Tuesday 13 February 2024

ஷோர் லீவ்

 

     


   கடந்த முறை என் எஸ் பிரான்டியர் கப்பலில் இருந்தபோது இந்த பதிவுகளை வலையேற்றம் செய்வது சரியாக இருக்காது என்பதால் அப்படியே வைத்திருந்தேன். வீட்டிற்கு வந்தபின் வலையேற்றாமல் விட்டு விட்டேன்.கரைக்கு செல்லும் கப்பல் காரன் பதிவுகளுக்கு பின் இதை வாசித்தால் ஒரு தொடர்ச்சி கிட்டும்.

   அச்சுறுத்தும்   கொரோனா.

  நாங்கள் மூவரும் கப்பலுக்கு நான்கு மணிக்கு திரும்பி வந்தோம்.அன்று நள்ளிரவு இரண்டு மணிக்கு முன்பாக சரக்கு நிறைத்தல் முடிந்து அதிகாலை ஆறு மணிக்குமேல் கப்பல் புறப்பட்டது.

  நன்றாக தூங்கினேன்.ஞாயிறும் ஓய்வு தந்தார்கள்.வெளியில் சென்று வந்த இருதினமும் அலுப்பு மருந்து குடித்துவிட்டு தான் நடமாட முடிந்தது.

திங்கள்கிழமை காலை உணவுக்கூடம் சென்றபோது அடுமனையில் கோம்ஸிடம் எப்படி இருக்கிறாய் என கேட்டேன்.நான் எப்போதும் யாரை பார்த்தாலும் அப்படி கேட்பதுதான்.சிலர் “நேத்து தானே பாத்தா அதுக்குள்ள என்ன கேள்வி” என எதிர் கேள்வி கேட்பதும் உண்டு. கோம்ஸ்  “ராத்திரி  காய்ச்சல் இருந்தது,ஒரு பாராசிட்டமோல் போட்டேன்,லேசா உடம்பு வலி இருக்கு” என்றார். மதிய உணவுக்கான கோழி இறைச்சியில் மசாலா தடவிக்கொண்டிருந்தவரின் கழுத்தில் கை வைத்து பார்த்தேன்.

  “டெம்பரேச்சர் இல்ல,உள் காய்ச்சல் இருக்கலாம்,ரெஸ்ட் எடு என்றேன். காலையில் இரு அவித்த முட்டையும்,கொஞ்சம் சீரியல்சும் சாப்பிட்டுகொண்டிருக்கும் போது போசன் சொன்னார் “சென் குப்தாக்கு ராத்திரி நல்ல காய்ச்சல் காலத்த வேலக்கி வரமாட்டான்” என

 காலை பதினோரு மணிக்கு பணி பாதுகாப்பு குறித்த கூட்டம் இருந்தது. காப்டன் கேட்டார் “யாருக்காவது உடம்புக்கு முடியல்லையா,சொல்லுங்க.ப்ளீஸ் பி சீரியஸ் எனி ஒன் நாட் பீலிங் வெல் டெல் மீ”.

 அப்போதுதான் தெரிந்தது சென் குப்தாவுக்கு கொரோனா பாசிட்டிவ் என. அவனை அறையில் தனிமைபடுத்தியபின் பின் தான் காப்டன் பதற்றத்துடன் கேட்டார்.

 என்னருகில் அமர்ந்திருந்த  கோம்ஸ் அப்போது தான் கை உயர்த்தினார் எனக்கும் முடியவில்லை என. நேராக அறைக்கு போ என்றார். கோம்ஸ் இடத்தை காலி செய்தார். கோம்ஸ்க்கு சோதனை முடிவில் கொரோனா இல்லையென வந்ததால். இரவுணவுக்கு சப்பாத்தி சுட மூன்று மணிக்கு வந்தார்.

   அன்று மாலை சென் குப்தாவை போனில் அழைத்து விசாரித்தேன். “பேடிக்காண்டாம்,ஒன்னும் செய்யாது,மனச குழப்பாத,ரெஸ்ட் எடு” என்றேன். உணவும்,நீரும் அறைக்கு வழங்கப்பட்டது பேப்பர் கப் மற்றும் பேப்பர் பிளேட்டில்.

  மறுநாள் காலையில் கோம்ஸ் பணிக்கு வரவில்லை.நள்ளிரவில் தொண்டை வலியும்,உடல் வலியும் இருமலுமாக அவதிபட்டுள்ளான்.மதியம் கோம்ஸிடம் போனில் விசாரித்தேன்.முடியவில்லை என்றார்.

