகிரிக்கும் சென்றுவிடும்.இங்கு அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரையில் கடிகாரத்தை ஒரு மணிநேரம் பின்னால் போய்விடுவார்கள், கோடையில் மீண்டும் ஒரு மணிநேரம் முன்னே நகர்த்திவிடுவர் .கோடையில் 5 மணிக்கெல்லாம் சூரிய உதயமும் ,இரவில் 9 மணிக்கு அஸ்தமமும்.மாலைநேர மகரிப் தொழுகை 9 மணிக்கு பிறகே .
  குவைத் ,ஈரான் ,சவூதி அரேபியா ,துருக்கி ,சிரியா ,ஜோர்டான் என ஈராக்கை சுற்றி ஆறு  நாடுகளும் ,உம்காசர் என்ற துறைமுகமும் உள்ளது.இது இந்த நாட்டிற்கு இறைவன் கொடுத்த வரம் .யூப்ரடிஸ் ,டைகிரிஸ் என வற்றாத இரண்டு நதிகளும் ,எண்ணை வளங்களும் மிகுந்த நாடுதான் ஈராக் .
   நான் இருந்த திக்ரித் அரண்மனையிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும்  வரும் ராணுவ வீரர்களுக்கும்,பணியாளர்களுக்கும் உணவு வழங்கும் கேட்டரிங் நிறுவனம் அது .சைப்ரஸ் நாட்டை சார்ந்த நிறுவனம் . அமெரிக்கர்களுக்காக வேலை செய்தோம் .நல்ல உணவு ,சம்பளம் .
   நாங்கள் அங்கு செல்லும் வரையில் காற்று புகாத பையில் அடைத்த உணவு பொருட்கள் அடங்கிய பொட்டலம் தான் அவர்களுக்கு.ஒரு வருடத்திற்கு கெடாமல் இருக்குமாம் .அதை பிரித்தால் உள்ளே தனி தனி பைகளில் உணவு வகைகளும், ஒரு பையில் கொஞ்சம் ரசாயன பொடியும் இருக்கும் .ரசாயன பொடியுடன் தண்ணீர் ஊற்றி உணவு பொட்டலத்தை உள்ளே வைத்தால் சில நிமிடங்களில் சூடான உணவு தயார்.அதை சாப்பிட்டுதான் போர்க்காலத்தில் தாக்கு பிடித்துள்ளனர்.அதனால் நாங்கள் அங்கு சென்றதும் மிக சந்தோசமடைந்தனர் ராணுவ வீரர்கள்.
  தினமும் காலை,மதியம் ,இரவு ,நடுஇரவு என மொத்தம் பத்தாயிரம் உணவு வழங்க வேண்டும் .நவீன வசதிகளுடன் கூடிய அடுமனையும் ,ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் மிகப்பெரிய உணவு கூடமும் தற்காலிக கூடாரத்தினால் அமைக்கபட்டிருந்தது .நாங்கள் நூறுபேர் இந்தியர்கள் பணியாளர்களாக .அதிகாரிகள் அமெரிக்கர் ,பிரிட்டிஷ் ,நியுசிலாந்து ,ஆஸ்திரேலியா,தென் ஆபிரிக்கர்கள் என பல நாடுகளை சேர்த்தவர்கள் .
 பிரமிக்க வைக்கும் உணவுவகைகள் அவர்களுடையது  .ரயில் பெட்டிகளை போல நீண்ட உணவு பட்டியல் (menu) அவர்களுடையது
காலை உணவு .முட்டை அவித்தது,ஆம்ப்லேட் இல் பலவகைகள் அவித்த உருளைக்கிழங்கு ,நறுக்கிய எண்ணையில் பொறித்த உருளைக்கிழங்கு,பான்கேக்,பிரெஞ்சு டோஸ்ட் ,அனைத்து பழங்களும் ,பழரசங்கள் ,பால் ,ரொட்டி வகைகள் என சொல்லிக்கொண்டே போகலாம் .
  மதியம் ,சிக்கன் விங்ஸ் ,பீப் ஸ்டேக் ,இத்தாலியன் சாசேஜ் ,மெக்ஸிகன் ரைஸ் ,மாஷ் பொட்டடோ,பிரெஞ்சு பிரைஸ், சீஸ் சான்ட்விச் ,ஹாட் டாக் ,பர்கர்  என பலவகைகள் .
. பெரும்பான்மையான வீரர்கள் உணவு கூடத்திற்கு வந்து சாப்பிட்டு செல்வர். அரண்மனைக்கு வெளியேயும் தூரத்தில் இருக்கும் சில குழுக்களுக்கும் உணவை அதற்குரிய சூடு பாத்திரங்களில் அடைத்து கொடுக்க வேண்டும்  அக்குழுவிலிருந்து ஒருவர் வந்து எடுத்து செல்வார்.

