Thursday, 22 September 2016

ஈராக் போர்முனை அனுபவங்கள் .3


 பாலையில்
 ஒருமாதம் விரைவாக சென்றுவிட்டது.காலை ஆறுமணிக்கு எழுவேன் கழிப்பறையும் ,குளியலறையும் சுத்தமாகவும் ஆட்கள் இன்றியும் இருக்கும்.என்னை போல் மிக சிலரே காலையில் எழுவர் அதனால் பரபரப்பில்லாமல் காலையில் தயாராகிவிடுவேன் .எட்டு மணிக்கு வேலைக்கு சென்றால் நாள் விரைவாக முடிந்து விடும்.
அங்கே அவ்வப்போது  மணல் புயல் வீசும் .மணல் காற்றுடன் சுழன்றடிக்கும் எதிரில் நிற்பவர் கூட தெரியாது .எங்கள் கூடாரமே கிழே விழுந்து விடுமோ என அச்சமாக இருக்கும் .மணல் வீசியடிக்கும் முடிந்தவரை அனைத்தையும் மூடி வைப்போம் .
  அமெரிக்க அதிகாரி சென்றுவிட்டார் .புதிய அதிகாரி தென்னாப்ரிக்காவின் டேவிட் வந்தார் .வேலை வெகுவாக குறைந்து விட்டது பெரும்பாலான வீர்ர்கள் ஊருக்கு சென்றுவிட்டதால் .எழுநூறுக்கும் குறைவாகவே உணவு தயாரிக்க வேண்டியிருந்தது .
  டேவிட் அனைவருக்கும் வாரத்தில் 2 நாள் விடுமுறை தந்தார் .ஆனால் ஒருநாள் தான் குவைத் நகருக்கு செல்லவேண்டும் .எப்போது அழைத்தாலும் வரவேண்டும் என்றார்.
     ராணுவ வீரர்கள் சாப்பிடும் இடத்தில் உணவு பரிமாறுபவர்கள் காலை ஐந்தரை மணிக்கே சென்று விடுவார்கள் .அதில் ஒருவன் ஒருநாள் தனது கைபேசியை காணவில்லை அனைவரது பைகளையும் நான் திறந்து பார்க்க வேண்டும் என்றான் .
   வரிசையாக ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டே வந்தான் .என்னருகில் வந்தபோது கார்த்திக் நான் உன் போனை எடுக்கவில்லை நான் திருடன் இல்லை என எங்களுடைய பையை திறக்க அனுமதிக்க முடியாது என உறுதியாக மறுத்துவிட்டான் .இரவில் அவன் அனைவரிடமும்  மன்னிப்பு கேட்டான் .
  காலையில் அவன் உணவு வழங்க போய்விட்டு வந்து வண்டியில் இருந்து இறங்கும் போது படிக்கட்டில் விழிந்திருக்கிறது .அதை ஓட்டுனர் பின்னர் தான் கவனித்து எடுத்து வைத்துவிட்டு மாலையில் கொடுத்துள்ளார் .
                   
