Sunday, 25 September 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள் 5


     
                                   5. பாக்தாத்தில்

கதிரவன் நன்றாக வெளியே வந்தபின்தான்ராணுவ வாகனங்கள் செல்வதற்கு அணிவகுத்து நின்றன. இங்கிருந்து இரண்டுக்கும் மேற்பட்ட வாகன பாதுகாப்பு தொடரணிகள் சென்றன. வேறுவேறு  பகுதிகளுக்குச்  செல்லும் வாகனங்கள் உரிய பாதுகாப்புத் தொடரணியில் இணைந்து கொண்டன. நாங்கள் பாக்தாத் செல்லும் வாகனத் தொடரணியில் இணைந்துகொண்டோம். கோடையில் இங்கு இளங்காலை இல்லை எனலாம். விடிந்த சிறிது நேரத்திற்குள் கதிரொளி சுள்ளென சுடத்தொடங்கிவிடும் .

முந்தைய நாள் இரவில் சிற்றுந்தின் இருக்கையில் கண்மூடியமர்ந்திருதேன்சிறுது நேரம் உணர்வுகளுடன் துயின்றிருப்பேன். எண்ணங்களும், கனவுகளுமாக கழிந்த நீண்ட இரவு அதுதூங்காத இரவுகள் அனைவருக்கும் மிக நீளமானதுதான். இராண்டாம் நாள் பயணத்தில்  அனைவருக்கும் பயஉணர்வு குறைந்திருந்ததுமுந்தையநாளில் கண்ட புழுதிபடிந்த வெட்டவெளிகள் கொஞ்சம் மறைந்து சிற்றூர்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளுமாக பயணம் தொடர்ந்தது. குவைத்திலும், ஈராக்கிலும் கட்டிடங்களுக்கு வண்ணச்சாயம் பூசியிருக்கவில்லை. மண்ணின் நிறத்திலேயே  கட்டிடங்கள் இருந்தன.

           


தலைநகரை நெருங்கும்போது குண்டுகளுக்கு இரையான கட்டிடங்கள் சின்னாபின்னமாகி, கைவிடப்பட்டநிலையில் நிறையவே தெரிந்தன. சதாமின் பிரமாண்ட சிலை சிதைக்கப்பட்டிருந்ததைக்   கண்டோம்எங்கள் வண்டியில் ஒரு குரல் இப்படியாக இருந்தது இந்த நாட்டின் பல ஆண்டுகள் சர்வாதிகாரியாக இருந்தவர் கற்துண்டுகளாக கிடக்கிறார்என. மாலையில் ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தை அடைந்தோம் .

பாக்தாத்தின் விமான நிலையமும் அமெரிக்கப் படையின் முழுக்கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஆனால்விமான நிலையம் இயங்கவில்லை. எங்கள் வாகனத்தொடரணியை விமான நிலையத்தின்  பின்புறமிருந்த வாயிலில் காவலர்கள் சோதனை செய்தபின், உள்ளே அனுமதிக்கப்பட்டோம். எங்களுடன் வந்த மற்ற  ராணுவ வாகனங்கள் பிரிந்து சென்றன. எங்களின் சிற்றுந்து மட்டும் தனித்து விடப்பட்டது. விமானநிலைய ஓடுபாதையோ, விமானநிலையத்தின் கட்டிடங்களோ எங்களுக்குத் தென்படவில்லை. இன்றிரவு இங்கு தங்கிவிட்டு காலையில் புறப்புடுவோம்அருகில் தான் பக்குபா என்றனர். மாலையில், எங்களுடன் வந்திருந்த மும்பையின் ஸாம்அமெரிக்கர்களின் ரக்பி பந்து ஒன்றை கண்டெடுத்தார். இருட்டும் வரை மகிழ்ச்சியாக அதில் கால்பந்து விளையாடினோம் .