அமெரிக்காவில் பதினெட்டு வயது பூர்த்தியான அனைவரும் 3 ஆண்டுகள் கட்டாய ராணுவசேவை செய்ய வேண்டும் .இது பல நாடுகளில் கட்டாயம்.ஆகவே ராணுவ உடையணிந்த அழகு கன்னியர்களும் நிறையவே உண்டு .
   12மணிநேரம் வேலை காலை எட்டு முதல் இரவு எட்டுவரையும் .இரவு எட்டு முதல் காலை வரை என இரு ஷிப்ட்டில் ஐம்பது பேர் வீதம் வேலை செய்வோம் .
  எனக்கு பகல் பணி .இரவு எட்டு மணிக்கு பணி முடிந்து குளித்துவிட்டு சாப்பிட்டு கொஞ்ச நேரம் ஏதாவது படம் பார்த்துவிட்டு  தூங்கினால் அடுத்த நாள் வந்துவிடும்  மண்டையில் வேறு எந்த யோசனையும் ஓடாது .வாரம் இருநாள் தூரத்திலிருக்கும் தொலைபசி அழைப்பு மையத்திற்கு அழைத்து செல்வார்கள் .கூட்டமாக செல்வோம்.
    எங்களுக்கு தங்குவதற்கு குளிர் சாதன வசதியுடன் கூடிய கூடாரங்கள் தற்காலிகமாக அமைத்து தந்திருந்தனர் .தரை பலகையால் ஆனது .ஒரு பெரிய கூடாரத்தில் அறுபது பேர் வரை தங்கமுடியும் .ஆளுக்கு ஒரு தகர அலமாரி பொருட்கள் வைத்து பூட்ட .மாடி வசதியுடன் கூடிய கட்டில்கள் .மேலே ஒன்று கீழே ஒன்று என .கட்டிலின் மேலே இருப்பவன் நள்ளிரவில் சிறுநீர் கழிக்க இறங்கும்போது கீழே தூங்குபவனுக்கு விழிப்பு வந்துவிடும் .
   ஒருநாள் தீபக் மச்சான் நான் காலையில் உறக்கம் முழிச்சா இவனுக்க குண்டிதான் எனக்கு முதல் காட்ச என்றான் எதிரில் இருப்பவனின் ஆடை மாற்றும் காட்சி அது  .எனக்கும் நண்பன் கார்த்திக்கிற்கும் எனக்கும் ஒரே கட்டில் அவனுக்கு இரவு பணியாதலால் நிம்மதியாக தூங்குவோம்
  இங்கு வந்த புதிதில் இந்த இடம் மிகவும் பிடித்து போய்விட்டது ..நண்பன் கார்த்திக் எனக்கு முன்பே இங்கு வந்திருந்தான் .மற்ற நண்பர்களான லோகேசும் மற்றவர்களும் நான் வந்த கொஞ்ச நாட்களுக்கு பிறகு இங்கு வந்து சேர்த்திருந்தனர் .இங்கு குண்டு வெடிப்போ ,அதிக தூசி கலந்த மண் பரப்போ இல்லை.வேலையில் இயல்பாக ஒன்றிபோயிருந்தோம் மகிழ்ச்சியான நாட்களாக போய்கொண்டிருந்தது  .
  அன்று காலை அடுமனைக்கு இரவுணவுக்கு வேண்டிய பொருட்களை கொடுத்து கொண்டிருந்தோம் .காலை 9.35 க்கு இருக்கும் சப்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தோம் நாங்கள் தங்கும் கூடாரம் தீ பற்றி எரிய தொடங்கியது .அனைவரும் அதை நோக்கியே ஓடினர் .
நான் வேகமாக அடுமனைக்குள் சென்று அங்கிருந்த தீ அணைப்பானை எடுத்து வந்தேன் அதற்குள் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது .கடும் வெப்பம் அருகில் நெருங்கவே முடியவில்லை என் கையில் இருந்த தீ அணைப்பனால் எதுவும் செய்ய இயலவில்லை .இரவு பணி முடித்தவர்கள் உள்ளே தூங்கிகொண்டிருந்தனர் என் நண்பன் கார்த்திக்கும் அதில் ஒருவன் .
  தீ எரியும் போது ஷேவிங் கீரீம் மற்றும் டப்பாவில் அடைத்த வாசனை திரவியங்கள் அச்சமூட்டும் சப்தத்துடன் வெடித்தது முதல் கூடாரம்  முழுமைகயாக எரிந்து இரண்டாவது கூடாரம் தீ பிடிக்க தொடங்கியது  அருகிலேயே பார்த்துகொண்டு இருந்தும் எதுவும் செய்யமுடியாத நிலை.என் மனம் உள்ளே தகர அலமாரியில் இருக்கும் எனது சான்றிதழ்கள் எதுவும் ஆக கூடாது என்ற நினைப்பில் .
