Tuesday, 1 July 2025

இருபது ஆண்டு நிறைவு 35 - வெடித்த ஜெனரேட்டரும், விசிறியடித்த டீசலும்

 

 


 

ஜப்பானிய சுஷி

தெமிஸ் லீடர் பகுதி மூன்று.

வெடித்து சிதறிய ஜெனரேட்டரின் மிக அருகில் நான் நின்றுகொண்டிருந்தேன். தீப்பிழம்பு சட்டென பற்றிகொண்டு எரியத் தொடங்கியது. பதினைந்து வினாடிகளுக்குள் அடுத்த ஜெனரேட்டர் தானாகவே இயங்கி மின்சாரம் வந்துவிட்டது. என் கைக்கெட்டும் தூரத்திலிருந்த தீயனைப்பானை எடுத்து தீயை அணைத்தேன், முடியவில்லை. பெரும் தீ அது.

ஜெனரேட்டரின் மிக அருகிலிருந்த கழிவு எண்ணெய் தொட்டியின் வால்வில் தீ பற்றி எரியத் தொடங்கியது. தீயணைப்பானால் அதை அணைத்தேன். கழிவு எண்ணை தொட்டி தீ எரிவதிலிருந்து தப்பியது. என் கையிலிருந்த (DCP- Dry  Chemical powder) தீயணைப்பானிலிருந்த கெமிக்கல் பவுடர் தீர்ந்துவிட்டது. என்னால் தீயை அணைக்க முடியவில்லை. கோபத்தில் காலியான தீயணைப்பானை தரையில் வீசினேன். உள்ளுர பயம் தொற்றிக் கொண்டது. இயலாமையும் கூடவே. கார்பன்டை ஆக்சைடு வாயுவை செலுத்தித்தான் தீயை அணைக்க இயலும் என எண்ணினேன்.

Fire Extinguisher (Dry chemical powder)

 

எமெர்ஜென்சி எக்சிட் வழியாக ஸ்ட்ரீயரிங் பிளாட்டுக்குள் நுழைந்து வெளியேறி, அங்கிருந்த போனில் அழைத்தேன் “காப்டன் வெரி பிக் பயர்  ஆன் ஜெனேரட்டர் நம்பர் டூ” என சொல்லிவிட்டு தீயணைப்பு தண்ணீர் (fire hose) குழாயை பொருத்திவிட்டு படிக்கட்டுகள் வழியாக மேலே செல்லும்போது  இயந்திர அறைக்குள் இருந்த மூன்றாம் இஞ்சினியர் சந்தீப்பின் நினைவு வந்தது. இயந்திர அறைக்குள் செல்லாமலே கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும் பின்பக்க வழியாக ஓடி இறங்கி அங்கிருந்த கதவை திறந்து கட்டுப்பாட்டு அறைக்குள் சென்றுவிட்டேன்.

அங்கே சந்தீப் இல்லை. கண்ணாடி வழியாக பார்த்தபோது இயந்திர அறை கரும்புகை சூழ்ந்து எதுவுமே தெரியவில்லை. சந்தீப்பை நினைத்து கைகள் உதற எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் ‘தப்பி ஓடு’ என. வந்தவழியே மேலேறி மஸ்டர் ஸ்டேஷன் விரைந்தேன். அங்கு யாரும் இல்லை. காலில் ஷூ இல்லாமல் செருப்புடனே இயந்திர அறைக்கு ஓடியிருக்கிறேன். டெக்கிலிருந்து இயந்திர அறைக்கு நூற்றி பதினான்கு படிகள். அலராம் அடித்த இரு நிமிடங்களுக்குள் இயந்திர அறைக்கு எப்படி சென்று சேர்ந்தேன் என்பது எனக்கே தெரியவில்லை.

காலில் சேப்டி ஷூ அணிந்து மீண்டும் ஸ்டீயரிங் பிளாட்டுக்குள் சென்றேன். அங்கே தீயை அணைக்கும் குழு தயாராகி இருந்தது. இயந்திர அறைக்குள்ளிருந்து முதன்மை இஞ்சினியர் சதா சிவ் தத்தா மற்றும் மூன்றாம் இஞ்சினியர் சந்தீப் வெளியே வந்தனர். சந்தீப் “உனக்கு என்ன ஆச்சின்னு நாங்க ரொம்பவே பயந்திட்டோம், நீ எங்க போனா” எனக் கேட்டான்.இது குறித்து விரிவாக, பின்பு எழுத துவங்கிய நாட்களில் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். அந்த பழைய பதிவில் தீ விபத்தில் நாங்களும்,கப்பலும் தப்பியது எப்படி என இருக்கிறது. 