நானும் நண்பன் ஒருவனும் இரவில் எங்களுடைய சிற்றுந்தின் மேல் படுத்துக்கொண்டோம். தேய்நிலவு நாளானதால்நட்சத்திரங்கள் பிரகாசமாக மின்னிக்கொண்டிருந்தது. ஊரில் கடற்கரைக்குச் செல்லும் வழியிலுள்ள அந்தோணியார் கோயிலருகிலுள்ள வெட்டவெளி மணலில் கருக்கலில் நண்பர்களுடன் நட்சத்திரங்களை ரசித்ததை சொல்லிகொண்டிருந்தேன். அந்த இனிய நினைவு நீடிக்கவில்லைபயங்கர சப்தத்துடன் குண்டு வெடிக்கும் சப்தம் கேட்டதுபயத்தில்  எழுந்து அதிர்ச்சியுடன் கீழே இறங்கினோம். பின்பு பேருந்தினுள் சென்று அமரும்படி வேண்டினர். அது தான் நான் கேட்கும் முதல் குண்டு வெடிக்கும் சப்தம். அப்போது தெரிந்திருக்கவில்லைதினமும் அருகிலேயே பொழியும் குண்டு மழையில் தான் இனி நாட்கள் கழியப் போகிறது என.

 நானும் நண்பனும் சிற்றுந்தினுள் ஏறும்போது,   ஸாம் சிரித்துக்கொண்டே  பஸ்ஸுக்கு மேல குண்டு விழுந்தா என்ன செய்வதுஎனக் கேட்டார்.   யாரிடமும் அதற்கு  பதில் இல்லை. நெடுநேரத்திற்குப் பின் எப்போதோ தூங்கியிருப்பேன். காலையில் எழுந்தபோது, கொஞ்சம் பிரட்டும் பாலும் சாப்பிடக் கிடைத்தது. காலை பத்துமணிக்கு மேல்தான் எங்களுடைய வாகனம் புறப்பட்டது. பாக்தாத் விமானநிலைய வாயிலிலிருந்து சாலைக்கு வந்ததும்  பாதுகாப்புக்கு வந்த ராணுவ வாகனங்கள் எல்லாம் பிரிந்து சென்று விட்டது. எங்கள் வண்டிக்கு முன்னால் ஒரு ஜீப் மட்டும் வழிகாட்ட அதைப் பின் தொடர்ந்து சென்றோம்.

இப்போதுதான் பயம்நிறைந்த பயணம் தொடங்கியது. ரோகன் நாம் மட்டும் தனியாகச் செல்கிறோம் , மிலிட்டரி வண்டி ஒன்னும் நம்ம கூட வரலஎன அவன் பங்குக்கு பீதியை கிளப்பிவிட்டான். இரு தினங்கள் அதிநவீன துப்பாக்கி ஏந்திய ராணுவ வாகனங்களுடன் வந்ததால் இப்போது தனித்துச் செல்வது  பாதுகாப்பற்றதாக தோன்றிற்று. பாக்தாத் சாலைகள் நல்ல நீள, அகலமாகவே இருந்தது. நீண்ட நாள் பாராமரிக்கப்படாததால் குலுங்கியும், சாய்ந்தும் மெதுவாக சென்றுகொண்டிருந்தது எங்கள் வாகனம். ஒற்றைக் கழுதை வண்டியில் பொதிகளுடன் சென்றவர், எங்களைப் பார்த்துக் கறைபடிந்த பற்கள் தெரிய புன்னைகத்து கையசைத்தார். அவர் கந்தலாடைகளை அணிந்திருந்தார். தொடர் போர்களினால் பாதிக்கப்பட்டதின் விளைவு தலைநகரின் முக்கிய சாலையில் தெரிந்தது. இல்லையெனில, முன்னேறிய நாடுகளில் ஒன்றாக இருந்திருக்கும், ஈராக். பதினோரு  ஆண்டுகள் ஈரானுடன் போர். பின் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொன்னூற்றி ஒன்றாம் ஆண்டில் குவைத் எனது மாநிலம் என சதாம் படைகளை அனுப்பி பிடிக்க அப்போதும் போர்அமெரிக்கா படைகளை அனுப்பி குவைத்தை மீட்டதுஇப்போது மீண்டும் போர் .