     எனக்கு சூடு காரணமாக கக்கத்தில் கொப்புளங்கள் வந்தது சட்டை அணிய இயலவில்லை .மூன்று நாட்கள் ஜக்ராவிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் .பாகிஸ்தானி காரோட்டி என்னை அழைத்து செல்வார் .ஒருநாள் சாலையில்.குவைத்தின் அதிகாரிகளின் வாகன சோதனை நடந்தது .காரோட்டி அவரது அக்காமா,ஓட்டுனர் உரிமத்தை காண்பித்தார் .என்னிடம் ESS  அடையாள அட்டையை தவிர எதுவும் கிடையாது .அரபி மொழியும் தெரியாது .
  முன் இருக்கையில் சட்டையும் ,சீட் பெல்ட்டும் அணியாமல் இருந்தேன் .அந்த அதிகாரி என்னுடைய ஆவணங்களை கேட்டார் .இல்லை என்றார் காரோட்டி ஏன் இல்லை என்பதற்கு இவன் அப்தலி எல்லையில் அமெரிக்க இராணுவத்துடன் இருக்கிறான் என்றபோது கேள்வியே இல்லமால் அனுப்பி வைத்தான் .
  வேலை வெகுவாக குறைந்து விட்டதனால் காலை 3 மணிக்கே நாங்கள் கிரிக்கெட் விளையாட தொடங்கினோம் அப்போதே இங்கு வெளிச்சம் வந்துவிடும் .
   இரண்டரை மாதத்தில் டேவிட் அனைவரையும் அழைத்து கூட்டம் ஒன்று நடத்தினார் . நமது நிறுவனம் புதிதாக ஈராக்கில் வேலைக்கு ஒப்பந்தமாகியுள்ளது .உங்களில் விருப்பம் உள்ளவர்கள் செல்லலாம் .மற்றவர்களுக்கு இந்தியா செல்ல விமான சீட்டு தந்துவிடுவோம் என்றார் .6 மாத ஒப்பந்தம் இங்கே இரண்டரை மாதம் இருந்தவர்கள் மூன்றரை மாதத்திற்கு பின் ஊருக்கு செல்லலாம் .
   நாங்கள் பத்து பேர் தமிழர்கள் மும்பையிலேயே அறிமுகம் ஆனவர்கள். யோசித்தோம் சதாம் பற்றி வரலாறில் படித்தோம் அந்த அரண்மனைகளை போய் நேரில் ஒருமுறை பார்த்து விடலாம் பிடிக்கவில்லையெனில் மூன்றரை மாதத்தில் திரும்பி வந்துவிடலாம்  என்று யாரோ ஒருவன் சொன்ன யோசனை ஏற்றுகொள்ளபட்டு புறப்பட தயாரானோம் .
விரைவில் செல்ல வேண்டியிருக்கும் செல்லும் தேதி பின்னர் சொல்வோம் என்றார் . ஒரு நாள் ஈராக் பயணத்திற்கு தேவையான பொருட்களை வாங்க மிர்காப் நகருக்கு சென்றோம்.அன்று வெள்ளிகிழமை அங்குள்ள மசூதியில் ஜும்மா தொழுதேன் .
    மாலையில் அங்கு பெருங்கூட்டம் அங்கு வேலை செய்யும் இந்தியர்கள் சந்தித்து கொள்கிறார்கள் .வீட்டு வேலை செய்யும் பெரும்பாலான பெண்கள் அன்று மட்டும் சில மணிநேரங்களுக்காக வெளியே செல்ல அனுமதிக்கபடுகிறார்கள் போல.கூட்டம் கூட்டமாக நின்று சப்தமாக பேசி கொண்டே இருந்தனர். குறைவான நேரம் காரணமாக அதற்குள் அனைத்தையும் பேசி விட வேண்டுமென எண்ணுகின்றனர்.பெரும்பான்மையானவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள்.உரையாடல்கள் தெலுங்கில் தான் கேட்டு கொண்டே இருந்தது.தனி தனியே வேலை செய்யும் கணவன் மனைவி கூட அதில் இருந்தனர்.அந்நிய மண்ணில் பிழைப்புக்காக வந்திருப்பதால் கணவனும் மனைவியும் சந்திப்பது சில மணிதுளிகள் வாரத்தில் ஒரு நாள் அதுவும் ஒரு திறந்த வெட்ட வெளி மைதானத்தில் சுற்றிலும் பெருங்கூட்டம்  எல்லாம் ஒரு ஜாண் வயிற்றுக்காக .
நானும் லோகேசும் 6 தினாரில் ஒரே மாதிரியாக பயண பைகளை வாங்கிகொண்டோம்.
 நானும் கார்த்திக்கும்  பக்குபா எனும் இடத்திற்கு தேர்வாகியிருந்தோம் .மற்றவர்கள் வேறு வேறு இடம் என பிரிந்து விட்டனர்.
  அதிகாலை நான்கு மணிக்கு வண்டியில் அழைத்து சென்றனர் .ஈராக் எல்லைக்கு அங்கு ஏராளமான கண்டெய்னர் லாரிகள்,கார்கள். ராணுவ வாகனங்களும் வரிசையாக நின்றுகொண்டிருந்தது .எங்களுடன் வந்த நான்கு பயணிகள் சிறிய பேருந்துகள் மட்டும் எல்லை காவலர்களால் தடுக்கப்பட்டு திரும்பி எங்கள் கேம்ப்புக்கே வந்தோம் .