  காலை பத்து மணிக்குமேல் மோட்டார் மேன் ரிச்சர்ட் முடியாமல் போய் படுத்துவிட்டான் எனும் செய்தி கிடைத்தது.மூன்று பேர் அறைகளில் தனிமைபடுத்தபட்டதால் முழுகப்பலும் ஒரு பதட்டத்திற்கு உள்ளானது.

   கப்பல் பனாமாவை நோக்கி சென்று கொண்டிருந்தது.பனாமா கால்வாயை தாண்டி ஆசியாவுக்கு போகவேண்டும். ஒரு நீண்ட பயணம். ஒவ்வொரு துறைமுகம் செல்லும்முன்பும் கப்பலின் ஆரோக்கியம் குறித்த அறிக்கை சமர்பித்தல் கட்டாயம் (health declaretion). அதற்கான மஞ்சள் கொடி பறக்கவிடபட வேண்டும்.இல்லையெனின் கப்பலுக்கு உள்ளூர் பைலட் வரமாட்டார்கள்.

   போசனும் பணியாளர்களும் உணவுக்கூடத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். காப்டன் என்ன செய்ய போகிறார். கொரோனா இருப்பது தெரிந்தால் கப்பல் பனாமா கால்வாயை கடக்கவே முடியாது.கால்வாய் பணியாளர்கள்,பைலட் யாரும் கப்பலுக்குள் வரமாட்டார்கள்.

  காப்டன் என்னுடன் தான் பணியில் இணைந்தார்.பயிற்சி காப்டனாக  இருந்து காப்டன் பொறுப்பை ஏற்று நாற்பது நாட்கள்தான் ஆகிறது.கப்பலில் எது நடந்தாலும் அவர்தான் பொறுப்பு.மில்லியன் டாலர்களுக்கான சரக்கு நிரப்பிய கப்பலை உரிய நேரத்திற்கு வேகமாக கொண்டு செல்ல சரக்கு எப்போதும் நிறுவனம் முனைப்பு காட்டும்.

   கப்பல் எதாவது காரணங்களால் நின்றுவிட்டால்.சரக்கை கையாளும் நிறுவனம்,கப்பல் முதலாளிக்கு பணம் தராது.சரக்கு நிறுவனம் ஒப்பந்தத்தை நிறுத்தி கப்பலை கப்பல் முதலாளியிடமே அளித்துவிட்டால்.நாளொன்றுக்கு கிடைக்கும் ஆயிரக்கணக்கான டாலர்கள் முதாளிக்கு இழப்பு ஏற்படும்.

  முதலாளி கப்பலை பராமரிக்க,ஊழியர்களை நியமித்துள்ள என் நிறுவனத்துக்கு பெரும் அழுத்தம் கொடுக்கும்.இவையெல்லாம் காப்டனின் மின்னஞ்சல் பெட்டியில் கேள்விகளாக குவியும்.

  கப்பலில் ஒருவர் உடல்நலம் இல்லாமல் இருந்தாலும் என் நிறுவனத்துக்கு காப்டன் சொல்லியாகவேண்டியது கட்டாயம்.மிக சிக்கலான நிலையில் இப்போது காப்டன்.அமெரிக்காவில் பணியாளர்கள் வெளியே சென்றது தான் நோய் தொற்றுக்கு காரணம்.

 காப்டனிடம் சொன்னேன் சமையல்காரர் இல்லை உணவு சமைப்பதில் என்னால் உதவமுடியும்.காலையில் ஆறு மணிக்கு வந்து மீன்,இறைச்சி வகைகளை  வெட்டி தருகிறேன் என்றேன். தேவைபட்டால் அழைக்கிறேன் என்றார்.

 போசன் டெக் பணியாளர் நிதினை மெஸ் மென் கலீலுடன் அடுமனையில் உதவிக்கு அனுப்பினார்.மெஸ் மேனுக்கு சமைப்பது பணி அல்ல.காலை ஆறு மணிக்கு வந்து அதிகாரிகள் உணவுக்கூடத்தை சுத்தம் செய்து மேஜையில் தட்டு,கரண்டிகள்,குடிநீர் கப்களை அடுக்கிவிட்டு. அதிகாரிகள்,பணியாளர்கள் உணவுகூடத்துக்கு தேவையான பால்,பிரட்,பழரசம்,குடிநீர்களை நிரப்பியபின்.காலை ஏழு மணி முதல் காலை உணவுக்கு வருபவர்களுக்கு தேவையான முட்டை வகைகளை செய்து கொடுத்தபின். மதியத்திற்கு தேவையான சாலட்  காய்களை வெட்டிவிட்டு.கொஞ்சம் அடுமனை பாத்திரம் கழுவியபின்.எட்டரைக்கு காலை உணவுக்குப்பின் அதிகாரிகளின் அறைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

   பதினொன்றரை மணிக்கு சமையல்காரர் சமைத்த உணவை  இரு உணவு கூடத்த்திலும் வைத்து விட்டு கவனித்து கொள்ள வேண்டும்.