மதியத்திற்குள் பக்குபாவை அடைந்தோம். வாயிலில் எங்கள் அனைவரின் உடமைகளையும், பயணப்பைகளையும் ஏற்றிவந்த வண்டியிலிருந்து இறக்கி ஒன்று விடாமல் சோதனை செய்தனர்வாகன தொடரணியுடன் பயணித்த இருநாட்களும்    நாங்கள் இரவு தங்குவதற்கு முகாம்களுக்குள் நுழையும்போதுபோது ராணுவ வாகனங்களுடன் சென்றதால் அதிக சோதனைகளின்றி தப்பித்தோம்.

 பொதுவாக முகாம்களுக்குள் செல்லும்போது வாயிலில் இருக்கும் காவலர்கள் முதலில் கேட்பது கைய்ஸ்ஆர் யூ ஸ்பீக் இங்கீலீஷ்?” என. ஆம் என்றால்,அங்கேயே நில் என்பான். வாயிலிலிருந்து பத்தடி தூரத்தில் அசையாமல் நிற்கவேண்டும். வாயிலில் இருக்கும் காவலர் குழுவின் துப்பாக்கிகள் எங்களை நோக்கியிருக்கஒரேயொரு வீரன் மட்டும் அருகில் வந்து அடையாள அட்டைகளை பார்த்தபின்இயேசுநாதர் போல் கைகளை விரித்து நிற்கவேண்டும். உடலில் ஏதேனும் ஆயுதங்களை பதுக்கிவைத்துள்ளனரா என கைகளால் உடல் முழுதும் தடவி உறுதி செய்தபின் ஒவ்வொருவராக வாயிலை நோக்கிச் செல்லவேண்டும். அங்கிருக்கும் குழு துப்பாக்கி முனையில் உடமைகளை சோதனை செய்து முடித்தபின்தான் உள்ளே செல்லமுடியும். அதன் பின் தான் எகிறிய இதயத்துடிப்பு மெதுவாக கீழிறங்கும்  எங்களுக்கு .

எங்களுடன் வந்த பிரதீக் உலகம் முழுவதும் எதிரிகளை சம்பாதித்து வைத்துள்ளனர். அதனால் தான்யாரைக் கண்டாலும் இவனுவளுக்கு பயம். நகம் முடி என அனைத்தையும் சோதிக்க காரணம்என்றான்ஒரு சிலரிடமே செல் போன்கள் இருந்தது. பக்குபா முகாமின் வாயில் காவல் படை வீரர்கள் , அதை வாங்கி வைத்துக் கொண்டனர்என்னிடம்குவைத் முகாமில் அமெரிக்க அதிகாரி எரிக் அன்பளிப்பாகக் தந்த வளைந்த,கைப்பிடியுடன் கூடிய போர்க்கத்தி  இருந்தது. அதையும் அவர்கள் அனுமதிக்கவில்லை .

அவர்கள் முகாமிற்குள் அனுமதிக்காத போனுக்கும், கத்திக்கும் சீட்டுகளில் எழுதித்தந்துவிட்டு எங்களனைவரையும், இரண்டு மணிநேர நீண்ட சோதனைக்குப்பின் உள்ளே செல்ல அனுமதித்தனர். பக்குபா ஈராக்கின் விமானப்படை மையமாக இருந்திருக்கிறது. ராணுவ ஹெலிகாப்டர்களும், விமானங்களும் இறங்கும் வசதியுடன்கூடிய மையம்  அது. அமெரிக்கப் படைக்கு கிடைத்த வசதியான ஒரு விமானத்தளம்  அது. அவைகளை பயன்படுத்திக் கொள்ளவே அமெரிக்கா அங்கே ஒரு முகாமை அமைத்திருந்தது.

