Thursday, 22 September 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள் .3




பாலையில்

குறிஞ்சி,முல்லை,மருதம், நெய்தல் என நான்கு வகை நிலங்களையும் தன்னகத்தே கொண்டது எங்கள் கன்னியாகுமரி மாவட்டம். நான் பிறந்து வளர்ந்த மணவாளக்குறிச்சி கிராமம் கடலும்,கடல் சார்ந்த நெய்தல் நிலமாகும். ஐந்தாவது நிலமாகிய பாலையை நான் முன்பு பார்த்ததே இல்லை .  அப்தலி பாலையில் ஒரு மாதம் வாழ்ந்திருந்தோம்.


 
மச்சான் இன்னைக்கு ஒரு மாசம் ஆயிட்டுதுடாஎன்றான் தீபக். ஒருமாதம் விரைவாகச் சென்றதே தெரியவில்லை.காலை ஆறுமணிக்கு முன்பே  எழுவேன்.  கழிப்பறையும், குளியலறையும் சுத்தமாகவும் ஆட்கள் இன்றியும் இருக்கும். என்னைப் போல் மிகச்சிலரே காலையில் எழுவர். அதனால் பரபரப்பில்லாமல் காலையில் தயாராகிவிடுவேன். எரிக்  முதல் நாளே சொல்லியிருந்தார்  காலை எட்டுக்கு முன் உங்கள் காலை உணவை முடித்துவிட்டு,  எட்டு மணிக்குப் பணியை துவக்கியிருக்க வேண்டும் என .  எட்டு மணிக்கு பணி துவங்கினால் சீக்கிரமாகவே இரவு வந்துவிடும் .

தங்கும் கூடாரத்தில் இருந்த குளிரூட்டி நாங்கள் முகாமுக்கு வந்த சில நாட்களிலேயே இயங்க ஆரம்பித்தது, சலவைக்கும் வசதி செய்து தந்தார்கள் . வாரத்தில் இரண்டுநாள் சலவை வண்டி வரும் பெயர் எழுதிய துணி பையில் துணிகளை போட்டு கொடுத்தால் துவைத்து,தேய்த்து அடுக்கி தருவார்கள் ,ஒவ்வொருமுறை வண்டி வரும்போதும் யாராவது எனது பையில் ஜட்டி இல்லை என புகார் செய்வதை கேட்கலாம்.பொம்பையா ஸ்டோர்ஸில் வேலை செய்தார். கரியநிறமும், ஒல்லியான உடல்வாகும் கொண்ட பொம்பையா ஆந்திராவைச் சேர்ந்தவர். “அண்ணகாரு பெட்ஷீட் துவைக்க கொடுக்கலையாவண்டி வந்திருக்கு என்றேன். “இது நான் வீட்லேருந்து  கொண்டுவந்தது.  எனக்க பொண்டாட்டிக்க மணம் இதுல இருக்கு இத சோப்பு போட்டு கழுவுனா அவளுக்க மணம் போயிரும் உனக்கு தெரியாதுஎன கண் சிமிட்டி சிரித்தார்.
  
நானும், நண்பன் கார்த்திக்கும் அங்கு சந்தித்த தீபக்குடன் நல்ல நண்பர்களானோம். மும்மூர்த்திகள்  என பிறர் எங்களை அழைத்தனர். தீபக் மலையாளி, சென்னையில் படித்தவன்.  ஆகவே,  அவனது தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கும். திருச்சி லோகேசும், தஞ்சை செல்வேந்திரனும் எங்களுடன் வந்தவர்கள்.  மும்பையில் நாங்கள் தங்கியிருந்த பகுதியில் வேறு அறையில் இருந்தார்கள்.  ஆகவே, முன்பே அறிமுகம் ஆகியிருந்தோம்.மைக்கேல் மும்பையில் ஒரு உணவு விடுதியில் பணிசெய்துகொண்டிருந்தபோது அங்கு ராயல் கன்சல்டன்சியின் உரிமையாளருடன் உணவருந்த சென்ற நைஜில்,மைக்கேல் பேசிய ஆங்கிலத்தால் கவரப்பட்டுகுவைத்துக்கு வருகிறாயா ? என அழைத்து தனது முகவரி அட்டையை கொடுத்துள்ளார். இங்கு வந்தபின் மைக்கேல் தினமும் அவரைத் வசைபாடிக்கொண்டிருந்தான். பாலைவனத்தில் தான் வேலை என்பதறியாமல் வந்திருந்தான்.
 