   மறுநாளும் அதுபோல் அதிகாலையில் அழைத்து சென்றனர் .நீண்ட வரிசை தினமும் இதுபோல் வரிசையாக ராணுவ பாதுகாப்புடன்(convoy) இராக்கிற்குள் வாகனங்கள் செல்கிறது என தெரிந்தது .
   எல்லையையில் ராணுவ வாகனங்களுடன் சென்ற எங்கள் பேருந்தை நிறுத்திய குவைத்தின் எல்லை காவலரை ஆண்டெர்சன் எனும் ராணுவ அதிகாரி தனது கைத்துப்பாக்கியை அவனுக்கு நேராக காட்டி fuckoff don’t stop all military vehicle என்றதும் எங்களை அனுமதித்துவிட்டு தனது கைபேசியில் யாருடனோ பேச தொடங்கினான் .
     கொஞ்சதூரம் சென்றதும் ஈராக்கின் முகம் தெரிய ஆரம்பித்தது .குவைத்தின் செழிப்பை மட்டுமே இரண்டரை மாதமாக பார்த்த எனக்கு .இராக்கின் வறுமை அதிர்ச்சியூட்டியது .கந்தல் துணிகளை அணிந்த மக்கள் ஒட்டிய கன்னங்கள். கைகளில் வளைந்த கத்தி, கேன்களில் பெட்ரோல் இன்னும் ஏதேதோ பொருட்களை கைகளில் வைத்து கொண்டு வரும் வாகனங்களை கூவி அழைத்தும் கை அசைத்தும் விற்க முயற்சி செய்கின்றனர் .
   என்னால் நம்பவே முடியவில்லை எல்லைக்கு அந்த பக்கம் செழிப்பான குவைத்தும். சில கிலோமீட்டர் தாண்டினால் இங்கு வறுமை.
  எங்கள் வாகனங்கள் எங்கும் நிற்கவில்லை  (இடைநில்லா பேருந்து போல)  முன்பும் பின்பும் ராணுவ வாகனங்கள் அதிநவீன துப்பாக்கி ஏந்திய வீரர்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து சென்றது .ராணுவ ரோந்து வாகனங்கள் பக்கவாட்டில் முன்பும் பின்பும் கண்காணித்து கொண்டே வரும்.
     எல்லை தாண்டியதும் பார்த்த கொஞ்ச மக்கள்தான் .பின்பு நீண்ட புழுதி படிந்த மணல் பரப்புதான் தென்பட்டது .எங்கள் பேருந்தில் கொஞ்சம் ரொட்டி துண்டுகளும் ,தேவையான குடிநீர் புட்டிகளும் இருந்தது .சிறுநீர் கழிக்க வாகனம் இடையில் நிறுத்த இயலாது எனவே அதிகம் தண்ணீர் குடிக்காதீர்கள் என அறிவுருத்தபட்டிருந்தோம் .
  எங்களை அழைத்து சென்ற சிறிய பேருந்து 24 பேர் அமரமட்டுமே முடியும் எங்கள் அனைவரின் பயண பைகளும் வேறு ஒரு டெம்போவில் அடைக்கபட்டிருந்தது .அப்போது தான் நினைத்தேன் சான்றிதழ் அடங்கிய பையை கையிலேயே வைத்திருக்கலாம் என .அது ஆபத்தான பயணம் .வாகனங்கள் குண்டுவீச்சிற்கு இரையாகலாம் அல்லது தீ பற்றி கொள்ளலாம்.
 நீண்ட பயணத்திற்கு பிறகு வண்டி நெடுநேரம் சாலையிலேயே நிறுத்தி வைத்திருந்தனர் .என்ன காரணம் என தெரியவில்லை .ரோந்து வாகனங்கள் மட்டும் சுற்றி வந்து கொண்டிருந்தது .
  எங்களது பயண பைகள் ஏற்றி வந்த வண்டி ராணுவ வாகனங்களுக்கு இணையான வேகம் கொடுக்க இயலாதலால் ராணுவ வண்டியுடன் இணைத்து கட்டப்பட்டு அதன் ஓட்டுனர் அமர்  எங்களுடைய பேருந்தில் ஏறிகொண்டார் . அமர் இலங்கையை சேர்ந்த சிங்களர் தமிழில் சில வார்த்தைகள் மட்டுமே தெரியும் .அவரது கடவுசீட்டை பார்த்துதான் தெரிந்து கொண்டேன் பாஸ்போர்ட்க்கான  தமிழ்சொல் கடவுசீட்டு என அதில் தமிழில் எழுதியிருந்தது .
   ஒருவழியாக புறப்பட்டு இருட்டுவதற்குள் வேறு ஒரு அமெரிக்க ராணுவ முகாமை அடைந்தோம் .இரவில் பயணம் மிக ஆபத்தானது எனவே இங்கு தங்கிவிட்டு காலையில் செல்வோம் என்றனர் .
  இரவு உணவுக்கு அங்கிருந்த உணவு கூடத்துக்கு சென்றோம் .காலில் சூ இல்லாதவர்களை  உணவருந்த அனுமதிக்கவில்லை .எனது சூ வும் பயண பையுடன் மாட்டிகொண்டது வெளியே எடுக்க இயலவில்லை.நான் செருப்பு தான் அணிந்திருந்தேன் .