பக்குபாவின் மணல் பெரும் தூசு படலம். காலைத்  தரையில் வைத்தால் இரு  அங்குலத்திற்கு மேல் புதையும். வாகனங்கள் அருகில் சென்றால், தூசு படலம் காற்றில் பறந்து  எதிரிலுள்ள  எதுவும் தெரியாது. எங்களுக்கு குடியிருப்பு கூடாரம் மட்டுமே இருந்தது. உணவுக்கூடம் இன்னும் தயாராகவில்லை. குளீருட்டி வசதி செய்யப்பட்ட தங்கும் கூடாரத்தில், நான்கு குளிரூட்டிகள்  செங்குத்தாக ஆறு அடி உயரத்தில் நின்றுகொண்டிருந்தது . குளிரூட்டிக்கு அருகில் இருந்த கட்டில்களுக்கிடையில் நிறைய இடைவெளி இருந்ததால் நானும் கார்த்திக்கும் அதனருகில் உள்ள இரு கட்டில்களில் எங்களது பைகளை வைத்து  இது எனக்குஎன இடம் பிடித்துக்கொண்டோம் .

அன்றிரவு கூடாரத்தின்  வெளியில் இடுப்பளவு உயரத்தில் கான்கீரிட்டால் அமைக்கப்பட்ட மேடையில் மின்சார அடுப்பு வைத்துஅதன் மூன்று புறமும் பலகைகளால் மறைக்கப்பட்டிருந்த தற்காலிக மேற்கூரையில்லா திறந்தவெளி  அடுமனையில் எங்களுக்கு இரவுணவாக சாதமும், கோழிக்குழம்பும் தயார் செய்தனர். கோழிக்குழம்பின் மணத்தை நுகர்ந்த இரு ராணுவ வீரர்கள்காற்றில் அந்த  வாசனை  மிதந்துவந்த பாதையைத் தொடர்ந்து நடந்து,      எங்களின் அடுமனைக்கருகில் வந்து சேர்ந்தனர். உணவு தாயாராகிக்கொண்டிருப்பதைக்  கண்டதும்,   இருவரும் ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்துவிட்டு காத்திருந்தனர். புத்துணவு கிடைக்கும் மகிழ்ச்சி அவர்கள் விழிகளில் தெரிந்ததுஓரமாக ஒதுங்கியே நின்றுகொண்டிருந்தனர். எதுவும் பேசிக்கொள்ளவிள்ளவில்லை. உணவு தயாரானதும்முதலில் அவர்களை அழைத்து உணவைக் கொடுத்தோம்.

நன்றிஎன பலமுறை சொன்ன பின் வெள்ளைநிற நெகிழியானால் ஆன தட்டுகளில் ஆவி பறக்கும் உணவை இருகைகளாலும் வாங்கிச்  சென்றனர். இந்தியர்கள் சாப்பிடும் அந்த காரம் அவர்களால் சாப்பிடவே இயலாது. தட்டு நிறைய சோறு சாப்பிடும் பழக்கமும் அவர்களுக்கில்லைநீண்ட நாட்கள் பையில் அடைத்த காய்ந்த உணவை சாப்பிட்டு நாக்கு செத்து போனவர்களுக்கு, சூடாக புத்தம் புதிதாக கிடைக்கும் உணவு அமிர்தம் தானே. பசி ருசியறிவதில்லை. பசியுடன் இருப்பவர்களுக்கு முதல் தேவை உணவுதானே. அன்று அவர்கள்  நிறைவாக  சாப்பிட்டிருக்கலாம். மறுநாள் முதல்தினமும் இரவில் மூன்று அல்லது நான்கு பேர் வந்தனர் .

அன்றிரவுநாங்களும் இருநாட்களுக்குப் பிறகு சாப்பிட்ட நிறைவை உணர்ந்தோம் .

6.பக்குபா விமானப்படை முகாமில் .
தூசி மிகுந்த பக்குபா முகாமில், இரவில் துயின்று காலையில் விழித்தபோதுதான்,  குவைத்திலிருந்து புறப்பட்டு மூன்று நாள் பயணத்தில் குளிப்பதை முற்றிலும் மறந்துவிட்டிருந்தோம் என்பதை உணர்ந்தோம்.