குவைத்தின் வேலை விசா வைத்திருந்தவர்கள்,  எங்களுடன் நிறையப்பேர் இருந்தனர். அனைவரும் மலையாளிகள். அவர்கள்,  குவைத் முகவர் குமார் உதவியுடன் எங்கள் முகாமிற்கு வந்தவர்கள். பலரும் குறைந்த ஊதியத்தில் குவைத்தின் வெவ்வேறு இடங்களில் வேறு,வேறு பணிகளில் இருந்தவர்கள. இங்கே நல்ல ஊதியம் கிடைத்ததால் இங்கு வந்தார்கள். அவர்களில் பலருக்கும் இந்தப் பாலைவன வாழ்க்கை பிடிக்கவில்லை. இளவயது மலையாளிநமக்கு இங்க ஒக்காது. இது ஜெயில் வாழ்க்கையாக்கும்என சொல்லிக்கொண்டிருந்தான்.  அவர்களில்  ஒருவர் இமாம் வெள்ளிக்கிழமைகளில் அவர் எங்கள் முகாமில் ஜூம்மா தொழுகை நடத்துவார்.

முகாமில்  ஜார்ஜ் சேட்டன் மிக பிரபலம் . ஐம்பது வயதை நெருங்கியவர். நல்ல கட்டி மீசையும் ஆப்பிள் வடிவ தொந்தியுமாக இருப்பார். “ஷாஹுலே நினக்கு நரோல் ,நான் பண்டு அவிடயக்க லோரி ஒட்டியாதாணுஎன்றார். “நான் ஒரு கல்யாண வீட்டில் சமைத்தபோது அவியல் நன்றாக இருந்தது என நூறு ரூபாய் பெண்ணுக்க அப்பன் என் கையில் தந்தார்என்பது போன்ற தற்பெருமைகளை சொல்லிக்கொண்டே இருப்பார். அவரை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். அவ்வப்போது மேரியுடன் வாடகை கேட்டு கைப்பேசியில் பேசுவார் . ஒருநாள் போனில்எடி மேரி பைசா எவிட, வெள்ளியாச்சா பைசா தந்தில்லங்கி நின்னே இறக்கிவிடும்  மோளேஎன சொல்லியபின்   பல கெட்ட வர்தைகாளால் திட்டினார்.

வெள்ளைக்காரன் ஆண்டிசேட்டன் என்றால் என்ன அர்த்தம்எனக் கேட்டான். பின் அவனும் ஜார்ஜை,  சேட்டா என்றே அழைத்தான். ஒருநாள்  ஜார்ஜ்க்கும் எனக்கும் சிறு  சண்டை.  ஜார்ஜ் மலையாளிகளை துணைக்கு அழைத்தார். எனக்குத் துணையாக தீபக் வந்தான்.மச்சான் என்னடா பிரச்சனைஎன  ஜார்ஜ்- மிரட்டினான்.  மற்றவர்கள்மலையாளிகுக்குள் சண்டை வேண்டாம் .தீபக் நீ போஎன்றனர். “எவண்டா வாடா , அவன் என் நண்பன்.  எனக்கு மலையாளி, தமிழ்னு ஒன்னும் கிடையாது. மச்சான்,  பார்த்துருவோம் இவனுகள அடிச்சு போட்டுட்டு ஊருக்கு போகவும் நான் தயார் என்றதும் அனைவரும் விலகி சென்றனர்.