    இன்று கலீல் மதியம் கோழிக்குழம்பு முட்டைகோஸ் பொரியல்,பருப்புக்குழம்பு சமைத்தார்.உதவிக்கு சென்ற டெக் பணியாளர் சாலட் வெட்டி வைத்தார்.இரவும் கோழிக்குழம்பும்,வெள்ளை சாதமும்,கொண்டை கடலை கறியும் இருந்தது.

  மறுநாள் காலை சமைக்க மீன் எடுத்து வைத்தால் வெட்டி தரமுடியுமா எனக்கேட்டார். சுறுமா(கிங் பிஷ்)பாப்லேட் (வாவல் அல்லது ஆவோலி)சால்மன் எதை எடுப்பது என நீண்ட விவாதம் நடந்துகொண்டிருந்தது.

   சென் குப்தாவையும்,கோம்சையும் இரவில் போனில் அழைத்தேன்.கப்பலில் தனிமையில் அறைக்குள் முடங்கியவர்கள் கொஞ்சம் மனநிலை பாதிக்கும் வாய்ப்பு உண்டு.கோம்ஸ் தொண்டை வலி,உடல் வலி இருப்பதாக சொன்னார்.

சென் குப்தா “நான் நல்லா இருக்கேன் காய்ச்சல் குறைஞ்சிட்டு”என்றான்.மாலை நேர மக்ரிப் தொழுகைக்குப்பின் அறைக்கு வெளியே சப்தம் கேட்டதால் எட்டிப்பார்த்தேன்.காப்டன் நின்றுகொண்டிருந்தார்.இரண்டாம் அதிகாரி கோவித் சோதனை செய்துகொண்டிருந்தார்.

   மாலையில் உணவு கூடத்துக்கு வந்த காப்டன் எங்களிடம் “வேற யாருக்கும் ஏதாவது பிரச்னை இருந்தால் உடனே சொல்லுங்க”என்றார். மெஸ் மேன் கலீல் “சால்மன் பிஷ்,எடுத்து வெச்சிருக்கேன்,காலத்த வந்து வெட்டி தந்துரு என்றான்.



  மறுநாள் அதிகாலை தொழுகைக்குப்பின் காலை ஆறு மணிக்கே அடுமனை சென்றேன். என் தொடையளவும்,இடுப்பு வரை உயரமுள்ள மீன் ஒன்று பெரிய பக்கெட்டில் இருந்தது.மீனின் வாலை பிடித்து தூக்கினேன் வழுக்கி பக்கெட்டில் விழுந்தது.இரு கைகளால்  தூக்கி மேஜையில் வைத்ததும் இதை எப்படி வெட்டுவது என தலை சுற்றியது.

கலீல் “ஜனாப் முப்பது பீஸ் வேணும்,மொத்தம் இருவத்திஏழு பேரு,சில ஆள்,ரெண்டு மீன் எடுக்கும்,கணக்கு பண்ணி வெட்டு” என சொல்லிவிட்டு அதிகாரிகளின் உணவு கூடத்துக்குள் நுழைந்தவன் திரும்பி வந்து “பாய் ஜான் வெட்டிருவல்ல”என கேட்டு விட்டு சென்றான்.

   நேற்றிரவு குளிர் பெட்டியில் மைனஸ் பதினெட்டு பாகையில் இருந்த மீனின் ஐஸ் இன்னும் குறையாமல் இருந்தது.வயிற்றில் வகுந்து குடல் எடுத்து சுத்தம் செய்து,தலையின் மூக்கு வரை வெட்டியே வந்திருந்தது மீன்.

  முப்பது துண்டுகள் ஒரு அடி நீளமுள்ள கத்தியை,நன்றாக தீட்டிவிட்டு தலையில் முடியை மறைக்கும் தொப்பியை அணிந்து,எப்ரானை கழுத்தில் தொங்கவிட்டு இடுப்புக்கு பின் கட்டினேன். மீனின் உடலிலிருந்த செதில்களை ஆறு அங்குல சிறு கத்தியால் சுத்தம் நீக்கியபின் தலையிலிருந்த செவுள் பகுதியையும் சுத்தம் செய்தேன். முப்பது துண்டுகளை வெட்ட கத்தியால் அளந்து பார்த்தேன் வராது.குறுக்காக வாலிலிருந்து வெட்ட முயற்சித்தேன். கத்தி,வளஞ்சி,நெளிஞ்சி போனதில் ஒழுங்கா வராது என தெரிஞ்சி தலைக்கும்,வாலுக்கும் நடுவில் இரண்டாக வெட்டினேன்.