எங்களை பாக்தாத்திலிருந்து பக்குபாவிற்கு வழிகாட்டி அழைத்துவந்தவர் தென்னாப்பிரிக்காவின் எட்வர்ட். அவரது தலைமையில் கூடாரம் அமைக்கும் குழு பத்து நாட்களுக்கு முன்பே பக்குபா வந்திருந்தது.  எட்வர்ட் எங்களிடம்நமக்கான குளியலறை தயாராவதற்கு தாமதமாகும்.  அதுவரையில்,  இங்கே குளிப்பதற்கு ராணுவ வீரர்களுக்கான குளியல் அறைக்குத்தான் செல்லவேண்டும். தண்ணீர் இருப்பதை பொறுத்து நம்மை அனுமதிப்ப்பார்கள்என்றார்.

அன்று பின்மாலையில்தான் எங்களுக்கு குளிப்பதற்கான அனுமதியைப் பெற்றுத்தந்தார் எட்வர்ட். “அனைவரும் ஒன்றாக செல்ல இயலாது இன்று உங்களில் பத்து பேர் மட்டும் செல்ல அனுமதிஎன்றார். கார்த்திக்பிரதர், சீக்கிரம் வாங்கஎன்றான். மாற்றாடை மற்றும் துடைக்கும் துண்டுகளுடன் ஐந்து நிமிடம் நடக்கும் தொலைவிலுள்ள குளியலறை கூடாரத்தை நோக்கி நடந்தோம். நான் கார்த்திக்கிடம்நாங்கோ சின்னபுள்ளைல வள்ளியாத்துல குளிக்க இப்படித்தான் செல்வோம்என்றேன். குளியலறையின் உள்ளே சென்றால் முதல் அறையில் துணிகளை அவிழ்த்து வைத்துவிட்டு, பின் உள் அறைகளில் சென்று குளிக்க வேண்டும். ஆடை மாற்றும் முதல் அறையில் இரு ஆளுயரக் கண்ணாடிகள் இருந்தன. உள் அறையில் எதிரெதில் திசைகளில் ஆறு பேர்  வீதம்  குளிக்கும் அறைகள் இருந்தன. தண்ணீர்க் குழாயை திறந்தபின் மறைத்துக்கொள்ள கதவோ , திரைச் சீலையோ  இல்லை. அருகிலேயே ராணுவ வீராங்கனைகளுக்கான குளிக்கும் கூடாரமும் இருந்தது.

 மூன்றாம் நாள் காலையில்  அறிமுக உரையுடன் ஒரு கூட்டம். தினமும் கூட்டம் நடத்தாமல் எந்த வேலையையும் அவர்கள் துவங்குவதில்லை. தவறுகளும், புரிந்துகொள்ளாமையும் அதனால் பெரும்பாலும் தவிர்க்கபடுகிறது.
   பக்குபா உணவுக்கூடத்தின் தலைமை அதிகாரியான இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த ரஸ்ஸல் அவர்களும், நியுசிலாந்து நாட்டு இரு துணையதிகாரிகளும் வந்திருந்தனர்.  ரஸ்ஸல் எங்களிடம்இங்கே உணவு  கூடம் மற்றும் அடுமனைக்கான  பெரிய கூடாரம் தயாராகும் வரை நாம் கூடாரம் அமைக்கும் குழுவினருடன் வேலை செய்ய வேண்டும். கூடாரம் தயாரானதும் நமது பணிகள் துவங்கும். இங்கு தினமும் ,காலை ,மதியம் ,இரவு என எட்டாயிரம் உணவு வழங்கபட வேண்டியிருக்கும்என்றார்.  பின் அவரே தரையில் பதிக்கும்  முதல் பலகையை எடுத்து வைத்து அடுமனை மற்றும் உணவுகூடத்திற்கான பணியை துவக்கிவைத்தார். தரைப்பலகை எடை குறைவான பக்கவாட்டில் ஒன்றையொன்று கவ்வி நழுவி செல்லும் வடிவில் இருந்ததுஜூன் மாதத்தின் இறுதி அது. ஈராக்கின் கோடை துவங்கியிருந்தது.  வானேமே கூரையாக சுட்டெரிக்கும் வெயிலில் வேறு வழியின்று பழக்கமில்லாத வேலைக்கு தள்ளப்பட்டோம் .