அப்போது போர்முனை சலுகை என வாரம் பதினான்கு  குவைத் தினார்கள் கிடைத்தது. மாதச் சம்பளம் தொண்ணூறு தினார்கள் எனக்கு. குவைத் தினார் உலகின் அதிக பணமதிப்புமிக்க நாணயம். அப்போது இந்திய மதிப்பில் ஒரு தினாருக்கு நூற்றி ஐம்பத்தி ஒன்பது ரூபாயாக  இருந்தது. அங்கு பணி துவங்கிய இரண்டாவது வாரம் முதல் வார விடுமுறை அறிமுகமானது. நான்,கார்த்திக்,தீபக்  மூவரும் ஒரே நாளில் விடுமுறையை வாங்கிக் கொண்டோம். விடுமுறை நாளன்று,  காலை சிற்றுந்து ஒன்று வரும் எங்களை குவைத்தின் மிர்காப் நகருக்கு வண்டியில் அழைத்துச் செல்வர். வேறு முகாம்களிலிருந்தும் பணியாளர்கள் வருவார்கள். என்னுடன் வந்த செழியன் வேறு முகாமுக்கு மாற்றுதாலாகிச் சென்றிருந்தான் பின்பு அவனை ஒருமுறை விடுமுறை நாளன்று மட்டுமே சந்தித்தேன். காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை மிர்காப் நகரிலுள்ள குளிரூட்டப்பட்ட வணிகவளாகங்களில் சுற்றி வருவோம். பார்க்கும் அனைத்து பொருட்களும் தேவையுள்ளதாகவே தோன்றும்.

தொலைபேசி நிலையங்களும், இணைய நிலையங்களும்  நிறைய இருந்தது. அங்கிருந்து அனைவரும் வீட்டிற்கும் அழைப்போம் . அங்குள்ள இந்திய உணவகத்தில் எழுநூற்றைம்பது  பில்ஸ்க்கு மதிய சாப்பாடு.(ஆயிரம்  பில்ஸ் = ஒரு  தினார் ) விடுமுறை நாளில் வெளியே சென்றால் அதிகபட்சம் எனக்கு மூன்று  தினார்களுக்கு மேல்  செலவில்லை. சில நாட்களில் நாங்கள் மூவரும் ஐந்து மணி வண்டியில் செல்வதில்லை. எட்டு மணி வரை சுற்றிவிட்டு தனியாக மலையாளி ஒருவரின் மகிழுந்தில் செல்வோம் .அங்கே அவ்வப்போது  மணல் புயல் வீசும் . மணல் காற்றுடன் சுழன்றடிக்கும். எதிரில் நிற்பவர் கூட தெரியாது . எங்கள் கூடாரமே கிழே விழுந்து விடுமோ என அச்சமாக இருக்கும் . மணல் புயல் சில நிமிடங்கள் வரை நீடிக்கும். அப்போது பணியை நிறுத்திவிட்டு முடிந்தவரை விரைவாக அனைத்து உணவு பதார்த்தங்களையும் மூடி வைப்போம். வாகனங்களும் அப்போது சாலையில் செல்ல இயலாது. சாலை ஓரமாக நிறுந்திவைத்திருப்பதாக ஓட்டுனர் ஒருவர் சொன்னார்.

ஒரு மாதத்திற்க்குள்ளாக அமெரிக்க அதிகாரி எரிக் சென்றுவிட்டார். எரிக் வந்த புதிதில்சார் குட் மார்னிங்என்றான் கோவாவின் சாவியோ. “என் பெயர் எரிக் என்னை எரிக் என்றழைஎன்பார்.  அவர்கள் எவ்வளவு உயர் பதவியிலிருந்தாலும்,  அவர்களை பெயர் சொல்லி தான் அழைக்க வேண்டுமென்பதை அப்போது அறிந்தேன்.  புதிய அதிகாரி தென்னாப்ரிக்காவின் டேவிட் முகாமிற்கு புதிய பொறுப்பாளராக வந்தார் . பெரும்பாலான வீர்ர்கள் தாயகம்  திரும்பிவிட்டதால் வேலை வெகுவாக குறைந்து விட்டது ஒரு நாளில் எழுநூறுக்கும் குறைவாகவே உணவு தயாரிக்க வேண்டியிருந்தது .
டேவிட் டோன்ட் வான்ட் சோ மெனி பிப்பிள் ஹியர்என சொல்லி   அனைவருக்கும் வாரத்தில் இருநாட்கள்  விடுமுறை தந்தார். ஆனால், ஒருநாள் தான் குவைத் நகருக்கு செல்லவேண்டும். இரண்டாம் விடுமுறை நாளில் முகாமிலேயே இருக்கவேண்டும் , மட்டைப்பந்தோ ,கைபந்தோ விளையாடுங்கள் எப்போது அழைத்தாலும் வரவேண்டும் என்றார்.   