நடுவிலிருந்து தலையை நோக்கிய பகுதியில் ஒரு துண்டு வெட்டினேன்.கலீலிடம் காண்பித்து “இப்டி போதுமா” எனக்கேட்டேன்.

“பாய் ஜான் எ படா ஓஹையா,பிரை நஹி ஹூகா”என்றான்.பின்னர் வாலிலிருந்து குறுக்காக வெட்டிய பகுதியை இப்போது எளிதாக வெட்ட முடிந்தது.இரு நீள துண்டுகளான வால்பகுதி மீனை சிறு,சிறு துண்டுகளாக்கினேன்.

கலீல் “எ சலேஹா”என்றான்.

முதலில் வெட்டிய தடிமனான ஒரு துண்டை இரண்டாக வெட்டியபின் நடுவிலிருந்து தலையை நோக்கி துண்டுகளாக்கினேன். தலைப்பகுதி அதிக குளிராக இருந்ததால் எளிதாக வெட்ட முடிந்தது. முப்பத்திரண்டு துண்டுகளுக்கு மேல் வெட்டியபின்பும் மிகச்சிறிய துண்டுகள் சில வந்தது.என் கை விரல்கள் இருப்பதே தெரியாமல் மரத்து சில்லென குளிர் விரல் எலும்புகளுக்குள் ஊடுருவி மணிக்கட்டை நோக்கி நகர தொடங்கியது.சுடு நீரை திறந்து விரல்களை காட்டினேன் சில நிமிடங்களில் கைவிரல்கள் உயிர்பெற்று வந்தது.

 மீன்களை கழுவி  பாத்திரத்தில் அடுக்கி வைக்கும்போது ஏழரை மணி தாண்டி விட்டது.எட்டுமணிக்கு பணிக்கு செல்பவர்கள் காலை உணவுக்கு வரதொடங்கினர். முதன்மை அதிகாரி “இன்று புது சிஃப் குக் கா” எனக்கேட்டுவிட்டு சிரித்தார்.

   அறைக்கு வந்து நீராடிவிட்டு செல்லும்போது காலையில் நடக்கும் பணி விவாத கூட்டம் தொடங்கியிருந்தது. “சாப்பிட்டுவிட்டு வருகிறேன்” என சொல்லிவிட்டு இரு அவித்த முட்டையும்,கொஞ்சம் சீரியல்சும் சாப்பிட்டேன்.

  போசன் டெக் பணியாளர் நிதினை இன்றும்  கலீலுக்கு உதவிக்கு அனுப்பியிருந்தார். காலை தேநீருக்கு வந்தபோது கலீல் மஹாராஷ்டிரா பாணியில் மிதமான மசாலாவை மீனில் தடவி வைத்திருத்தார்.சாதமும்,பருப்பும் தயாராகியிருந்தன.

“பிகில் வந்து மீனை பொரித்து எடுப்பான்” என்றார் போசன். இரவு பணி முடிந்து காலை நான்கரை மணிக்கு தூங்கி வந்தவன் நாங்கள் பன்னிரெண்டு மணிக்கு சாப்பிட வரும்போது சுவையான மீனை பொரித்து தட்டில் அடுக்கி வைத்திந்ருதான்.



 மீன் சாப்பிட்ட அனைவரும் புது சுவையை உணர்ந்ததாக சொன்னார்கள். கலீல் சொன்னான் “ஷாகுல் பாய் வெட்டி,நான் மசாலா தடவி,பிகில் பொரிச்சது”என.

இரவுணவாக சாதமும் கடலை கறியும் சமைத்திருந்தனர்.முந்தைய நாள் மதிய உணவின் போது “காய்ச்சல் வந்தா கொள்ளாம் நானும் நாலு நாள் ரெஸ்ட் எடுப்பேன்” என்ற ரிச்சர்ட்டை போசன் கடிந்து கொண்டார். அன்று மதியமே முடியவில்லை என படுத்தவன். மறுநாளே எனக்கு ஒன்றுமில்லை நன்றாக இருக்கிறேன் என முதன்மை இஞ்சினியரிடம் போனில் மன்றாடினான்.

 இரண்டாம் அதிகாரி சோதித்து விட்டு கோவிட் இல்லையென உறுதியானதும். மூன்றாம் நாள் காலையில் வெளியே வர காப்டன் அனுமதித்தார்.

“அரே மே பாகல் ஓஹையா கம்ரேமே” என சொன்னான். அறைக்குள் தனிமையில் நான் பயித்தியமாகி விட்டேன் என.

மேலும்

நாஞ்சில் ஹமீது

06 September 2023

No comments:

Post a Comment