     இரண்டாம் கூடாரத்தில் தான் அலுவலகம் ,கணிணி மற்றும் முக்கிய பொருட்கள் அங்கிருந்தது .தீ எரிந்து கொண்டிருக்கும்போது இங்கிலாந்தை சேர்ந்த டெர்ரி ஆண்டர்சன் எனது ப்ராஜெக்ட் மானேஜர் கூடாரத்திற்குள்சென்று கணினி மற்றும் பொருட்களை வெளிய கொண்டுவர உள்ளே சென்று விட்டார் .நல்ல வேளையையாக ஆஸ்திரேலியாவின் டாமியன் அவரை தடுத்து வெளியேற்றிவிட்டார்.
  இரண்டு கூடாரமும் முழுவதுமாக எரிந்து முடிந்தது கண்முன்னே .என்னுடைய அனைத்து பள்ளி ,ஐடிஐ ,தொழில் பழகுநர் சான்றிதழ்கள்,முன்பு வேலைபார்த்த அனுபவ கடிதங்கள் சில நினைவுபொருட்கள் ,அக்காவின் திருமணத்தின்போது மச்சான் பரிசளித்த மோதிரம்   கடவுசீட்டு(பாஸ்போர்ட்),கப்பல் வேலைக்கான சி டி சி மற்றும் தேவையான அனைத்தும் சில நிமிடங்களில்  சாம்பலாகிவிட்டது .சற்று முன்பு வரை நிறைய உடமைகளுடன் இருந்த நான்  உடுத்திருந்த துணியும்,சட்டை பையில் இருந்த கைகடிகாராமும் தவிர வேறொன்றும் இல்லாமலாகிவிட்டேன் .
  என்னை போல் அறுபது பேர் கடவுசீட்டு இழந்தவர்கள் .இருந்தாலும் என்னைப்போல் யாருக்கும் பெருத்த இழப்பு இல்லை .அனைத்து சான்றிதழ்களும் காலி. கூடாரம் இருந்த இடம் வெட்டவெளியாக கரியும் ,சாம்பலுமாக,புகைந்துகொண்டிருந்தது .
    இரும்பு கட்டில்களும் ,தகர அலமாரியும் எலும்புக்கூடாக காட்சியளித்தது.அதன் முன்பு தரையில் அமர்ந்து இரண்டு மணிநேரம் அழுதிருப்பேன் .அதுபோல் என் வாழ்வில்  எப்போதுமே நான் அழுததில்லை.பலரும் என்னை சமாதனாபடுத்தினர் ,ஒரு ராணுவ வீரன் நான் அழுவதை பார்த்து டாலர்களை கையில் தந்தான் .பணம் எனக்கு வேண்டாம் என்றேன் .அதை நான் சம்பாதிக்க முடியும் என் கவலையெல்லாம் நான் இழந்த சான்றிதழ்கள் மட்டுமே .பலரும் அவர்களுடைய பணம் இழந்ததற்கு தான் கவலைப்பட்டனர் .
 நண்பன் கார்த்தி மற்றும் உள்ளே தூங்கிகொண்டிருந்தவர்கள் கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு வெளியே வந்து விட்டதால் யாருக்கும் சிறு காயம் கூட இல்லை அதுதான் ஆறுதல். கார்த்திக்கு கையில் கிடைத்தது முக சவரம் செய்யும் பொருட்கள் அடங்கிய பை.
  முருகன் மட்டும் அதிர்டசாலி  தீ பிடிப்பதற்கு 5 நிமிடம் முன் எதற்க்காகவோ உள்ளே சென்றவன் தன்னுடைய அனைத்து உடமைகளையும் வெளியே கொண்டுவந்து விட்டான் .
   பின்பு அங்குள்ள பள்ளிவாசலின் முன் புறத்தில் அமர்ந்திருந்தேன் அங்கு தொழுகை நடத்தும் என்னையறிந்த ஒரு ராணுவ அதிகாரி ஷாகுல் ஆர் யூ ஒகே என கேட்டார் .நோ என்றேன் .எல்லாம் சரியாகிவிடும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய் என்றார் .
 அப்போது எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எனும் கீதையின் வரிகளை என்னால் ஏற்றுகொள்ள இயலாத நிலை.
