![]() |
விடுதியை சுற்றி |
மும்பையில் விமானம் ஏறும் முன் lounche இல் சென்று சாப்பிட்டு வந்தேன்.இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச பிளாட்டினம் டெபிட் கார்டு வைத்திருந்தும் விமானநிலைய லௌஞ்சில் உபயோகித்ததே இல்லை. கடந்த டிசம்பரில் மும்பை சென்றுவிட்டு வரும்போது பெங்களூர் விமான நிலையத்தில் ஆறு மணிநேர காத்திருப்பு. நண்பர் சங்கர் நாரயணன் “ஸார் டெபிட் கார்டு ஏதாவது இருக்கா, அத யூஸ் பண்ணி லௌஞ்சில் போய் இருந்து சாப்பிட்டு டைம் பாஸ் பண்ணுங்க” என்றார்.
சர்வதேச டெபிட் கார்டை நான் கையில் வைத்திருப்பதே இல்லை. இம்முறை அதை கொண்டு வந்ததால் முதல் முறையாக சங்கர் உதவியால் உபயோகித்தேன். லௌஞ்சில் பெரும்கூட்டம் குடி பிரியர்களே அதிகம்.
ஜகார்தாவில் இறங்கும்போதே நல்ல பசி கார் புறப்பட்டதும். ஹோட்டலுக்கு அழைத்துச்செல்கிறோம் இரண்டு மணிநேரம் ஆகும் என்றார்.பசிக்கு முதலில் உணவு வாங்கிக்கொடு என்றோம். முகவரிடம் பேசிவிட்டு வழியில் சாப்பிட்டுவிட்டு போகலாம் என்றார்.
ஜகார்த்தா-தஞ்சுங் செகாங் (tanjung sekong) நல்ல தரமான சாலை மழை நின்று சாலை போக்குவரத்து நெரிசல் இல்லாததால் ஒருமணிநேரம் பத்து நிமிடத்தில் நாங்கள் தங்கும் விடுதிக்கே போய்விட்டோம்.காரின் முன் இருக்கையில் அமர்ந்து நன்றாக தூங்கி விட்டேன்.
சிங்கப்பூர்,மும்பை போன்ற இட நெருக்கடியான இடங்களில் வானுயர்ந்த கட்டிடங்களில் அறை தருவார்கள். இந்த விடுதி அமெரிக்காவின் குடியிருப்புகளை நினைவுபடுத்தியது. அடுக்குமாடி கட்டிடமே இல்லை. மரங்கள் சூழ்ந்த வனத்துக்குள்,தரைதளத்தில் தொகுப்பு வீடுகள் போல் பத்து அறைகள் கொண்ட கட்டிடங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பெயர்கள்.
விடுதியின் வரவேற்பறையும்,உணவுவிடுதியும் தனிக்கட்டிடம். அறைச்சாவியை வாங்கிவிட்டு சுடு நீரில் குளித்து,உடை மாற்றி உள்ளேயே பள்ளிவாசல் பெயர் பலகையை கண்டிருந்ததால் அங்கு செல்லும் வழியை விசாரித்தபோது பேட்டரி காரில் கொண்டு விட்டார்கள்.
மற்றவர்களும் தயாராகி வந்ததும் இரவுணவுக்கு சென்றோம். பின்னர் விடுதிக்கு வெளியே ஒரு நடை சென்றோம்.வழக்கமாக நான் நள்ளிரவு செல்லும் நடையை யோசிக்கவே இல்லை.
இரு இரவுகள் நல்ல தூக்கம் இல்லாததால் பத்து மணிக்கு படுத்ததும் நல்லுறக்கம் அதிகாலை அறைக்குள் வெளிச்சம் வந்தபோதுதான் விழித்தேன். வழக்கமாக குளித்து அறையிலேயே தொழுதபின் சதாசிவ் அழைத்தார். “காலை உணவுக்கு செல்லலாம் என.
ஏழு மணிக்கு உணவு கூடத்தில் இருக்கும்போது எங்களை அழைத்துசெல்ல காருடன் ட்ரைவர் வந்துவிட்டார். உணவுகூடத்தின் அருகிலேயே நீச்சல்குளமும்,கோல்ப் மைதானமும் இருந்தது. ஓட்டுனர் இரு மணிநேரம் தாமதமாக வந்திருந்தால் விடுதியின் உள்ளேயே ஒரு நடை போய் வந்திருக்கலாம். அடர் காட்டுக்குள்இருக்கும் அனுபவத்தை இழந்த உணர்வு.
பைகளுடன் காரில் ஏறினோம் இலங்கையின் மூன்றாம் இஞ்சினியர் நள்ளிரவு ஒரு மணிக்கு அறைக்கு வந்ததாக சொன்னார். முதன்மை அதிகாரியை இரவில் காணவேயில்லை. தஞ்சுங்க் செக்காங் துறைமுகப்பிற்கு அருகிலுள்ள சிறுபடகுகள் அணைந்திருந்த பகுதியை அடைந்தோம். கப்பலில் ஆய்வு செய்வதற்காக மலேசிய ஆய்வாளர் ஒருவரும் வந்திருந்தார்.