Generator வெடித்த போது வெளியே 
சிதறியவை

 

தெமிஸ் லீடர் தீ விபத்துக்குப்பின் ஜப்பானின் துறைமுகத்தில் கார்களை ஏற்றும்போது புதிய ஜெனரேட்டருக்கான பாகங்களும், பொருட்களும் ஜப்பானிய இஞ்சினியர்களும் வந்தார்கள். விபத்து குறித்து விசாரணை நடத்த குலாலம்பூர் அலுவலகத்திலிருந்து ஒரு அதிகாரியும், வெசல் மானேஜர் நந்தன் பிஸ்வாசும் வந்திருந்தனர். ஜப்பானின் டைகாச்சு (DAI HATSHU) ஜெனரேட்டர் இஞ்சின் தயாரிக்கும் நிறுவனத்திலிருந்து எண்பது வயதான  சீனியர் இஞ்சினியர் ஜெனரேட்டர் வெடித்ததற்கான காரணத்தை கண்டுபிடிப்பதற்காக வந்து விசாரணை நடத்தி அதன் கனெக்ட்டிங் ராடை ஐ (connecting rod) எடுத்து சென்றிருந்தார்கள்.

அடுத்த பயணத்துக்கு தேவையான  எரிஎண்ணெய் நிறைத்து கொண்டிருந்தோம். இருநூறு மெட்ரிக் டன் டீசலும் நிறைக்கும் பணி முடிந்ததும் கப்பல் புறப்பட்டு கனடாவை நோக்கி பயணத்தை தொடங்க தயாராகிக் கொண்டிருந்தது.


கார் டெக் 


கப்பலில் கார்களை ஏற்றி முடித்திருந்தார்கள். நான் பங்கர் மேனிபோல்டில்* நின்றிருந்தேன். எண்ணெய் தொட்டிகள் கார் டெக்கின் கீழே இருக்கும். அதில் எவ்வளவு எண்ணெய் கப்பலுக்கு வந்துள்ளது என அளவிடும் குழாய்கள் இருக்கும். அதனுள் (sounding pipe) நீண்ட மீட்டர் டேப்பை போட்டு அளப்பார்கள். அங்கு பணியிலிருந்த மோட்டேர்மேன் கைத்தானோ ரேடியோவில் அலறினார் எனக்கு புரியவேயில்லை. கடைசியாக  “ஸ்டாப் பங்கர், ஸ்டாப் பங்கர்” மட்டும் கேட்க உடனே பங்கர் பார்ஜிடம் சொல்லி டீசல் எண்ணெய் தருவதை நிறுத்தினேன்.

எண்ணையை அளக்கும் சவுண்டிங் குழாய் வழியாக நுரை தளும்ப காற்றும் கலந்து டீசல் பிசிறியடித்ததில் மோட்டர்மேன் கைத்தனோவின் கண்கள், வாய்க்குள் டீசல் புகுந்தது. மேகக்கூட்டம் போல கார் டெக்கில் கார்களின் மீதும் டீசல் பீய்ச்சியடித்தது. மோட்டார்மேன் ரேடியோவில் அலறும்முன் மேனிபோல்டில் இருத்த பிரஷர்கேஜில் அழுத்தம் நான்கு பார் வரை சென்று கீழிறங்கியதை கண்டேன்.

முதற்கட்ட விசாரணை முடிந்து, புதுமணம் மாறாத, தொழிற்சாலையிலிருந்து நேரடியாக கப்பலில் நிறைத்த புத்தம்புதிய கார்கள் டீசல் நெடியுடன் மீண்டும் ஜெட்டியில் இறக்கப்பட்டது. மொத்தம் 179 டோயோட்டோ இன்னோவா கார்கள் சர்வீஸ் சென்டரில் ஒரு முறை நன்னீரால் குளிப்பாட்டியபின் அது செகன்ட் ஹாண்ட் ஆக மாறிவிட்டிருந்தது. புதிய கார்களாக அவற்றை விற்பனை செய்வது இயலாது என தொழிற்சாலை அறிவித்ததாக எங்களுக்கு சொல்லப்பட்டது.

எங்கள் பயணம் கனடாவுக்கும், பின்பு அமெரிக்காவிற்கும்  சென்றுவிட்டு மீண்டும் ஜப்பானுக்கு திரும்பியது. உரியவர்களுக்கு உரிய நேரத்தில் சேரவேண்டிய கார்கள் போய் சேரவில்லை. கனடாவிலிருந்து ஜப்பானியர் நால்வரும் புறப்பட்டனர். 