   ஆனால் நான் பிரார்த்தனை செய்தேன் ,நிலநடுக்கம்,பெருவெள்ளம்,பெரும் தீயில் குடிசைகள் சாம்பலாவது ,புயல்,சுனாமி போன்ற இயற்கை சீற்றத்தினால் சில நிமிடங்களில் அனைத்தையும் இழந்து ,அனாதைகளாக மனிதன் நடுதெருவுக்கு வந்து விடுகிறான் .அந்த நிலைமை இந்த உலகில் எந்த உயிருக்கும் வரகூடாது என்றே பிரார்த்தனை செய்தேன்.
   மாலையில் குளித்தபின் எனக்கு கிடைத்தது ஒரு போர்வை அதை இரண்டாக கிழித்து நானும் லோகேசும் உடுத்துகொண்டோம் .
   அடுத்த அரைமணிநேரத்தில் மேற்பார்வையாளர் ஒறேன்ஸ் வந்தார் .தலைமை சமையற்காரர் பணிக்கு சென்றுவிட்டார் .மதிய உணவு கொடுக்கவில்லை .இரவு உணவு கொடுத்தே ஆக வேண்டும் என அழைத்தார்.
   நிறையபேர் நாங்கள் இனி பணிக்கு வரமாட்டோம் என்றார்கள் .மானேஜர் டெர்ரி ஆண்டெர்சன் வந்து அனைவரிடமும் பேசி பணிக்கு வரும்படி கெஞ்சினார்.சிலர் பிடிவாதமாக வரமுடியாது என்றனர் .
     நானும் மற்ற சிலரும் வேலைக்கு சென்றோம்.அன்று மட்டும் குறைவான உணவை சீக்கிரமாகவே தயாரித்து கொடுத்துவிட்டோம் .இரவு தூங்குவதற்கு மீண்டும் தற்காலிக கூடாரம் அமைக்கும் பணியில் நானும் இணைந்துகொண்டேன் .அப்போதே ராணுவ வீரர்கள் பலரும் தங்களிடமிருந்த உடைகள் கொண்டு தந்தனர் .வெற்றுடலாய் இருந்த எனக்கும் ஒரு மேலாடை கிடைத்தது .
  நாங்கள் நூறுபேர் அன்றிரவு படுப்பதற்க்கான கட்டில்களை ராணுவ கமாண்டோ தந்து உதவினார்.அது ராணுவ வீரர்களுக்கானது அதை சிறிதாக மடக்கி எங்கும் எளிதில் எடுத்துசெல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டது .இரவில் இந்திய தாய் தந்தைக்கு மகளான அமெரிக்க ராணுவ வீராங்கனை  மராத்தியை தாய்மொழியாக பேசும் ஆர்த்தி கதம் எங்களை தேடிவந்து ஆறுதல் சொன்னாள்.எனக்கும் ,கார்த்திக்கிற்கும் நல்ல தோழி அவள். 
   அன்றும் மறுநாளும் உடலிலும் ,மனதிலும் சக்தியே இல்லை .எதையும் செய்ய இயலவில்லை .அடுத்த சில நாட்களில் அனைவரும் மனதளவில் கொஞ்சம் இயல்புநிலைக்கு வந்தோம் .பணிக்கு வராதவர்கள் ஊருக்கு அனுப்பி வைக்கபட்டனர் .
   ஒரு  மாதங்களுக்கு பிறகு பாக்தாத்திலிருந்து இந்திய தூதரக அதிகாரிகள் வந்து பார்வையிட்டு எங்களுடைய புகைப்படம்ஒட்டிய விண்ணப்ப படிவங்களை நிரப்பி எடுத்து சென்றனர் .3 மாதங்களுக்கு பின் புதிய கடவுசீட்டு வந்து சேர்ந்தது.எங்கள் நிறுவனம் இழப்பீடு தொகையாக அறுநூறு அமெரிக்க டாலரும் ஒரு பயண பெட்டி வாங்க நாற்பது டாலரும் தந்தது.
  ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு வந்து சான்றிதழ்களுக்காக  அலைந்தேன்.முடிந்தவரை அனைத்தும் விண்ணப்பித்துவிட்டு மீண்டும் திக்ரித்  சாதமின் அரண்மனை நோக்கி சென்றுவிட்டேன் .
 கிட்டதட்ட ஒரு வருடம் நான் எப்போது கண் மூடினாலும் அந்த தீ என் கண் முன்னே எரிந்துகொண்டிருந்தது .பின்பு மெதுவாக மறந்துவிட்டேன் .இப்போது அது ஒரு நினைவாக மட்டுமே எஞ்சியுள்ளது .
செப்டம்பர் 13 ஒரு மறக்கமுடியாத நினைவே.விடிந்தால் செப்டம்பர் 13.
என் நண்பர்கள் பலரும் தெரிந்ததே இது.
12-09-2016
ஷாகுல் ஹமீது .