இரு நாட்களுக்குப் பின் எங்களுக்கு பொருட்கள் வைக்க,  தகர அலமாரிக்கான பாகங்கள் வந்தன. ரஸ்ஸல் எங்கள் அனைவரையும் அழைத்துமொத்தம் நூறு அலமாரிகள் வந்துள்ளன. யாருக்காவது இதை ஒன்றிணைக்க தெரியுமா?எனக் கேட்டார்.  நான் அத்துடன் இணைந்திருந்த  ஒன்றிணைக்கும் படத்தை வாங்கிப் பார்த்தேன்.  எளிதாக இருந்தது. “நான் செய்கிறேன்என்றேன். “சரி, பீட்டரை உதவிக்கு வைத்துக்கொள்என்றார் ரஸ்ஸல். தங்கும் கூடாரத்திற்குள்ளேயே அதை ஒன்றிணைப்பேன்.அதனால் நானும் பீட்டரும் வெயிலில் கூடாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த குழுவிலிருந்து தப்பித்தோம். முதல் நாள் நான்கு அலமாரிகள் மட்டுமே செய்ய முடிந்தது .

இரண்டாம் நாள் இரவில், கூடாரத்தினுள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தபோது,  எங்களருகிலேயே குண்டுகள் வெடிக்கும் சப்தம் கேட்டது. அனைவரும் ஓடி வெளியே வந்தோம் . கான்கீரீட்டால் ஆன ஒரு அடி கனமுள்ள பங்கர் எனப்படும்  சுவருக்குள் அனைவரும் சென்று பதுங்கி கொண்டோம். எங்களில் பலருக்கு அதுதான் முதல் முதலாக மிக அருகில் பெரும் சத்தத்துடன் பொழிந்த குண்டுமழை. பலருக்கு சில வினாடிகள் மூச்சு நின்றுபோனது .சற்று நேரத்திற்குப்பின்  “ஹெட் கவுன்ட்என்றார்கள். ஒன்,டூ ,த்ரீ என்றோம். அனைவரும் இருப்பதை உறுதிசெய்தபின்பேக் டு ஸ்லீப்என்றார்கள். மீண்டும் கூடாரத்திற்குள் சென்று கண் மூடி படுத்திருந்தோம். துயில்களைந்த இரவு அது. விடிந்தபின்னர் முந்தைய இரவின் குண்டுவெடிப்பைப்பற்றியே அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

 பக்குபாவில் எங்கள் முகாமை நோக்கித் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்துகொண்டே இருந்தது. பகல் வேளைகளில்  குண்டுகள் வெடிக்கும்போது பணியில் எங்கிருந்தாலும் விரைந்து பங்கர் பாதுகாப்புச் சுவற்றுக்குள் விரைந்துசெல்ல அனைவரும் பழகிவிட்டிருந்தனர். இரவில்பேக் டு ஸ்லீப்என்றால் பகலில்பேக் டு வொர்க்என்றார்கள்.  இப்போதெல்லாம் இரவில் குண்டு வெடிக்கும்போது  நண்பன் கார்த்திக் பங்கர் பாதுகாப்பு சுவருக்கு வருவதே இல்லை. தினமும் மிக அருகிலேயே பெரும் சப்தத்துடன் குண்டுகள் வெடிப்பது இயல்பாகிவிட்டது.