அனைவரின் பயணபைகளை ஏற்றிவிட்டு சற்று தொலைவில் (ஐந்து நிமிட பயணம்) நின்றுகொண்டிருந்த ஒரு பெரிய படகுக்கு பைகளுடன் மாறினோம்.அங்கிருந்து இருபது நிமிட தொலைவில் நின்றுகொண்டிருந்த என் எஸ் ப்ரண்டியர் கப்பலுடன் படகு அருகணைந்தது. கப்பலை கட்டியிருந்த இந்த துறைமுகப்பில் ப்ரேக் வாட்டர் எனப்படும் கடலையை தடுக்கும் தடுப்புச்சுவர்கள் இல்லாததால் VLGC(very large gas carrier) வகையை சார்ந்த பெரிய கப்பலான என் எஸ் ப்ரண்டியர் ஆடிக்கொண்டே தான் இர்ருந்தது.
பெரிய அலைகளில் தத்தளிக்கும் சிறு படகிலிருந்து ஏணி வழியாக தாவி ஏறுவது கர்ணம் தப்பினால் மரணம் தான். அனைவரும் சாமர்த்தியாமாக துள்ளி குதித்து கப்லுக்குள் சென்று சேர்ந்தோம். பிஸ்மில்லாஹ் என கால் பதித்து அடுத்த ஏழு மாதத்திற்கான வீட்டுக்குள் பத்திரமாக குடி புகுந்தோம்.
அமெரிக்காவிலிருந்து ஏற்றி வந்த ப்ரோப்பேன்(proprne C3),பியூட்டேன் C 4(butene)திரவங்கள் குழாய்கள் மூலம் கரையிலிருந்த சரக்கு தொட்டிகளுக்கு சீராக போய்க்கொண்டிருந்தது. சரக்கு இறக்கும் பணி முழுமையாக முடிந்த பின்னரே ஊருக்கு செல்பவர்கள் புறப்படும்படி விமான சீட்டு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. உபரியாக இருந்த அறைகளை எங்களுக்கு தந்தார்கள்.
எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் கழிப்பறை வேலை செய்யாததால்.ராஜேசுடன் கப்பலின் மருத்துவமனையை பகிர்ந்துகொண்டோம்.இரவில் தூங்க மட்டும் அறைக்கு சென்றேன். குளிக்கவும்,கழிப்பறைக்கு மட்டுமே ஆஸ்பத்திரி. எனக்கு காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணிவரையும் மாலை ஆறு முதல் பன்னிரண்டு வரையும் பணி.
நான் விடுவிக்கும் சஜீத் கான் கல்கத்தாவை சார்ந்தவர் இதே நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பணி செய்கிறார். Handing Over நோட்ஸ் மட்டுமே தந்தார். முக்கியமாக காட்டி தர வேண்டிய எதையும் சொல்லிதரவில்லை நான் ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் இதே கப்பலில் பணிபுரிந்துள்ளேன் என்பதும் ஒரு காரணம். அடுத்த ஏழு முதல் எட்டு மாதங்கள் இங்கே தான் இருக்க வேண்டும் பார்த்துக்கொள்ளலாம் என அவரிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.ஊருக்கு செல்லும் உற்சாகத்தில் இருக்கும் கப்பல் காரனின் உளஎழுச்சியை நான் அறிவேன்.
பதினைந்தாம் தேதி இரவு பத்து மணிக்குமேல் சரக்கு இறக்கும் பணி முடிந்து. டெர்மினல் அதிகாரிகள் கப்பலுக்கு வந்து கணக்குகள் பார்த்து ஆவணங்கள் பரிமாறபட்டபின் கப்பல் புறப்பட தயாராகியது.சீக்கிரம் கப்பலின் கயிறுகளை அவிழ்த்துவிட்டு சென்றுவிடவேண்டும் என காப்டன் முனைப்பு காட்டினார்.
சரக்கு இறக்கும் பணி முடிவதற்கு இரண்டு மணிநேரம் முன்பு கப்பலை கட்டியிருந்த கயிறுகளில் (முன்பும்,பின்பும் 8 வீதம்) ஒன்று அறுந்துவிட்டது. கடுமையான கடலைதான் காரணம். கயிறு அறுந்து தெறித்தபோது அருகில் யாருமில்லாதாதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.கயிறு அறுந்து விசையுடன் வந்து மோதி கப்பல் காரர்கள் உயிரிழந்த சம்பவங்கள் உண்டு.