ஜப்பானிய எஞ்சினியர்கள்

 

ஜப்பானிய இஞ்சினியர்கள் கப்பலில் வந்த நாள் முதல் காலை எட்டுக்கு துவங்கி மாலை ஆறுக்கு பணியை முடித்தனர். இஞ்சின் ரூமின் ums நீக்கப்பட்டு கப்பல் இருபத்தி நான்கு மணிநேரமும் வாட்ச்கீப்பிங்கில் வைக்கப்பட்டது. அதற்காக நான்காம் இஞ்சினியர் ஒருவர் ஒரு மாதத்திற்காக பணியில் இணைந்தார்.

 

Genaretor

New genarator installed 

New Crank shaft 



ஜப்பானிய நிறுவனம் ஒவ்வாரு நாளும் எந்த வேலையை முடிப்போம் எனும் வரைவு திட்டத்தை கப்பலுக்கு அனுப்பியிருந்தது. அதன்படி day 1, day2 ….என இஞ்சினியர்கள் மிகச்சரியாக பணியை முடித்து புதிய ஜெனரேட்டரை இயக்கி சிலநாட்கள் ஓடவிட்டு முதன்மை இஞ்சினியர் திருப்தியடைந்தபின் கப்பலின் முதலாளியான NYK நிறுவனத்துக்கும், எங்கள் நிறுவன அதிகாரிகளுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டது. 

உடைந்த ஜெனரேட்டர் அகற்றியபின்

 

கிட்டதட்ட முழுமையாக மாற்றப்பட்ட ஜெனரேட்டரின் முழுத் தொகையும் காப்பீடு நிறுவனம் வழங்கும் என முதன்மை இஞ்சினியர் சொன்னார். மீண்டும் ஜப்பான் வந்து சேரும்போது எனது பணி ஒப்பந்தம் முடிந்து ஊருக்கு புறப்பட்டேன். எழுத்தாளார் ஜெயமோகனின் தளத்தில் ஜப்பானிய சூஷி எனும் உணவு பற்றி படித்திருந்தேன். அதை விமான நிலைய உணவு விடுதியில் சாப்பிட்டேன்.

Japan Airport 



மூன்றாம் இஞ்சினியர் சந்தீப், எபி ராவ் ஆகியோர் கப்பலிலிருந்து இறங்கினோம். டோக்யோ – குலாலம்பூர் – சென்னை வழியாக திருவனந்தபுரம் போய் சேர்ந்தேன். சுனிதா மகன்களுடன் விமான நிலையம் வந்திருந்தாள். 

 

திருவனந்தபுரத்தில்...

 

பங்கர்மேனிபோல்ட் = எரி எண்ணெய் தரும் பார்ஜின் குழாயும், கப்பலின் குழாயும் இணைக்கப்பட்டுள்ள இடம்.

பின் குறிப்புகள் . 

ஜெனரேட்டர் வெடித்ததால் அதிலிருந்த பிஸ்டன், கவுண்டர் வெயிட் ஆகியவை வெளியே தெறித்த நேரம் யாரும் அருகில் இல்லாததால் உயிரிழப்பு இல்லாமல் ஆனது.


Suez canal 


அமெரிக்காவிலிருந்து ஜப்பான் செல்லும்போது சூயஸ் கால்வாயை தாண்டி சென்றிருக்கிறோம். நான் சூயஸ் கால்வாய் குறித்து சன்னிஜாய் நாட்குறிப்புகளில் விரிவாக எழுதியிருக்கிறேன்.

ஜப்பானின் நகோயா ரயில் மீயுசியம் போய் வந்தோம். நூறு ஆண்டுகளுக்கு முன்பே நூற்றிஇருபது கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்  நீராவியில் இயங்கும் இஞ்சின் முதல் தற்போதைய மேக்னடிக் புல்லட் ரயில்வரை காணக் கிடைத்தது. விரைவில் அது குறித்து ஒரு பதிவு எழுத வேண்டும்.

மாஹியின் புருசு சேட்டா அறுபது வயதில் பணி ஓய்வு பெற்று சென்றார்.

  

புருசு சேட்டா பணி ஓய்வு பெற்ற அன்று...

 கப்பலின் தீ விபத்துக்குப்பின் எப்போது அலராம் அடித்தாலும் பயத்தில் தூக்கத்தை இழந்த சிலர் இருந்தனர்.

தெமிஸ் லீடர் நிறைவு.

நாஞ்சில் ஹமீது,

01 July 2025.

sunitashahul@gmail.com







Sunset rare picture