 இங்கு வந்த பத்து நாட்களுக்குள் பாதிப்பேர் இங்கு வேலை செய்ய முடியாது. உயிருக்கு உத்திரவாதமிலாத இந்த வேலை எங்களுக்கு தேவையில்லை, எங்களை இந்தியாவிற்கு அனுப்பிவிடுங்கள் என முறையிட்டனர். வேலைக்கு வரவும் மறுத்து விட்டனர்.  அடுத்த சில நாட்களில் அவர்களை முகாமிலிருந்து அழைத்துச்  சென்றனர். குவைத்திலிருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதாக அழைத்துச்  சென்றனர். அதற்கும் ஒரு வாரத்திற்கு முன்பே இரண்டு நியூசிலாந்து அதிகாரிகளும் பணியை விட்டுச்  சென்றிருந்தனர் .

எங்களுக்கு குளிக்கவும், மற்ற தேவைகளுக்குமான தண்ணீரை, முகாமுக்கு வெளியிலிருந்து தண்ணீர் லாரிகளில் ராணுவத்தினர்  கொண்டுவருவார்கள். முகாமிற்கு வெளியே கடும் தாக்குதல் நடந்துகொண்டிருந்தது. ஆகவே, பாதுகாப்பு காரணக்களுக்காக, தண்ணீர் எடுத்து வர,   ராணுவம் முகாமை விட்டு வெளியே செல்லவே இல்லை.  நான் என் வாழ்வில், பனிரெண்டு நாட்கள்  குளிக்காமல் இருந்ததும் அங்கேதான். நல்ல வேளையாக குடிநீர் போத்தல்கள் மட்டும் தேவைக்கு அதிமாக இருந்தது.
குளிரூட்டி வசதியுடைய கூடாரத்திற்குள்,   நான் , தகர அலமாரி செய்து கொண்டிருந்தேன். சட்டை அணிவதே இல்லை. இடையை மறைக்கும் அரைக்கால் சட்டை மட்டுமே அணிந்து வெற்றுடலுடன் பணி செய்தேன். இப்போது நாள் ஒன்றுக்கு ஆறு முதல் எட்டு அலமாரிகள் வரை  செய்யப் பழகி  விட்டேன் .

தண்ணீர் இல்லாததால் யாருக்கும் ஆடைகளை துவைக்கவும் இயலவில்லை . “ஜட்டி எல்லாம் அலசாம போடமுடியாது .  மூணு நாளா ஒரே ஜட்டி தான் போட்டுருக்கேன் எல்லாம் அழுக்காயாச்சி,  போய் கேப்போம் வாஎன மேற்பார்வையாளர் ரோகனுடன் சென்றோம் .உள்ளாடைகளைத் துவைக்காமல் அணிய முடியாது என ரஸ்ஸலிடம் கேட்டோம். அவர் ஆளுக்கு மூன்று வீதம்  குடிநீர் போத்தல்கள்  தந்தார். உள்ளாடை மட்டும் துவைக்க நான்கரை லிட்டர் தண்ணீர். தண்ணீர் போத்தல் வரும் அட்டைப் பெட்டியில் பாலிதீன் பையை போட்டு துவைப்பதற்கான வாளியாக மாற்றி அதில் உள்ளாடைகளைத்  துவைத்தோம் .

 கழிப்பறையை  சுத்தம் செய்யும்  வண்டியும் பனிரெண்டு தினங்களாக  வரவில்லை. உடன் வேலைசெய்த மங்களூர்காரர்நான் இன்னைக்கு பாட்டிலால் குத்தி அமுக்கிட்டாக்கும் காலத்த போனதுஎன்றார். நல்ல வேளையாக மறுநாள் சுத்தம் செய்யும் வண்டி வந்தது. எல்லோரும் துடைக்கும் மென்தாள் உபயோகித்ததாலும், நிரம்பி வழியும் தருவாயில் நிலைமை சரியானாதாலும் தப்பித்தோம்.ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் கழிப்பறையை அவர்களே சுத்தம் செய்வார்கள். வாரத்தில் மூன்று  நாட்கள் கழிப்பறையின் மலம் நிரம்பிய பையை  வெளியே வைத்து தீயில் எரிப்பதை பார்த்திருக்கிறேன். சிலநேரம் அழகிய இளம்பெண்கள் அந்தப் பணியை செய்வதுண்டு. அவர்கள் கடைநிலை வீரர் அல்லது வீராங்கனைகளாக இருப்பர்.