வேலை வெகுவாக குறைந்து விட்டதனால்,  காலை மூன்று மணிக்கே நாங்கள் மட்டைப்பந்து  விளையாட தொடங்கினோம் அப்போதே இங்கு வெளிச்சம் வந்துவிடும். இங்கு கோடையில் வெப்பம் ஐம்பத்திரண்டு  பாகைக்கு சென்றுவிடும். கட்டுமான பணி, வெளியில் வேலைசெய்பவர்கள் காலை நான்கு மணிக்கு பணி துவங்கி பதினோரு மணிவரையிலும்,  பின்னர் மாலை நான்கு முதல் ஆறு மணிவரையிலும் பணி செய்வார்கள் என அறிந்தேன் .

எனக்கு சூடு காரணமாக இடது கை அக்குளில் கொப்புளங்கள் வந்தது சட்டை அணிய இயலவில்லை.பணிக்கும் செல்லவில்லை,மூன்று நாட்கள் ஜக்ராவிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கும் கேரள செவிலியர்கள் பணி புரிகின்றனர் .பாகிஸ்தானி காரோட்டி என்னை அழைத்து செல்வார் .ஒருநாள் சாலையில் குவைத் அதிகாரிகளின் வாகன சோதனை நடந்தது .காரோட்டி அவரது அக்காமா,ஓட்டுனர் உரிமத்தை காண்பித்தார் .என்னிடம் எங்கள் நிறுவன   அடையாள அட்டையை தவிர எதுவும் கிடையாது.எனக்கு அரபி மொழியும் தெரியாது.முன் இருக்கையில் சட்டையும் ,இருக்கை பட்டையும்  அணியாமல் இருந்தேன். அந்த அதிகாரி என்னுடைய ஆவணங்களை கேட்டார். இல்லைஎன்றார் காரோட்டி இப்னு அப்பாஸ் .  ஏன் இல்லை என்பதற்குஇவன் அப்தலி எல்லையில் அமெரிக்க இராணுவத்துடன் இருக்கிறான்என்றபோது மேற்கொண்டு எந்த கேள்வியும்  இல்லமால்  அனுப்பி வைத்தார் அந்த அதிகாரி .

 இரண்டரை மாதத்தில் டேவிட் அனைவரையும் அழைத்து கூட்டம் ஒன்று நடத்தினார்.  நமது நிறுவனம்,  புதிதாக ஈராக்கில் வேலைக்கு ஒப்பந்தமாகியுள்ளது . உங்களில் விருப்பம் உள்ளவர்களை,  ஈராக் செல்ல அழைக்கிறோம். ஈராக் செல்ல விரும்பாதவர்களுக்கு,  இந்தியா செல்ல விமான சீட்டு தந்துவிடுவோம் என்றார்.  ஆறு மாத ஒப்பந்தம். இங்கே இரண்டரை மாதம் இருந்தவர்கள் மூன்றரை மாதத்திற்குப் பின் அங்கிருந்து தாயகம் செல்லலாம் என்றார் .நாங்கள் பத்து பேர் தமிழர்கள் மும்பையிலேயே அறிமுகம் ஆனவர்கள். கலந்தாலோசித்தோம்.  சதாம் பற்றி வரலாற்றில் படித்திருக்கிறோம்.   அந்த அரண்மனைகளை போய் நேரில் ஒருமுறை பார்த்து விடலாம் பிடிக்கவில்லையெனில் மூன்றரை மாதத்தில் திரும்பி வந்துவிடலாம்  என்று  கார்த்திக்  சொன்ன யோசனை ஏற்றுகொள்ளபட்டு புறப்பட தயாரானோம் ஈராக்கை நோக்கி .விரைவில் செல்ல வேண்டியிருக்கும் செல்லும் தேதி பின்னர் சொல்வோம்என்றார் டேவிட் .  ஈராக் பயணத்திற்கு தேவையான பொருட்களை வாங்க மிர்காப் நகருக்கு சென்றோம். அன்று வெள்ளிகிழமை அங்குள்ள மசூதியில் ஜும்மா தொழுதேன் . நம்மூர் போல அங்கிருந்த கடைவீதியில்  நானும் லோகேசும் ஆறு  தினாரில் ஒரே மாதிரியாக பயண பையும்,வேறு சில பொருட்களும் வாங்கிகொண்டோம் இப்போது கையில் தேவைக்கு அதிகமாக காசு இருந்தது .