கயிறுஅறுந்துவிடும் என்பதால் காப்டன் இருதினங்கள் தூங்காமல் இருந்ததாக சொன்னார். நான் எண்ணிக்கொண்டேன் கயிறு எப்போது அறும் என காத்திருந்தது மட்டுமல்லாமல் தொடர்ந்து இந்த பிரபஞ்சத்திற்கு செய்தி அனுப்பியது அவர்தான் அவர் எண்ணப்படி எல்லாம் நடந்தது.
அதிகாலை மூன்றுமணிக்கு ஊருக்கு செல்லும் ஆறுபேரும் புறப்பட்டு சென்றார்கள். பதினாறாம் தேதி அதிகாலை ஆறு மணிக்கு கப்பல் கரையிலிருந்து விலகி சற்று தள்ளி நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது. பத்துமணிக்கு மேல் கப்பலுக்கு எரி எண்ணெய் தரும் சிறு கப்பல் Kenlana kumbala எனும் கப்பல் அருகணைந்து எண்ணெய் தர ஆரம்பித்தது.மொத்தம் ஆயிரத்தி நானூற்றியைம்பது (1450m3) மெட்ரிக் டன் எண்ணெய் எங்களுக்கு தரவேண்டும். இரவு பத்துமணிக்கு ஆயிரம் மெட்ரிக்டன் எண்ணெய் தந்தபின் அந்த கப்பல் விலகி சென்றது. அதன் கொள்ளளவு அவ்வளவுதான் (1 டன் ஆயிரம் லிட்டர்).
மதியம் பணியிலிருந்த ராஜேசை உணவுண்ண விடுவித்தேன்,இயந்திர அறையில் வேறு பணியிருந்ததால் அவர் சென்றுவிட்டார். இரவு சிறு கப்பலை விடுவித்தபின் நான் அறைக்கு சென்று தூங்கிவிட்டேன். அடுத்த கப்பல் வரும்போது வேறு டீம் வருவார்கள் என முதன்மை இஞ்சினியர் சொன்னார்.
மீதியுள்ள நானூற்றியைம்பது டன் எண்ணையை தரும் கப்பல் இரவு பதினோரு மணிக்கு(PT trans indo pratama) அருகனைந்துள்ளது.குழாய் பொருத்தி,எண்ணெய் நிரப்பி,கணக்குகள் பார்த்து,கப்பல் விலக அதிகபட்சம் ஆறு மணிநேரம் ஆகும் நானூற்றி ஐம்பது டன் எண்ணெய் நிரப்ப அதிகாலை ஆறு மணிக்கு நான் விழித்தபோது கப்பல் நங்கூரம் பாய்ச்சிய இடத்தில் நின்றுகொண்டிருந்தது.பங்கர் முடியவில்லை என தெரிந்ததால் ஏழு மணிக்கு பங்கர் மேனிபோல்ட் அருகில் சென்றேன். ராஜேஷ் மற்றும் மோட்டார் மேன் பணியில் இருந்தார்கள். இருவரையும் விடுவித்தேன் ஐம்பது டன் எண்ணெய் குறைவாக தந்ததாக சொல்லி முதன்மை இஞ்சினியர் பங்கர் பார்ஜ்ஜிடனும,எங்கள் நிறுவனத்துடனும் பேசிக்கொண்டிருந்தார். மீண்டும் வால்வுகள் திறக்கப்பட்டு பம்பை இயக்கி கொஞ்சம் எண்ணெய் தந்தார்கள். ராஜேசும் ,மோட்டார்மேனும் வந்து என்னை போக சொன்னார்கள். மதிய உணவிற்கு பின்பும் கப்பல் நின்றுகொண்டிருந்ததால் மீண்டும் மேனிபோல்ட் போய் பார்த்தேன்.மொத்தம் 1450 டன் வர வேண்டியதில் ஐந்து டன் குறைவாக இருப்பதாக சொல்லி மீண்டும் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்தது.
மதியம் இரண்டு மணிக்கு கணக்குகள் சரி செய்யப்பட்டு பங்கர் பார்ஜ் விடுவிக்கபட்டது.மாலை நான்கரை மணிக்கு புறப்பட்டது. கத்தாருக்கு சென்று சரக்கு நிறைக்க வேண்டும்மென உத்தரவு வந்ததால். காப்டன் கப்பலை திருப்பினார் கத்தாரை நோக்கி. கன்னியாகுமரி வழியாக பதினோரு நாள் பயணம் கத்தாருக்கு .
சரக்கு தரும் டெர்மினல் முப்பத்தி ஒன்றாம் தேதி வந்தால் போதும் என்றதால் இந்திய பெருங்கடலில் பாதுகாப்பான இடத்தில் மூன்று நாட்கள் கப்பலை நிறுத்திவைத்திருந்தோம்.
நாஞ்சில் ஹமீது.
பி கு நாங்கள் எண்ணெய் நிரப்பும்போது டெர்மினலில் அணைந்த வேறொரு கப்பலின் கயிறு ஒரு மணி நேரத்தில் அறுந்து தெறித்தது.