ராணுவ வீரர்கள் போர்முனையில் குளிப்பதற்கு கொஞ்சம் தடிமனான ஈரமான (wet tissue peper ) காற்று புகாத பையில் அடைத்து வைத்திருக்கும் மென்தாள்கள் வழங்கப்படுகிறது. இரண்டு கைக்கும் இரண்டு,கால்களுக்கு இரண்டு, கழுத்து முதல் இடுப்பு வரை ஒன்று, இடுப்புக்கு கீழ்ப் பகுதிக்கு ஒன்று  அதுதான் அவர்களுக்கு ஒரு நல்ல குளியல் .ஜூலை நான்காம் தியதி அமெரிக்க சுதந்திரதினம். அன்று ராணுவ வீரர்களுக்கு ஒரு வேளை இரவுணவு மட்டும் உணவு வழங்க வேண்டும் என்றனர். எங்களிடம் பெரிதாக எந்த வசதியும் இல்லை. குறைந்தது இரண்டாயிரம் உணவு தயார் செய்யவேண்டும் .

இரண்டு மூன்று மின்சார அடுப்புகள் மட்டும் ராணுவம் ஏற்பாடு செய்து தந்தது. பொருட்கள் ஏற்றிவந்த கண்டெய்னர் லாரிகளை ,குளிர்சாதனப் பெட்டியாக பயன்படுத்தினோம். சமைக்க தெரிந்த வீரர்களும் ,அழகிய இளம் மங்கைகள் சிலரும் எங்களுடன் இணைந்துகொண்டனர். அன்றைய உணவு தயாரிப்பிற்கு . மிகுந்த சிரமத்திற்கு பிறகு ஜூலை நான்காம் தியதி இரண்டாயிரம் பேருக்கு ஒருவேளை உணவு கொடுத்தோம். புத்தம் புதிய தங்களின் விருப்ப உணவுகளை உண்ட நிறைவு அவர்களின் முகங்களில் வெளிப்பட்டது. சில வீரர்களும், வீராங்கனைகளும் கட்டியணைத்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு சுவையான உணவு தந்தமைக்கு நன்றி என்றனர். “மிகக்  குறைவான அடுமனை தளவாடங்களுடன் இத்தனை பேருக்கு சமைப்பது எளிதல்ல, உங்கள் கடின உழைப்பை பாராட்டுகிறோம். விரைவில் அடுமனை பணி முடிந்து,  உங்கள் கையால் உணவுண்ண காத்திருக்கிறோம்எனக்  கூறிச்  சென்றனர்.

25-09-2016

2 comments:

  1. தம்பி ஏன் படிச்சோம்னு ஆயிருச்சு. இந்த பதிவு. கண்ணெல்லாம் நிறஞ்சுருச்சு. எத்தனை கஷ்டங்கள்? ஏன் இப்படி சிரமப்பட்டு அங்கே இருந்தீங்க? என்ன அப்படி அவசியம்? எழுத்தில் எழுதினதும் நாங்க புரிஞசுகிட்டதுமே இத்தனை கலங்கடிப்பவை என்றால் நிஜம் எப்படி இருந்திருக்கும்? why you took this much dangerous work in that very young stage of your life?
    these are not just "experiences" but near to death experience
    அந்த குண்டு வெடிப்புகள் குளிக்க துவைக்க உடை மாற்ற கூட வழியில்லா நிலைமைகளைவிட மனம் பேதலித்த அந்த ஆந்திரா லக்‌ஷ்மனன் தான் மனதில் அப்படியே பதிந்து விட்டார். எப்போதும் எது வாசித்தாலும் தருணிடம் சொல்லும் நான் இதை சொல்லவில்லை. அவன் இதை நினைத்து மிக வருந்திவிடுவான் என்று. முனாவருகும் லக்‌ஷ்மனனுகும் என்ன ஆச்சுன்னு சீக்கிறம் எழுதுங்க

    ReplyDelete