மாலையில் அங்கு பெருங்திரள் கூடியிருந்தது அங்கு வேலை செய்யும் இந்தியர்கள் சந்தித்து கொள்கிறார்கள் . வீட்டு வேலை செய்யும் பெரும்பாலான பெண்கள் அன்று மட்டும் சில மணிநேரங்களுக்காக வெளியே செல்ல அனுமதிக்கபடுகிறார்கள் போல. கூட்டம் கூட்டமாக நின்று சப்தமாக பேசிக் கொண்டே இருந்தனர். குறைவான நேரம் காரணமாக அதற்குள் அனைத்தையும் பேசி விட வேண்டுமென எண்ணுகிறார்கள் போல .பெரும்பான்மையானவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள்.உரையாடல்கள் தெலுங்கில் தான் கேட்டுக் கொண்டே இருந்தது. வேறு வேறு இடங்களில்  வேலை செய்யும் கணவன்,மனைவி கூட அதில் இருந்தனர். அந்நிய மண்ணில் பிழைப்புக்காக வந்திருப்பதால், கணவனும் மனைவியும் சந்திப்பது சில மணிதுளிகள், அதுவும் வாரத்தில் ஒரு நாள்.  ஒரு திறந்த வெளி மைதானத்தில். சுற்றிலும் பெருந்திரளுக்கு மத்தியில் .  எல்லாம் ஒரு சாண் வயிற்றுக்காக.
 
நானும் ,கார்த்திக்கும், ஈராக்கின், பக்குபா எனும் இடத்திற்கு தேர்வாகியிருந்தோம். மற்றவர்கள் வேறு வேறு இடம் என பிரிந்து விட்டனர்.

(தொடரும் )
ஷாகுல் ஹமீது .

3 comments:

  1. கடினமான வித்தியாசமான எத்தனை பணியில் இருந்திருக்கிறீர்கள் எனும் வியப்பு மென்மேலும் கூடிக்கொண்டெ போகிறது ஷாகுல். பதிவுகள் வர வர நுண்ணிய சித்தரிப்புகளைக்கொண்டிருப்பதால் மனம் பல சமயங்களில் கனத்து விடுகிறது. அதுவும் அந்த கணவன் மனைவி வாரம் ஒருமுறை கூட்டத்தில் சந்திப்பது , கஷ்டமாயிருக்கிறது என்றால் அதற்கான உங்கள் எதிர்வினை “ஒரு ஜான் வயிறுக்காக” என்பது இன்னும் கலங்கடிக்கிறது.
    நீங்களும்தன் எத்தனை கஷ்டங்களில் இருந்திருக்கிறீர்கள்?
    மணல் காற்றும் கொப்புளங்களும், பயணங்களும், சண்டைகளும், இத்தனை அனுபவங்களில் நீங்கள் பண்பட்டிருப்பது உங்களில் எழுத்துக்களில் தெரிகிறது.
    ஈராக்கின் வறுமை எனக்கும் அதிர்ச்சியாகவே இருக்கிறது. பலர் எழுதும் பயணக்கட்டுரை போலல்லாமல் உங்கள் பதிவு ஒரு திறனாய்வுக்கட்டுரை போல நடுநிலையில் உண்மை தளத்தில் இருப்பதால் கசக்கும் உண்மைகளுக்கு வாசிக்கும் நாங்களும் மிக அருகில் செல்கிறோம். ஷூ இல்லாவிட்டால் அனுமதி இல்லையா? உங்கள் பயணப்பை பத்திரமாக கிடைத்ததா?
    பதிவுகள் தொடர்வதற்காக காத்துக்கொண்டிருக்கும் வகையிலேயே முடிக்கிறீர்கள்
    அன்புடன்
    லோகமாதேவி

    ReplyDelete
  2. Indiavula Tamil nattula evvalavu sogusa irukkomnnu therigiradu ....ida padikkumpodhu.....

    ReplyDelete