9 comments:

  1. நன்று.....குடாரங்களில் நானும் தங்கினதுபோல்....தீயை நானும் காண்கிறேன்...
    நானும் தீயணைப்பான் எடுத்து ஓட்டவேண்டும் என்று தோன்றியது....

    மேலும் உச்சகட்டம் கூட நன்று...

    தேதியொடு இணைந்து சொல்லப்பட்ட விதம் அருமை

    வளர்க... இந்த பதிவை பொருத்தவரையில் சரியான கமெண்ட் எழுத என் மனம் ஒப்பவில்லை...

    நான் இன்னும் அந்த கூடாரங்களுக்குள்ளே உங்கள் ஆவணங்களை தேடிகொண்டிருக்கிறேன்

    நன்றி
    தர்மா

    ReplyDelete
  2. ஆம் தர்மாஜி நானும் தீ எரிந்துகொண்டிருக்கும்போது எனது ஆவணங்கள் தகர ஆலமாரியுள் இருக்கும் என்றே நினைத்தேன் .தீ அணைந்தபிறகு கூடாரத்தில் போய் பார்த்தபோது சாம்பல்கள் மட்டுமே மிஞ்சின .ஒரு இரும்பு கருவி மட்டுமே கிடைத்தது .

    ReplyDelete
  3. ஷாகுல் அருமையான பதிவு, தொடர்ந்து கோர்வையாக சொல்லிக்கொண்டே வருகிறீர்கள். எவ்விடத்திலும் தொடர்பு அறுபடாமல் சொல்வதால் வாசிக்கையில் நானும் அந்த கதைக்களத்திலேயே இருக்கும் உணர்வு ஏற்படுகிறது. சாதாரணமாக துவங்கி திடீரென தீப்பிடித்ததில் வாசிக்கும் அனைவருக்கும் ஒரு திடுக்கிடல்
    எதிர்பாராமல் அதை படிக்கையில் அந்த தீ எரிந்தது எங்கள் முன்னிலும். நிர்கதியாக அனைத்தையும் நெருப்புக்கு கொடுத்துவிட்டு 2 மணி நேரம் அழுத உங்களை கண்ணெதிரே திரையில் பார்ப்பது போல் பார்த்தேன். 13 என்பது நல்ல எண் இல்லைதான் போலும் இல்லையா தம்பி?
    அதன் பிறகும் நீங்கள் அன்றைய பணிக்குசென்றதில் தெரிந்தது உங்கள் உள்ளத்தின் உறுதி. பிரார்த்தனை செய்து இருக்கிறீர்கள், ஒரு போர்வையை கிழித்து லோகேஷுடன் பகிர்ந்திருக்கிறீர்கள் மனம் தளர்ந்தாலும் மீண்டு விடுகிறீர்கள் . எத்தனை அருமையான உள்ளம் உங்களது? இந்த உங்களின் ஆளுமை வியக்க வைக்கிறது. இதை இளைஞர்கள் பலரும் வாசிக்க வேண்டும் தம்பி. அனுபவங்களே நம் ஆசிரியர்கள் என்பதை அப்போதுதன் உணார்வார்கள். என் மகன்களிடன் இந்த பதிவுகளை வாசித்துக்காட்டுகிறேன். உங்களைபோல் அனுபவங்கள் என் மகன்களுக்கும் வாய்ப்பதாக!!!

    ReplyDelete