   நண்பன் ஒருவன் 2 பழச்சாறு பாக்கெட் கொண்டு தந்தான் .அதை மட்டும் குடித்து எங்கள் பேருந்தின் இருக்கைகளில் அமர்ந்த படியே தூங்கினோம் .

3 comments:

 1. கடினமான வித்தியாசமான எத்தனை பணியில் இருந்திருக்கிறீர்கள் எனும் வியப்பு மென்மேலும் கூடிக்கொண்டெ போகிறது ஷாகுல். பதிவுகள் வர வர நுண்ணிய சித்தரிப்புகளைக்கொண்டிருப்பதால் மனம் பல சமயங்களில் கனத்து விடுகிறது. அதுவும் அந்த கணவன் மனைவி வாரம் ஒருமுறை கூட்டத்தில் சந்திப்பது , கஷ்டமாயிருக்கிறது என்றால் அதற்கான உங்கள் எதிர்வினை “ஒரு ஜான் வயிறுக்காக” என்பது இன்னும் கலங்கடிக்கிறது.
  நீங்களும்தன் எத்தனை கஷ்டங்களில் இருந்திருக்கிறீர்கள்?
  மணல் காற்றும் கொப்புளங்களும், பயணங்களும், சண்டைகளும், இத்தனை அனுபவங்களில் நீங்கள் பண்பட்டிருப்பது உங்களில் எழுத்துக்களில் தெரிகிறது.
  ஈராக்கின் வறுமை எனக்கும் அதிர்ச்சியாகவே இருக்கிறது. பலர் எழுதும் பயணக்கட்டுரை போலல்லாமல் உங்கள் பதிவு ஒரு திறனாய்வுக்கட்டுரை போல நடுநிலையில் உண்மை தளத்தில் இருப்பதால் கசக்கும் உண்மைகளுக்கு வாசிக்கும் நாங்களும் மிக அருகில் செல்கிறோம். ஷூ இல்லாவிட்டால் அனுமதி இல்லையா? உங்கள் பயணப்பை பத்திரமாக கிடைத்ததா?
  பதிவுகள் தொடர்வதற்காக காத்துக்கொண்டிருக்கும் வகையிலேயே முடிக்கிறீர்கள்
  அன்புடன்
  லோகமாதேவி

  ReplyDelete
 2. Indiavula Tamil nattula evvalavu sogusa irukkomnnu therigiradu ....ida padikkumpodhu.....

  ReplyDelete