  4. ஷாகுல், அமெரிக்காவில் கட்டாய ராணுவ சேவை கிடையாது. அரசியல் சட்டப்படி 18 - 26 வயதினர் ராணுவ சேவைக்கு தயார் என பதிந்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பின் மூலம் மட்டுமே ராணுவத்திற்கு இவ்வயதினரை கட்டாயமாக அழைக்கமுடியும்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா எனது தவறான புரிதல் .திருத்தும் செய்கிறேன் .சுட்டி கட்டியமைக்கு நன்று .

      Delete
    2. நன்றி. உங்களுடைய இப்பதிவு மிக முக்கியமானது. மிகச்சரியான ஆவணப்படுத்தலை செய்து கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

      Delete
  5. அன்பு ஹமீது,

    உண்மையில் மனதை கனக்க வைத்து விட்டது. ஒரு அயல் நாட்டில் நமது பாஸ்போா்ட் மற்றும் வாழ்வுக்கு ஆதாரமான சாட்சியான சான்றிதழ்கள் கண் முன்னே எாிந்து சாம்பல் ஆகும் பொழுது எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை பண்ணிக் கூட பாா்க்க முடியவில்லை. இறைவன் அளவற்ற மன தைாியத்தையும் வாழ்வின் உண்மையை உணா்ந்து முடிவெடுக்கும் திறனையும் அருளியுள்ளாா். எனது மகனும் இத்தாலி, துருக்கி, பப்புவா நியூகினியா போன்ற நாடுகளில் பணி செய்துள்ளாா். இப்படிப்பட்ட அனுபவங்கள் அதிகமாக கூறுவாா். அவற்றை கோா்வையாக கோா்த்து மாலையாக வாசா்களுக்கு அணியச் செய்து மகிழும் பணி போற்றுதற்குாியது தொடரட்டும் உங்கள் பணி.
    அன்புடன்
    ராதாகிருஷ்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராதாகிருஷ்ணன் அவர்களே ,
      இராக்கிலிருந்து வந்த பின் 2005 ம் ஆண்டு முதல் கப்பலில் பணிபுரிகிறேன் .கடந்த பத்து ஆண்டுகளில் மயிரிழையில் உயிர் தப்பிய அனுபவமும் ,திகில் அனுபவங்களும் நிறைவே உள்ளது .
      சதாமின் அரண்மனையில் பதிவை தொடர்ந்து .ஈராக் போர் முனை அனுபவங்கள் என அங்கிருந்த பதினெட்டு மாத அனுபவத்தையும் எழுதியுள்ளேன் .
      விரைவில் கப்பல் அனுபவங்களை எழுதுவேன் .
      தாயன்பு எனும் ஒரு கட்டுரை உள்ளது நேரம் கிடைத்தால் படிக்கவும் .
      ஷாகுல் ஹமீது

      Delete
  6. அப்போது எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எனும் கீதையின் வரிகளை என்னால் ஏற்றுகொள்ள இயலாத நிலை.செம நட்பே

    ReplyDelete